பௌத்த பயங்கரவாதத்தின் முகம் – TIME சஞ்சிகை கட்டுரையின் தமிழாக்கம்



- மூலக்கட்டுரை: TIME சஞ்சிகை / தமிழாக்கம்: காத்தான்குடி.இன்போ

time-cover-july-01அவரது முகம் ஒரு சிலையின் முகத்தைப்போன்று அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தது. பர்மாவின் பின் லேடன் எனப்பெயர் பெற்ற அந்த பௌத்த துறவி தனது மத உபதேசத்தை ஆரம்பிக்கிறார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமது கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்தபடி வியர்வைத்துளிகள் தமது முதுகுகளில் வழிந்தோட அவரின் முன்னால் அமர்ந்திருக்கின்றனர்.

அவரின் சைகையை புரிந்து கொண்ட மக்கள் அவருடன் இணைந்து சுலோகங்களை உச்சரிக்க ஆரம்பிக்கின்றனர். பர்மாவின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் அமைந்துள்ள அந்த விகாரையின் சூடான காற்றில் சுலோகங்கள் தவழ ஆரம்பிக்கின்றன. இதை நோக்கும்போது ஒரு அமைதி நிறைந்த நிகழ்வாகவே தோன்றுகின்றது. எனினும் விராதுவின் உபதேசம் வெறுப்பை உமிழ்கின்றது.

“இது அமைதி காக்க வேண்டிய தருணமல்ல” 46 வயதான விராது உபதேசிக்கின்றார். தனது 90 நிமிட உபதேசத்தில் அவர் முஸ்லிம்களை வெறுப்பதற்கான காரணங்களை பட்டியலிடுகின்றார். “உங்களின் இரத்தம் கொதித்து வெகுண்டு எழ வேண்டிய தருணம் இது” விராது உபதேசிக்கின்றார்.

பர்மாவில் பௌத்த இரத்தம் கொதிக்கின்றது அதேவேளை அதிகமான முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுகின்றது. பௌத்த குழுக்கள் சிறுபான்மை முஸ்லிம்களை இலக்குவைக்கின்றன, அதிகார தரப்பு பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறுகின்றனர். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பணியாளர்கள் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என கூறுகின்றனர். அதிகமான வன்முறைகள் ரோஹங்கயா எனப்படும் நாடற்ற பர்மாவின் மேற்குப் புறத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ரோஹங்கயாக்களை ஐக்கிய நாடுகள் சபை மிகவும் துன்புறுத்தப்பட்ட மக்கள் கூட்டங்களில் ஒன்று என வருணிக்கின்றது. இந்த இன இரத்தம் சிந்தல் விராது வசிக்கும் மத்திய பர்மா வரை வியாபித்துள்ளது. இந்த மத்திய பர்மா பிரதேசத்திலேயே விராது தனது பரப்புரைகளை மேற்கொள்கிறார்.

பர்மாவின் மொத்த சனத்தொகையான 60 மில்லியனில் 5% ஆன முஸ்லிம்களை பர்மாவிற்கும் அதன் கலாச்சாரத்துக்கும் அச்சுறுத்தலாக விராது கருதுகிறார். “முஸ்லிம்கள் மிகவும் விரைவாக பல்கிப்பெருகுகிறார்கள். அவர்கள் எங்களது பெண்களை கவர்ந்து கற்பழிக்கிறார்கள்” என்று அவர் எனக்கு சொல்லுகிறார். “அவர்கள் எங்கள் நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள். ஆனால் நான் அதற்கு விடமாட்டேன். பர்மாவை நாங்கள் பௌத்த நாடாகவே வைத்திருக்க வேண்டும்” இது விராதின் கருத்து.

135 இனக்குழுக்கள் வாழும் பர்மா மிக அண்மையில்தான் அரை நூற்றாண்டு இராணுவ ஆட்சியில் இருந்து மீண்டுள்ளது. பர்மாவின் நூதனமான அரசியல் சூழல்தொகுதி இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. சில அரச அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் ரோஹங்கயா பெண்கள் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என கோர ஆரம்பித்து விட்டனர். இவ்வாறான தடை இராணுவ ஆட்சியில் இருந்த போதும் அரிதாகவே அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் பர்மாவில் உள்ள அதிகமான கிறிஸ்தவர்கள் அண்மைக்காலமாக கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்ட கசின் போராளிகளுக்கும் பர்மிய இராணுவத்துக்கும் இடையான மோதல்கள் மதப்பிரிவினை வாதிகளால் பெரிதாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பௌத்த தீவிரவாதம் ஆசியாவின் ஏனைய பாகங்களிலும் செழித்து வளருகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் உயர் மட்ட அதிகாரத்துடன் தொடர்புகள் கொண்ட பௌத்த தேசியவாத குழுக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அத்துடன் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சொத்துக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்தியுள்ளனர். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் தாய்லாந்தின் தூர தென்பகுதியில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் கிளர்ச்சியில் இது வரை 5000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் தாய்லாந்து இராணுவம் சிவிலியன் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி இந்த கிளர்ச்சியாளர்களுடன் மோதவிடுகின்றனர். இந்த பிரதேச புத்த பிக்குகள் அவர்களது மத நம்பிக்கைப்படி யாசகத்திற்காக விகாரைகளில் இருந்து வெளியே செல்லும்போது பயிற்றப்பட்ட தீவிரவாத சிவிலியன்களை இந்த பௌத்த பிக்குகளுடன் அவதானிக்க முடியும். இவ்வாறான பிக்குகள் மற்றும் தீவிரவாதிகள் இடையான கலப்பு தாம் தனிமைப்படுத்தப்படுவதை அதிகமாக நினைவூட்டுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

ஒவ்வொரு நாட்டின் செயற்பாடுகளை அதன் வரலாறு கட்டுப்படுத்தினாலும் பௌத்த தீவிரவாதம் அந்த நாட்டின் எல்லைகளுக்குள் உள்வாங்கப்படுகின்றது. வளர்ந்து வரும் இணையப்பயன்பாடு தப்பபிப்பிராயங்கள் மற்றும் வதந்திகள் என்பன ஒவ்வொரு முகநூல் பதிவு மற்றும் டுவீட்டுகள் மூலம் பெருப்பிக்கப்படுகின்றன. இதன் மூலம் வன்முறைகள் எல்லைகளை கடந்து இலகுவாக பரவுகின்றன. மலேசியாவில் இலட்சக்கணக்கான பர்மிய புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஜூன் மாதம் பல பௌத்த பர்மியர்கள் கொல்லப்பட்டது பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு பழிதீர்ப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர்.

மதத்தீவிரவாதங்களை பட்டியலிடும் போது இந்து தேசியவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள், அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் மற்றும் தீவிரவாத பாரம்பரிய யூதர்கள் என்பனவே அண்மைக்காலம் வரை கணக்கில் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் பௌத்தம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதிகமான உலக மக்கள் பௌத்தம் என்பதை கௌதம புத்தரினால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு  போதிக்கப்பட்ட அகிம்சை, அன்பு செலுத்துதல் மற்றும் காருண்யம் என்பவற்றுக்கு ஒத்ததாகவே நோக்கினர். எனினும் ஏனைய மதங்களை பின்பற்றுவோர் போல பௌத்தர்களும் அரசியலில் இருந்து பிரிய முடியாதவர்களாக உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் இவர்கள் பிரிவினைவாத மேலாதிக்க சிந்தனைக்கு பலியாகின்றனர்.

ஆசிய நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த பொழுது பௌத்த பிக்குகள் தமது ஆளுமை மற்றும் அதிக எண்ணிக்கை என்பவற்றின் மூலம் காலனித்துவ எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கினர் சிலர் உண்ணா நோன்பு மூலம் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். துருத்திய எலும்புகளும் குழிகள் விழுந்த சதையும் இவர்களின் ஆன்மீக தியாகத்தை பறைசாற்றி நின்றன. இந்த வகையில் மிகவும் அறியப்பட்ட ஒரு பிக்கு வியட்நாமின் திச் குவாங் டக் ஆவார். 50 ஆண்டுகளுக்கு முன்பு அடக்குமுறை தென் வியட்நாமிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். தாமரை ஆசனத்தில் அமர்ந்து தீச்சுவாலைகளுக்குள் பஸ்பமாகி தனது உயிரை மாய்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

2007 ஆம் ஆண்டு பர்மாவில் ஜனநாயக கிளர்ச்சி ஒன்றுக்கு பௌத்த பிக்குகள் தலைமை தாங்கினர். தமது யாசக பாத்திரங்களை ஏந்திக்கொண்டு அடக்குமுறை அரசுக்கு எதிராக அமைதி ஊர்வலத்தை நடத்திய இந்த பிக்குகள் அரச படைகளால் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பிக்குகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்த போதும் உலகளாவிய அனுதாபத்தை இந்த முயற்சி கொண்டு வந்தது.

எனினும் எவ்விடத்தில் சமூக எழுச்சி முடிவடைந்து அரசியல் தீவிரவாதம் ஆரம்பமாகின்றது? எந்த மதமும் அதனது அடிப்படைக்கு மாற்றமான முரண்பட்ட கருத்துக்களால் நச்சூட்டப்படுவதன் மூலம் பலம் வாய்ந்த அழிவுச்சக்தியாக மாற்றப்பட முடியும். இந்த வகையில் இது பர்மாவின் முறை.




வெறுப்பு மந்திரம்

logoமண்டலாயில் அமைந்துள்ள புதிய மசொயீன் தேவாலயத்தில் உயர்த்தப்பட்ட மேடையில் கால்கள் பின்னி அமர்ந்திருக்கும் விராதுவின் பின்பக்க சுவரில் அவரது உருவம் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ளது. உலக நடப்புகளை தனது பார்வையில் வர்ணிக்கும் விராது “அமெரிக்க ஜனாதிபதி கருப்பு முஸ்லிம் இரத்தத்தினால் கறைபட்டுள்ளார்” அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை அரபிகள் கடத்திச் சென்றுவிட்டதாக தான் நம்புவதாகவும் கூறுகிறார். அரபிகளை விமர்சிக்கும் இவர் தனது புனைப்பெயராக ஒசாமா பின் லேடன் என்ற அரபு பெயரை புனைப்பெயராக பயன்படுத்துவதில் எந்தவித முரண்பாட்டையும் உணரவில்லை.

2003 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த விராது தற்போது 969 என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி வருகின்றார். 969 என்பது புத்தரின் பல்வேறு குணாதிசயங்களை குறித்து நிற்கின்றது. இந்த அமைப்பு பௌத்தர்களை தமக்குள் மாத்திரம் தொடர்புகளை பேணுமாறு வலியுறுத்துகின்றது. “எமது மதத்தையும் இனத்தையும் பாதுகாப்பது ஜனநாயகத்தை விட முக்கியமானது” இது விராதுவின் கூற்று.

மதகுருக்களாக மாற தேவாலயங்களை சென்றடையும் எட்டுக் குழந்தைகளில் ஒன்று தமது குடும்ப வறுமை காரணமாகவே அங்கு அனுப்பப்படுகின்றனர். விராதுவை அவரது இனத்துவேசத்தை கருதி இலகுவாக கல்வியறிவோ ஆன்மீக அறிவோ அற்றவர் என கூறிவிட முடியும். எனினும் கவர்ந்திழுக்க கூடிய சக்திவாய்ந்த விராதுவின் பேச்சுக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பர்மாவின் பெரும்பான்மை பமார் அல்லது பரமன் இனக்குழு மற்றும் ஆசியாவின் ஏனைய பௌத்த மக்கள் இடையே தமது மதம் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது என்ற ஒரு மெல்லிய உணர்வு உள்ளது. அத்துடன் வரலாற்று ரீதியாக புத்த மதம் வியாபித்திருந்த இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் நாடுகளாக மாற்றப்பட்டுள்ளன என அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் தமது புத்த ஆதிக்கமும் சரியக்கூடும் என்ற பய உணர்வும் அவர்களிடம் உண்டு. பௌத்த தேசியவாதிகள் முஸ்லிம்களின் சனத்தொகை பௌத்தர்களின் சனத்தொகையை விட வேகமாக வளர்வதாக பயப்படுகின்றனர். புதிய பள்ளிவாயல்களை நிர்மாணிக்க இந்த பிரதேசங்களை நோக்கி பாய்ச்சப்படும் மத்திய கிழக்கின் நிதி பற்றிய அச்ச உணர்வும் இவர்களிடம் உண்டு.
myanmar-attacked-masjith
பர்மாவில் 2011 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் ஆரம்பமான பொழுது இராணுவ ஆட்சியாளர்கள் பகுதி சிவிலியன் அரசுக்கு வழிவிட்டனர். எனினும் ஆச்சரியமான வகையில் இராணுவ ஆட்சியின் கொடூரங்களுக்கு எதிராக ஒரு சில மக்களே அப்போது குரல் கொடுத்தனர். இந்த அசாதாராண அமைதி நிலை புத்தரின் மன்னிக்கும் மனப்பாங்கு போதனையின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. எனினும் பர்மாவின் ஜனநாயக மயமாக்கல் தீவிரவாத அமைப்புகள் செழித்து வளர்ந்து இனச்சுத்திகரிப்புக்கு நிகரான ஒரு கொடூரத்தை அரங்கேற்ற அனுமதித்துள்ளது.

இந்த பிரச்சினைகள் கடந்த வருடம் பர்மாவின் தூர மேற்கு பகுதியில் ஆரம்பமானது. உள்ளூர் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் பல முஸ்லிம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. வாளேந்திய பௌத்த குழுக்கள் ரோஹங்கயா கிராமங்களை துவம்சம் செய்தன. மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் தகவல்படி முழு நாள் வெறியாட்டம் ஒன்றில் ஒரு குடியிருப்பில் மாத்திரம் 70 முஸ்லிம்கள் அறுத்துக் கொல்லப்பட்டனர். இந்த இனக்கலவரங்களை நிறுத்த அரசு பெரிதாக அக்கறை காட்டாத நிலையில் கலவரங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இலகுவாக பரவின. கடந்த மார்ச் மாதம் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். வீடுகளும் பள்ளிவாயல்களும் தீக்கிரையாக்கப்பட்டன. சிறுவர்கள் இரண்டாக பிளக்கப்பட்டதோடு பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். அதிகமான இடங்களில் இந்த கொடூரங்கள் பிக்குகளின் தூண்டுதலாலேயே மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் போக்குவரத்து மையமான மீக்திலா நகர் பல நாட்களுக்கு பற்றி எரிந்தது. ஒரு பௌத்த பிக்கு முஸ்லிம் ஒருவரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களின் குடியிருப்புகள் துவம்சம் செய்யப்பட்டன. (உத்தியோகபூர்வ இறப்பு தகவல்கள்: பௌத்தர்கள் 2 குறைந்தது 40 முஸ்லிம்கள்) ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் நெருக்கமான அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த அகதி முகாம்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளூர் மதரசா ஒன்றை சேர்ந்த குறைந்தது இருபது சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட 15 வயது நிரம்பிய அப்துல் ரசாக் ஷஹ்பான் என்ற சிறுவனின் குடும்பத்தினரை என்னால் சந்திக்க முடிந்தது. இந்த சிறுவன் ஆணிகள் துருத்தப்பட்ட தடிகள் மூலம் தலையில் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். எரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாயலின் நிழலில் ரசாக்கின் தாயார் “எனது மகன் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே கொல்லப்பட்டான். வேறு எந்தக்காரணமும் இல்லை” என்று கூறினார்.

விகாரைகளும் அரசும்

இஸ்லாத்தை துரத்தி பௌத்த மேலாதிக்கத்தை உறுதி செய்யும் கனவு பொது பல சேனா என்ற இலங்கையின் மிகவும் சக்தி வாய்ந்த பௌத்த அமைப்பை இயக்குகின்றது. பொது பல சேனா என்ற இந்த அமைப்பின் பெயரின் பொருள் பௌத்த பல சேனை என்பதாகும். கடந்த பிப்ரவரி மாதம் கொழும்பின் சுற்றயல் பகுதியில் நடந்த இந்த அமைப்பின் வருடாந்த மாநாட்டில் 100 க்கு மேற்பட்ட பிக்குகள் நிகழ்வுகளை முன்னின்று நடத்தினர். இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பௌத்த கொடிகளை ஏந்திக்கொண்டு தமது வலது கைகளை நெஞ்சில் வைத்து தங்களுடைய மத்தத்தை காக்க இந்த மாநாட்டில் திடசங்கற்பம் பூண்டனர்.

உலகின் மிகவும் பழமையான பௌத்த நாடாக தொடரும் இலங்கையில் உருவாக்கப்பட்டு ஒரு ஆண்டே பூர்த்தியாகின்ற இந்த இனவாத அமைப்பு விரைவாக இந்த நாடு பௌத்த ஆன்மீக வேர்களை மீளப்பெற வேண்டும் என கோருகின்றது. நாட்டின் பாடசாலைகளில் பௌத்த பிக்குகள் வரலாறு கற்பிக்க வேண்டும் எனக்கோரும் இந்த அமைப்பு முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடை முறைமைகள் மாற்றப்பட வேண்டும் என வாதிடுகின்றது. இலங்கையில் 9% ஆன முஸ்லிம்கள் வாழுகின்றனர். இந்த வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஜானசார தேரர் “இது ஒரு பௌத்த அரசாங்கம். இது ஒரு பௌத்த நாடு” எனக்கூறினார்

2005 ஆம் ஆண்டு பழமைவாதியான மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் 26 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த யுத்தம் இந்து விடுதலை அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு அந்த அமைப்பு தோல்வியுறச் செய்யப்பட்டது. இந்த யுத்த வெற்றியின் பின்னர் பொது பல சேனாவில் அங்கம் வகிக்கும் பிக்குகள் போன்ற தீவிரவாத பிக்குகள் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக திரும்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பௌத்த மேலாதிக்க சிந்தனை உள்ள குழுக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக மாறியுள்ளன. இவர்களின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதாரணமாக முஸ்லிம் உரிமையாளர்களின் ஆடை வியாபர நிலையம் தாக்கப்பட்டமை, ஒரு கிறிஸ்துவ பாதிரியாரின் வீடு மீதான தாக்குதல் மற்றும் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான இறைச்சிக்கடை தாக்கப்பட்டமை என்பன உதாரணமாக கூறப்படலாம். இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட பிக்குகள் காணொளி மூலம் அடையாளம் காணப்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இலங்கை கூட்டணி அரசில் பிக்குகளின் செல்வாக்குள்ள ஒரு அரசியல் கட்சியும் அங்கம் வகிக்கும் நிலையில் விகாரைகளுக்கும் அரசுக்கும் இடையான நெருக்கம் அதிகரித்து வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் பொது பல சேனாவின் தலைமைத்துவ பயிற்சி நிலைய திறப்பு விழாவில் ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இந்த விழாவில் கோத்தபாய “நமது நாடு, மதம் மற்றும் இனம் என்பவற்றை பௌத்த பிக்குகளே காக்கின்றனர்” என்று கூறினார்.

ஆயுத முனையில் சேகரிக்கப்படும் நன்கொடைகள்

myanmar-abandoned-muslimsதாய்லாந்தின் தூர தெற்கு பகுதியில் உள்ள பிக்குகளில் சிலர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பௌத்த மத விழுமியங்களையும் மீறுகின்றனர். தெற்கு மாநில பிரதேசங்களான பட்டாணி, யலா, மற்றும் நரதிவட் என்பன மலாய் சுல்தானேட் உடைய பகுதிகளாக் இருந்தன. பின்னர் இந்த பிரதேசங்கள் பௌத்த தாய்லாந்தின் பகுதிகளாக கடந்த நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் இணைக்கப்பட்டன. இந்த பிரதேசங்களின் மொத்த சனத்தொகையில் 80% ஆனோர் முஸ்லிம்கள் ஆவர்.

இந்த பிரதேசங்களில் ஒரு பிரிவினைவாத போராட்டம் 2004 காலப்பகுதியில் தீவிரமடைந்த பொழுது  பௌத்த மதத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் படைவீரர்கள்  அவர்களின் பதவிகள் காரணமாக இலக்கு வைக்கப்பட்டனர். இவர்கள் தாய்லாந்துடன் தொடர்புடையவர்கள். பல பிக்குகளும் தாக்கப்பட்டனர்.

தற்பொழுது தாய்லாந்தின் படைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினர் வட் பகுதியில்ஒரு யுத்தத்தில் பிரவேசித்துள்ளனர். இந்த பிரதேசங்களில் உள்ள பிக்குகள் தமது யாசகங்களை பெற பாதுகாப்பு படையின் உதவியுடன் வெளியேறுகின்றனர். எங்களுக்கு வேறு வழிவகைகள் கிடையாது” பௌத்தத்தை ஆயத்தங்களில் இருந்து வேறுபடுத்துவது முடியாத காரியம்” இது லெப்டினன்ட் சவாய் உடைய கூற்று.

பட்டாணி பிரதேசத்தில் உள்ள வாட் லக் முவாங் என்ற நகரில் வசிக்கும் 10 பிக்குகளுக்கு பாதுகாப்பாக 100 படை வீரர்கள் உள்ளனர். அவர்கள் வசிக்கும் கட்டடத்தின் பிரதான பகுதி தாய்லாந்து இராணுவத்தின் 23 வது பட்டாலியனின் கட்டளை மையமாக தொழிற்படுகின்றது. இந்த புனித கட்டடத்தை சுற்றி இராணுவ வலைகள் சுற்றப்பட்டுள்ளன. இந்த வட் பகுதியில் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பௌத்த தொண்டர்கள் ஆயுதப்பயிற்சி பெற்று சிவிலியன் தீவிரவாத குழுக்களுடன் இணைக்கப்படுகின்றனர். இவர்கள் தமது கிராமங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரபலதாஸ்திபாங் புரசாரோ என்ற பிக்கு இந்த பிரதேசத்தில் 16 வருடங்களாக அங்கு வசிக்கின்றார், காவியுடை தரித்த தனக்கு சொந்தமாக மூன்று துப்பாக்கிகள் உள்ளதாக ஓத்துக்கொள்கின்றார். இது தொடர்பில் ஒரு பௌத்தனாக தான் சிறிய குற்ற உணர்வுக்கு ஆற்பட்ட போதும் தன்னை தானே பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது என கூறுகிறார்.

பௌத்தர்கள் பாதுகாப்பு படையினரின் பிரசன்னத்தில் அதிக பாதுகாப்பை உணரும் பட்சத்தில் இது முஸ்லிம் சனத்தொகைக்கு ஒரு வித்தியாசமான சமிக்ஞையை அனுப்புகின்றது. “வாட் பகுதிக்கு படையினரை அழைப்பதன் மூலம் மதத்தையும் இராணுவத்தையும் அரசு திருமண பந்தத்தில் இணைக்கின்றது” இது மைக்கல் ஜெரிசன் என்ற ஓஹியோ பல்கலைக்கழக மதக் கற்கைகள் உதவி பேராசிரியரின் கூற்று. இவர் தென் தாய்லாந்து முரண்பாட்டில் பௌத்தத்தின் பங்கு என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

பௌத்தர்கள் ஒரு போதும் தாம் தாய்லாந்து பிரஜைகள் என்று எண்ணமாட்டார்கள். இது சுமோ மகெஹ் உடைய கூற்று. இவருடைய மகன் உட்பட 15 பேர் கடற்படை முகாம் ஒன்றை தாக்க முயன்ற பொழுது தாய்லாந்து மரீன்களால் கொல்லப்பட்டனர். “இது எங்கள் நிலம் எனினும் நாங்கள் இங்கு வெளியாட்கள்” அவர் மேலும் கூறுகிறார். அத்துடன் முஸ்லிம்களும் தூர தெற்கு பகுதியில் பயத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பௌத்தர்களை விட அதிகமான முஸ்லிம்கள் இந்த வன்முறைகளில் பாரபட்சமற்ற குண்டுத்தாக்குதல், அல்லது அரசுடன் இனைந்து செயற்படுகின்றனர் என்ற சந்தேகத்தில் கொல்லப்பட்டுள்ளனர். (எனினும் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் அதிக பௌத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்)

அதிகமான பிக்குகள் என்னிடம் முஸ்லிம்கள் தமது பள்ளிவாயல்களை ஆயதங்களை களஞ்சியப்படுத்த உபயோகிக்கின்றனர், ஒவ்வொரு இமாமும் தன்னுடன் ஒரு துப்பாக்கியை காவிச்செல்கிறார் போன்ற கூற்றுக்களையே கூறுகின்றனர். இஸ்லாம் “ஒரு வன்முறை மார்க்கம் அதை அனைவரும் அறிவர்” பரதங் ஜிராடமோ என்ற பிக்குவின் கூற்று இது.

இவ்வாறான உணர்வுகளை பர்மாவின் பின் லேடன் ஆமோதிப்பார். பௌத்த மதத்தின் அமைதி கோட்பாடுகளை பர்மார் பெரும்பான்மை தாய்நாட்டில் பரப்பப்படும்  முஸ்லிம் வெறுப்பு வன்முறைகளுடன் எவ்வாறு விராது தொடர்புபடுத்துவார் என நான் ஆச்சரியப்பட்டேன். பௌத்த கோட்பாடுகளில் நாங்கள் வன்முறை வழிமுறைகளை கையாள அனுமதிக்கப்படவில்லை. எனினும் எமது சமூகத்தை பாதுகாப்பதற்குரிய சகல உரிமைகளும் எமக்குண்டு. இது விராதின் கூற்று. சற்று நேரத்தின் பின் மாலைப்பொழுதில் ஒரு கூட்டத்துக்கு உபதேசம் செய்கின்றார். அந்த கூட்டத்தில் அவஸ்தையுடன் புன்னகைக்கும் குடும்ப தலைவிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பாட்டிகள் மற்றும் ஏனையோர் “பர்மார் இனத்துக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன் என்ற விராதுவின் முழக்கத்தை அவருடன் சேர்ந்து முழங்குகின்றனர்.

பௌத்த மதத்தின் மூலாதார கோட்பாடுகளில் ஒன்றான மன்னிக்கும் மனப்பான்மை சாத்தியமே இல்லாத சில இடங்களில் இன்னும் உயிருடன் உள்ளது. 2011 ஆம் ஆண்டு வாட் லக் முஆங் பிரதேசத்தில் வாட்சரபோங் சுதா என்ற பிக்கு படை வீரர்களின் பாதுகாப்புடன் யாசகங்களை சேகரிக்கும் பொழுது ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அவரது உடம்பின் கீழ்ப்பகுதியில் இன்னும் காயங்களின் வடுக்கள் உள்ளன. தற்பொழுது 29 வயதான காவியுடை அகற்றியுள்ள அந்த பிக்கு இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எனினும் இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய மத நம்பிக்கையை அவர் குறை கூறவில்லை. “பௌத்தத்தை போல இஸ்லாமும் ஒரு அமைதியான மதம். நாங்கள் முஸ்லிம்களை குறை கூறினால் அவர்கள் எங்களை குறை கூறுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த வன்முறைகள் ஒரு போதும் ஓயப்போவதில்லை” இது அமைதியை விரும்பும் அந்த பிக்குவின் கூற்று.

(தமிழாக்கம் பூரண பதிப்புரிமையுடையது. எமது இணையத்தளத்தின் முழுமையான பெயர்குறிப்பிட்ட மீள்பிரசுரம் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது)  
நன்றி தேனீ   (http://www.thenee.com/html/020713.html)


No comments: