பென்டில்கில்லில் கோலாகலமாக இடம் பெற்ற பொங்கல் விழா


.
                                                                                                         செ.பாஸ்கரன்

இன்று 20.01.2013 சிட்னியில் பென்டில்கில்லில் அமைந்துள்ள சிவிக் பூங்காவில் யாழ் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடாத்திய “தைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் விழா 2013 கோலாகலமாக இடம் பெற்றது. புலம் பெயர் நாட்டில் இப்படி ஒரு பொங்கல் விழா நடந்துள்ளது என்பது மகிழ்வான ஒன்றாக இருந்தது. இந்த விழாவிற்கு 700 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.


பொங்கலோடு சேர்த்து பாடல்கள் சொற்பொழிவுகள் கோலம் போடுதல் மாலை கட்டுதல் வர்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சிகளும் சிறார்களுக்கு கொடுக்கப்பட்டது. நுளைவு வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை தோரண அலங்காரமும் உள்ளே நுளைந்ததும் இந்துக்கல்லூரி என்ற பெயரோடு வீற்றிருந்த சரஸ்வதியும் நாம் ஒஸ்ரேலியாவில்தான் நிற்கின்றோமா என்ற எண்ணத்தைக் கொண்டுவந்தது.நல்லூர் முருகன் கோவிலும் அதைத் தொடர்ந்து ஈழத்து கோயில்களின் வண்ண ஓவியங்களும் அதன்முன் போடப்பட்டிருந்த அழகிய கோலமும். கோலத்தின் மருங்குகளில் வைக்கப்பட்டிருந்த கரும்பும் பொங்கல் வைபவத்தை மெருகூட்டியிருந்தது.இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த காலச்சுவடு எழுத்தாளர் திரு ஜெயப்பிரகாசம் இன்னும் சிட்னியின் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வர்த்தகப்பெருமக்கள் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் என்று மைதானம் நிரம்பியிருந்தது. முக்கியமாக மிக உற்சாகமாக வேலைப்பழுவை தங்கள் சொந்த வீட்டுப்பொங்கலாக நினைத்து தாங்கிக்கொண்டு ஓடி ஓடி வேலைசெய்த தொண்டர்களளைப்பார்க்க பரவசமாக இருந்தது. குறிப்பாக குழந்தைகள் மிக உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். மன்மதபாணமான கரும்பு வில்லைக் கையிலேந்தி நின்ற சிறுவர்களையும் பார்க்க்கூடியதாக இருந்தது.வருடாவருடம் இப்படியான பொங்கல் விழா நடக்கவேண்டும் சிட்னி வாழ் மக்கள் மகிழ்வோடு கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றார்கள். யாழ் இந்து பழையமாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து தொடர்ந்து நடாத்தவேண்டும்.


5 comments:

kirrukan said...

நன்றிகள் செ.பாஸ்கரன் ...நன்றிகள் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினர்.....

Ramesh said...


நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல விழா அதுவும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா . இதை சிறப்பாக தந்த இந்துக்கல்லூரி மாணவர்களுக்கும் சிட்னி வர்த்தகர்களுக்கும் ஒரு பெரிய பாராட்டு. செ.பாஸ்கரன் எழுதியது போல் தொடர்ந்து இப்படியே வருடாவருடம் செய்யவேண்டும் மக்கள் நிட்சயமாக சந்தோசமாக வருவார்கள் இன்புறுவார்கள். சுடச்சுடதந்த முரசுவிற்கும்
செ .பாஸ்கரனுக்கும் நன்றிகள்.

ரமேஸ்

யசோதா.பத்மநாதன் said...

ஆஹா! நல்லதொரு நிகழ்வு! நல்லதொரு ஆரம்பம்! பதிவும் படங்களும் வெகு அருமை!!

அதிலும் புதிதாக இங்கு குடி வந்திருக்கும் இளைஞர்கள் கொண்டு வந்து சேர்த்த அந்த ஊர்வாசம்; தம் குடும்பத்து வேலைபோல இங்குள்ளவர்களோடு கூடி வேலை செய்து மகிழ்ந்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்புறுத்திய பாங்கு மறக்க முடியாதது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் நாம் எல்லோரும் ஒரு தமிழ்தாய் பிள்ளைகள் என்பதை நிரூபித்துச் சென்றிருக்கிறது இந்த சிவிக் பார்க் பொங்கல்!

இனியும் தொடர்ந்து அவர்கள் இந் நிகழ்ச்சியை இதே நாளில் இதே இடத்தில் இதே நோக்கத்தில் இதே மாதிரிச் செய்யவேண்டும் என்பது என் பேரவா!

அத்தோடு என் ஆவலில் உதித்த மேலும் சில குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள ஆசை.
உடனடி உணவு சாலைகள் (தோசை, வடை,பொங்கல், இட்லி, மற்றும் சிற்றுண்டிகள், தேநீர் சாலைகள்,) தொண்டு நிறுவனங்களின் stoleகள், பட்டம் கட்டுதல், கோலம் போடுதல், பூமாலை கட்டுதல் போல குருத்தோலைத் தோரணம் கட்டுதல், நிறைகுடம் குத்துவிளக்கு வைக்கும் முறை, வேட்டி கட்டுதல், சேலையுடுத்துதல் செய்முறை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள் சொல்லுதல்,face painting, பாரம்பரிய விளையாட்டுக்களான கிட்டிப்புள், கிளித்தட்டு, எவடம் எவடம் புளியடி புளியடி போன்ற விளையாட்டு முறைகளைச் சொல்லிக் கொடுத்தல், யோகா, தியான, சங்கீத, நாட்டிய நிகழ்வுகள் செய்வோரின் stoleகள் என இன்னும் இன்னும் மலர்வுறலாம் எதிர்காலத்தில்.

இது முதல் வருடம் தானே! இதன் மகத்தான வரவேற்பும் வெற்றியும் மேலும் தொடக்கி வைக்கட்டும் ஒரு புது பயன் பெறு வழக்கத்தினை! வர்த்தகப் பெருமக்களாலும் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களாலும் இது நிச்சயமாக இயலும்!

பாராட்டுக்கள்!! தந்த தமிழ் முரசுக்கும்!

Anonymous said...


வாழ்த்துக்கள் இந்துக்கல்லூரி நன்றி பாஸ்கரன்.. நீங்களும் இந்துக்கல்லூரியா? எங்கள் பாடசாலையை ஒரு தரமும் போடவில்லை இந்தக்கல்லூரியை சுடச்சுட போட்டுள்ளீர்கள். எல்லா நிகழ்வுகளையும் தயவு செய்து போடுங்கோ.

ரமணன் சிவகுமார்

C.Paskaran said...


வரவிற்கும் கருத்துக்கும் நன்றிகள் கிறுக்கன் மணிமேகலா ரமேஸ் ரமணன்.

ரமணன் நான் இந்துக்கல்லூரி அல்ல. நீங்கள் குறிப்பிட்டது போல் நாம் எவற்றையும் தள்ளி வைப்பதில்லை தொடர்ந்து வாசிக்கும் ஒருவராக இருந்தால் இது நிட்சயமாக புரிந்திருக்கும். இந்த பத்திரிகை எல்லாவகையான கருத்துக்களுக்கும் இடம் கொடக்கும். ஆனால் எல்லாவற்றையும் நாங்களே எழுதுவதென்பது முடியாத காரியம். தயவுசெய்து நீங்களோ உங்கள் நண்பர்களோ எழுதி அனுப்பினால் சுடச்சுட போடுவோம். உண்மையான கருத்தைப் பதிந்ததற்கு நன்றி. எழுதக்கூடியவர்கள் தயவுசெய்து பார்ப்பதையோ கதை கவிதைகளையோ எழுதி அனுப்புங்கள் தமிழ்முரசு உங்களின் முரசு.

நன்றி
செ.பாஸ்கரன்.