இலங்கைச் செய்திகள்

.
பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரவிலக்கணம் வரைந்தது ஸ்ரீலங்கா அரசு! 

சர்வதேச சட்டங்களை மீறும் செயல் : ஐக்கிய நாடுகள் சபை

இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்கு வீட்டுத்திட்டம்

குடாநாட்டில் குரலை அடக்கும் முயற்சி

மதக் காழ்ப்புணர்வை போஷிக்கக்கூடாது


பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரவிலக்கணம் வரைந்தது ஸ்ரீலங்கா அரசு!

News Service
பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரைவிலக்கணம் ஒன்றை அரசாங்கம் அளித்துள்ளது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்த போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த புதிய விளக்கத்தை அளித்துள்ளார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடல், பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெறல், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், வழிநாடாத்தல், பொதுவான பயங்கரவாத நோக்கங்களுக்காக குழுவாக இணைந்து செயற்படல், தெரிந்தே பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்களைப் பேணுதல் போன்றன பயங்கரவாதமாகக் கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல் விடுத்தல், மதக் கடும் போக்கு, அரசாங்கத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பல், அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை தூண்டுதல், மத, அரசியல் லாபங்களுக்காக மக்களை திசை திருப்பல் போன்ற செயற்பாடுகளை பயங்கரவாதச் சட்டமாக கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதச் சட்டத்தில் சில விளக்கங்கள் பொருத்தமற்றவை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. சில விளக்கங்களின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட 


Nantri:seithy.com



சர்வதேச சட்டங்களை மீறும் செயல் : ஐக்கிய நாடுகள் சபை

அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் வரும் எந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர்களின் படகையும் விசாரணையை நடத்தாமல் திருப்தியனுப்புவதற்கு இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்துகொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயலென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


அகதிகள் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் நிழல் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினரின் உதவிப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அவை சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையாது.
ஏனெனில் அகதிகள் சாசனம், மேலதிக எல்லைகள் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், தமது அறிக்கையில், அகதிக்கோரிக்கையுடன் வரும் எந்த ஒரு நபரையும் நடுக்கடலில் வைத்து எவ்வித காரணங்களையும் கருத்திற்கொள்ளாமல், திருப்பியனுப்புவது, சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறுவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி வீரகேசரி 





இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்கு வீட்டுத்திட்டம்

இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை கிளிநொச்சி பிரதேச பொலிஸ் அத்தியட்சர் செல்வம் மற்றும் 571ஆவது படையணியின் தளபதி கேணல் அமரசேகர ஆகியோர் நாட்டிவைத்தனர்.
65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் பிரிவிலேயே இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி


குடாநாட்டில் குரலை அடக்கும் முயற்சி

ஜனநாயகமும் ஊடகச் சுதந்திரமும் நாட்டில் படுமோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டித்துக் கடந்த மாதத்தை"கறுப்பு ஜனவரி'யாகப் பிரகடனப்படுத்தி நூற்றுக்க்கான ஊடகவியலாளர்கள் தலைநகர்  கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருவாரத்திற்குள் யாழ். குடாநாட்டில் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பகுதி அதிகாரி மோசமாகத் தாக்கப்பட்டும் பத்திரிகைப் பிரதிகள் எரிக்கப்பட்டதுமான விசனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் அடாவடித்தனம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

பத்திரிகையின் விநியோக அதிகாரியை கடுமையாகத் தாக்கிவிட்டு பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கான பகைமையும் காடைத்தனமும் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. யாழ். தினக்குரல் பத்திரிகை தசாப்தகாலத்துக்கும் மேலாக எந்தவித இடையூறுமின்றி வெளிவந்து  கொண்டிருக்கிறது. யுத்தம் மிக உக்கிரமாக இடம்பெற்ற கால கட்டத்தில் கூட நேற்று இடம்பெற்றதைப் போன்றதொரு மோசமான சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை.

குடா நாட்டுக்கும் ஏனைய பகுதிகளுக்குமான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் கூட இத்தகையதொரு காடைத் தனத்தை யாழ். தினக்குரல்  எதிர்கொண்டிருக்கவில்லை. யாழ். குடா நாட்டில் இராணுவத்தின் பிரசன்னம் அளவுக்கு அதிகமாக இருப்பது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் விசனம் தெரிவித்து வருகின்ற நிலையில், தேசிய பாதுகாப்புக்குப் படையினரின் பிரசன்னம் மிகவும் அவசியமென்று அரசு நியாயப்படுத்தி வருகின்றது.  நிலைமை இவ்வாறு இருக்கையில்   அதாவது, கட்டுக்காவல் பலமாக இருக்கையில்  3 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாதவர்கள் வந்து கண் மூடித்தனமாக பத்திரிகை விநியோகஸ்தரைத் தாக்கிவிட்டு பத்திரிகைப் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்திய துணிச்சல் எவருக்கு வந்திருந்தது என்பது வலுவான சந்தேகத்தை எழுப்பும் விடயமாகும்.

ஊடகங்களின் வாயை அடக்குவதற்கான முயற்சியே என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.   தனிப்பட்ட ஒருவரின் புகழுக்கு மாசு கற்பிக்கும் அல்லது நிந்திக்கும் அல்லது அவமதிக்கும்  செய்திகளோ , கட்டுரைகளோ நேற்றைய பத்திரிகையில் வெளியிடப்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை. இந் நிலையில் புத்தூரில் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான  திடீர்த் தாக்குதல் ஊடகங்களின் வாயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் குடா நாட்டின் களநிலைவரத்தை அங்குள்ள பத்திரிகைகளே  அதிகளவுக்கு  வெளிப்படுத்தி வரும் நிலையில், அவற்றின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தி நசுக்கி விடும் கைங்கரியமாகக் கூட இருக்கலாம். ஊடகங்கள், ஊடகப் பணியாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், அடக்கு முறைகள்,தாக்குதல்கள் இல்லாததொரு சூழ்நிலையிலேயே ஜனநாயகமும் நல்லிணக்கமும் வலுப்பெறும்.

தனியார் ஊடகங்கள், சுயாதீனமான பத்திரிகைகளுக்கு இடமளிக்கும் கொள்கைகளை ஏட்டளவில் மாத்திரம் கொண்டிருப்பது எந்தவிதமான நன்மையையும் பொது மக்களுக்கு அளிக்காது. 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி அஞ்ஞாதவாசமிருந்து வருகின்றனர். பத்திரிகைச் சுதந்திரத்திற்காக பலர்  பல்வேறு தியாகங்களைக் கூட  செய்துள்ளனர் என்பதையும்  சிந்தனையில் கொள்ள வேண்டும். நம்பகரமான பத்திரிகைகள் எப்போதுமே உன்னதமான பாரம்பரியத்தின் காவலர்களாக திகழ்வன என்று கூறுவார்கள். அந்தவகையில் தனக்குரிய கடப்பாட்டை ஊடக ஒழுக்கக் கோவையின் வரம்புக்குள் நின்றவாறு இயங்கும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் பணியாளரைத் தாக்கியும் பிரதிகளை எரித்தும் அடாவடித்தனம் புரிந்தோரை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம்,  இந்த விடயத்தில் வேலியே  பயிரை மேய இடமளிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம்.   நன்றி தினக்குரல் 







மதக் காழ்ப்புணர்வை போஷிக்கக்கூடாது

பொதுமக்கள் தத்தமது சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்களைக் கையாளும் போது அவர்களின்  வாழ்வில் மத ரீதியான பெறுமானங்களும் கருத்துகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்துகின்றன. எந்தவொரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அடிப்படைப் பெறுமானங்களையே அந்த மதங்கள் போதிக்கின்றன. சமய ரீதியான இந்தப் பெறுமானங்கள் ஒவ்வொறு மதத்தினருக்கும் மிகவும் உணர்வு பூர்வமான விடயங்களாகும். சமூக, கலாசார, பொருளாதார, மத, இன, மொழி சார்ந்த  விவகாரங்களுக்கு எப்போதுமே  ஜனநாயக ரீதியில் தீர்வு காணப்பட  வேண்டும். இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களின் மத ஸ்தலங்கள் மீது  தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமையும் அவர்களின் மத உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட "ஹலால்' விவகாரத்துக்கு எதிரான பிரசாரங்கள் சிறிய குழுவொன்றினால் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றமையும் ஆரோக்கியமான அறிகுறியல்ல. இத்தகைய எந்தவொரு சம்பவங்களும் நாட்டில் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் அரசாங்கம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சவால்  விடுத்திருக்கிறது.  அந்தச் சவாலை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சிகளினதும் கருத்துகள் ஏட்டிக்குப் போட்டியான தன்மையைக் கொண்டதாக காணப்படுகின்றனவே தவிர இன, மத ரீதியான நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாகவே கள நிலைவரம் காணப்படுகிறது. சகல இன, மத சமூகங்களுக்கும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்க முடியுமெனவும் சகலருக்கும் உள்ள மத சுதந்திரத்தை எவரும் விமர்சிக்க உரிமை கிடையாது என்றும் அரசின் குரல்தரவல்ல பேச்சாளர்கள் கூறிவருவது வரவேற்கத் தக்க விடயமாக இருக்கின்ற போதிலும் இந்த நிலைப்பாட்டை முறையாக அமுல்படுத்துவதில் தான் மதங்களுக்கு எதிரான விரோத உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க முடியும். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய மத நம்பிக்கையிலிருந்தும் முஸ்லிம் ஒருவர் வழுவிச் செல்வாரேயானால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேவேளை முஸ்லிம் மக்களின் புனித நூலான குர்ஆன் ஏனைய மதங்களுடன் சமாதானம், நல்லிணக்கத்தையே நாடி நிற்கின்றது.

அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சம்பவங்களை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுக்கும்  அவர்களின்  வர்த்தக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுக்கத்தக்க  பிரசாரங்களைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். புடைவைக் கடைகளுடன் எந்தவொரு பொருத்தப்பாட்டைக் கொண்டிராத போதிலும் ஆடை விற்பனை நிலையங்களுக்கு எதிரான
"ஹலால்' பிரசாரத்தின் நோக்கமானது முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைப்பது என்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். பொறுமை, சகிப்புணர்வே இப்போது அவசியமாகத் தேவைப்படுகிறது. மதங்கள் மத்தியில்  வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே அவரின் வேண்டுகோளாக இருக்கிறது. அரசாங்கமும் நாடளாவிய ரீதியில் சர்வமதக்குழுக்களை அமைத்து இன, மதக்குழுக்கள் மத்தியில்  சௌஜன்யத்தையும் புரிந்துணர்வையும் சகிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த முயற்சி மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்ற போதிலும் இந்த சர்வமத அமைப்புகள் சிறப்பான முறையில் சமூகங்கள் மத்தியில் பணியாற்றுவதற்குத்   தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

இன, மத விரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை  செய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்த போதும் அத்தகையதொரு குழுவில்  நம்பிக்கையில்லை என்று பிரதான எதிர்க்கட்சி அறிவித்துவிட்டது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகளும் பரிந்துரைகளும் அமுலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட கடந்தகால அனுபவங்களைக் கொண்டு எதிரணி உத்தேசத் தெரிவுக்குழு தொடர்பாக  நிராகரித்திருக்கக் கூடும். எவ்வாறாயினும் வேறுபட்ட மதக் குழுக்கள் மத்தியில் பகைமை உணர்வுகளை ஏற்படுத்துவதற்கு காரணமான சக்திகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். மத நம்பிக்கையை அரசியல்  மற்றும் இன வெறுப்புக்கான போர்வையாக பயன்படுத்த எந்த விதத்திலும் இடமளிக்கக் கூடாது.

எந்தவொரு மதமுமே உண்மை, பரிவு, நேர்மை என்பவற்றைப் போதிக்கின்றது. இவை சகல மதங்களுமே கொண்டிருக்கும் பொதுவான விடயம். பொதுவான இந்த விடயங்களை தனித்துவமானவையென ஒவ்வொரு மதக் குழுக்களும்  நிலை நிறுத்த முற்படும் போதே சமூக, அரசியல் ரீதியான முரண்பாட்டுக்கு வழிவகுக்கும். உண்மையிலே இப்போது இலங்கைச் சமூகங்கள் மத்தியில் அவசரமாகத்  தேவைப்படுவது"வேற்றுமையில் ஒற்றுமை'யே. அதற்குரிய களத்தை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது. அரசியல் அனுகூலம் என்ற தளத்திற்கு அப்பால் நின்று இந்த விடயம் தொடர்பாக சிந்தித்துச் செயற்படும் போதே முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பரப்பப்படும்  பிரசாரங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளியெறிய முடியும்.
  நன்றி தினக்குரல்

No comments: