நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து


.

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23
சுஜாதா – ‘இரயில் புன்னகை’
வே.சபாநாயகம்.

 எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்தப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம் – நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப. எப்படி? சொல்கிறேன்.
 சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக கச்சேரி. அய்யகார் ரொம்ப ரசித்து ‘தோடி’ பாடிக் கொண்டிருந்தார். மாமா என்னை ரகசியமாய்க் கூப்பிட்டு “டேய்! அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே அது என்னன்னு போய்ப் பார்த்துட்டு வா” என்றார் மாமா கவனித்தது தோடியை அல்ல.
 இரண்டாவது உதாரணம் : ‘இலக்கிய சிந்தனை’யில் “கதையின் கதை” என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி, தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரை போல எனக்கே திருப்தி தரும்படியாகப் பேசினேன். பேச்சு முடிந்த்தும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி, “உங்கப் பேச்சைக் கேட்டேன்; ஏன் அப்பப்ப மூச்சிறைக்கிறது உங்களுக்கு? ஏதாவது ஹெல்த் ப்ராபளமா?” என்றார். அவர் கவனித்த்து பேச்சை அல்ல; மூச்சிறப்பை மட்டுமே.
மூன்றாவது  – அமெரிக்காவில் ஒரு பரிசோதனை. ஒரு  ஆளைக் கொலை பட்டினி போட்டு ஒரு அழகான சித்திரத்தை அவனிடம் காட்டினார்கள். அவனுக்கு சித்திரத்தில்  ஓரத்தில் வரைந்திருந்த திராட்சைப் பழம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்ததாம்.


 எனவே கவனிப்பது என்பது உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும்  கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்தது அத்தனையையும் எழுத வேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.
 என் கண்ணெதிரில் நடந்த ஒரு சாலை விபத்தில் முதலில் எனக்கு எழுத விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. எல்லா ஊரிலும்தான் போக்குவரத்து. எல்லா ஊரிலும்தான் கிழவர்கள் கிழட்டு சைக்கிள்களில் அடிபட்டுச் சாகிறார்கள். ஆனால் இறுதியில் விபத்து நடந்த இடத்தில் இரைந்திருந்த கால் கிலோ அரிசியை ஒரு சிறுவன் ரத்தம் படியாததாகப் பொறுக்கி டிராயர் பையில் திணித்துக் கொண்டபோது அங்கே எனக்குக் கதை கிடைத்துவிட்டது.
 அதேபோல் ஒரு பெண் கணவனைத் திட்டிக்கொண்டே நடந்து கூலிக்குச் செல்கிறாள் – கதை இல்லை. எல்லா ஊரிலும் எல்லாக் கணவர்களும்  திட்டப்படுகிறார்கள்! சட்டென்று கூடவே ஓட்டமும் நடையுமாக வந்த தன் ஆறு வயதுப் பிள்ளையைப் பார்த்து, “நீயாவது என்னை சரியா வச்சுப்பியாடா” என்று கேட்டபோது அதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனக்கு, சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும்போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருக்கிறது. ‘என்னே சமூகத்தின் கொடுமை’ என்று சுட்டிக் காட்டுவதைத் தவிர்ப்பது எத்தனை சிரம்ம் என்பது எழுதிப் பார்த்தால்தான் தெரியும். வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்து எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது;  என்பதெல்லாம் இருபத்தோரு வருஷங்களாகக் கற்ற பாடங்கள்.
சுஜாதா
பெங்களூர்.
1984.

No comments: