எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்
மாலைதீவு ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை நோக்கி நகர்ந்தது
இந்திய உத்தரப் பிரதேச கலவரத்தில் 21 பேர் பலி
இரசாயன ஆயுதங்களை கையளித்தால் சிரியா மீதான தாக்குதலை தடுக்க முடியும்: ஜோன் கெரி
--------------------------------------------------------------------------------------------------------
எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்
10/09/2013 நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர்
ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு
வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம் எதிர்கொண்டுள்ள
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது
பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்
வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
நோர்வேயின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கன்சர் வேட்டிவ் கட்சியின்
தலைவியும் எதிர்க்கட்சித் தலையுமாக இருந்த IRON ERNA SOLBERG எட்டு
வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று
நோர்வேயின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இந்நிலையிலேயே புதிதாக தெரிவாகியுள்ள நோர்வே நாட்டு பிரதமரிடம் மேற்படி
நோர்வேயில் வதியும் வெளிநாட்டு வதிவாளர்கள் இந்தக் கோரிக்கையை
முன்வைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து நோர்வேயில் தஞ்சமடைந்துள்ள இலங்கை,
இந்தியா, கானா, எத்தியோப்பியா, ரஷ்யா, போலந்து, கொங்கோ, லத்வியா, சூடான்
உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் நோர்வேயின்
சிறுவர் காப்பகங்களிடம் சிக்குண்டுள்ளன.
தமது குழந்தைகளை மீட்டுக்கொள்வதற்காக நோர்வேயின் முன்னைய அரசாங்கத்திடம்
விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் அனைத்தும்
கவனத்திற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட பெற்றோர்
புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ஓர் தாயார் என்பதால் கருணையும்
மனிதாபிமானமும் கொண்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருவதற்கு வழிவகை
செய்யுமாறு வேண்டுகின்றனர்.
நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால்
நோர்வேயில் வதியும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகளை வருடக் கணக்கில்
பிரிந்து வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக
பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கவலை
தெரிவிக்கின்றனர்.
அத்துடன், எட்டு வருடங்களின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள
கன்சர் வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்த
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பு- நோர்வே சிறுவர் விடயம் தொடர்பில் கடந்த பல
வருடங்களாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து
கவனம் செலுத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர்
நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
மாலைதீவு ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை நோக்கி நகர்ந்தது
09/09/2013 மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் தலைவர் மொஹமட் நஷீத் முன்னணியிலுள்ளார்.எனினும் அவர் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதையடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பொன்றை எதிர்கொண்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் மொஹமட் நஷீத் (46 வயது) 45.45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது போட்டி வேட்பாளரான அப்துல்லா யமீன் 25 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.மாலைதீவில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சுதந்திர தேர்தலில் நஷீத் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடத்தின் முன் அவர் இராணுவ புரட்சியொன்றின் போது வெளியேற்றப்பட்டார்.
மாலைதீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நஷீத்தின் போட்டி வேட்பாளரான அப்துல்லா யமீன், அந்நாட்டை 30 வருட காலம் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி ம-ஃமூன் அப்துல் கயூமின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிரேஷ்ட நீதிபதியொருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்ததையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுக்கவே தான் பதவி விலகுவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த நஷீத், தான் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாக பின்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது இடத்திற்கு மொஹமட் வஹீட் ஹஸன் மனிக் நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்சிகள் சில கூட்டணி அமைக்கலாம் எனவும் இதனால் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்தின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
இந்திய உத்தரப் பிரதேச கலவரத்தில் 21 பேர் பலி
09/09/2013 இந்திய, உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடந்த மதக் கலவரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலவரம் நடைபெற்ற இடத்தில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கோரியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர்.
இந்த
மோதலில், தொலைக்காட்சி ஒன்றின் பகுதிநேர நிருபர் ராஜேஷ் வர்மா, பொலிஸ்
புகைப்படக்காரர் இஸ்ரார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 34 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இறந்தனர். சிலர் காணாமல் போய்விட்டனர்.
இதனால் வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கௌஷல் ராஜ் சர்மா தெரிவிக்கையில், "கலவரத்தைத் தொடர்ந்து சிலர் காணாமல் போய்விட்டனர்.
அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்." என்றார். மாவட்டத்தில் உள்ள போபா
காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 உடல்களும், சாபார் காவல்
நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓர் உடலும் ஞாயிற்றுக்கிழமை காலை
கண்டெடுக்கப்பட்டன.
கலவரத்தை அடுத்து மாவட்டத்தின் கோத்வாலி, சிவில் லைன்ஸ், நை மண்டி ஆகிய
பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கைப்
பராமரிக்க அதிரடிப்படையினர்,ஆயிரக்கணக்கான பொலிஸாரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில காவல்துறை ஏடிஜி (சட்டம்-ஒழுங்கு) அருண்குமார்
கூறுகையில், "முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2
நாட்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கிராமத்தில் 2 பேர்
கொல்லப்பட்டது தொடர்பான போலியான ஒரு காணொளிக் காட்சி இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த விடியோ காட்சியை நாங்கள் முடக்கினோம். எனினும், துரதிருஷ்டவசமாக
அந்தக் காட்சி அடங்கிய சி.டி.க்கள் அந்தக் கிராமத்தில் புழக்கத்தில்
விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இரு இடங்களில் மதரீதியிலான மோதல்கள் ஏற்பட்டன. அதைத்
தொடர்ந்து மக்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதன்
பின், அரசியல் ரீதியிலான வன்முறையும் வெடித்தது. அங்கு நிலைமை இப்போது
கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சனிக்கிழமை இரவுக்குப் பின் எந்த அசம்பாவிதச்
சம்பவமும் நடைபெறவில்லை.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அங்கு கொடி அணிவகுப்புகளை நடத்தியுள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை
52 பேரைக் கைது செய்துள்ளோம். நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள்
இருக்கும் என்று நம்புகிறோம். நிலைமையை மென்மையாகக் கையாளுமாறு மாவட்ட
ஆட்சியருக்கும் காவல்துறை எஸ்.பி.க்கும் சிறப்பு உத்தரவுகளைப்
பிறப்பித்துள்ளோம்." என்று தெரிவித்தார்.
இந்தக் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்
தெரிவித்துள்ளார். கலவரத்தில் உயரிழந்த தொலைக்காட்சி நிருபரின்
குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடும், இறந்த மற்றவர்களின்
குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று இந்திய
மாநில அரசு அறிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
இரசாயன ஆயுதங்களை கையளித்தால் சிரியா மீதான தாக்குதலை தடுக்க முடியும்: ஜோன் கெரி
No comments:
Post a Comment