‘தாக்குதல் அற்ற வலயம்’ அதிர்வலைகளும் நினைவலைகளும். - திருநந்தகுமார்

சென்ற வார இறுதியில் சனிக்கிழமை! தொடர்ந்து பகல் பூராகவும் கொட்டித்தீர்த்துவிட்டு மாலையில் தொணதொணத்துக் கொண்டிருந்தமழை நேரம். NO FIRE ZONE – KILLING FIELDS OF SRI LANKA (தாக்குதல் அற்ற வலயம்) என்ற விவரணப் படத்தைப் பார்க்கச் செல்கிறேன்.
நண்பர் ஒருவருடன் சில்வர்வாட்டர் C3 அரங்கிற்குள் நுழையவும் அறிமுக உரைகள் முடிந்து படம் தொடங்குகிறது.
ஏற்கனவே யூ ரியூப் மூலம் பார்த்த, மனதை உருக்கும் காட்சிகள் பல இருந்தபோதிலும் அவை எல்லாம் தொகுக்கப்பட்டு ஒன்றரை மணி நேர  விவரணக் காட்சியாக திரையில் விரிகின்றன. அவ்வப்போது தமது அனுபவங்களை திரையில் தோன்றி வெளிப்படுத்தியோர் வரிசையில் வெளிநாட்டில் தஞ்சமடைந்து வாழும் சிங்கள ஊடகவியலாளர் அபேவர்த்தன, போர்க்காலத்தில் வன்னியில் தொண்டுப் பணியிலிருந்த இலண்டன் தமிழ்ப் பெண் மருத்துவர் வாணி, இலங்கையில் ஐ.நா. பணியிலிருந்த கோடன் வைஸ், இன்னொரு ஐ.நா. அலுவலர் ஆகியோர் அடங்குவர்.
இப்படத்தைப் பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் எழுந்த சில கேள்விகளையும் எண்ணங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவை காட்சிகள் தோன்றிய ஒழுங்கில் எழுதப்படவில்லை.

ஐ.நா பணியாளர் வெளியேற்றம்.
கிளிநொச்சியில் 2008ஆம் ஆண்டு பிற்பகுதியில் தொண்டுப் பணியிலிருந்த ஐ.நா நிறுவனப் பணியாளர்களை குறுகிய கால அவகாசத்தில் கிளிநொச்சியை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்பு
அமைச்சு உத்தரவிடுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஐ.நா. அலுவலகம் முன்பு ஒன்றுகூடி அவர்களைச் செல்லவேண்டாம் எனக் கோசமிடுகின்றனர்.  கருத்துத் தெரிவித்தவர்களில் ஒரு முதியவர் ‘ இவர்கள் போனால் நாம் எல்லோரும் சாகவேண்டியது தான்’ என்ற பொருளில் மன்றாடுகிறார்.  முதியவர் மிகைப்படுத்திக்கூறுவது போலத் தோன்றினாலும் இறுதியில் அவர் கூறியபடிதான் நடந்தது என்பது எவ்வளவு ஒரு துன்பியல்!  தமது போர்க்கால நடவடிக்கைகளுக்கு எவ்வித நடுநிலையான தகுதிவாய்ந்த மூன்றாம் தரப்பு சாட்சியங்களும் இருக்கக்கூடாது என அரச தரப்பு செயற்பட்டபோது  சர்வதேச சமூகம் ஏன் பொருட்படுத்தவில்லை?  உலகில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பல்வேறு இடங்களில் தமது பிரதிநிதிகளை செல்ல அனுமதிக்க வேண்டுமென சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை விடும் நிலையில் ஐ.நா. நிறுவனமும் அதன் செயலாளர் நாயகமும் கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. நிறுவனப் பணியாளர்களின் வெளியேற்றத்தை மெத்தனப் போக்கோடு அணுகியது ஏன்? கையறு நிலையில் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?


மாபெரும் இடப்பெயர்வு
2009 தொடக்கத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய அரச படைகள் கிழக்கு நோக்கிப் படை நகர்த்தலை மேற்கொள்ளத் தொடங்கியபோது ஆயிரக்கணக்கான மக்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறி விசுவமடு நோக்கிச் செல்கின்றனர். அந்தக் காட்சி எனது கிராமத்தை விட்டு நான் இடம்பெயர்ந்த நாட்களை நினைவுபடுத்துகிறது. அது தொண்ணூற்றைந்து ஒக்ரோபர் மாதம் முப்பதாம் திகதி. சில நாட்களுக்கு முன்பு தான் எறிகணை வீச்சுகளைச் சகிக்க முடியாமல் இணுவில் காங்கேசந்துறை வீதியில் இருந்த வீட்டை விட்டு வெளியேறி மேற்கே கந்தசுவாமி கோவில் அயலில் உறவினர் வீடு ஒன்றில் தஞ்சம் அடைந்திருந்த நேரம். கந்தசட்டி விரதகாலத்தின் இறுதி நாட்களில் ஒரு இரவு நேரம். திடீரென ஊர்மக்கள் கையில் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு வீதிகளை நிறைத்து நிற்கின்றனர். ஊரில் பிரதான வீதியில் இருந்து ஒதுக்குப் புறமாக இருந்த எமக்கு தாமதமாகத் தெரிந்ததால் பதற்றத்துடன் புறப்படுகிறோம். குழந்தையை மடியில் வைத்தபடி மனைவி பின் இருக்கையில் இருக்க, மூன்று சிறிய பெட்டிகளைக் கட்டிக்கொண்டு  மோட்டர் சைக்கிளில் புறப்படுகிறேன். புறப்படும் அவசரத்தில் மற்றவர்களைத் தேடுகிறோம். ஊரே களேபரப்பட்டு நிற்கிறது. என் அப்பாவைக் காணவில்லை. அவரும் எங்கள் அயலில் இருந்தவர் தான். மனைவியின் பெற்றோர் எங்கே எனத் தேட நேரம் இருக்கவில்லை. நான் இருந்த வீட்டவர்கள் அயலவர்கள் என எல்லோரும் புறப்படுகின்றனர். எங்கே செல்கிறோம் எனத் தெரியவில்லை. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான   தூரமுள்ள காங்கேசன் வீதிக்கு வரவே அரைமணி நேரத்திற்கும் அதிகமாக எடுக்கிறது.  காங்கேசன் வீதியில் நகரவே முடியாத கூட்டம். அதே காட்சியை திரையில் காண்கிறேன். உடுத்த உடையுடன் கையில் குழந்தைகளைத் தூக்கியபடி பெற்றோர், தள்ளாடும் முதியோர்கள், ஏக்கத்தை முகத்தில் தேக்கியபடி உயிரை, உடைமையைக் காப்பாற்றும் நோக்கில் மெல்ல நகரும் வன்னி மக்களைப் பார்க்க நெஞ்சு ஏதோ செய்கிறது. இறுதியில் நடந்தது அனைத்தும் தெரிந்த பின்னர் அம்மக்கள் உயிர்காக்க இடம்பெயர்ந்த காட்சியைக் காண்கையில் கண்கள் குளமாகின. 

தாக்குதல் அற்ற வலயம்
தாக்குதல் அற்ற வலயம் (NO FIRE ZONE) எனப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு பகுதி வன்னி வரைபடத்தில் விசுவமடுப் பகுதியில் காட்டப்படுகிறது. இப்பிரதேசத்தில் இத்தனை ஆயிரக்கணக்கான மக்களைத் தங்கவைக்க முடியுமா எனத் தோன்றியது. படம் ஓடிக்கொண்டிருக்கையில் எப்படி அந்த தாக்குதல் அற்ற பிரதேசம் இடம் மாறுகின்றது என்பதும், அதன் பரப்பளவு எப்படி எப்படி குறுகிப்போனது என்பதும் திகைக்க வைக்கும் விம்பங்கள்.
நாட்டின் அதிபரும், பாதுகாப்புப் படை அதிகாரிகளும் வன்னியில் இடம்பெயர்ந்து தாக்குதல் அற்ற பிரதேசத்தில் வாழும் மக்கள் தொகையை ஐந்தாயிரம் என்றும், அதிகபட்சமாக பத்தாயிரம் என்றும் கூறும் போது விரக்தியும் கோபமும் ஏற்படுகின்றது. மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துக் கூறும் காரணத்தை அசைபோடுகிறது மனம். சர்வதேசப் பணியாளர்களை வெளியேற்றிய வஞ்சகத்தை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
தாக்குதல் அற்ற வலயத்தில் தாக்குதல் எதுவும் நடத்தப்படமாட்டாது என அரச அதிகாரிகள் தொலைக்காட்சிகளுக்கு வழங்கும் உறுதிமொழிகள் அவ்வபோது திரையில் தோன்றி மறைகின்றன. அவற்றிற்கிடையே அப்பாவி மக்கள் மீது நடைபெறும் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளும், எறிகணைத் தாக்குதல்களும் திரையில் தோன்றுகின்றன. தமது உயிரைத் துச்சமென மதித்து தாக்குதல் காட்சிகளைப் படமாக்குபவர் யாவர் என திகைக்கிறது மனது. அதிர்ச்சியில் உறையவைக்கும் காட்சிகள் பல வீதிகளிலும், வீடுகளிலும் மட்டுமல்ல, தற்காலிக மருத்துவ மனையிலும் அரங்கேறுகின்றன. மருத்துவமனை நிர்வாகியும், மருத்துவர்களும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை பற்றி விசனம் தெரிவிக்கின்றனர்.  பல முறை கேட்டும் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சு  தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை அனுப்ப மறுப்பதால் சிரம்படுவதாக அவர்கள் சொல்வதின் நியாயம் உணர்வுள்ள மானிடரைத் தவிர வேறுயாருக்குப் புரியும்? குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்ட உறவுகளைப் பார்த்தும், நினைந்தும் கதறும் காட்சிகள், அங்கங்கள் சிதைந்த நிலையிலும் ஈக்கள் மொய்த்திருக்க குழந்தைகள் வலியால் கதறும் காட்சிகள் கல்மனதையும் உருக்கவல்லன.
விமானக் குண்டு வீச்சுகள்
நான் எனது கிராமத்தில் இருந்தவரை விமானக் குண்டு வீச்சுகள் நடைபெறும் போதெல்லாம் அதில் இருந்து தப்பவேண்டுமென வேண்டாத தெய்வமில்லை. மலகூடங்கள், சமையல் அறைகள், பதுங்கு குழிகள் என
விமான் இரைச்சல் கேட்குபோது பாதுகாப்பு தேடி ஓடுவது வாடிக்கை. அப்போதெல்லாம் குண்டு வீச்சு நடைபெறும்போது காதுச் சவ்வு வெடித்தது போல நோகும். நெஞ்சின் படபடப்பு நீங்க வெகு நேரமாகும். அப்போதெல்லாம் சகடை விமானங்கள், புக்காரா மற்றும் நினைவில் வராத சில விமானங்கள் தான் குண்டுவீச்சில் ஈடுபடும்.

வன்னிப் பரப்பில் குண்டுவீச்சில் ஈடுபட்டவை கிபீர் விமானங்கள் என்கின்றது விவரணப் படம். கிபீர் விமாங்கள் தொடர்ச்சியாகக் குண்டுகளைப் பொழிகின்றன. பறந்துகொண்டிருக்கும் விமானம் தொடர்ச்சியாக் குண்டுகளைப் பொழியும் போது பரவலாக அவை வீழ்ந்து வெடித்து பாரிய அழிவை ஏற்படுத்துகின்றன. தீச்சுவாலையும் கருபுகையும் மேலெழும்புகின்றன. அவற்றைப் பார்க்கும் போது அக்குண்டுகள் இலக்கு எதையும் நோக்கி வீசப்பட்டவையாகத் தெரியவில்லை. இடம்பெயர்ந்தோர் மீதான பரவலான தாக்குதல் திட்டம் அப்பட்டமாகவே தெரிகிறது.

தற்காலிக மருத்துவமனை
தாக்குதல் அற்ற வலயம் இடம் மாற, இடம் மாற மருத்துவமனையும் இடம் மாறுகின்றபோதும் மருத்துவமனைக் காட்சிகள் ஒரேவிதமாகவே தெரிந்தன. கேட்பது எல்லாமே அவலக் குரல், காண்பது எல்லாமே வாழ்வுரிமையோடு மருத்துவ வசதிகளும் கிடைக்காத காயப்பட்ட மக்கள். மருத்துவ மனைக்காட்சிகளில் அவ்வப்போது தோன்றும் மருத்துவர் ஒரு கதாநாயகனாக ஐ.நா பிரதிநிதிகளால் போற்றப்படுகிறார். ஊண் உறக்கமின்றி, போதிய தகுதிவாய்ந்த மருத்துவ உபகரணங்களோ, தரமான மருந்துப் பொருட்களோ இன்றி சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட வீரமிக்க நாயகனாக அவர் பெருமை பேசினார்கள்.  முன்னைய காட்சிகளில் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையைப் பற்றிப் பேசிய அவர் போர் முடிவுற்ற பின் கொழும்பில் விசாரணைக்குள்ளாகி தடுப்புக் காவலில் இருந்து பின்னர் ஊடகவியலாளர்கள் முன் தோன்றி அரசு போதிய மருந்துப் பொருட்களை தமது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது என்று கூறும்போது அங்கு ஆச்சரியப்பட எதுவும் இருக்கவில்லை. அவர் சொல்வதை விட அவர் சொல்லாதது புரிந்தது.

மருத்துவமனை மீதான தாக்குதல்
இவற்றில் உச்சபட்ச சோகம், மருத்துவமனை மீதான தாக்குதலும், தம் உயிர்காக்க அங்கு வந்து சேர்ந்தோரின் மரணமும் தான்.  மருத்துவமனை நிர்வாகியாக முன்னர் திரையில் தோன்றியவர் இறுதியில் சடலமாக கிடக்கின்றார். அவரும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.  ஒவ்வொரு முறையும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதிகள் மருத்துவமனைக்கு வரும்போது அவர்கள் கையில் பூகோள நிலைகாட்டும் கருவி (GPS) வைத்திருப்பதாகவும் மருத்துவ மனை இருப்பிடம் தொடர்பாக அவர்கள் படைத்தரப்பிற்குத் தெரிவித்து அவ்விடத்தில் தாக்குதல் நடத்தவேண்டாம் எனத் தெரிவிப்பதாகவும், ஆயினும் அவர்கள் வெளியேறிய அடுத்த மணி நேரத்திற்குள் அப்பகுதியில் எறிகணை வீச்சுகள் இடம்பெறுவது வாடிக்கையெனவும் எனவே மருத்துவமனை இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்க வேண்டாமென தாம் செஞ்சுலுவைப் பிரதிநிதிகளிடம் கோரியதாகவும் ஒருவர் கூறுகிறார். போர் தவிப்புப் பிரதேசத்தில் தான் மருத்துவமனை இருக்கிறது.  அப்பிரதேசத்தில் அமைந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடும் தேவையை நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

மருத்துவமனை மீதான தாக்குதல் மட்டுமன்றி காயப்பட்டோருக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை மறுப்பதும் பாரிய குற்றமாகும் என ஜெனிவா சாசனத்தில் சொல்லப்பட்டபோதும் அவை எதுவும் எமது மக்களுக்கு உதவவில்லை.
கைதுசெய்யப்பட்டோரின் கொலைகள்
விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியாவின் சிதைவுற்ற சடலம் மற்றும் கைது செய்யப்பட்டு பின் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஒவ்வொருவராக குறுகிய தூரத்தில் பின்னே நின்று சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவன. ஏற்கனவே அவை இணையத்தில் கிடைத்த போதும், மீண்டும் பார்த்த போது அதே வலியை உண்டாக்கியது. இந்தக் கொலைகள் எந்த நீதி விசாரணைக்கும் உட்படவில்லை என்பதே  மிகுந்த வலியைத் தருகிறது.  இசைப்பிரியா மற்றும் சில பெண் போராளிகள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சாட்சியங்கள் திரையில் தோன்றும்போது பார்க்கச் சகிக்கவில்லை. முன்னரே பார்த்திருந்தபோதும் இவற்றில் பாலச்சந்திரனின் சடலம் அம்மியைத் தூக்கி நெஞ்சில் போட்டது போல வலிக்கிறது. அதுவும் உயிருடன் காவலில் இருப்பதும், ஒரு புறத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரியாத ஒர் பச்சைக் குழந்தையாக வாயில் எதையோ மென்றுகொண்டிருப்பதும், இன்னொரு புறத்தில் மிரட்சியோடு வெளியே பார்ப்பதும் நெஞ்சைக் கலங்க வைக்கிறது. இந்தச் சிறுவனை அவனின் கைக்கெட்டும் தூரத்தில் நின்று சுட்டிருக்கிறார்கள் என விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என்ற செய்தியும் தலை கிறுங்க வைக்கிறது. அந்தச் சிறுவன் அபோது என்ன நினைத்திருப்பான்? எப்படி ஏங்கியிருப்பான்?  தமிழ் நாட்டில் பாலச்சந்திரனின் காட்சி வெளிவந்தவுடன் ஒரு சென்னைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியதும் அது மளமளவென தமிழ் நாட்டின் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவி அரசியல் கலப்பில்லாத மாணவர் போராட்டம் வெடித்ததும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடுத்ததான மாணவர் போராட்டம் இது என இந்திய ஊடங்கங்கள் விபரித்ததும் நினைவுக்கு வந்தன.

தமிழக மாணவர்கள் போராட்டத்தையும் அதன் விளைவுகளையும் தொட்டு அண்மையில் நண்பர் முருகபூபதி எழுதியதும் என் நினைவுக்கு வந்தது. முருகபூபதி கிளிநொச்சியில் ஒரு காட்சியைப் பார்க்கிறார் (அல்லது கேள்விப்படுகிறார்). இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் அங்குள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கிறாராம்.  ஒத்தடம் கொடுப்பது போல் அமைந்த இந்த நடவடிக்கை தமிழக மாணவர்களின் போராட்ட இரைச்சலில் கேட்காமலே போய்விட்டது என்று தனது எண்ணங்களை முருகபூபதி குறிப்பிடுகிறார்.  எதற்கான ஒத்தடம் அது என்று அவர் விபரிக்கவில்லை. தாக்குதல் அற்ற வலயம்- இலங்கையின் கொலைக்களங்கள் என்ற இந்த விவரணப் படத்தை முருகபூபதி பார்க்கவேண்டும். அதன் பின்னர் ஒத்தடம் எதற்குத் தேவைப்படுகின்றது என்று சரியாகக் கணிக்கலாம்.

மனித உரிமை மீறல்கள்
படத்தில், மனித உரிமைகளைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு கட்டத்தில் அப்போதய சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச எண்பத்தேழுக்குப் பின் ஐ.தே.க அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை புகைப்பட ஆதாரங்களுடன் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் காட்சியில் அரசின் முரண்நிலை தெரிகிறது.

இயக்குனர் கலம் மக்கிறே (Callum McCrae)
காட்சியின் பின்னரான      கலந்துரையாடலில் பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு இயக்குனர் விடையளித்தார்.  நான் புலிகளின் மனித உரிமை மீறல்களையும் விமர்சித்திருக்கிறேன். இந்த ஆதாரங்களைப் பரிசீலித்து, ஆராய்ந்தே காட்சிகளைத் தொகுத்திருக்கிறேன்.  கிடைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தியே பயன்படுத்தினேன் என அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் சர்வதேச குற்ற விசாரணை தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாத நிலையில் இலங்கை மீது சர்வதேச நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றால் மட்டுமே அது சாத்தியம் என்றும் குறிப்பிட்ட மக்கிறே, சீனா, ருசியா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்குப் பலமாக இருக்கையில் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார். எனினும் சென்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்திற்கு முன்னராக இப்படத்தைப் பார்த்த சில நாடுகளின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆணையத்தில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தனர் என்றும் எனவே இப்படத்தை அனைவரும் பார்ப்பதற்கு தாம் முயன்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

போர் முடிந்தவுடனான காலத்தில் இடம்பெற்ற கொலைகளையும், சிதைக்கப்பட்ட சடலங்களையும் தமது கைபேசிகளில் படம்பிடித்த அந்த உத்தமர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்கள் இல்லையேல் இந்த விபரீதங்கள் வெளியே தெரியாமலே போயிருக்கும். இவ்விவரணப்படம் அரச தரப்பிற்கோ அல்லது அரச ஆதரவாளர்களுக்கோ எரிச்சலூட்டும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கேள்வி கேட்டவர்களில் ஒருவர் சிட்னி பல்கலைக்கழக மாணவர். நான் அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தீவிரமாக விமர்சிக்கும் ஒருவன். அதேவேளையில் புலிகளுக்கும் எதிரானவன் என்றஅறிமுகத்தோடு வினா ஒன்றைத் தொடுத்த அவர் ஒரு சிங்கள இளைஞன்.  இலங்கையில் சாதாரண மக்களுக்கு இப்படத்தை காட்டுவது தொடர்பில் அவர் வினா அமைந்திருந்தது.  கலந்துரையாடலின் பின்னர் அந்த இளைஞனை மண்டப வாயிலில் சந்தித்து உரையாடினேன்.  தனிப்பட்ட முறையில் சிங்களவர்கள் நல்லவர்கள். ஆனால் ஒரு குழுமமாக அவர்கள் சேரும்போது தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுவதாகவே நான் உணர்கின்றேன் என்றும், பெரும்பான்மை வாக்குகளை அள்ள தென்னிலங்கைக் கட்சிகள் செய்யும் பிரச்சாரங்கள் என்னை அவ்வாறு எண்ணத் தூண்டியதாகவும் அவரிடம் கூறினேன். அதனை மற்றப்பக்கமாக நாங்களும் கூறலாமல்லவா என்றார் அவர். தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கமாக வாழும் சூழல் இலங்கையில் உருவாகவேண்டும் எனத் தான் விரும்புவதாக அவர் நம்பிக்கையோடு கூறுகிறார்.

நடுவு நிலை என்பது எப்பக்கமும் சேராதிருப்பதல்ல. மாறாக சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல், கோடாமல் ஒன்றன் குணம் நாடி அதன் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்ககொளல் என்கிறது தமிழ் மரபு.  இயக்குனர் மக்கிறே அவர்கள் உண்மையான ஊடக கோட்பாடுகளுக்கு இணங்க காய்தல் உவத்தல் இன்றி இதனைத் தயாரித்திருக்கிறார் என்று அதனைப் பார்த்தவர்கள் உணர்வர்.  இயக்குனர் மக்கிறே மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கும், ஏற்பாடுகளைச் செய்த அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரசுக்கும் நன்றிகள் கூறுதல் எம் கடன்.
Photos Courtesy: Google Images

No comments: