உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது

.


எவ்வளவுதான் வாழ்ந்தபோதும் தெரியவில்லை
போர்ப்பிராந்தியத்தில்
ஒரு பகலை எப்படி வெல்வதென்று
ஒரு இரவை எப்படிக் கடப்பதென்று
ஒரு காலையை எப்படி எதிர்கொள்வதென்று
மாலையில் பீரங்கிகள் முழங்கின
காலையில் பீரங்கிகள் முழங்கின
இரவில் பீரங்கிகள் முழங்கின
இதற்கிடையில் எப்படி வாழ்வதென்று தெரியவில்லை ஒருவருக்கும்
நெருப்புக்கு அடியில் கிடந்தனர் எல்லோரும்.
தீயெழுந்து ஆடியது பெருநடனத்தை.

கையிலே தூக்கிய பிள்ளையிலிருந்து இரத்தம் ஒழுகியது
அவளுட்டிய பால் அப்படிச் சிந்தியது.
சாவுக்கு உயிரைப் பரிசளிக்கும் ஒரு நிகழ்ச்சியில்
தவறாமல் எல்லோரும் பங்கெடுத்தோம்.

மனைவியின் தாலியைப் பிள்ளைக்கு அணிவித்தான் ஒரு தந்தை
பிள்ளையைக் காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து அவளை மீட்பதற்குமாக.
ஒரு தாயாக, தந்தைக்கே மனைவியாகத் தோன்றினாள் மகள்.

யாருடையவோ பிள்ளையை ஏந்தித் தானே தாயென்றாள் ஒரு கன்னி
வழியில் வந்த முகமறியா ஒருவனோடு சேர்ந்திருந்தாள் ஒருத்தி
சாவரங்காகிய போர்க்களத்தில்
ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன.
தனித்திருந்த இளையோரெல்லாம் போருக்கே என்று நாட்டின் விதியுரைத்தபோது
இப்படி நாடகங்கள் ஆயிரம் உருவாகின.

உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது

நன்றி: eathuvarai

1 comment:

Anonymous said...


"சாவுக்கு உயிரைப் பரிசளிக்கும் ஒரு நிகழ்ச்சியில்
தவறாமல் எல்லோரும் பங்கெடுத்தோம்."

நல்ல அருமையான வரிகள் ஆழமான பார்வை. ஏன் கவிஞரின் பெயர் பதியப்படவில்லை? நல்ல தரமான ஆக்கங்களை தரும் தமிழ்முரசை மனதார பாராட்டுகின்றேன். என்ன இந்த வாரம் நிறைய விடயங்கள் தந்திருக்கின்றீர்கள்.

நன்றி

வருணி