மே மாதம் 18ம் திகதி அவுஸ்திரேலியாவில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்





தாயகத்தில் நிகழ்ந்தேறிய கொடிய பேரழிவின் சோகமான நாட்கள் கடந்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சுதந்திரமான வாழ்வுக்கு வாதாடிய எங்கள் உறவுகளின் வாழ்வு குதறப்பட்டு, நீதிக்காக போராடிய ஒரு தேசத்தின் குரல் நசுக்கப்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டன.

விடுதலைக்காக ஆர்ப்பரித்த கரங்கள் மீது, அரச பயங்கரவாதம் ஏவிவிடப்பட்டபோது, விடுதலைக்காக குரல் கொடுத்த தேசத்தின் சுதந்திர வேட்கையை புரிந்துகொள்ளாத சர்வதேச நாடுகளின் போக்கு காரணமாக, ஒரு தேசிய இனத்தின் சுதந்திர வாழ்வு சூறையாடப்பட்ட வலி கொடியது.

ஒரு இனத்தின் வாழ்வு அடிமைப்படுத்தப்பட்டபோது, அதற்கெதிராக கிளர்தெழுந்த மக்களின் குரலை, கொடுமையான போராயுதங்களை கொண்டு அடக்கிய, கொடிய போரின் நாட்கள் கடந்து, 3 ஆண்டுகள் கடந்த நிலையில் - எம்மக்களின் அமைதியான வாழ்வுக்காக - உறுதியான எந்த நடவடிக்கைகளும் இன்னும் எடுக்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் கூட்டத்தொடரின்போது, சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டபோதும், கடந்த பல சகாப்தங்களாக சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்தின் அமைதியான வாழ்வைக்கூட பெற்றுக் கொடுக்கக் கூடிய எந்தத்தீர்வும், அதில் முன்மொழியப்படவில்லை என்பது துயரமானது. எனினும் கொடிய அடக்குமுறையின் உச்சமாக, மேமாதத்தில் நிகழ்த்தப்பட்ட பேரவலமும், அதன் தொடர்ச்சியாக மேலெழுந்துவரும் சிங்களப் பேரினவாதப்போக்கும் சர்வதேசத்தின் கண்களுக்கு வெளிச்சமாகிவருகின்றது. படிப்படியாக மேலெழுந்து வரும்
அக்குரல்கள், மரணித்துப்போன எம் உறவுகளின் உணர்வுகளுக்கும், அப்போரில் காயமடைந்து ஊனமாகிப் போன எம்சந்ததியின் வலிகளுக்கும், ஆறுதலைப் பெற்றுத்தரும் என நம்புகின்றோம்.


இவ்வேளையில், தமிழர்கள் பரந்துவாழும் உலகின் அனைத்து நாடுகளிலும், மே மாதம் 18ம் திகதி அன்று நினைவேந்தல் நாள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மெல்பேணில் மே மாதம் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, State Library முன்றலிலும், சிட்னியில் Silver Water Bahai Centre இல், மாலை 7 மணி முதல் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

மரணித்துப்போன எம் உறவுகளை நெஞ்சில் நிறுத்தி, சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை வெளிப்படுத்தி, உலகத்தமிழர்களை துக்கத்தில் ஆழ்த்திய மே மாதத்தின் நினைவேந்தல் நாளில் இணைந்துகொண்டு, குரலடங்கிப்போயுள்ள எமது தாயக மக்களின் குரலாக அனைவரையும் திரண்டுவருமாறு அன்புடனும் உரிமையுடனும் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வு நடைபெறும் இடம்

மெல்பேணில்: State Library of Victoria, Corner of Swanston St & Latrobe St, Melbourne. (Opposite of Melbourne Central Train Station)

சிட்னியில்: Bahai Centre, 107 Derby St, Silver Water.


நிகழ்வு நேரம்: மேமாதம் 18ம் திகதி

மெல்பேணில்- மாலை 5 மணி (4 மணி முதல் ஓன்றுகூடுதல்)

சிட்னியில் - மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை

No comments: