தமிழ் சினிமா

சமர்

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற முதுமொழியை சற்றே சீண்டிப்பார்க்கும் படம் தான் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் சமர்.
தானுண்டு தன் காதலுண்டு என்று போகிற ஒருவனை, சம்பந்தமேயில்லாமல் சீண்டிப்பார்த்தால் என்னாகும்? இதுதான் இப்படத்தின் ஒருவரி கதை சுருக்கம்.
'தீராத விளையாட்டு பிள்ளை' என்றொரு படத்தை இயக்கி விஷாலின் வாழ்வில் தீராத சோகத்தை ஏற்படுத்திய இயக்குனர் இவர்.
முற்பகல் செய்த பாவத்திற்கு பிற்பகல் பிராயசித்தமாக அமைந்திருக்கிறதா? பெரும் கேள்வியோடு நகர்கிறது படம்.
நம்மையும் இழுத்துக் கொண்டு வேக வேகமாக நகர்கிற இப்படத்தில் இடைவேளை வந்ததே தெரியவில்லை.
ஊட்டியில் வசிக்கிற விஷாலுக்கு காடுகளை சுற்றிக்காட்டும் 'கைட்' வேலை.
சும்மா இருந்துட்டு போகட்டுமே என்று காட்டுத்தனமான சண்டைக்காட்சியோடு படத்தை தொடங்குகிறார்கள்.
இது, கதைக்கு தேவையில்லை என்றாலும், அவரது ரசிகர்களுக்கு தேவைப்பட்டதால் திரு வைத்திருக்கிறார்.
திடீரென விஷாலுக்கு ஒரு காதலி இருப்பதாக கூறி சுனைனாவையும் காட்டுகிறார்கள்.
தனது காதலன் தன்மீது கொண்டிருக்கிற அக்கறை, ஒரு ஸ்பூன் சர்க்கரை அளவுக்கு கூட இல்லையே என்கிற எரிச்சலில், மிக மோசமான கேள்விகளால் திட்டி தீர்க்கிறார் அவர்.
'என் ஹிப் சைஸ் தெரியுமா உனக்கு, அட்லீஸ்ட் என் செப்பல் சைஸ்சாவது தெரியுமா?' என்றெல்லாம் நோகடிக்கும் அவர், 'உனக்கும் எனக்கும் ஒத்துவராது, குட்பை' என்று கூறிவிட்டு பாங்காக்கிற்கு பறக்க, காதலியை மறக்கவும் முடியாமல் சேரவும் முடியாமல் தவிக்கிறார் விஷால்.
சில மாதங்கள் கழித்து அவருக்கு வந்து சேரும் ஒரு கொரியரில் சுனைனாவின் காதல் சொட்டும் கடிதம் ஒன்றும், பாங்காக்கிற்கு வரச்சொல்லி ஒரு விமான டிக்கெட்டும் இருக்க, காதலியின் முகவரி, போன் நம்பர் எதுவுமில்லாமல் பறக்கிறார் விஷால்.
முதல் முறையாக பிளைட் பிடிக்கும் விஷாலுக்கு அழகான த்ரிஷா உதவ, பிரண்ட்ஷிப் முளைக்கிறது இருவருக்குள்ளும்.
ஒரு வழியாக பாங்காக் போனால், சொன்ன இடத்திற்கு சுனைனா வந்தால்தானே? மாறாக விஷாலை சுட்டுவிட துரத்துகிறது ஒரு கும்பல்.
அப்படியே கோட், சூட் போட்டுக் கொண்டு இன்னொரு கும்பல் அவரை காப்பாற்றுகிறது.
ஒன்றுமே புரியாமல் தவிக்கும் விஷாலை அந்த நாட்டிலேயே முக்கியமான தொழிலதிபராக காட்டுகின்றன சில ஆவணங்களும், சூழ்நிலைகளும்.
நான் அவனில்லே என்று விஷால் கெஞ்சினாலும், மரியாதை... வணக்கங்கள்... என்று திரும்புகிற இடத்திலெல்லாம் செம ஸ்பாஞ்ச் கொடுக்கிறார்கள் அவருக்கு.
எல்லாமே சில தினங்கள்தான். அப்புறம் அப்படியே உல்டாவாகிறது எல்லாம்.
இவர் சந்தித்து வணங்கிய அதே மனிதர்கள் இவரை 'யாருய்யா நீ?' என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.
காதலிக்கிறேன் என்று அருகில் வந்த த்ரிஷா கூட அந்நியப்படுகிறார் ஒரு கட்டத்தில்.
நொறுங்கிப் போகிறார் விஷால். ஃபுட் பால் மாதிரி நம்மை உருட்டுகிற நபர் யாரென தேடிப் புறப்படுகிறார்.
இதுவரைக்கும் திரைக்கதையில் தீயாக இருந்த திரு, அப்புறம் காட்டுகிற ட்விஸ்ட் தமிழ் சினிமா அறியாதது.
என்றாலும் அவ்விரண்டு பெரிய மனிதர்கள்தான் படத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள். கொஞ்சம் சீரியசான மனிதர்களாக இருந்தால் கூட கதையில் ஒன்றியிருக்கலாம்.
அவர்களோ கொமெடி நடிகர் மதன்பாப்பையே கூட தூக்கி சாப்பிடுகிற மாதிரி சிரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
வில்லன்களை வெல்வதுதானே ஹீரேயிசம். ஒருவழியாக தன்னை அடித்தவர்களை அதே டெக்னிக்கால் திருப்பியடிக்கிறார் விஷால்.
ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு சுபம் போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
கருப்பாக இருந்தாலும் அழகான ஹீரோ என்று பெயரெடுத்த விஷாலை நாட்டு ஓணான் போலாக்கிவிட்டது தற்போதைய கெட்டப்புகள்.
தன்னை சுற்றிப் பின்னப்பட்ட சதியை என்னவென்றே தெரியாமல் எதிர்கொள்ளும்போது அவரது முக பாவனைகள் தேர்ந்த நடிகர் என்று பாராட்ட வைக்கிறது.
த்ரிஷாவுக்கு இன்னும் பத்தாண்டுகள் சினிமாவில் நடிக்க, அதுவும் ஹீரோயினாக நடிக்கும் ஆசையெல்லாம் இருக்கிறது.
ஆனால் அந்த நம்பிக்கை தாங்குமா என்ற கேள்வியை விதைக்கிறது சற்றே முதிர்ச்சியான அந்த முகம். ஆனாலும் காஸ்ட்யூம்கள் கை கொடுக்கின்றன வயதுக்கும் இளமைக்கும்.
மிக சொற்பமான காட்சிகளே வந்தாலும், சுனைனா இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்ல... என்கிற ஆசையை விதைத்துவிட்டு போகிறார்.
வில்லன்களாக நடித்திருக்கிறார்கள் ஜே.டி.சக்கரவர்த்தியும், மனோஜ் பாஜ்பாயும்.
இசை யுவன்சங்கர்ராஜா என்று டைட்டிலில் படித்ததோடு சரி. ஒரு சுவடும் தெரியவில்லை திரையில்.
படத்தில் வாங்கிய சம்பளத்திற்கு மேலும் கூட உழைத்திருப்பவர் ரிச்சர்டு எம்.நாதன் மட்டுமே. எவ்வளவு அற்புதமான போட்டோகிராபி!
ஒரு விறுவிறுப்பான திரில்லருக்கு தேவையான எல்லாம் இருந்தும் கடைசி முக்கால் மணி நேரத்தில் அதையெல்லாம் கோட்டை விட்ட டைரக்டர் திரு. தமிழ்சினிமாவின் 'திரு'வாளர் ஆவதை ஒரு சில மதிப்பெண்களில் தவறவிட்டிருக்கிறார்.
நடிகர்கள்: விஷால், த்ரிஷா, சுனைனா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
இயக்குனர்: திரு
நன்றி விடுப்பு  

No comments: