தெரு தெருக்குச் சாராயம்
வழிநெடுக்கப் போராடும்
வறுமைக்குக் குழிதோண்டும்
வாழ்க்கைக்கு பாதாளம்!
இளமைக்கு இடராகும்
இயற்கைக்கு எதிராகும்
இன்பத்தின் எல்லையிலும்
போதை; துன்பத்தின் துளிராகும்!
கல்விக்கும் கால் சறுக்கும்
கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும்
சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட
ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்!
ஒருநாள்னு குடிப்பவனும்
ஓலைக் குடிசையில் அடிப்பவனும்
மாடிவீட்டில் காலாட்டி பெப்சியூத்தும் பெருமகனும்; போதைக்கு
விலைபோன புழுவுக் கீடென்று திருந்துகையில் தெரியவரும்!
ஓரறிவு மலரும் ஒருகாடு மணத்துதிரும்
நாலறிவு பறவை கூட நீர்விட்டு பாலருந்தும்
ஐந்தறிவு கால்நடையும் நாற்றமெனில் நகர்ந்துப்போகும்; பகுத்தறியும்
மனிதனுக்கு போதை குலமொழித்தாலும் குடிக்கப் பிடிக்கும்!
கல்லில் முளைக்கும் புற்கள் அழகு
மண்ணில் ஊறும் தங்கம் உயர்வு
சேற்றில் மலரும் செந்தாமரை சிறப்பு; போதையில் நாறும்
மனித நாற்றுக்களோ நாகரிகப் புரட்சியின் வெகுவேக வீழ்ச்சி!
------------------------------
வித்யாசாகர்
No comments:
Post a Comment