சிந்தனைகளும் செயல்களும் - தவமணி தவராஜா.

.


மனிதர்களாய்ப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குள்ளும்,  நம் சிந்தையில் தொலைக்காட்சிச் செய்தியில் ஓடிக்கொண்டிருக்கும் செய்திச்சரம் போல்,  எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும். நாம் ஆழ்ந்து உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சிந்தனைச் சூழலில் சிக்தித் தவித்துக் கொண்டுதானிருக்கிறோம். நம் சிந்தனைகளும் பல்வேறுபட்ட தரங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

அவைகளில் பிறர் நலம்பேணும் நல்ல ஆன்மீகச் சிந்தனையாளர்களின் ஆன்மீகச் சிந்தனைகளும்,  பிறர் நலனுக்காகவே உழைக்கும் அறிவியலாளர்களின் அறிவியல் சிந்தனைகளும் மிக உயரிய சிந்தனைகள் என்பது என் எண்ணம். பக்திபபரவசம் என்பதை பார்க்க வேண்டுமானால் “ஸ்ரீராமகிருஷ்ண பரமவறம்சரைப்” பார்க்க வேண்டும் என்று ஒரு வெள்ளைக்காரரே எழுதியுள்ளார். புறப் பூசைகளும் போலித்தனமான சம்பிரதாயங்களையும் விடுத்து அகத்தில் ஆழமான பக்தியினால் இறைவனைத் தரிசிக்க முயலவேண்டுமென்பது அவர் கொள்கை.  நாமும் சிறிதாவது முயலலாமே!


அடுத்தது நாம் இலகுவாகக் காரியமாற்றம் எண்ணற்ற சாதனங்களைக் கண்டுபிடித்து நமக்களித்த மிகச்சிறந்த சாதனையாளர்கள். அவர்கள் அனுபவித்த ஏமாற்றங்களும் கஷ்டங்களும்,  வாசிக்கும்போது அவர்களின் எண்ணற்ற எண்ணங்களின் செயல் வடிவங்கள்,  அவர்களை கண்ணீர்மல்க தலைசாய்த்து வணங்க வைக்கிறது. எல்லாக் காரியங்களுக்கும் காரணம் எண்ணங்களே.
அடுத்து சாமானியமானவர்கள் தங்கள் தரத்தை உயர்த்தப் பாடும்படும் மனிதர்கள். இவர்கள் குடும்பப்பாசமும் நற்குணங்களும் அமைந்தவர்களாயிருந்தால் அவர்களாலும் பலன்கள் இருக்கின்றது. சிலருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போனது தெரியாமல் அந்த நேரமே சந்தோஷகரமானதாயும் பயனுள்ளதாயும் அமைகிறது.
ஆனால் சில பிரகிருதிகளுடன் பேசும் போது நமக்கு உடல் சோர்வும் உபத்திரமுமாய் நேரம் கழிகிறது. எப்பொழுதும் அடுத்தவர்களைக் குறை கூறுவதே அவர்கள் பொழுதுபோக்கு. அவர்களுடன் பேசும்போதே நமக்கும் பயம் ஏற்படுகிறது. நம்மைப்பற்றி பின்னாலு எப்படிப் பேசுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது என்னுடைய அனுபவம். இதை எழுதுவதற்கு உரிய எண்ணக் கருவை உண்டாக்கியதும் இதுதான்.



No comments: