உலகச் செய்திகள்



அரிசோனாவில் காட்டுத் தீ: 19 வீரர்கள் பரிதாபமாக பலி

சிரிய கத்தோலிக்க மதகுரு தலையை வெட்டி படுகொலை: வீடியோ காட்சி வெளியீட்டால் பரபரப்பு

எகிப்தில் ஆட்சியைக் கவிழ்த்தது இராணுவம்

===================================================================
அரிசோனாவில் காட்டுத் தீ: 19 வீரர்கள் பரிதாபமாக பலி

01/07/2013         அமெரிக்காவின் அரிசோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட 19 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவமானது முழு அமெரிக்காவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட மேற்கு பீனிக்ஸ் அருகே உள்ள யார்னெல் என்ற இடத்தில் மின்னல் காரணமாக காட்டுத் தீ பரவியது.
இதில் 200 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதை அணைக்கும் முயற்சியில் 20 பேர் கொண்ட தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அதில் 19 பேர் உயிரிழந்ததுடன்  ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.




கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தீயணைப்புப் படையினர் பலரும் உயிரிழந்தனர்.அதன் பின்னர் ஒரு சம்பவத்தில் அதிக அளவிலான தீயணைப்புப் படையினர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்
இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தனை அமெரிக்கர்களின் இரங்கல்களும், வேதனையும், இந்த 19 பேரின் மரணத்திலும் அடங்கியுள்ளது. இவர்கள் அனைவரையும் அமெரிக்கர்கள் வணங்குகிறார்கள்.
இவர்கள் அனைவருமே சாதாரண வீரர்கள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி  





சிரிய கத்தோலிக்க மதகுரு தலையை வெட்டி படுகொலை: வீடியோ காட்சி வெளியீட்டால் பரபரப்பு

02/07/2013    வட சிரியாவில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்த மக்கள் முன்னிலையில் போராளிகளால் தலையை வெட்டி படுகொலை செய்யப்படும் காட்சியை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருட் தந்தையான பிரான்கொயிஸ் முராட் என்ற மேற்படி மதகுரு போராளிகளால் கொல்லப்பட்டுள்ளதாக தத்திகான் உறுதிப்படுத்தியுள்ளது.
அருட்தந்தை முராட் (49 வயது) அவர் தங்கியிருந்த கஸனியஹ் நகரிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தின் கடந்த ஜூன் மாதம் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டுள்ளார்.
எதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது அறியப்படவில்லை.
எனினும் அல் நுஸ்ரா புரோன்ட் போராளி குழுவைச் சேர்ந்தவர்களே இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மதகுரு தலையை வெட்டி படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் மேற்படி உறுதிப்படுத்தப்படாத வீடியோ காட்சிகள் கத்தோலிக்க இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அருட் தந்தை முராட் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்படி கன்னியாஸ்திரி மடத்தில் தங்க ஆரம்பித்திருந்ததாக வத்திகான் தெரிவித்தது.   நன்றி வீரகேசரி 




எகிப்தில் ஆட்சியைக் கவிழ்த்தது இராணுவம்


04/07/2013    எகிப்தில் முர்சியின் ஆட்சி அந்நாட்டு இராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்டுள்ளது.
மேலும் முர்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அவரது முக்கிய ஆதரவாளர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் எகிப்தின் இடைக்கால ஜனாதிபதியாக அட்லி மன்சூர் செயற்படுவார் என இராணுவ உயரதிகாரி அப்தெல் படா அல் சிசி தெரிவித்துள்ளார்.
மன்சூர் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

முர்சி எங்கு வைக்கப்பட்டுள்ளார் என இராணுவம் அறிவிக்காத போதிலும் கெய்ரோவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் அரசியல் சாசன சட்டம் ரத்து செய்யப்படுமெனவும், விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.                   நன்றி வீரகேசரி 






No comments: