விவேகானந்தா!



காலமெல்லாம்  அளந்தளந்தும்  உரைக்கடங்கா 
கருணைபொழி  திருவுருவை  உளங்கனிந்து 
ஓலமிடும்  அடியவரின்  உறுகண்நீக்கும் 
உள்ளொளியை  வாய்மனம்மெய்   புலன்கடந்த 
சீலமெனும்  செழுந்திருவைப்  பரமஹம்சர் 
சிந்தையினில்  தெளிவிக்கத்  தெளிவுகொண்டு 
கோலமுழு   தும்உணர்ந்த  விவேகானந்தா!
கோதற்ற  வேதாந்த  விளக்கேபோற்றி! 


வேறுபடு  சமயமெல்லாம்  ஒன்றுகூடி 
விளங்குபரம்  பொருளுரைக்க  வேண்டிநிற்க 
மாறுபடு  கருத்துக்க  ளிடையேஅந்த 
மாநாட்டில்  அமரிக்க  மாநிலத்தில் 
ஏறுநடை  போட்டிந்து  மதத்தின்தொன்மை 
எளிமையொடு  பொருள்விளக்கி   முழக்கம்செய்த 
வீறுபெறு   வேதாந்தப்  புயலே!இந்து 
வேதத்தின்  வித்தக!உன்   கழல்கள்போற்றி!  

உழைத்துமுண   வின்றியுடல்  ஒடுங்கிநாளும் 
ஓலமிடும்  ஏழைகளின்  உழைப்பிலோங்கி 
களைத்துவிழும்   அவர்பசியை   அறிவீனத்தை 
களைந்துவிட   நினையாதார்   துரோகியென்று 
முழங்கிநின்ற   மழைமுகிலே!  இரும்பையொத்த 
முருகுடலும்  தசைநாரும்   வேண்டுமென்று 
இளைஞருல   கிடம்புகன்ற   கர்மயோகி!
இளமைபொலி    திருவுருவே!   விவேகானந்த!  

இருள்நிறைந்த  உளங்களிலே  இருள்களைந்த 
இளங்கதிரே!  கதிரொளியே!  ஒளிவிளக்கே!
மருளகற்றி   மன்பதையின்  மனத்தில்இந்து 
மதப்பெருமை  யுனர்த்திவிட்ட   அறிஞ!அன்பின் 
பெருநிதியே!  பேரருளின்  பெரும!மண்பொன் 
பெண்ணாசை  களைக்களைந்த   பெருநெருப்பே! 
கருதியவை  தனைமுடிக்கும்  கர்மவீரா!
கலையாத  யோகத்தின்  கனலே,போற்றி! 

[க. கணேசலிங்கம் எழுதிய 'உணர்வுக்கோலம்' கவிதைநூலிலுள்ளது.]

No comments: