கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது.
நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது.
பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது.
அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள்.
இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய பெருமை மறைந்த கே. கணேஷ், மற்றும் இலங்கையில் சிறிதுகாலம் வாழ்ந்த இந்தியரான கே. ராமநாதன் ஆகியோரைச்சாரும். இவர்கள் இணைந்து பாரதி என்ற இதழையும் சிறிதுகாலம் வெளியிட்டனர்
சர்வதேச ரீதியாக கம்யூனிஸம் பிளவுபட்டபோது, இலங்கையில் மாஸ்கோ சார்பு, பீக்கிங் சார்பு இடதுசாரிக்கட்சிகள் தோன்றினாலும்கூட எழுத்தாளர்களின் முற்போக்குச்சங்கம் பிளவுபடவில்லை. இச்சங்கம் புதுமை இலக்கியம் என்ற இதழை வெளியிட்டது. பின்னர் காலத்துக்குக்காலம் நடத்திய சங்கத்தின் மாநாடுகளையொட்டிய புதுமை இலக்கியம் சிறப்பு மலர்களை வெளியிட்டது.
மாஸ்கோ சார்பு எழுத்தாளர்கள் டொமினிக்ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்பட சிலரும், பீக்கிங் சார்பு எழுத்தாளர்கள் டானியல், என்.கே. ரகுநாதன், செ.கணேசலிங்கன், நீர்வைபொன்னையன், இளங்கீரன், பேராசிரியர் க. கைலாசபதி உட்பட சிலரும் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் இச்சங்கத்தில் இணைந்தே இயங்கிவந்தார்கள். இவர்களில் ஜீவா, டானியலுடன் நெருக்கமான நட்புறவை பேணியவர்தான் எஸ்.பொன்னுத்துரை.
யாழ்ப்பாணத்தில் இவர்கள் எழுதப்புகுந்த காலத்தில் தமக்குத்தாமே சூட்டிக்கொண்ட புனைபெயர்கள் வருமாறு:-
டானியல் - புரட்சிதாசன், பொன்னுத்துரை – புரட்சிப்பித்தன், ஜீவா – புரட்சிமோகன்.
இப்படி புரட்சிபேசியவர்கள் காலப்போக்கில் திசைக்கொன்றாய் பிரிந்துசென்றார்கள். அவர்களின் வாழ்வில் புரட்சி ஏதும் நடந்ததா என்பதும் தெரியவில்லை.
சாகிராக்கல்லூரியில் 1960 களில் நடந்த மாநாட்டில் ஏற்பட்ட பிளவினால் பொன்னுத்துரையுடன் எஃப். எக். ஸி. நடராஜாவும் கனகசெந்திநாதனும் வ.அ. இராசரத்தினமும் வெளியேறினார்கள். இளம்பிறை ரஹ்மான் இவர்களைப்பின்தொடர்ந்தார்.
பொன்னுத்துரை முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு எதிர்வினையாக நற்போக்கு இலக்கிய முகாம் உருவாக்கினார். அதற்கான காரணத்தை எனக்கு விரிவாக ஒரு நேர்காணலும் தந்தவர் பொன்னுத்துரை. குறிப்பிட்ட நேர்காணல் இடம்பெற்ற எனது சந்திப்பு நூல் 1998 இல் வெளியாகியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழாவில் நற்போக்குவாதிகளுக்கு கூழ் முட்டை வீசப்பட்ட சம்பவத்தையடுத்து பொன்னுத்துரை காலம்பூராகவும் முற்போக்கு இலக்கிய முகாமை கடும்வார்த்தைப்பிரயோகங்களினால் விமர்சித்தே வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீண்டகாலமாக, கனடாவுக்கு புலம்பெயரும்வரையில் பிரேம்ஜி செயலாளராகவே அரும்பணிகள் பல ஆற்றினார். கைலாசபதியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக நியமிக்கும் விடயத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
இவர்கள் மீதுள்ள காழ்ப்பினால் இவர்களையும் பொன்னுத்துரை விட்டுவைக்கவில்லை மடாதிபதி பிரேம்ஜி, பீடாதிபதி கைலாசபதி என்றும் எள்ளிநகையாடினார்.
1975 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை ஏற்பாடுசெய்தபொழுது, டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன் மற்றும் புதுவை ரத்தினதுரை உட்பட பலர் திருகோணமலையில் ஒரு எதிர்வினை மாநாட்டை நடத்தினார்கள்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12 அம்சத்திட்டத்தை முன்மொழிந்து அனைத்துக்கட்சிகளுடனும் தொடர்ச்சியாக உரையாடியது. அப்பொழுது பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் மாநாட்டில் அதனை கையளித்தது. தேசிய இனப்பிரச்சினை இனவிடுதலைப்போராட்டமாக வெடிக்காத அந்தக்காலப்பகுதியில் அந்தத்திட்டத்தை அன்றைய அரசு கிடப்பில் போட்டது.
1972இல் மல்லிகையில் எழுதத்தொடங்கியிருந்த நான், மல்லிகை ஜீவாவினால் பிரேம்ஜி ஞானசுந்தரன், இளங்கீரன், முருகையன், சிவத்தம்பி, கைலாசபதி, சோமகாந்தன், தெணியான் ஆகியோருக்கு அறிமுகமாகியிருந்தேன். மாநாட்டின் பணிகளில் ஈடுபட்டு உழைத்தேன். சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் நீர்கொழும்பு, மற்றும் கொழும்புக்கிளைகளின் செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வரும்வரையும் இயங்கினேன்.
சங்கத்தின் மாதாந்தக்கருத்தரங்கு, சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு, பாரதி நூற்றாண்டு விழாக்கள், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்….. என்று பலபணிகளை சங்கம் முன்னெடுத்தது. என்னை ஒரு முழுநேர ஊழியராகவும் மாதம் 150 ரூபா ஊதியத்தில் நியமித்தது. வீரகேசரியில் இணையும்வரையில் இந்தப்பணியிலிருந்தேன். பின்னரும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இணைந்திருந்தேன்.
இறுதியாக 1986 ஆம் ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் சங்கம் நடத்திய மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 1987 இல் நான் புறப்பட்டதை சங்கம் ஒரு இழப்பாகவே கருதியது.
1972 முதல் 1987 வரையில் முற்போக்கு இலக்கிய வட்டாரத்துடன் பின்னிப்பிணைந்திருந்தமையால் கொழும்பில் கௌரவிக்கப்பட்ட ஒன்பது பேருடனும் எனக்கு அன்று முதல் உறவும் நட்பும் தொடருகிறது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் சந்திக்க முடிந்தவர்ளையும் சந்திப்பேன்.
சுமார் 11 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பியவேளையில் (1998 இல்) நண்பர் சோமகாந்தன் இல்லத்தில் எனக்கு வரவேற்பு தேநீர்விருந்துபசாரத்தை சங்கம் நடத்தியது. சோமகாந்தன் இறக்கும் வரையில் சங்கத்தை கட்டிக்காப்பாற்றினார். எதிர்பாராதவிதமாக பிரேம்ஜியும் கனடா புறப்பட்டார். ராஜஸ்ரீகாந்தனும் மறைந்தார்.
சங்கம் செயல் இழந்தது. பிரேம்ஜி மீண்டும் இலங்கை வந்து சங்கத்தை புனரமைக்க முயன்று, திக்குவல்லைகமாலை செயலாளராக்கினார். ஆனால் சங்கம் அன்று நின்ற இடத்திலேயே நின்றது. நகரவே இல்லை.
நீர்வை பொன்னையன் சங்கத்தை இயக்க முயன்றதாக அறிகின்றேன். ஜீவா தனது கவனத்தை மல்லிகையில் மாத்திரம் செலுத்தினார். சங்கத்தின் ஏடாக புதுமை இலக்கியம் தொடர்ந்துவெளியாகாதுபோனாலும் அந்த வெற்றிடத்தை ஜீவாவின் மல்லிகை நிரப்பியது.
தற்போது மல்லிகையும் நின்றுவிட்டது.
பிரேம்ஜியும் என்.கே. ரகுநாதனும் கனடாவில். காவலூர் ராஜதுரை அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார். செ. கணேசலிங்கன் நீண்டகாலமாக சென்னைவாசியாகிவிட்டார். டொமினிக் ஜீவாவும் நீர்வை பொன்னையனும் முகம்மது சமீமும் கொழும்பில். பேராசிரியர் நுஃமான் கண்டியில். ஏ. இக்பால் பேருவளையில்.
இந்த இலக்கிய நண்பர்களுக்கு கொழும்பில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் கௌரவிப்பு விழா நடக்கவிருக்கிறது என்ற தகவலை ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டதும், அவுஸ்திரேலியாவில் நான் தொடர்ச்சியாக இலக்கியம், அரசியல், சமூகம், திரைப்படம் தொடர்பாக உரையாடும் நண்பர் நடேசனிடம் சொன்னேன்.
அவரும் தகவல்களை ஊடகங்களில் பார்த்திருக்கிறார். கௌரவிக்கப்படுபவர்களில் சிலரை அவருக்கும் நன்கு தெரியும்.
அவர் என்னிடம் கேட்டகேள்வியும் இந்தப்பத்தியை எழுதுமாறு தூண்டியது எனவும் சொல்லமுடியும்.
“ அதென்ன முற்போக்கு எழுத்தாளர்கள் மாத்திரம் கௌரவிக்கப்படுகிறார்கள். ஏனைய மூத்த முன்னோடிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள். எழுத்தளர்களை முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு, அந்தப்போக்கு… .இந்தப்போக்கு என்று ஏன் பிரித்துப்பார்க்கிறார்கள்? பிரதேசவாதம்போன்று இதுவும் ஒருவகையில் புறக்கணிப்பு வாதமாகிவிடுமே… ஆக்க இலக்கியம் மற்றும் விமர்சன இலக்கியத்தில் தேர்ந்த ரஸனைகளை உருவாக்கிய ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். தேசிய, சர்வதேசப்பார்வைகளை பதிவுசெய்தவர்கள் இலங்கையில் இருக்கிறார்களே…? ஏன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள்?”
நடேசனுக்கு நீண்ட விளக்கம் சொல்லநேர்ந்தது. ஆனால் இன்னும் முடியவில்லை.
இலங்கையில் வடபுலத்தில் புரையோடிப்போயுள்ள சாதிப்பிரச்சினை, பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள், ஏற்றதாழ்வுகள், சுரண்டல், பாரபட்சம், புறக்கணிப்பு முதலானவற்றை கருப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்ட படைப்புகள், பிரதேச மொழிவழக்குகளை அறிமுகப்படுத்திய நாவல், சிறுகதைகள், கவிதைகள் என்பன விமர்சனத்திற்குள்ளான தருணத்தில் எதனை மக்கள் ஏற்கவேண்டும் எதனை நிராகரிக்கவேண்டும் என்ற கருத்தியல் தவிர்க்கமுடியாமல் தோன்றிவிட்டது. இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி தொடர்பாக பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றையெல்லாம் படித்தால் உங்களது கேள்விக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். என்று சுருக்கமாகச்சொல்லிவிட்டு இந்தப்பத்தியை எழுதத்தொடங்கினேன்.
ஒரு திருமணநிகழ்வுக்கோ அல்லது பொது நிகழ்வுக்கோ வரும் அனைவருமே கோபதாபமற்றவர்கள் என்றோ, முரண்பாடுகள் இல்லாதவர்கள் என்றோ நாம் கருதமுடியாது என்பது எளிய உதாரணம்.
கௌரவிக்கப்பட்ட ஒன்பதுபேருமே மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள்தான். ஏன் சிலர் ஒருவரோடு ஒருவர் முகம்கொடுத்தும் பேசுவதில்லை. டொமினிக்ஜீவாவும் நீர்வைபொன்னையனும் எப்பொழுது இறுதியாக சந்தித்துப்பேசிக்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
சென்னை வாசியாகியுள்ள கணேசலிங்கனும் டொமினிக்ஜீவாவும் 1970 களில் சுமுகமான நட்புறவுடன் இருக்கவில்லை. ஆனால் பின்னாட்களிலும் தற்பொழுதும் நிலைமை மாறிவிட்டது. ஜீவாவினால் தொகுக்கப்பட்ட நூல்கள் கணேசலிங்கனின் சென்னை குமரன் பதிப்பகத்தினால்தான் வெளியானது.
நான் 2001 இல் எழுதிய மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் கணேசலிங்கன்தான் அச்சிட்டுத்தந்தார். அத்துடன் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த எனது பாட்டி சொன்ன கதைகள் நூலையும் அவரே அச்சிட்டுத்தந்தார். காலம் காயங்களை மாற்றும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சிறு உதாரணம்.
எழுத்தாளர்கள் மத்தியில் செ. கணேசலிங்கன் முற்றிலும் வித்தியாசமான இயல்புகளைக்கொண்டவர். அவருக்கு 60 வயது பிறந்ததும் மணிவிழாவுக்கு ஏற்பாடுகள் நடந்தன. பின்னர் 75 வயதானவுடன் பவளவிழா நடத்துவதற்கும் அதனை முன்னிட்டு ஒரு மலர் வெளியிடவும் தமிழகத்தில் சில இலக்கியவாதிகள் முயன்றனர். ஆனால், கணேசலிங்கன், “ ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்தானே…” எனச்சொல்லி தமக்கு எந்தவொரு விழாவும் வேண்டாம் என்றார். அவரும் நுஃமானைப்போன்று பாராட்டுவிழாக்கள், விருதுகளை விரும்புவதில்லை. இலங்கை எழுத்தாளர்களிலேயே மிகவும் அதிகமான நாவல்களை எழுதியவரும் கணேசலிங்கன்தான்.
அவர் இலங்கைவந்தபொழுது மல்லிகை ஜீவாவின் வேண்டுகோளை தட்டிக்கழிக்க இயலாமல் ஒரு ஒன்றுகூடலுக்கு மாத்திரம் ஒப்புக்கொண்டார். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் காலத்தில் ஒரு கட்டுரையை ஞானம் இதழில் எழுதினேன். இயக்குநர் பாலுமகேந்திராவின் இனிய நண்பர். ஆனால் பாலுமகேந்திரா இவரை தனது மூத்த சகோதரன் என்றே அழைப்பார். பாலுமகேந்திராவின் கோகிலா திரைப்படத்தின் தயாரிப்பு நிருவாகியாகவும் கணேசலிங்கன் செயல்பட்டிருக்கிறார்.
பிரேம்ஜி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை தோற்றுவித்தபோதும் கூட தனது ஒரு நூலையாவது இந்த அமைப்பின் ஊடாக வெளியிடவே இல்லை. இதனை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது லெனின் மதிவானம் பிரேம்ஜி பற்றி எழுதிய பதிவு கிடைத்தது. அதில் பிரேம்ஜியின் அமைதியும் ஆளுமையும் அழகாக பதிவாகியுள்ளது. பிரேம்ஜி தனக்காக அல்லாமல் பிறருக்காகவே இயங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அச்சாணியாகவே விளங்கியவர்.
மற்றவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம்கொண்டிருந்த பிரேம்ஜி தனது நூலை வெளியிடுவதில் நீண்டகாலமாக தாமதித்தார். எனினும் நீண்ட காலத்திற்குப்பின்னர், பிரேம்ஜியின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளியானது. அதனை கணினியில் பதிந்தவர் மற்றுமொரு முற்போக்கு எழுத்தாளரான தெணியானின் தம்பி கனடாவில் வதியும் நண்பர் நவம்.
பிரேம்ஜி இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் சங்கத்தின் சார்பாக பல அமைச்சர்களையும் நேரில் சந்தித்து தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அத்துடன் தமிழ்த்தலைவர்களையும் அவர் சந்திக்கத்தவறவில்லை. ஆனால் அதனால் பயன் ஏதும் கிட்டாமல் அவர் சோர்வுற்ற தருணங்களும் உண்டு. யாழ்ப்பாணத்தில் 1986 இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவையும் சந்தித்துபேசுவதற்கு விரும்பினார். ஆனால் கிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
பேச்சுவார்த்தைகளில் நிதானம் இழக்காமல் கருத்துக்களை வலியுறுத்துவார். இலங்கையில் அரசியல்வாதிகளின் இயல்புகளினால் அவர் விரக்தியுற்ற தருணங்களையும் அருகிருந்து பார்த்திருக்கின்றேன். கனடாவுக்குச்சென்றும் பிரேம்ஜியை சந்தித்தேன். அவ்வப்போது தொலைபேசியிலும் உரையாடுவேன்.
என்.கே. ரகுநாதன் டானியலின் மச்சான். டானியலின் தங்கையை மணம் முடித்தவர். அவர்களின் குடும்பங்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டதனால் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டவர்கள். தனிப்பட்ட குடும்பப்பிரச்சினைகள் குடும்பத்துடன் நின்றிருக்கவேண்டும். அதனை இலக்கிய உலகத்திற்கும் பறைசாற்றியது தவறு.
டானியலைப்பற்றி அங்கதக்கவிதை எழுதும் அளவிற்கு தன்னைத்தாழ்த்திக்கொண்ட ரகுநாதன், ஒருகாலத்தில் எழுதிய நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதை இன்றளவும் பேசப்படுகிறது. அந்தக்கதை கைலாசபதியை வைத்துத்தான் எழுதப்பட்டதாக நம்பியவர் பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன். ஆனால், அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் ரகுநாதனே வாக்குமூலம் தந்தார்.
கைலாசபதியை தாக்குவதற்கு அந்தக்கதையையும் வெங்கட்சாமிநாதன் ஒரு ஆயுதமாக பிரயோகித்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோன்று, பொன்னுத்துரையும் வெங்கட்சாமிநாதன் பக்கம் நெருங்கினார்.
செ. கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்கு நீண்ட முன்னுரை எழுதியவர் கைலாசபதி. பின்னர் அதனை விரிவாக்கி தமிழ்நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலை எழுதினார் கைலாசபதி. அதற்கு நடை இதழில் எதிர்வினையாற்றினார் வெங்கட்சாமிநாதன். . அதன் தலைப்பு மாக்சீய கல்லறையிலிருந்து ஒரு குரல்.
நடை இதழ் இலங்கையில் தேர்ந்த இலக்கியவாசகர்களுக்கு பரவலாக கிடைக்கவில்லை. ஆனால் பூரணி குழுவினருக்கு கிடைத்தது. பூரணியின் ஆசிரியர் குழுவிலிருந்த என்.கே. மகாலிங்கம், மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். தளையசிங்கம் மாக்சீய சிந்தனைகளுக்கு எதிர்வினையாற்றியவர். அன்றைய கால கட்டத்தின் ( 1972 இல்) தேவை கருதி பூரணி இதழ் வெங்கட்சாமிநாதனின் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.
கைலாசபதியின் மாணாக்கரும் மாக்சீய விமர்சகருமான நுஃமான் அதனைப்பார்த்துவிட்டு சும்மா இருப்பாரா?
உடனே வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றி ஒரு தொடரை மல்லிகையில் எழுதினார். அதில் சில பந்திகளை ஜீவா நீக்கிவிட்டதாக நுஃமான் என்னிடமும் இளங்கீரனிடமும் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்திடமும் குறைப்பட்டார்.
அந்தத்தொடர் முடிவுற்றதும் மு. தளையசிங்கத்தின் தம்பி மு. பொன்னம்பலம் மல்லிகையில் அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால் இன்றுவரையில் அதற்கு எந்தவொரு முற்போக்குவாதியும் பதில் கொடுக்கவில்லை. ஏன்… மு. பொன்னம்பலத்தின் கட்டுரைக்கு மல்லிகை களம் கொடுத்தது என்று ஜீவாவை கடிந்துகொண்ட முற்போக்காளர்களைத்தான் நான் பார்த்தேன். அதனால் ஜீவாவுக்கும் மு.பொ.வுக்கும் இடையே நிழல் யுத்தம்தான் தொடர்ந்தது.
இந்தப்பின்னணிகளுடன்தான் நண்பர் காவலூர் ராஜதுரையைப் பார்க்கின்றேன். சுருக்கமாகச்சொன்னால் எந்தவம்பு தும்புக்கும் போகாத ஒரு அப்பாவி மனிதர். இவர் எவரையும் பகைத்ததும் இல்லை. எவரும் இவரை பகைத்ததும் இல்லை. கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் ஹட்சன் வீதியில் இருந்த இவரது வீட்டின் முகவரிதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகவரியாக பயன்பட்டது. பின்னர் அந்த முகவரி சோமகாந்தனின் அண்டர்ஸன் தொடர்மாடிக்குடியிருப்புக்கு மாறியது. முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்விடங்களும் சிந்தனைகளும் இடம்பெயர்ந்தது போன்று சங்கத்தின் முகவரியும் காலத்துக்குக்காலம் இடம்பெயர்ந்தது.
காவலூர் ராஜதுரை மிகவும் அமைதியானவர். ஆர்ப்பாட்டமற்றவர். அண்மைக்காலமாக சுகவீனமுற்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஓய்வில் இருக்கிறார். அவரை எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவித்திருக்கிறது. அவரது பொன்மணி திரைப்படவேலைகள் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்த தருணத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் அவரது ஒருவகை உறவு கதைத்தொகுப்பை வெளியிட்டது.
வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளமுடியாதளவுக்கு காவலூர், பொன்மணி படத்தயாரிப்பில் பிஸியாக இருந்தார். வசூழில் இந்தப்படம் தோல்வி என்றாலும் இலங்கையில் வெளியான தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது.
தர்மசேன பத்திராஜா இயக்கிய பொன்மணி படத்தில் சர்வமங்களம் கைலாசபதி, மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, டொக்டர் நந்தி ஆகியோரும் நடித்தனர்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு நின்ற டானியல், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் ஆரோக்கியமான நட்பை அவர்கள் மறையும்வரையில் தொடர்ந்தவர்தான் காவலூர் ராஜதுரை. டானியல் தமிழகம் சென்று தஞ்சாவூரில் மறைவதற்கு முன்னர் காவலூர் வீட்டிலிருந்துதான் புறப்பட்டார். அங்குதான் ஒரு மாலை நேரத்தில் நான் டானியலுக்கு விடைகொடுத்தேன். அவர் எழுத்தாளர் இளங்கோவனுடன் தமிழகம் புறப்பட்டார். அதுவே இறுதிச்சந்திப்பு,
சில நாட்களில் டானியலின் மறைவுச்செய்தியை எனக்குச்சொன்னவர் சில்லையூர் செல்வராசன். கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும்புக்கிளை டானியலுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது.
அவுஸ்திரேலியாவில் நான் அங்கம்வகித்த அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட பாரதிவிழாவுக்கு பொன்னுத்துரையை சிட்னியிலிருந்து வந்து பேசுவதற்கு அழைத்து, விழாவில் நடத்திய நாவன்மைப்போட்டியில் ஒரு பிரிவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவனுக்கு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை பொன்னுத்துரையிடம் கொடுத்தே அணிவித்தேன்.
பின்னர் அவர் மனைவி சகிதம் கொழும்புசென்றபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச்சேர்ந்த பிரேம்ஜி, ராஜஸ்ரீகாந்தன், அந்தனி ஜீவா உட்பட சிலர் இன்முகத்துடன் வரவேற்க ஒரு பாலமாக இயங்கினேன்.
பகைமறந்த செயற்பாடுகள் என்று ராஜஸ்ரீகாந்தன் இந்தச்சம்பவங்களை குறிப்பிடுவார்.
முகம்மது சமீம் கம்பளை சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் மட்டக்களப்பில் கல்விப்பணிப்பாளராகவும்; அதேசமயம் இலக்கியத்திறனாய்வாளராகவும் இயங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஆறுமுகநாவலரின் நூற்றாண்டு விழாக்களில் கருத்தாழமிக்க உரைகள் நிகழ்த்தியவர். கொழும்பில் ஒரு பதிப்பகத்தை நிறுவி பல நூல்களை வெளியிட்டவர்.
நீண்டநாட்களாக சுகவீனமுற்றுள்ள சமீம் அவர்களை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இல் நடைபெற்றவேளையில் நண்பர் ப+பாலசிங்கம் ஸ்ரீதரசிங்குடன் சென்று பார்த்தேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியில் இவருக்கும் கணிசமான பங்குள்ளது.
நீர்வை பொன்னையனையும் அவரில்லம் சென்று பார்த்து மாநாட்டு அழைப்பிதழைக்கொடுத்தேன். தான் அதற்கு வரமாட்டேன் என்று சொன்னார். இத்தனைக்கும் 2010 ஜனவரியில் நடந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்;;டத்திற்கு வந்தவர்தான் நீர்வைபொன்னையன். மாநாட்டின் அமைப்புக்குழுவின் தலைவராக இயங்கிய ஞானம் ஆசிரியர் ஞானசேகரன், நீர்வைபொன்னையன் சார்ந்த முற்போக்கு முகாமில் இல்லை.
ஆனால், ஞானசேகரன் முற்போக்கு முகாமைச்சேர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நீண்ட நேர்காணலை ஞானத்தில் தொடராக வெளியிட்டதுடன் அதனை நூலாகவும் பதிப்பித்து, சிவத்தம்பியை கௌரவித்து விழாவும் எடுத்தவர். சிவத்தம்பியின் அந்திமகாலங்களில் அவரை அடிக்கடி சந்தித்தவர்தான் ஞானசேகரன்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய சிவத்தம்பியுடன் அவருக்கு மிகவும் நெருக்கமான முற்போக்கு எழுத்தாளர் தெணியான் அந்திமகாலம்வரையில் தொலைபேசித்தொடர்பிலும் இருந்தார். அவரைப்பற்றி நீண்ட தொடரையும் தினக்குரலில் எழுதினார். குமரன் கணேசலிங்கன் அதனை நூலாக வெளியிட்டார். சிவத்தம்பி இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளினால் ஓரம்கட்டப்பட்டதற்கு சிவத்தம்பியின் சந்தர்ப்பவாதமும் ஒரு காரணம் எனக்கூறப்பட்டவேளையில் அவரை தம்வசம் நெருங்கவைத்துக்கொள்வதில் ஞானசேகரன் ஓரளவு வெற்றியும் கண்டார்.
நீர்வைபொன்னையன் இறுதியாக எழுதிய நினைவலைகள் என்ற நூல் முற்போக்கு வட்டாரத்தில் அதிர்வுச்சிற்றலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டானியல், ஜீவா, மற்றும் சண்முகதாசன் குறித்து நீர்வை வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய சலசலப்பு அவுஸ்திரேலியாவிலிருந்த எனக்கும் கேட்டது.
இந்த ஆண்டு முற்பகுதியில் நீர்வை பொன்னையன் சிட்னிக்கு மகளிடம் வந்தபொழுது தொலைபேசியில்தான் உரையாடமுடிந்தது. பொன்னையன் ஒரு மூத்த எழுத்தாளர். எமது மாநாட்டில் பங்கேற்ற இளம்தலைமுறையினரின் கருத்துக்களை அறிவதற்காவது வந்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்குண்டு.
பேராசிரியர் நுஃமான் கொழும்பில் அல்ஹிதாயாவில் ஆசிரியராக பணியாற்றிய 1973 காலம் முதல் அறிவேன். கொள்ளுப்பிட்டியில் அவர் ஒரு அறையில் தங்கியிருந்த காலத்தில் அவரை சந்திப்பேன். எழில்வேந்தன், சண்முகம் சிவலிங்கம் மு. நித்தியானந்தன் ஆகியோரும் அவரது அறையில் சந்தித்து உரையாடுவோம். நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பர். அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரிவுரையாளராக சென்றபின்பும் மட்டுமல்ல இன்றுவரையில் அவருடனான நட்பு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. காரணம் அவரது இயல்புகள்தான்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நாவல் நூற்றாண்டு கருத்தரங்கை கைலாசபதி இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரன் அழைக்கப்பட்டார். அவர் திரும்பிச்செல்லும்வரையில் அவரை நுஃமானே பார்த்துக்கொண்டார். குரும்பசிட்டியில் நோய் உபாதைகளுடன் வாழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதனை பார்க்க அசோகமித்திரனை அழைத்துச்சென்றார். இத்தனைக்கும் கனகசெந்திநாதன் முற்போக்கு முகாமில் இல்லை.
அண்மையில் நுஃமான் தமக்கு அளிக்கப்பட்ட விளக்கு விருதின் ஏற்புரையை, எமது இலக்கியஜாம்பவான்கள் அவசியம் படிக்கவேண்டும். காலச்சுவடு இதழில் மட்டுமன்றி தேனீ உட்பட பல இணையத்தளங்களிலும் வெளியானது. நானும் அதனை பிரதிஎடுத்து சில இணைய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன்.
கொழும்பு கம்பன் விழாவில் மங்கள விளக்கேற்ற வருபவர் கூட மேடையில் ஒரு வார்த்தையும் பேசாமல் பொன்னாடை கௌரவம் பெற்றுச்செல்லும் அருங்காட்சியை பார்த்திருக்கிறேன்.
எமது எழுத்தாளர்கள் ஒரு சாதராண நூல்வெளியீட்டிலும் பொன்னாடை, பூமாலை சகிதம் மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறார்கள். அவற்றை எதிர்பார்ப்பவர்களும் அதற்காக நேரம் ஒதுக்குபவர்களும் அவசியம் பேராசிரியர் நுஃமானின் விளக்கு விருது ஏற்புரையை ஒருதடவை படிக்கவேண்டும்.
விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் 48 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டபோது நுஃமானும் தமது குடும்பத்துடன் வெளியேறினார்.
நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழத்தை ஏற்கமுடியாது என்று சொன்னவர்தான் கனடாவிலிருக்கும் நண்பர் சேரன்.
புலிகள் தமிழ்மக்களை நந்திக்கடலில் விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்று காலச்சுவடு இதழில் நுஃமான் நேர்காணல் வழங்கியதையும் சில உள்ளுர், புலம்பெயர் புலி ஆதரவு எழுத்தாளர்களினால் ஜீரணிக்க முடியவில்லை.
கவிஞர் ஏ. இக்பால், துணிச்சல் மிக்க படைப்பாளி என்று அழைக்கப்படுபவர். தமது 16 வயதிலேயே இலக்கியப்பிரவேசம் செய்தவர். ஆசிரியராகவும் ஆசிரிய பயிற்சி விரிவுரையாளராகவும் பணியிலிருந்தவர். தம்மிடம் கற்ற பல மாணவர்களுக்கு இலக்கியபிரக்ஞையை ஊட்டியவர். தாம் பணியாற்றிய பாடசாலைகளில் கையெழுத்து சஞ்சிகைகளை அறிமுகப்படுத்தியவர். இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்பாக திறனாய்வுசெய்தவர். பல நூல்களின் ஆசிரியர்.
திக்குவல்லை கமாலும் இக்பாலின் மாணவர்தான்.
ஒருசமயம் ஒரு இஸ்லாமிய இலக்கிய நூலை மல்லிகை ஜீவாவிடம் கொடுத்து மல்லிகையில் அந்த நூலை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு ஜீவா, “ இந்த நூலைப்பற்றி எழுதுவதற்கு ஒரு இஸ்லாமியரைத்தான் தேடவேண்டும்” என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார். அதனால் கோபமடைந்த இக்பால் பலகாலம் மல்லிகையில் எழுதவில்லை. எனினும் திக்குவல்லை கமால் இக்பாலுக்கும் ஜீவாவுக்கும் .இடையே பாலமாக நின்று உறவை தொடரச்செய்தார். 2003 இல் இக்பாலின் படத்துடன் மல்லிகை வெளியானது. கமால்தான் அவரைப்பற்றி எழுதினார். மல்லிகை பல முஸ்லிம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி களம் வழங்கியிருக்கிறது. அதனைப்பார்த்துவிட்டு, “ மல்லிகை என்ன முஸ்லிம் சஞ்சிகையா….?” என்று ஜீவாவிடம் நேரடியாகக்கேட்டவர்களுக்கு ஜீவா புன்னகையால் பதில் தந்தார்.
பொன்னுத்துரை, காலம்பூராகவும் சிவத்தம்பி, கைலாசபதி, டானியல், ஜீவா உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களை வசைபாடியபோதிலும் அவர்கள் அதற்காக பொன்னுத்துரைக்கு பதிலே கொடுப்பதில்லை. மௌனமாகவே இருந்துவிடுவார்கள்.
ஏன்… என்று கேட்டால்… “ மலக்கும்பத்தை மிதித்தாலோ…அடித்தாலோ அதனால் யாருக்கு நட்டம்” என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், இக்பால் அப்படியல்ல. பொன்னுத்துரை தொடர்பாக எழுதியவர். பேசியவர். 1970 களில் அறிஞர் அஸீஸ் ( கொழும்பு சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் செனட்டராகவும் பதவிவகித்தவர். இவரது மாணாக்கர்கள்தான் சிவத்தம்பி, தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி. மொஹிதீன்) மறைந்தபின்னர் அவரது நினைவுகளை தொடராக தினகரன் வாரமஞ்சரியில் எழுதி பகிர்ந்துகொண்டார் எச். எம். பி. மொஹிதீன். பின்னர் அதனை நூலாக வெளியிட்டார்.
அந்த நூலுக்கு எதிர்வினையாற்ற முன்றுபேர் இணைந்தார்கள். அவர்கள் எம்.எஸ்.எம் இக்பால், எம். எச். எம் ஷம்ஸ், ஏ. இக்பால். சிவத்தம்பியின் முன்னுரையுடன் அந்த நூல் வெளியானது. கமால்தீன், பொன்னுத்துரை உட்பட சில முற்போக்கு எழுத்தாளர்களும் அந்த நூலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தனர்.
வழக்கம்போலவே முற்போக்காளர்கள் அதற்கும் பதில் அளிக்கவில்லை.
ஆனால், அதற்காக பொன்னுத்துரை சும்மா இருப்பாரா?
இரவோடு இரவாக இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி சில வர்த்தகப்புள்ளிகளின் ஆதரவுடன் வெளியிட்டார்.
இரண்டு இக்பாலும் ஷம்ஸ_ம் இணைந்திருந்தமையால் அந்தக்கூட்டணியை இக்குவால்ஷ் என்று வர்ணித்து வசைபொழிந்து அந்தநூலை எழுதினார் பொன்னுத்துரை.
இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கிய சச்சரவுகளுடன்தான் இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாம் இணைந்தும் பிளவுபட்டும் வளர்ந்திருக்கிறது.
மல்லிகை இதழ்களில் நீர்வைபொன்னையன் தவிர்ந்த ஏனைய முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றிய அட்டைப்பட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பிட்ட கட்டுரைகள் பின்னர் அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகை முகங்கள், முன்முகங்கள், அட்டைப்படங்கள் முதலான பெயர்களில் வெளியாகியுள்ளன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாமுக்கும் சிங்கள – தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் மல்லிகை அளித்த விரிவான களம் விதந்துபோற்றுதலுக்குரியது. ஏராளமான சிங்களச்சிறுகதைகளை தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இன்று பரவலாகப்பேசப்படும் இணக்க அரசியலுக்கு எப்பொழுதோ கால்கோளிட்டது மல்லிகை. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்தது. ஆனால் பேரினவாதிகளும், குறுகிய தமிழ்த்;தேசியம் பேசியவர்களும் மல்லிகையினதும் ஜீவாவினதும் சேவையை கவனத்தில் கொள்ளவேயில்லை என்பதுதான் காலத்தின் சோகம்.
சிங்கள இலக்கிய மேதை மார்டின்விக்கிரமசிங்காவின் அட்டைப்படத்துடன் மல்லிகை வெளியானதை பொறுக்க முடியாமல் ஒரு தீவிரத்தமிழ்க்கொழுந்து, யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கு முன்பாக ஜீவாவை வழிமறித்து குறிப்பிட்ட மல்லிகை இதழை வாங்கி கிழித்துவிட்டு ஜீவாவின் முகத்திலே வீசிவிட்டுச்சென்றார்.
தற்பொழுது அந்தத் தமிழ்க்கொழுந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். ஆனால், ஜீவா யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தெருத்தெருவாக அலைந்து தமிழ் இலக்கியத்தை இலங்கையில் வளர்த்தார்.
இணக்க அரசியல் பேசப்படும் இன்றைய இலங்கையில், இலக்கியத்தின் ஊடாக இணக்க அரசியல் பேசிய மல்லிகை இதழ் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம்தான்.
எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டங்கள் கொழும்பில் பெரும்பாலும் சுந்தா சுந்தரலிங்கம், எம்.ஏ. கிஸார், ரங்கநாதன், சோமகாந்தன், காவலூர் ராஜதுரை, மாணிக்கவாசகர் ஆகியோரின் இல்லங்களில்தான் நடைபெறும். அந்தநாட்கள் இனிமையானவை. நெஞ்சில் பசுமையானவை. இவர்களில்லாமல் நாம் இயங்கவில்லை.
செல்வி திருச்சந்திரன் தலைமையில் இலங்கை முற்போக்கு கலைமன்றம் கொழும்பில் நடத்திய மூத்த முற்போக்கு இலக்கியவாதிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு, பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தினால் இலங்கையில் நீடித்த போரினால் ஏற்பட்ட இலக்கிய தேக்கத்தை களைவதற்கும் உந்துசக்தியாக அமையும் என்று கருதுகின்றேன். அத்துடன் இளம்தலைமுறை எழுத்தாளர்கள், தாம் கடக்கவிருக்கும் பாதைகுறித்தும், கடந்துசென்றவர்களைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் உதவும்.
பிரேம்ஜி, ரகுநாதன், கணேசலிங்கன், காவலூர் ராஜதுரை, நுஃமான், டொமினிக் ஜீவா ஆகியோர் தவிர்ந்து ஏனைய மூவரும் - ஏ.இக்பால், முகம்மது சமீம், நீர்வை பொன்னையன் ஆகியோர் மாத்திரம் இந்த நிகழ்விற்கு வருகைதந்தனர் என்றும் விழாவில் கணிசமானோர் கலந்துகொண்டதாகவும் அறிந்துகொண்டேன்.
இவர்கள் குறித்த உரைகளை சமர்ப்பித்தவர்கள் பேராசிரியர்கள் தில்லைநாதன், சபா. ஜெயராசா, செ. யோகராசா, கலாநிதி ரவீந்திரன், டொக்டர் எம்.கே.முருகானந்தம், திக்குவல்லை கமால், மேமன்கவி. தேவகௌரி, லெனின் மதிவானம் ஆகியோர். மிகவும் பொருத்தமானவர்களையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.
தொலைவில் இருந்தாலும் இந்தப்பேச்சாளர்களையும் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளையும், எம்மிடம் நினைவுகளைத்தந்துவிட்டு மறைந்தவர்களையும் திரும்பிப்பார்க்கின்றேன். நினைத்துப்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment