தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா


.

பக்தி மொழியெனத் தமிழை இனங்காட்டிய தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை உலகம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அடிகளாரின் பிறந்த மண்ணில் இவ்விழாவை யாழ். மறை மாவட்டமும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முன்னெடுப்பதெனத்“ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாரதி கண்ட கனவை நனவாக்கியவர் தனிநாயகம் அடிகள். தமிழியல் சார்ந்த பற்றுணர்வை நம்மவர் மத்தியில் விதைப்பதற்கு இவ் விழா வகைசெய்யும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ற வகையில் திருமூலர் திருமந்திர வாக்கில் இருந்து உள்வாங்கப்பட்ட "நன்றாகத் தமிழ் செய்வோம்' என்ற தொனிப் பொருளில் நூற்றாண்டு விழாவை முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை அடிகளாருக்கு கல்வி வழங்கிய புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்ச் சங்கத் தலைவரும் விழாக்குழுவின் தலைவருமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தித் தொடக்கிவைப்பார். இதனைத் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளைப் பாடசாலைச் சமூகத்தினரும் தமிழார்வலர்களும் முன்னெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய முன்னெடுப்புக்களுக்கு நூற்றாண்டு விழாக் குழுவினர்உறுதுணை வழங்குவர்.

நிறைவு விழா ஆய்வரங்கம் மற்றும் ஆற்றுகை நிகழ்வுகளை உள்ளடக்கி மூன்று நாள்களுக்கு இடம்பெறும். இது எதிர்வரும் ஜூலை மாத நிறைவில் இடம்பெறவுள்ளது. தமிழியல் சார்ந்த விழிப்புணர்வை மாணவர் மத்தியில் முன்னெடுக்கும் வகையில் பாடசாலை மாணவரிடையே போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இவை பற்றிய விபரங்கள் விரைவில் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும்.

"நன்றாகத் தமிழ் செய்வோம்' என்ற தலைப்பில் ஆய்வரங்கமும் இடம்பெறவுள்ளது. இதனை மையப் பொருளாகக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கட்டுரைகள் தொடர்பான ஆய்வு முன்மொழிவை ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் அடங்கக் கூடியவாறு கணினியில் தட்டச்சு செய்து எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்புமாறு தமிழறிஞர்களை விழாக் குழுவினர்கோரியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் 8 பக்கங்களில் 20 நிமிடங்களில் சமர்ப்பிக்கக்கூடியவாறாகத் தமது கட்டுரையை அமைத்து எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்குள் கிடைக்கக்கூடியவாறு அனுப்ப வேண்டும். ஆய்வு முன்மொழிவை பேராசிரியர் கி. விசாகரூபன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

விழாவின் நிறைவு நாளன்று வெளியிடத்தக்கதாக அமைக்கப்படும் நூற்றாண்டு விழா மலருக்கான ஆக்கங்களும் துறைசார்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன. மேற்படி கருப்பொருளை உள்வாங்கி அடிகளாரைத் தொடர்புபடுத்தும் வகையில் அமையும் கட்டுரைகளுக்கு மலரில் முன்னுரிமை வழங்கப்படும். கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஏ4 தாளில் 4 தொடக்கம் 8 பக்கங்களுக்கு இடைப்பட்டதாக அமையக்கூடியவாறு கணினியில் தட்டச்சிட்டு அனுப்ப வேண்டும். ஆக்கங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் பேராசிரியர் ஞா. பிலேந்திரன், புனித மடுதீனார் குருமடம், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நூற்றாண்டுவிழாவை முன்னெடுப்பதற்கெனத் தமிழ்ச் சங்கம், மறை மாவட்டம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய நூற்றாண்டு விழாக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக யாழ்ப்பாணத் தமி“ழ்ச்சங்கத் தலைவரும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர்தி.வேல்நம்பியும் இணைச் செயலாளர்களாக அருட்கலாநிதி அ.பி. ஜெயசேகரம், தமிழ்ச் சங்கச் செயலர் இரா. செல்வவடிவேல் ஆகியோரும் பொருளாளராக யாழ். கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஈ.பி. மரியதாசனும் செயற்படவுள்ளனர்.

நிர்வாக உறுப்பினர்களாக யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க உபதலைவருமாகிய பேராசிரியர் கி. விசாகரூபன், கிறிஸ்தவ நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ஞா.பிலேந்திரன், சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி, கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளரும் தமிழ்ச் சங்கப் பொருளாளருமாகிய ச.லலீசன், கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பா. பாலகணேசன், தொழினுட்பக் கல்லூரியின் முன்னாள் அதிபர் இ.திலகரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர்அருட்பணி ஜெறோ செல்வநாயகம், தமிழாசிரியர்களான ந.கணேசமூர்த்தி, இ.இ.வசீகரன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
 Nantri:thinakkural.com

No comments: