வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு -53 தேனும் தினைமாவும்


ஞானா:        அப்பா இந்த யாழ்ப்பாணத்து சைவமக்கள் கந்தபுராணக் கலாசாரம் உடையவை எண்டு                ஏன் அப்பா சொல்லிறவை?   
                  
அப்பா:        என்ன ஞானா நீ இப்ப திருக்குறள் படிக்கிறதை விட்டிட்டுக் கந்ததபுராணம் படிக்கப் போறியே?

ஞானா:        இல்லை அப்பா….என்ரை சிநேகிதியின்ரை அம்மா முருகன் கோயிலிலை மாவிளக்குப் போடத்            தினைமா எங்கை வாங்கலாம் எண்டு தேடிறாவாம். எனக்குத் தினைமா வாங்கக்கூடிய இடம்             தெரியுமோ எண்டு கேட்டாள். நான் சொன்னன்,  நான் தினையைக் கண்டதும் இல்லை,                மாவிளக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை எண்டு……

அப்பா:        உடனை உன்ரை சிநேகிதி….இது தெரியாதோ உனக்கு,  இது கந்புராணக் கலாசாரம். எங்கடை            ஆக்கள் யாழ்ப்பாணத்திலை முருகன் கேயில்களிலை,  தினை மாவிலை சிட்டி பிடிச்சு அதிலை             நெய்விட்டு விளக்கேற்றிறவை எண்டு செல்லி உன்னை மட்டந்தட்டியிருப்பாள்.சுந்தரி:        (வந்து) ஆர் ஆரை மட்ந்தட்டினதப்பா?

அப்பா:        வாரும் சுந்தரி…..இவள் பிள்ளை ஞானாவுக்கு மாவிளக்கு எண்டால் என்ன எண்டு தெரியாதாம்.            ஆரோ சிநேகிதி கேலிபண்ணியிருக்கிறாளாம்.

சுந்தரி:        குறமகள் வள்ளி முருகப் பெருமானுக்குத் தேனும் தினைமாவும் குடுத்தகதை உனக்குத்                 தெரியாதே ஞானா?

ஞானா:        இல்லை அம்மா. நான் உந்தப் புராணங்களுக்கை போறேல்லை. இந்தக் காலத்திலை                 எத்தினையோ நல்ல சாப்பாடுகள் இருக்கேக்கை ஆர் உந்நத் தேனுக்கும் தினை மாவுக்கும்            போகப் பேகினம்.

அப்பா:        அதெண்டால் உண்மைதான் ஞானா. தினை அரிசியையும்ää வரகரிசியையும் கைவிட்டிட்டுக்                கோதுமை மாவையும் பாணையும் கட்டித் தழுவினதாலை இப்ப இன்சுலினுக்குப் பின்னாலை            போக வேண்டியதாய் இருக்கு.

ஞானா:        தினை அரிசு எப்பிடி இருக்கும் அப்பா?

அப்பா:        சுந்தரி நீர் வந்து தினை வளர்ந்த ஊரைச் சேர்ந்தனீர் தானே. இவள் பிள்ளைக்குச்                 சொல்லுமன் தினையைப் பற்றி.

சுந்தரி:        தினை வந்து ஞானா ஒரு சிறிய தானியம். மஞ்சள் நிறமாயிருக்கும். செம்பாட்டுத் தறை                உள்ள நிலங்களிலை செழிச்சு வளரும். யாழ்ப்பாணத்திலை,  உரும்பராய்,  ஊரெழு,                 புன்னாலைக் கட்டுவன்,  போன்ற இடங்களிலை தேட்டப் பயிராய் செய்தவை. 
    
அப்பா:        சுந்தரி நல்ல விளக்கமாய்ச் சொல்லிறீர்;. இப்ப சாமி,  தினை, குரக்கன் இதுபோன்ற                 தானியங்களை யாழ்ப்பாணத்திலை பெருமளவிலை பயிரிடுகினமோ தெரியேல்லை. தினைச்                சோறு, குரக்கன் புட்டு இதுகளைச் பாப்பிட்டு வந்தால் டபிற்றிஸ் எண்ட வியாதி                    கிட்டவும் வராதாம்.

ஞானா:        அப்பிடி எண்டால் அப்பா அங்கை இதுகளைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யலாந்தானே.                நல்ல வருமானம் கிடைக்குமெல்லே?
சுந்தரி:        நல்ல வருமானம் கிடைக்குந்தான் ஞானா. அனால் சுக சீவியம் செய்ய விரும்புகிற சனம்                சாமி,  தினையை ஏன் கவனிக்கப் போகுது.       
அப்பா:        சரியாய்ச் சொன்னீர் சுந்தரி…..தினையை ஆர்கவனிக்கா விட்டாலும் திருவள்ளுவர் தினையை            நல்லாய் கவனிச்சிருக்கிறார்.

ஞானா:        இதென்னப்பா நீங்கள் சொல்லிறது? திருவள்ளுவர் தினையைச் சாப்பிடச் சொல்லிச்                சொல்லியிருக்கிறாரே?

அப்பா:        தினை அரிசி சாப்பிடுங்கோ எண்டு அவர் சொல்லேல்லை. ஆனால் காலம் தினை எண்ட                சொல்லைச் சாப்பிட்டுவிடும் எண்டு பயந்து அந்தச் சொல்லை தன்ரை மூண்டு குறளிலை                வைச்சுப் பாடியிருக்கிறார்.

ஞானா:        எனக்கு ஒரு குறள் தெரியுமப்பா:
                    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்                                                    கொள்வர் பயன்றெரி வார்

அப்பா:        உது வந்து ஞானா செய்நன்றி அறிதல் எண்ட அதிகாரத்திலை உள்ள 104 குறள். உதவியின்            பயனை நன்கு தெரிந்தவர்கள் அது ஒரு தினை அளவ சிறிய உதவியாய் இருந்தாலும் பெரிய            பனைபோன்ற பேருதவியாகக் கொள்வர் எண்டது கருத்து.   
             
சுந்தரி:        மற்றக் குறள் எனக்குத் தெரியும் அப்பா:       
                    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்                                கொள்வர் பழிநானு வார்.

அப்பா:        சுந்தரி… இந்த இரண்டு குறள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யிருக்கு. இப்ப நீர் சொன்ன            குறள் குற்றங்கடிதல் எண்ட அதிகாரத்திலை வாற 433வது குறள். பழிக்குப் பயப்பிடுகிறவர்கள்            தம்மீது தினை அளவு சிறிய குற்றம் வந்தாலும் அதைப் பனையாய எண்ணி வருத்தப்                படுவார்கள் எண்டுது கருத்து. எங்கை பாப்பம் மற்ற மூண்டாவது குறளைச் சொல்லுங்கோ?      
  
ஞானா:        அப்பிடி மூண்டாவது குறள் இருக்கிறதாய் எனக்குத் தெரியேல்லை அப்பா.

சுந்தரி:        ஞானா உனக்குத் தெரிய நியாயம் இல்லைத்தான். படிச்சிருப்பாய் மறந்து போனாயாக்கும்.     

அப்பா:        விட்டிடாதையும் சுந்தரி. இவள் பிள்ளை ஞானா காமத்துப்பால் குறள்களிலை அதிகம்                கவனம் செலுத்திறேல்லை. பிள்ளை ஞானா நானிப்ப குறளைச் செல்லேல்லை. நீ போய்                129 வது அதிகாரத்திலை உள்ள 1282வது குறளைப் பார். தினை எண்ட சொல்லு                    இருக்கோ இல்லையோ எண்டு தெரியவரும்.

சுந்தரி:        அப்பா நல்ல காரியந்தான் சொல்லிறார் ஞானா. பாத்தால் தேனும் தினைமாவுமான செய்தியள்             கிடைக்கும். இப்ப வாருங்கோ சாப்பிடுவம். அதோடை ஞானா உன்ரை சிநேகிதிக்குச் சொல்லு                பிளமிங்டனிலை உள்ள ஸ்பைஸ் கடையிலை தினைமா வாங்கலாம் எண்டு.         
   
                            (இசை)

No comments: