மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன்


மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன்

.


“எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி  நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய  படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒருவர்” என ரஜினிகாந்த் மணிரத்னம் குறித்துச் சொல்கிறார்.

அரசியல் ரீதியில் ‘அகில இந்திய’ தமிழ் திரைப்படங்களையும், “உலகத் தரமான” தமிழ் திரைப்படங்களையும் உருவாக்கியவர்கள் என மணிரத்னம், சங்கர், கமல்ஹாசன் என மூவரை நாம் குறிப்பிடலாம். கமல்ஹாசன் உருவாக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தை நாம் அவர் விழைகிற உலகத்தரமான படம் எனக் கொள்வோம் எனில்
மணிரத்னம் படங்களில் எவையெவை உலகத்தரமானவை என நாம் புரிந்து கொள்ள முடியும். ரஹ்மானின் உலகத்தரம் டேவிட் லீன், ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட்டுக்கு அப்பால் மார்டின் ஸ்கோர்சிசே, கொப்பாலோ வரை கூட போகவில்லையெனில் அவர் விழையும் உலகத்தரம் எவை என்பதும் நமக்குப் புரிகிறது. ரஜினிகாந்த உருவாக்கும் உலகத்தரம் 'முத்து, எந்திரன்' போன்ற படங்களின் தரம்தான்.


மணிரத்னத்தின் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது எப்போது? எந்தெந்தப் படங்கள் தொடர்ந்து உலகப் படவிழாக்களில் திரையிடப்பட்டன? அவற்றின் கதைக்கருக்கள் என்னென்ன?

பரத்வாஜ் ரங்கனின் புத்தகத்தில் மணிரத்னத்தின் படங்களின் உலகப்படவிழா திரையிடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் 'பாம்பே' திரைப்படம்தான் முதன் முதலில் “உலகப் படவிழாக்களில்” அதிகமும் திரையிடப்பட்ட படம். இதுபோல், “அகில இந்திய அளவில்” மணிரத்னம் அறியப்பட்டது காஷ்மீர் பிரச்சினை பற்றிய அவரது 'ரோஜா' படத்தின் மூலம்தான். உலக அளிவிலும் இந்திய அளவிலும் மணிரத்னத்தை முக்கியமான திரைப்பட இயக்குனராக முன்னிறுத்திய இரண்டு படங்களும் இந்து முஸ்லீம் பிரச்சினை குறித்த படங்கள்தான்.

கெடுபிடிப் போர்க்காலம் முடிந்து உலக அளவில் இஸ்லாமின் இருத்தல் மேற்கத்திய அமெரிக்க சமூகங்களில் பிரச்சினைக்குரியதான காலம் இது. பிஜேபியின் இந்துத்துவ தேசியம் வீறுகொண்ட காலமும் இதுதான். 'ரோஜா'வை அத்வானி பார்த்துவிட்டுப் பாராட்டினார். 'பாம்பே' படத்தை அதிகம் பாராட்டிய கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  

'பாம்பே' திரைப்படத்தைத் தொடர்ந்து அவருடைய 'இருவர், உயிரே, அலைபாயுதே. கன்னத்தை முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல்' போன்ற படங்கள் வெளியாகின்றன. 'இருவர், அலைபாயுதே, கன்னத்தை முத்தமிட்டால், கடல்' போன்ற படங்கள் பிரத்யேகமாக தமிழ் வாழ்வோடு தொடர்புடைய படங்கள் எனலாம். 'இருவர்' திராவிட இயக்க அரசியல் பற்றியும், 'கன்னத்தை முத்தமிட்டால்' ஈழத்தமிழர் பற்றியும், 'கடல்' கரையோரக் கிருத்தவர் பற்றியும், 'அலைபாயுதே' நகர்ப்புற கனணியுக இளைஞர் யுவதியர் பற்றியும் பேசின.

இந்தப்படங்கள் தவிர்த்த பிற நான்கு படங்களான 'உயிரே', 'தில் சே' எனவும், 'ஆயுத எழுத்து', 'யுவா' எனவும், 'குரு' அதே பெயரிலும், 'ராவணன்', 'ராவணா' எனவும் இந்தி மொழியில் அந்த மொழிக்கு உரிய மாற்றங்களுடன் இந்தி நடிக நடிகையரை வைத்து உருவாக்கப்பட்டன. இந்தியிலும் தமிழிலும் சமநேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு திரைப்படங்களுமே அரசியல் திரைப்படங்களாகும். 'தில் சே' அசாம் தேசிய இனப்பிரச்சினை பற்றியும், 'யுவா' இளைய தலைமுறை அரசியல் வேட்கை பற்றியும், 'குரு' தேசிய கார்ப்பரேட் எழுச்சி பற்றியும், 'ராவணா' வனவேட்டை அரசியல் பற்றியும் பேசின. இதில் 'ராவணா' திரைப்படம் நக்சலிசத் திரைப்படம் எனும் கதையாடல்கள் வட இந்திய ஊடகங்களில் இடம்பெற்றன. தமிழில் வேட்டையாடிக் கொல்லப்பட்ட வீரப்பன் குறித்த ஒப்பீடுகளை எழுப்பின.

மணிரத்னத்தின் முதல் படமான 'பல்லவி அனுபல்லவி' 1983 ஆம் ஆண்டு கன்னட மொழியில் கர்னாடக நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. அவரது இரண்டாவது திரைப்படம் 'உணரு' மலையாள மொழியில் 1984 ஆம் ஆண்டு கேரள மண்ணில் உருவாக்கப்பட்டது. 'பல்லவி அனுபல்லவி' படம் திருமணம் மீறிய பாலுறவு, முதிய பெண்ணுக்கும் இளவயது வாலிபனுக்கும் ஏற்படும் மோகம் போன்றவை குறித்தது. 'உணரு' வேலை நிறுத்தம் செய்யும் முதிய தலைமுறை தொழிற்சங்கவாதிகளுக்கும், வேலை தேடிய வேலையற்ற இளைஞர்களுக்கும் இடையிலான முரணையும், உடைக்கப்படும் தொழிற்சாலை வேலை நிறுத்தம் பற்றியும் பேசியது. ஓன்று, ஆண் பெண் உறவு பற்றியறு; பிறிதொன்று இடதுசாரி தொழிற்சங்க அரசியல் பற்றியது.

1985 ஆம் ஆண்டு துவங்கி அவர் தமிழில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். தமிழில் அவரது முதல் திரைப்படம் 'பகல் நிலவு', தொடர்ந்து 'இதயக்கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா' என 'கடல்' வரையிலும் படங்கள் வெளியாகின்றன. 'இதயக்கோவில்' திரைப்படம் தெலுங்கில் 'கீதாஞ்சலி' என வெளியாகிறது. 'பல்லவி அனுபல்லவி' துவங்கி 'கடல்' வரையிலும் 23 திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இதுவன்றி பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' மற்றும் சுஹாசினி இயக்கிய 'இந்திரா' என இரு படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். 'தாஜ்மஹால்' அகில இந்திய காதல் கதை. 'இந்திரா' ஒரே சமயத்தில் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா பற்றிய அதனோடு தமிழக சாதி அரசியல் பற்றிய திரைப்படம்

மணிரத்னத்தின் அக்கறைக்குரிய கருத்துலகம் அல்லது அவரது படைப்புலகம் பற்றி இப்போது நாம் சில பகுப்புகளுக்கு வரமுடியும்.

1.'பல்லவி அனுபல்லவி' முதல் 'கடல்' வரையிலும் மணிரத்னத்தின் சிந்தனையுலகில் நகர்ப்புற மத்தியதரவர்க்கத்தின் பாலுறவு மதிப்பீடுகளில் நேர்ந்த மாறுதல்கள், பொருளியல் மாற்றங்களால் உறவுகளினிடையோன எழுந்த பதட்டங்கள் குறித்து கணிசமான படங்களை அவர் உருவாக்கினார். 

2. எண்பதுகள் துவக்கம் உருவாகி வந்த இடதுசாரி மற்றும் திராவிட மற்றும் இனத்தேசிய எதிர்ப்பு, காங்கிரஸ், பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைக்கும் அகண்ட இந்திய வல்லரசு தேசிய உணர்விலிருந்து மதச்சார்பற்ற பார்வை போலத் தோற்றமளிக்கும் வலதுசாரி அரசியல் அடிப்படையில் அரசியல் படங்களை அவர் உருவாக்கினார்.

'ரோஜா' மற்றும் 'பம்பாய்' இந்து முஸ்லீம் பிரச்சினை குறித்த படங்கள். 'ரோஜா, உயிரே, கன்னத்தை முத்தமிட்டால்' போன்றன உலக மற்றும் இந்தியப் பார்வையில் பயங்கரவாதம் என முன்வைக்கப்படும் இனத்தேசியப் போராட்டம் குறித்த படங்கள். 'குரு' இந்திய காரப்பரேட்டிசத்திற்கு ஆதரவான படம். 'ஆயுத எழுத்து, இருவர்' இரண்டும் திராவிட இயக்க அரசியல் குறித்த விமர்சனப் படங்கள். 'உணரு' தொழிற்சங்க இயக்கம் வேலை நிறுத்தம் போன்றவற்றை வெறுக்கும் படம். அவர் கதை எழுதிய சாதிய அரசியல் பற்றிய 'இந்திரா' தமிழகம் சாதி அரசியல் பற்றிய எந்தக் குறிப்பான புரிதலும் அற்ற அருவமான படம்.

மேலே குறிப்பிட்ட இருவிதமான பண்புகளையும் கொண்ட படங்களை மணிரத்னம் தொடர்ந்து எடுத்து வருகிறார். மணிரத்னத்தின் அரசியல் படங்களை நிராகரிக்கிறவர்கள் கூட அவருடைய நகர்ப்புற மத்தியதர வர்க்க உறவுகள் தொடர்பான படங்களில் மனம் செலுத்துவது உண்டு. 'மௌனராகம்' மற்றும் 'அலைபாயுதே' இரண்டும் அந்த வகையில் முக்கியமான படங்களாகிறது.

அவரது நகர்ப்புற மத்தியதர வர்க்கப்படங்களை ஏற்கிற தமிழ் திரைப்பார்வையாளர்களின் ஏற்புக் காரணங்களுக்கு மாறான காரணங்களுக்காகவே அவரது அரசியல் படங்கள் இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்கப்படுகிறது. இன்னும் தமிழக நிலப்பரப்பு சாராத, பிற மாநில, இந்திய நிலப்பரப்புகளுக்கு எடுத்துச் சென்ற படங்களுக்காகவே உலக அளவிலும் இந்திய அளவிலும் மணிரத்னம் அறியப்படுகிறார்.  

மணிரத்னம் கருத்தியல் அளவில் தான் அடையாளப்படுத்துகிற இந்தியன் என்ற உணர்வுதான் நிலப்பரப்பு சார்ந்தும் இந்திய மாநிலங்கள் அனைத்தையும் தமிழகத்துடன் இணைத்தபடி அவரது கதை நிகழிடங்களாக ஆகிறது. தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து அவரது பாத்திரங்கள் புதுடெல்லி, காஷ்மீர், கொழும்பு, அசாம், பம்பாய் என்று சென்று வருகிறார்கள். இதையடுத்து இந்த நகரங்களுக்குச் சென்று வருகிற திரைப்பாத்திரங்களை கமல்ஹாசன் கட்டமைத்து வருகிறார். அதனது தொடர்ச்சியாக அவர் 'விஸ்பரூப'த்தில் நியூயார்க் நகருக்கும் போய்வந்திருக்கிறார். இவ்வாறு இந்தியமயமாதலினதும், உலகமயமாதலினதும் காலத்தினது பிரதிநிதியாக தமிழ் சினிமா இயக்குனர் மணிரத்னம் இருக்கிறார்.

உலக அளவில் மணிரத்னம் தமிழ் சினிமா இயக்குனராக அறியப்படவில்லை. 'மௌன ராகம், அலைபாயுதே, தளபதி' இயக்கிய மணிரத்னம் உலக அளவில் அறியப்படாதவர். உலக அளவில் அறியப்பட்டவர் பாலிவுட் இயக்குனர் மணிரத்னம். அவரது முஸ்லீம் பிரச்சினை பற்றிய படங்களுக்காகவும், பயங்கரவாதமும் தற்கொலைப் போராளிகளும் பற்றிய இனத்தேசியப் போராட்டம் பற்றிய படங்களுக்காகவும், 'குரு, யுவா' போன்ற கார்ப்பரேட் மற்றும் இளைஞர் அமைதியின்மை குறித்த படங்களுக்காகவும், அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யராய் போன்ற பாலிவுட் நடிக நடிகையரை இயக்கியதற்காகவும் அறியப்பட்டவர்தான் மணிரத்னம்.

ஓரே வார்த்தையில் சொல்வதானால் அவரது நகரப்புற மத்தியதர வர்க்க மாந்தரின் உறவுகள் குறித்த படங்களுக்காக அல்ல, மாறாக அவரது அரசியல் படங்களுக்காகவே மணிரத்னம் அகில இந்திய இயக்குனராகவும், உலக அளவிலான பாலிவுட் இயக்குனராகவும் அறியப்பட்டிருக்கிறார்.

திரைப்பட அழகியல் அர்த்தத்தில் பிறிதொரு முக்கியமான காரணத்திற்காகவும் மணிரத்னம் அகில இந்திய இயக்குனராகவும், உலகத் தரமான இயக்குனராகவும் அறியப்பட்டிருக்கிறார். இந்தித் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டமான, அடர்ந்த, பகட்டான ஒளியமைப்பை மணிரத்னம் படங்கள் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கின்றன. அழுத்தமான நிறங்களைக் கொண்ட ஆடை அலங்காரங்களை மணிரத்னம் படங்கள் ஸ்வீகரித்துக் கொண்டன. இந்திப் படங்களின் இம்பீரியல் நகர்களை, அழகான பனிசெரிந்த மலைமுகடுகளை அவர் படங்கள் ஸ்வீகரித்துக் கொண்டன. உலக இசை ஆல்பக் கலாச்சாரம் சர்வதேச வேகப் படத்தொகுப்புடன் ரஹ்மான் இசையாக அவரது படங்களில் இடம்பெற்றது.

சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன் போன்றவர்கள் உருவாக்க விரும்பும் காட்சியமைப்புகளும் கதைமைப்புகளும் கூட மணிரத்னம் போலவே ஒத்த தன்மை கொண்டிருப்பதும் யதேச்சையான அல்ல. கலை, சந்தை, கருத்தியல் என அனைத்திலும் ஒத்த தன்மைகள் கொண்ட ஒரு தலைமுறையின் திரைப்படத்துறை பிரதிநிதிதான் மணிரத்னம்.

Nantri : kaatchippilai
*



No comments: