ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 1 - மதி

.
photos by Raj
ஆழ்வார்கள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எமது ஆச்சாரியார் ஸ்ரீசச்சிதானந்த சாயி அவர்கள் பக்திப் பரவசத்தில் ஊறித்திளைத்த ஆழ்வார்களின் பாசுரங்களை விளக்கியும் பாடியும் 2013 ம் ஆண்டுத் தொடக்கமே ஜனவரி  5ம் 6ந் திகதிகளில் ஏர்மிங்ரன் சமூக மண்டபத்தில் (Ermington Communtiy Hall) தொடக்கி வைத்தார். ஆழ்வார்கள் என்றாலே ஆழ்ந்து உணர்ந்து பரவசப்பட்டவர்கள் என்பது பொருள். இறைவனுடன் உள்ள தொடர்பு தெவிட்டாத ஆனந்தமாய் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும். ‘ஆராவமுதே’ இப்பதம் பலருக்கும் பழக்கப்பட்டது. “ஆராவமுதே அளவிலாப் பெம்மானே, ஓராதருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே”. “அன்பினில் வினைந்த ஆரமுதே”, இறைவனை பக்தி பரவசத்தில் பாடியவை இவை. உலகில் எந்த பொருளாயினும் முதலில் இன்பம் தருவது போலிருந்தாலும் நேரஞ் செல்ல செல்ல, காலம் போகப்போக துன்பம் விளைவிப்பவையாக முடியும். “ஆரவமுதே...” எனத் தொடங்கும் திருவாய் மொழி பாசுரத்தை பாடக்கேட்டார் ஆயிரத்துள் பத்தும் என்று பாடக்கேட்ட ஆராஅமுதில் திளைத்த நாதமுனிகள் ‘அப்படியானால் மிகுதிப் பாடல்களும் உங்கட்குத் தெரியுமா’ என்று அதன் தன்மை, பெருமைகளால் கவரப்பட்டு ஆவலோடு கேட்டார். தமக்கு அப்பத்தும்தான் தெரியும் மிகுதி 990ம் தெரியவில்லை என்றனர். உடனே நாதமுனிகள் ஆயிரம் பாசுரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தில் கும்பகோணம் சென்றார். அங்குள்ளவர்களுக்கும் தெரியவில்லை. அங்கிருந்து திருக்குரு கூருக்கு சென்ற பொழுது மதுரகவியாழ்வாரின் வம்சத்து ஒருவரான பராங்குசதாசரைக் கேட்ட பொழுது தனக்கும் அப்பத்தும்தான் தெரியுமென்றார். ஆனால் இந்தப் பத்துப் பாசுரங்களையும் பன்னீராயிரம் தடவை சொன்னால் உடனே நம்மாழ்வார் காட்சியளிப்பார் என்று முன்னோர்கள் சொல்வார்கள் என்றார்.





உடனே நாதமுனிகள் அவ்வாறே ஜபிக்கத் தொடங்கினார். முடிவில் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார்; காட்சியளித்து நாலாயிரத் திவ்விய பிரபங்தங்களையும் அருளிச்செய்தார். நாதமுனிகள் தம் ஊருக்குப் போய் 4000 பாசுரங்களையும் அவற்றின் கருத்தாழத்தையும், தன்மை, பெருமைகளையும் நன்குணர்ந்து தம் சீடர்கள் மூலமாக ஆழ்வார்கள் பாசுரங்களை எங்கும் பரவும்படி செய்தார். ஆழ்வார்கள் என்பதன் பொருளே ஸ்ரீமன் நாராயணனின் பக்தி பரவசத்தில் ஊறித்திளைத்தவர்கள் என்பதாம். பக்தி வெள்ளத்தில் கீழ் மேலாகப் பதைத்துருகியவர்கள். நாதமுனிகள் மெய்மறந்து கேட்ட பாசுரம்.

“ஆராவமுதே அடிஅடியேன் உடலம்
    நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய வுருக்கு
    கின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும்
செழுநீர்த் திருக்குடந்தை  
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
    கண்டேன் எம்மானே”,

“தெவிட்டாத தித்திக்கும் அமுதமே” என திருக்குடந்தைப் பெருமானை விழித்துக் கூறும் பொழுது அன்பர் தம் உடலை நீராய்க்கரைத்து உருக்கும் நிலை சொற்களுக்கு அப்பாற்பட்டது. ஓங்கி செளிப்பாக வளர்ந்த நெற்கதிர்கள் தாங்கிய பயிர்கள் காற்று வீச எம்பெருமானுக்கு கவரிவீசுவதுபோல் அப்படியே ஆடி அசைகின்றதாம். இங்கு ஸ்ரீசாரங்கபாணிப் பெருமான் பாம்பணையில் பள்ளி கொள்ளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
நாதமுனிகள் ஆழ்வார்களின் மதுரமான பாசுரங்களை மீட்டுத்தந்தவர். பக்தி உலகுக்கு அவர் ஒரு பொக்கிஷம். நாதமுனிகள் பன்னீராயிரம் தடவை பாடிய மதுரகவியாழ்வாரின் பாடல்களைப்பார்ப்போம்.  பன்னிரெண்டு ஆழ்வார்களிலும் மதுரகவியாழ்வார் தனித்துவமானவர். மற்றைய ஆழ்வார்கள் எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்து பக்தி பரவசததில் பாசுரங்கள் பாடித்துதித்தனர். ஆனால் மதுரகவியாழ்வாரோ இறைவன் பக்ததனான நமக்கெல்லாம் உரிய நம்மாழ்வாரை தம் தலைவனாகக் கொண்டு இனிமையான பாசுரங்களைப் பாடித்துதித்தார். இது ஒரு அரிய பொக்கிஷமாகும். ஏனைய திவ்வியமான, மங்களமான பாசுரங்களை, பக்திச் சுவை கொட்டும் கனிகளை மக்கள் மீண்டும் சுவைக்க வழிவகுத்தது தொடக்கமே
    
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பன் இல்

அன்னை யசோதை அதிகாலையில் மெள்ள, கண்ணன் எழும்பாதவாறு தன் கடமைகளைச் செய்யப்புறப்பட்டாள். கையில் ஒரு காப்பு மாத்திரம் இருக்க மிகுதியை நீக்கிச் சத்தம் ஏற்படாமல்  தயிர் கடையத் தொடங்கினாள். ஒரு பகுதி வெண்ணெய் எடுத்து மீண்டும் மத்தினால் கடையும் நேரம் குழந்தை கண்ணன் மெள்ளத் தவழ்ந்து வந்து தாயின் மடியிலேற, பசிப்பதை உணர்த்த, அன்னை யசோதாவும் அப்படியே குழந்தையை அள்ளியணைத்து பாலூட்டத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் பால்பொங்கி விறகு அடுப்பை அணைக்குஞ் சததங்கேட்கவே அவசரமாக கண்ணனை அப்படியே கீழே விட்டு விட்டு இதோ ஓடிவருகிறேன் என்று கூறிக் கொண்டே விரைந்து போனாள். பசி தீராததனால் கோபமடைந்தது போல் கண்ணன் தயிர் கடைந்த தாம்பினால் தயிர்குடம் வெண்ணெய்குடம் எல்லாவற்றையும் அடித்துடைத்து விட்டான். கை நிறைய வெண்ணெயுடன் வெளியே போய் தானியங்கள் குற்ற உதவும் கவிழ்ந்திருந்த உரலின் மீது ஒருவாறேறி அருகில் நின்ற குரங்குடன் வெண்ணையைப் பகிர்ந்து உண்ணத்தொடங்கினான். மீண்டும் வந்த அன்னை யசோதை தயிர் கடைந்த இடத்தைப் பார்த்து புன்முறுவலுடன் கண்ணனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கத்தான் வேண்டுமென எண்ணி பசுக்களைக் கட்டும் கண்ணிகளுடனாக கயிற்றை எடுத்துக்கொண்டு கண்ணனைப் பிடிக்க விரைவாகப்போனாள். கண்ணனோ சின்னக்கால்களால் விரைவாக ஓடினான். இது வெளியில் நின்றோர்க்கு ஒரு அரிய காட்சியாய் அமைந்தது. விரைவில் அன்னைக்குக் கட்டுண்டவர் போல் யசோதையின் கையில் பிடிபட்டுக் கொண்டார்.

அன்னை யசோதை சிறுகண்ணனை அந்த உரலுடன் கட்ட முனைய கயிற்று முனைகளை கட்ட இன்னும் சிறிது கயிறு தேவைப்பட்டது. வேறு கயிற்றைக் கட்டித் தொடுக்கவும் இன்னும் தேவைப்பட்டது. இவ்வாறு பல கண்ணிகள் சேர்ந்த கயிற்றினால் மாயக் கண்ணன் உரலுடன் கட்டப்பட்டான். ஆனால் தான் அந்தக் குறும்புக்கார கண்ணனைப் பற்றிப் பாடவில்லை என்றும் அன்பர்தம் அன்பனாம் தம் குருவைப் பற்றியே பாடியருளினார்.
தென்குருகூர் நம்பி என்று சொல்லும் போழுதே அடிநாவிலிருந்தே என்றும் அமுதூறும் பெருமாள்தம் அன்பராம் நம்மாழ்வாரைப் பற்றியே மதுரகவியாழ்வார் பாடியருளினார்.

நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறுமென் நாவுக்கே

மதுரகவியாழ்வார் வட இந்தியத் தலங்களுக்கு யாத்திரையாகச் சென்றிருந்த பொழுது தென்திசையிலிருந்து ஓர் ஒளி நன்கு தெரிவதைக் கண்டார். தொடர்ந்தும் தெரிந்துகொண்டேயிருந்தால் இறைவன் தன்னையங்கு அழைப்பதாக எண்ணி ஒளிவரும் திசை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஓளி தெரிந்து கொண்டேயிருந்தது அவர் பிரயாணமும் தொடர்ந்தது. திருக்குருகூர் வந்ததும் அந்த ஒளி தெரியவில்லை. அந்த ஊரவர்களிடம் ஏதாவது சிறப்பான கோவில், பெரியார் யாராவது உளராவென வினைவிய பொழுதுதான் ஒரு புதுமையான குழந்தையைப் பற்றியறிந்தார். இறைவன்தான் தன்னை இவ்வாறு அழைத்திருப்பதாக எண்ணி அக்குழந்தையைப் பார்க்கப் புறப்பட்டார். காரியார் நம்பிக்கு மகனாகப் பிறந்த குழந்தை அழாமல், கண்விழிக்காமல், உணவேதும் உண்னாமல் இருந்ததால் பெற்றோர் திருக்குருகூர் ஸ்ரீஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வந்தனர். இத்தலத்தில் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலின் பிரகாரத்திலுள்ள புளிய மரப் பொந்தில் உட்சென்று அமர்ந்து கொண்டான். இவ்வாறு அமர்ந்து 16 வருடங்கள் கழிந்தன. அவரது உடம்பு மிக்க தேஜஸ்உடன் விளங்கியது. வடநாட்டு யாத்திரைக்குச் சென்றிருந்த மதுரகவியாழ்வார்க்கு தெரிந்த ஒளி இங்கிருந்துதான் வந்தது. மிக்க ஒளியுடன் பத்மாசனத்தில் இருந்த குழந்தையைக் கண்ட மதுரகவியாழ்வார்

செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் அது
எத்தைத்தின்று என்கே கிடக்கும்?
” என்று கேட்க

உடனே “அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்ற பதில் உடனே வந்தது. புளியமரப் பொந்தில் இருப்பவர் மகாஞானி என்பதை உணர்ந்து அவருக்கு சடகோபநம்மாழ்வார் என்று பெயரும் சூட்டினார். பின்னர் நம்மாழ்வார் பாட, பேச ஆரம்பித்தார். அவரையே தம்குருவாகக் கொண்டு பாசுரங்கள் பாடியருளினார் மதுரகவியாழ்வார்  அவர் புகழ் பாடிப்பாடி இன்புற்றார். தெய்வத்தை நேரிடையாகத்தரிசனம் செய்வதைவிட ஆழ்வார்கள் மூலம் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ‘நாவினால் நவிற்றி இன்பமெய்தினேன்’ என்றும் திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் பெரிய வண்குரு கூர்நகர் நப்பிக்காள் உரிய னாய்அடியேன் பெற்ற நன்மையே.
சுனாதன தர்மம் - எமது சமயம் - வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. வேதம் சமஸ்கிருத மொழியில் உள்ளது. ஆழ்வார்கள் வேதத்தின் உட்பொருளை தென்மக்கள் மொழியாகிய இன் தமிழில் பாடியருளினர். இதையே

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளி னான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண் டாயிரம் இன்தமிழ் பாடினான்
அருள் கண் டீர்இவ் வுலகினல் மிக்கதே.

மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே..


இவர் தன் குரு எவ்வாறு மிக்க பண்பாக அன்பாக அவர் தம் சீடர்களை வழிப்படுத்தினார் என்பதை

பயன் அன்றாகிலும் பாங்கிலராயினும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்

என்றும் எம்பெருமாளை உணர்ந்து அனுபவித்து வந்த அன்பர்கட்கு சிறப்பாக குருகூர்நம்பியாகிய நம்மாழ்வார்க்கு தாம் அன்பன் என்று பாடிய பாசுரத்தின் இறுதிப்பா

அன்பன் தன்னை யடைந்தவர்கட் கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்பு வார்பதி வைகுந்தம் காண்மினே.


மதுரகவியாழ்வார் பாடியது ஒரேயொரு பிரபந்தமாயினும் இது மிகவும் சிறப்பானது. இராமாயணத்தில் காண்டங்களுள் சிறப்புப்பெயர் பெறுவது சுந்தரகாண்டம். சுந்தரத்தலைவன் இராமன் இங்கு முக்கிய இடம் பெறவில்லையாயினும் அவரை நினைந்துருகிய சீதாபிராட்டியாரும் இராம பக்தியில் முதலிடம் வகிக்கும் ஸ்ரீ அனுமனுமே முக்கியமாகப் பாடல்களில் இடம் பெறுகின்றனர். இதுபோலவே மதுரகவியாழ்வார் பாசுரங்களிலும் ஸ்ரீவிஷ்ணுவின் பக்தரான நம்மாழ்வார்தான் மதுரமாகப் பாடல் பெற்றார். பக்தர்கள் மேலும் இனிமையானவர்கள் என்பதாம்.
ஸ்ரீமத் பாகவத்திலும் பக்தியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது ஸ்ரீநாரதமுனி தன் எதிரே கவலையோடு இரு முதுமையடைந்து குற்றுயிராய்க்கிடந்தவர்களுடன் கவலையோடு காணப்பட்ட அழகிய இளம் பெண்ணைப்பார்த்து “பெண்ணே நீ யார்? இந்த முதியவர்கள் யாவர்? உன்னுடைய கவலைக்கு ஏது காரணம்?” என்று கேட்டார். “என் பெயர் பக்தி. திராவிட நாட்டில் பிறந்தேன் கர்நாடகாவில் சிறிது காலம் வளர்ந்தேன். மகாராஷ்டிராவில் கொஞ்சம் வளர்ந்தேன். குஜரத்தில் அழகையும் கவர்ச்சியையும் இழந்து முதுமையடைந்தேன். பின் வடநாட்டில் அலைந்து திரிந்து பிருந்தாவனம் சென்றதும் என் அழகையும் ஆனந்தத்தையும் மீண்டும் பெற்றேன். இந்த இருவரும் எனது பிள்ளைகள். ஞானம், வைராக்கியம் என்பனதாம் இவர்கள்” என்றாள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி வெள்ளத்தில் திளைத்தது தமிழ் நாட்டில். படிப்பறிவற்ற கோபிகள் கோபிகைகள் பக்திக்கு இலக்கணமாகததிகழ்தது பிருந்தாவனத்தில்.
ஸ்ரீநிவாசப் பெருமானை ஆழந்து உணர்ந்து அனுபவித்து இனிய பாசுரங்களாகத் தந்த ஆழவார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஏறக்குறைய ஓரே காலத்திருந்தவர்கள். பொய்கையாழ்வார் ஒரு தடாகத்தில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றார். பக்தி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இது மற்றவர்கண்களுக்குப் பைத்தியம் போலத்தோன்றலாம். ஆனால் பகவானையடைய இதுவே சிறப்பானது. பிறருக்குப் பேய் போலவும், இறைவன் மீது அன்பில்லாதவர்கள் அவருக்குப் பேய் போலவும் உணர்ந்து கொண்டவர்தான் பேயாழ்வார் எனப்படும் ஸ்ரீநாராயணனின் பக்தன்.  பக்தியின் மேலீட்டால் செய்யும் செயல்கள் சில சமயம் வியப்பையும் தரும், பைத்தியம் போலவும் தோன்றும். “ஆட்டுகிறார் பகவான், ஆடுகிறோம் நாம்” என்ற நிலை, உணர்வு வரவேண்டும்.பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் மல்லிகைக்கொடிக்காட்டில் உள்ள நீலோற்பல மலரில் தோன்றியவர். எனவே அவர் பெயர் அப்படி அமைந்தது. இம்மூன்று ஆழ்வார்களும் நூறு, நூறு பாசுரங்கள் பாடியருளினர். ஒரு நாள் மாலையில் திருக்கோவிலூரில் நடந்துபோய்க் கொண்டிருந்த பொழுது கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு மழைபெய்யத் தொடங்கிற்று. கருமேகங்கள் ஸ்ரீமந் நாராயணனை நினைவூட்ட அச்சிந்தையுடனே ஒதுங்க ஒரீடத்தை நாடினார். ஓர் ஓலைக் குடில் தாழ்வாரம் தெரியவே அங்கு போய் ஓதுங்கிக் கொண்டு படுத்தும் விட்டார் பொய்கையாழ்வார். இருட்டில் இன்னொருவர் அங்கு வந்திருப்பதை உணர்ந்த அவர் “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று கூற இருவரும் உட்கார்ந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை இருட்டில் இன்னும் ஒருவர் வந்ததை உணர்ந்து கொண்டனர். “இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என அவரையும் அன்போடு சேர்த்துக் கொண்டனர். மூன்று ஆழ்வார்கள் ஒன்று சேர்ந்தால் கூறவும் வேண்டுமா. பகவானுக்கும் வைகுந்தத்தில் இருப்புக் கொள்ளவில்லை. உடன் புறப்பட்டுவிட்டார் பக்தர்களைப் பார்க்க. ஸ்ரீதேவியும் உடன் புறப்பட்டுவிட்டார். பக்தர்கள் மத்தியில் ஸ்ரீதேவி மார்பில் வீற்றிருக்க பகவான் வந்து சேர்ந்துவிட்டார் இருட்டோ இருட்டு. நாலாமவர் ஒருவர் தம்மிடையே வந்திருப்பதை மூன்று ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டு “நீர் யாரெனத் தெரியப் படுத்தும்” என்றனர். புகவான் பிரசன்னததினால் ஏற்பட்ட ஆனந்தத்தினால் அவர் யாரென உணர்ந்து கொண்டனர் பொய்கையாழ்வார்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினென்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று.

ஒரு விளக்கேற்றுகின்றார். பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றின் இருப்பிடமான பூமி தகளியாகின்றது. பலப்பல ஆறுகள் சோ வென்று விரைந்தோடிவந்து கலந்தாலும் அதன் மாறாத்தன்மைக்கும் உறுதிக்கும் இருப்பிடமான சமுத்திரமே நெய்யாகின்றது. வெம்மையான சூரியன் ஒளி, ஞான ஒளி விளக்காகினறது. பொய்கையாழ்வார் துன்பமாகிய இருள் நீங்க ஞான விளக்கேற்றுகின்றார். ஸ்ரீமத் நாராயணனின் கையிலுள்ள சுதர்சனச் சக்கரமோ கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளி பொருந்தியது. எனினும் பக்திப் பெருக்கில் இயற்கையில் காணப்படுவற்றைக் கொண்டு ஞானவிளக்கேற்றுகிறார். சொல்மாலை எம்பெருமான் திருவடிக்கு சூட்டினார், துன்பமாகிய கடலை, இருளை நீக்க வென்று.
பூதத்தாழ்வாரும் எம்பெருமான் சந்நிதியில் ஒரு விளக்கேற்றுகிறார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.


எம்முள் காணப்படும் குணங்களைக் கொண்டு ஞானச் சுடர்விளக்கு ஏற்றுகின்றார். ஆழ்வார் பாசுரங்களில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து மிளிர்வதைக் காணலாம். பூதத் தாழ்வார் ஏற்றும் விளக்கின் தகளி இறைவன்பால் செலுத்தும் ஆரா அன்பு. எமக்குள் இறைவனைக் காண வேண்டும் என்ற தாங்கொணாத் தவிப்பு நெய்யாகின்றது. தான் என்ற அகங்காரம் அற்றுப்போய் இன்பமாகிய இறை சிந்தையில் உருகி நிற்கும் தூய மனது திரியாகின்றது. இவ்வாறு ஸ்ரீமன் நாராயணனுக்கு ஞானச்சுடர் விளக்கேற்றுகின்றார், ஞானத்தமிழில்.
பேயாழ்வாரின் பாசுரத்தில்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.


பேயாழ்வார் முதலில் கண்டது திவ்வியமான தெய்வத்iதாயாரை அவருடைய மேனியோ பொன்னிறமானது. எனவே ஆழ்வார் முதலில் கண்டது அன்பிற் குறைவிடமான தாயார் வீற்றிருக்கும் திருமாலின் நெஞ்சத்தைத் தான். அடுத்து பெருமானின் சூரியன் உதிக்கின்ற பொழுது தெரியும் செந்நிறம் கொண்ட மேனியையும், பொன்னைப்போலே ஒளிமிக்க சுதர்சனக் சக்கரததையும், அழகிய வெண்சங்கையும் கையில் எம்பெருமான் ஏந்தியிருப்பதையும் கண்டார். இவ்வாறு மூவரும் தாம்தாம் அனுபவித்து இன்புற்றவற்றை த் தத்தம் பாசுரங்களில் அழகாகத் தந்துள்ளனர்.
 தொடரும் ............................

No comments: