இலங்கைச் செய்திகள்





அஸ்ஹர் விளையாட்டு மைதானத்தின் நடுவில் திடீர் என தோன்றிய புத்தர் சிலை

செல்லக்கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

நிவித்திகலை கொலைச் சம்பவம் பதற்ற நிலை தொடர்கிறது

விமானத்தின் கதவை ரமித் ரம்புக்வெலவே திறக்க முற்பட்டுள்ளார் : கிரிக்கெட் சபை

காதல்... திருமணம்...!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்



கே.பி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் மூவரும் ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நியமனங்களுக்கென விண்ணப்பம்

தேர்தலை ஒத்திவைக்குமாறு 24 கடும் போக்கு சிங்கள அமைப்புகள் போர்க்கொடி

13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஒருபோதும் செய்ய வேண்டாமென முதல் முதலாக கூறியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

========================================================================
அஸ்ஹர் விளையாட்டு மைதானத்தின் நடுவில் திடீர் என தோன்றிய புத்தர் சிலை

02/07/2013   வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.


நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தே இந்த பத்தர் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திச் சங்கத்தினர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜீன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.நன்றி வீரகேசரி




செல்லக்கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

02/07/2013           செல்லக்கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான இரு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை நேற்று திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு அமைய மேலும் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 5 ஆம் திகதி 70 வயதான ராஜபக்ஷ முதியான்சலாகே பிரேமதாஸ என்ற பூசகரின் சடலம் கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்டது.நன்றி வீரகேசரி









நிவித்திகலை கொலைச் சம்பவம் பதற்ற நிலை தொடர்கிறது


நிவித்திகலை தொலஸ்வல இல 01 பிரிவில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவித்திகலை பிரதேசத்தில் அதிஷ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்யும் எச்.எஸ்.நிஷாந்த (வயது 33) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட தொலஸ்வல தோட்ட இலக்கம் 01 பிரிவில் வசிக்கும் இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதனையடுத்து மேற்படி தோட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் நகரப் பகுதிகளுக்கும் தொழிலுக்கு செல்வதற்கும் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இப்பகுதியில் களவரங்கள் ஏற்படாதவண்ணம் பொலிஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டப்பகுதிக்கு நேற்று காலை சப்ரபமுவ மாகாண சபையும் இ.தொ.கா. உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் நேரில் சென்று தோட்ட மக்களுடன் விபரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 25 க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவத்தையடுத்து நிவித்திகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் , பி.ராஜதுரை எம்.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் உள்ளிட்ட அரசியல் வாதிகளின் கவணத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 







விமானத்தின் கதவை ரமித் ரம்புக்வெலவே திறக்க முற்பட்டுள்ளார் : கிரிக்கெட் சபை

02/07/2013   இலங்கை கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம்பெறும் ரமித் ரம்புக்வெல என்ற வீரரே நடு வானில் பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான பிஏ 2158 என்ற விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பிற்பகல் ஐந்து மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீரர் கழிவறை என நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகவும் விமானத்தில் காணப்பட்ட மங்கலான வெளிச்சம் காரணத்தினாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் குறித்த வீரர் தெரிவித்துள்ளார்.

இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த வீரர் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

















காதல்... திருமணம்...!



sinhal tamil wed01/07/2013

தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் யுவதியொருவரை தனது பாரியாராக்கிக்கொண்ட திருமணம் நிகழ்வொன்று இன்று வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23ஆவது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும் முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த மேரி தெரேசா (வயது 20) என்ற யுவதியுமே இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பை அடுத்தே திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23ஆவது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார்.  நன்றி தேனீ 













ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்



03/07/2013  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

சுதந்திர கல்வியையும், கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஓரணி திரளுவோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.



மாணவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் செயற்படுதல், இலவச கல்வியை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழங்களுக்குள் உள்வாங்குதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த கண்ட ஆர்ப்பாட்ட பேரணி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றடைந்தது.
நன்றி வீரகேசரி 

 

 

 

 

கே.பி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் மூவரும் ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நியமனங்களுக்கென விண்ணப்பம்

 03/07/2013         எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனங்களுக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பாளரும், ஆயுதக் கொள்வனவாளருமான ‘கே.பி’ என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ‘தமிழினி’ என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் அதே அமைப்பின் முன்னாள் பேச்சாளரும், பிரச்சார அணித் தலைவருமான ‘தயா மாஸ்டர்’ என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மூவரும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கையில், வடக்கு, வட - மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கென நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களை கட்சியின் வேட்பாளர் நியமனக் குழு நேர்முகத் தேர்வு நடத்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரும் அதன் முன்னிலையில் சமூகமளிக்குமாறு வேண்டப்படுவரென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனக் குழு எதிர்வரும் சனிக்கிழமை நேர்முகத் தேர்வுகளை நடத்த ஆரம்பிக்கவுள்ளது.
இந்த வார இறுதியில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் செப்டெம்பரில் மூன்று மாகாணங்களிலும் தேர்தல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் இதுபற்றி தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையின் எந்தவொரு சட்ட நீதிமன்றத்திலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, வட மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான அவர்களின் விண்ணப்பங்களை நாம் எதற்காக கவனத்திற்கு எடுக்கக் கூடாதென்பது என்பது குறித்து எனக்கு விளங்கவில்லை’ என விபரித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அவர்களுக்கு வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்படும் முன்னர் முதலில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அதன் பங்காளிக் கட்சியொன்றினதோ உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளையில் வட மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை விளக்கத்தை தயாரிப்பதில் தயா மாஸ்டர் உதவப் போவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்பட்டு வரும் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகவும், இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்புப் பணிகளில் தானும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் மற்றும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மும்மூரமாக ஈடுபட்டு வருவதாகவும் தயா மாஸ்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.     நன்றி வீரகேசரி

 

 

 

 

தேர்தலை ஒத்திவைக்குமாறு 24 கடும் போக்கு சிங்கள அமைப்புகள் போர்க்கொடி

 04/07/2013 பாராளுமன்றத் தெரிவுக்குழு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்வரை வட மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது. அதுவரையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று 24 கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே, இந்தியாவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதிக்கு சிங்கள பெளத்தர்களின் ஆதரவு என்றும் இருக்குமென்றும் அவ்வமைப்புகள் அறிவித்தன.
கொழும்பு செத்சிறிபாயாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய குணதாச அமரசேகர,
வட மாகாணசபை தேர்தலை நடத்திய பின்னர் 13ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்ற பொறியில் அரசாங்கம் சிக்கிவிடக்கூடாது.
எனவே, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடி 13இல் திருத்தங்களை மேற்கொள்ளும் வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தாது அதனை ஒத்திவைக்க வேண்டும்.
அதுவும் முடியாவிட்டால் பொலிஸ், காணி அதிகாரங்களை பறித்துவிட்டே தேர்தலை நடத்த வேண்டும்.
இதனைச் செய்யாது தேர்தலை நடத்தினால் ஆயுதத்தால் பெற்றுக்கொள்ள முடியாத தனித் தமிழீழத்தை அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக்கொள்ளும் நிலைமை உருவாகும்.
எனவே, நாட்டைப் பிரிக்கும் ஆபத்தை தேர்தலை நடத்தி தேடிக் கொள்வதா? அல்லது காணி பொலிஸ் அதிகாரங்களை பறித்த நாட்டைப் பாதுகாப்பதா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
தெரிவுக்குழு.
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக காணி,பொலிஸ் அதிகாரங்ஙகள் பறிக்கப்படுமானால் அது அரச தரப்பு தனிப்பட்ட குழுவினால் பறிக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். எனவே, அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி இவ் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, திருத்தங்களை மேற்கொள்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
மெதகம தம்மானந்த தேரர்.
அரசாங்கத்திலுள்ள இடதுசாரிகளுக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் டொலர் காகங்களின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாது யுத்தத்தை முடித்தது போன்று ஜனாதிபதி மாகாணசபை முறைமையை ஒழிக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இங்கு உரையாற்றிய மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
சோபித்த தேரர்
மாகாண சபைகள் இணைந்து தனி ராஜ்ஜியத்தை அமைக்கும் ஆபத்து இருப்பதால் உடனடியாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பின்னரே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இங்கு பலாங்கொடை சோபித்த தேரர் தெரிவித்தார்.
பெங்கமுவே நாயக்க தேரர்.
சம்பந்தன் இன்றும் தனித் தமிழீழம் உருவாக வேண்டுமென்ற வட்டுக்கோட்டை பிரகடனத்திலிருந்து வெளியேறவில்லை. எனவே, வடமேல் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டால் நாடு பிரியும்.
இங்கிலாந்தில் ஈழ ஆதரவுப் பேரணியில் கலந்து கொண்டவர்தான் வாசுதேவ நாணயக்கார.
எனவே, அவரை அரசியலிருந்து ஜனாதிபதி வெளியேற்ற வேண்டும். இதனால் அரசுக்கு நஷ்ட மேற்படப் போவதில்லை என்று பெங்கமுவ நாயக்க தேரர் சுட்டிக் காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் இந்திரானந்த தர்மரத்ன தேரர்; யுத்தத்தால் பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தை காந்திய வாதத்தால் அஹிம்சையால் பெற்றுக் கொள்வோம் என சம்பந்தன் கூறியுள்ளார்.
ஆனால், இது மகாத்மா காந்தியவாதமாக அல்லது ராஜீவ் காந்தீயவாதமா என்பது புரியவில்லை.
எனவே, ஆயுதத்தால், பிரபாகரனால் பெற முடியாத தனித் தமீழழத்தை அரசியலமைப்பு ரீதியாக பெறுவதற்கு சம்பந்தன் முயற்சிக்கின்றார்.
வட மாகாண சபை தேர்தலை நடத்தினால் நிச்சயம் சம்பந்தனின் அரசியலமைப்பு ரீதியான தனித் தமிழீழத்திற்கு அது வழிவகுக்கும் என்றார்.
டாக்டர் மெககொட அபயதிஸ்ஸ தேரர்
இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே இந்தியாவுக்கு பயந்து வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என டாக்டர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.      நன்றி வீரகேசரி

 

 

 

 

 

13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஒருபோதும் செய்ய வேண்டாமென முதல் முதலாக கூறியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
deva404/07/2013  தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் தேவநாயகம் மண்டபத்தில் நேற்றைய தினம் (2) நடைபெற்ற பனம் கைப்பணி கிராம சான்றிதழ் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வானது மகிழ்ச்சியானதும் முக்கியமானதுமான நிகழ்வாகும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பனைவளத்தை எவரும் பொருட்டாக எண்ணாத நிலையில் அமைச்சர் அவர்கள் தனது அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பனைசார்ந்த அபிவிருத்தி செயற்திட்டங்கள் அவரது வழிகாட்டலுக்கு அமைவாக திட்டமிடப்பட்ட முறையிலும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே 1991 ம் ஆண்டிலிருந்து அரசாங்களுடன் இணைந்து செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல அமைச்சுக்களை பொறுப்பேடுத்து அவற்றின் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளார்.

ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன, ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா முதல் தற்போது ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வரையிலான பல அரசியல் தலைவர்களுடன் கடமையாற்றி பல்வேறு உயிராபத்துக்களை எதிர்கொண்டிருந்த நிலையில் இற்றைவரை மக்களது மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக உழைத்து வருகின்றார்.

அவரது தலைமையின் கீழ் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்தில்; அங்கத்துவம் வகித்த நாள் முதலாக தமிழ் மக்களுக்காக உரத்து குரல் கொடுப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை ஒருபோதும் செய்ய வேண்டாமென முதல் முதலாக கூறியவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் முரளிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்த விடயத்தில் காலம்தாழ்த்தியே தமிழ் கூட்டமைப்பினர் தற்போதுதான் பேசிவருகின்றார்கள். எதிர்க்கட்சியிலிருந்து எதையும் பேசிவிடலாம் ஆனால் எதையும் செய்ய முடியாது. எமது உரிமைகளை கல்வியாலும், பொருளாதாரத்தினாலுமே மேம்படுத்த முடியும். வடபகுதி யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்த போதிலும் தற்போது அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆளும்கட்சியில் வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கிழக்கில் நானும் பங்கெடுத்திருப்பதனால் தான் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழ் மக்களுக்காக தலைநிமிர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முக்கியமானவர் என்றும் சுட்டிக்காட்டினார். நன்றி தேனீ

 

No comments: