உலகச் செய்திகள்

.
இரு தசாப்தங்களுக்குப் பிறகு பிரான்ஸில் சோசலிஸ்ட் ஜனாதிபதி

ஒபாமாவின் இரு செய்திகள்

மெக்ஸிக்கோவின் நுயவோ லாரெடோ நகரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

சார்கோஸியின் தோல்வி ரகசியம்

ரஷ்ய விமானம் இந்தோனேஷிய மலைப் பகுதியில் விப‌த்து: 50 பேர் பலி?



இரு தசாப்தங்களுக்குப் பிறகு பிரான்ஸில் சோசலிஸ்ட் ஜனாதிபதி Tuesday, 08 May 2012

பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துவரும் நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்ஸின் முதலாவது சோசலிச ஜனாதிபதியாக பிராவ்கோயிஸ் ஹோலன்டி வெற்றி பெற்றுள்ளமை பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருக்கிறது. ஹோலன்டியின் வெற்றியானது தனது செயற்பாடுகளை ஏனையோருக்குப் பின்னாலிருந்து பலகாலமாக முன்னெடுத்த அவருக்கும் பிரான்ஸுக்கும் கிடைத்த வெற்றி மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் இடதுசாரிகளுக்குக் கிடைத்த வெற்றி என வர்ணிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்தும் ஐரோப்பாவை மீட்டெடுப்பதற்கு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தலைமைதாங்கி வழிநடத்திவரும் ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கொள்கைகளுக்கு ஹோலன்டியின் வெற்றி பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. அத்துடன் கிரேக்கத்தின் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகளைத் தோற்கடித்துவிட்டு நவநாஜிக்கள் பாராளுமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடும் சிக்கனக் கொள்கைகளுக்கு அங்கிருந்தும் பெரும் சவால்கள் மேலெழுந்துள்ளன.

தனக்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு ஹோலன்டி முதலாவதாகக் கூறிய வார்த்தைகள் "ஐரோப்பா எம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியாக நான் அறிவிக்கப்பட்ட கணமே சிக்கன நடவடிக்கைகள் நீண்டகாலத்துக்கு இருக்காது என்ற எதிர்பார்ப்பும் ஆறுதலும் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் என்பது உறுதியாக நான் நம்புகின்றேன். ஐரோப்பாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதே எனது கனவு' என்று ஹோலன்டி கூறியுள்ளார். ஹோலன்டியின் வெற்றியை பிரிட்டனின் தொழில் கட்சியும் வரவேற்றிருப்பதைக் காணமுடிகிறது. "ஐரோப்பாவின் சிக்கனமானது அதன் வளர்ச்சியாக மாற்றம் பெறுவது அவசியம் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்துகின்றது' என்று பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவர் எட்வர்ட் மில்லிபான்ட் கூறியுள்ளார். கடந்த வாரம் பிரிட்டனில் இடம் பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் தொழில் கட்சியே அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. பிரான்ஸின் ஜனாதிபதியாக சோசலிஸக் கொள்கையை வகித்துக் கொண்டவர். தெரிவு செய்யப்பட்டிருப்பதானது சிக்கன நடவடிக்கைகளில் இருந்தும் விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஐரோப்பாவின் இடதுசாரித் தலைவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேற்குலகில் நிதிநெருக்கடி அதிகரிக்க ஆரம்பித்த காலம் முதல் பதவியிலிருந்த 11 ஆவது தலைவராக பிரான்ஸின் நிக்கொலஸ் சார்கோஸி உள்ளார்.ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்கல், பிரிட்டிஷின் பிரதமர் டேவிட் கமரூன் போன்றோர் சார்கோஸியின் தீவிர ஆதரவாளர்களாகும். ஹோலன்டியின் வெற்றியானது வலதுசாரிகளின் பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்ததன் வெளிப்பாடென்றே நோக்க முடிகிறது.பொருளாதார நெருக்கடிகளால் பிரிட்டன் உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குடியேற்றவாசிகளை குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளை பலிக்கடாக்களாக்கும் முனைப்பையே தீவிர வலதுசாரிக் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் வெளிப்படுத்திவரும் நிலையில் பிரான்ஸின் ஜனாதிபதியாக சோசலிஸவாதியான ஹோலன்டியின் பதவியேற்பானது குடியேற்றவாசிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது.

அதே சமயம் தனது பொருளாதாரக் கொள்கைகளை அதிகளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டிய சவாலும் ஹோலன்டி முன்னால் துருத்திக்கொண்டு நிற்கிறது. இவர் தனது கொள்கைகளை முன்னெடுக்கும் போது அதற்குச் சமாந்தரமாக அந்நியருக்கு எதிரான கடும் போக்கு தேசிய வாதத்தை தீவிர வலதுசாரிகள் முன்னிறுத்தக் கூடும். செல்வந்தர்கள் மீது அதிக வரியை விதித்தல், பொதுச் செலவினத்தை அதிகரித்தல், ஓய்வு பெறும் வயதெல்லையைக் குறைத்தல் போன்ற ஹோலன்டியின் உறுதிமொழிகளே பிரெஞ்சு வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்து சார்கோஸியை தோல்வியடைய வைத்திருக்கிறது. ஆனால் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலாவுக்கும் ஹோலன்டிக்கும் இடையில் "யூரோ வலயம்' தொடர்பான முரண்பாடு தீவிரமடையும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியிலிருந்தும் விடுபடுவதற்கு அரசாங்கத்தின் செலவினத்தைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் ஏஞ்சலா மேர்கலின் யோசனைக்கு ஐரோப்பாவின் சகல தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியமும் நிதிச் சந்தைகளும் ஆதரவளித்திருந்தன. ஆனால் பிரான்ஸ், கிரீஸ், ஜேர்மனியின் தேர்தல் பெறுபேறுகள் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள கருத்தொருமைப்பாட்டை சிதறடித்துவிடும் தன்மையைக் கொண்டவை என்பதை ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐரோப்பாவின் பொருளாதார பலம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டு வரும் பின்னடைவுகள், யூரோ வலயத்தில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிப்பு என்பவற்றின் மத்தியில் இவற்றிலிருந்து மீட்சிபெற புதிய அணுகுமுறை தேவையென்பதையே ஹோலன்டியின் வெற்றி வெளிப்படுத்தி நிற்கிறது.

nantri thinakkural


ஒபாமாவின் இரு செய்திகள்

Saturday, 05 May 2012

அல்கயெடா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் முற்றுகையில் கொல்லப்பட்டு சரியாக ஒருவருடம் பூர்த்தியடைந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பக்ரான் விமானத்தளத்தில் இருந்து ஆற்றிய உரை இரண்டு செய்திகளை உலகுக்குக் கொடுத்தது. ஒன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் தொடரும் என்பது.மற்றது அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்பது. இச் செய்திகளின் மூலம் இரு தரப்பினரைத் திருப்திப்படுத்துவதற்கு ஒபாமா முயற்சி செய்திருக்கிறார். இவ்வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கு அமெரிக்கர்களின் ஆதரவைக் கோரி நிற்கின்ற அவர் ஆப்கான் போரினால் அலுத்துப் போய்விட்ட அமெரிக்கர்களுக்கு திருப்தி தரக்கூடிய செய்தியொன்றை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.


நவம்பர் 6 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறும் பொழுது ஆப்கானிஸ்தான் போருக்கு சரியாக 12 வருடங்கள் பூர்த்தியாவதாக இருக்கும். 2014 இறுதியுடன் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்கப் படைகள் போர் நடவடிக்கைகளிலிருந்து வாபஸ் பெறப்பட்டுவிடுமென்று முன்னர் அளித்த உறுதிமொழியை ஒபாமா மீண்டும் கடந்த வாரம் தெற்காசியாவிலிருந்து அமெரிக்கர்களுக்கு வலியுறுத்தி கூறினார். அதேவேளை, அமெரிக்காவினதும் நேச நாடுகளினதும் படைகள் வெளியேறும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிவிடக்கூடிய சூழ்நிலை தோன்றாதிருப்பதை உறுதி செய்வதில் வாஷிங்டன் அக்கறைகொண்டிருக்கின்றது என்பதையும் அந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும் இருந்து தாங்கள் தவறப்போவதில்லை என்பதையும் கர்சாய் அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியமும் ஒபாமாவுக்கு இருந்தது. ஒபாமாவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளை நோக்கும் பொழுது அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அதேவேளை, அதன் படைப் பிரசன்னம் ஏதோவொரு வகையில் தொடருவதற்கான ஏற்பாடு செய்யப்படுமென்பதே உலகிற்கு வெள்ளைமாளிகை கூறியிருக்கும் செய்தியாகும்.

புதன்கிழமை இரவோடிரவாக விமானத்தில் வந்து இறங்கிய ஒபாமா அதிகாலையிலேயே ஆப்கானிஸ்தானியர்கள் நித்திரை விட்டெழுவதற்கு முன்னதாகவே கர்சாய் அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றையும் செய்துவிட்டு வாஷிங்டனுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார். 2014 படை வாபஸுக்குப் பின்னரும் கூட அமெரிக்கா தற்போதைய ஆப்கான் அரசாங்கத்தை நெருக்கடி நிலையில் விட்டுவிட்டு ஓடிவிடப்போவதில்லை என்பதை உணர்த்தும் நோக்கில் கைச்சாத்திடுவதற்கு நீண்டகாலமாகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கையில் அதிகாலையில் ஒபாமா கையெழுத்திட்டார். இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகள் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அமெரிக்கர்களுக்கு திருப்தியைக் கொடுக்கக்கூடியதாக தன்னால் சொல்லப்பட வேண்டியிருக்கும் செய்திக்கு முரணானதாக அமைகிறது என்பதை உணர்ந்திருந்தும் அதைக் கைச்சாத்திட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. மீண்டும் கணிசமானளவு எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கான் மண்ணில் நிலைகொண்டிருக்கவே செய்யும். அவை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படாவிட்டாலும் கூட ஆப்கானிஸ்தான் படைகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடும். அதனால், மீண்டும் பல கோடி டொலர்களை ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் கொட்ட வேண்டியிருக்கும்.

அமெரிக்காவின் பிரதான பத்திரிகைகள் இவ்வாரம் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கங்களை நோக்கும் போது ஒபாமா பக்ரான் விமானத்தளத்திலிருந்து நிகழ்த்திய உரை அமெரிக்கர்களுக்கு தெளிவான செய்தியை வழங்கவில்லை என்பதே அமெரிக்காவில் நிலவக் கூடிய பொதுவான அபிப்பிராயமாக இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்கப் படைகள் போர் நடவடிக்கைகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட பிறகு தலிபான்களினால் தீவிரப்படுத்தப்படக்கூடிய தாக்குதல்களில் இருந்து கர்சாய் அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் ஆப்கான் படைகள் இருக்கப்போவதில்லையென்பதே பொதுவில் உலக அபிப்பிராயமாகும். அதனால் சோவியத் படைகள் வெளியேறிய போது நஜிபுல்லா அரசாங்கத்திற்கு ஏற்பட்ட கதி கர்சாய் அரசாங்கத்திற்கு ஏற்படாது என்பதை உறுதிசெய்யவேண்டிய ஒரு கடப்பாடு தங்களுக்கு இருப்பதாக வாஷிங்டன் கருதுகிறது. ஆனால், பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் கசப்பான உறவு நிலை ஆப்கானிஸ்தானில் நிலைவரங்களை மேலும் மோசமடையச் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. கௌரவமாக எவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது என்பது ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை பெரும் நெருக்கடியான ஒன்றாகவே தொடர்ந்தும் இருக்கப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.

nantri thinakkural


மெக்ஸிக்கோவின் நுயவோ லாரெடோ நகரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

06/05/2012
அச்சடலங்களில் சில பாலமொன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலும் ஏனைய சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் வீதியோரமொன்றில் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.

பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 9 சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சில மணி நேரத்தில் வாகனமொன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 14 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

நகர மேயரின் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த மேற்படி வாகனத்திலிருந்த பனிக்கட்டி பெட்டிகளிலேயே இந்த சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தூக்கில் தொங்கவிடப்பட்ட சடலங்களுடன் காணப்பட்ட துண்டுக் குறிப்பில் போதைவஸ்து குழுவினரால் கொல்லப்பட்ட வளைகுடா போதைவஸ்து குழு உறுப்பினர்கள் என குறிப்பிட்டிருந்தது.

மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைவஸ்தை கடத்தும் பாதைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து போதைவஸ்து குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.






வீரகேசரி இணையம்


சார்கோஸியின் தோல்வி ரகசியம்

Tuesday, 08 May 2012

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் சோஷலிஸக் கட்சியின் வேட்பாளர் ஃபிரான்ஷûவா ஹோலாண்ட் வென்று பிரெஞ்சு அதிபராகப் பதவி ஏற்கிறார். சார்கோஸி மீது பிரெஞ்சு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் வெறுப்பும்தான் ஹோலாண்டின் வெற்றிக்குக் காரணமே தவிர, அவரது செல்வாக்கோ, மக்களது எதிர்பார்ப்போ அல்ல என்பதுதான் பரவலான கருத்து. பிரான்ஸ் நாட்டு வரலாற்றிலேயே இதுவரை எந்த ஓர்அதிபர் மீதும் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இந்த அளவுக்கு வெறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. பொருளாதார நெருக்கடியைப் போக்குங்கள் என்று மக்கள் குரல் எழுப்பிய போது, சிக்கன நடவடிக்கைதான் ஒரே வழி என்று உண்மையைச் சொன்னதுதான் சார்கோஸி மீதான வெறுப்புக்குக் காரணம். அறிவார்ந்த விடயங்கள் எல்லாவற்றிலும் மற்றெல்லோரையும் விடத் தாங்கள் மேம்பட்டவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டினர். இத்தகைய மனோபாவம் கொண்டவர்களிடம் தங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை என்கிற உண்மையை சார்கோஸி தனது வெளிப்படையான பேச்சுகளால், செய்கையால் வெளிப்படுத்தியதால் மக்களுக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.


பணி ஓய்வு வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்தினார் சார்கோஸி. இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. 60 வயதானவர்களை ஓய்வு கொள்ள அனுமதித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் அளித்தாக வேண்டும். அந்த ஓய்வூதியத்தின் அளவு சம்பளத்தில் பாதியாக இருக்கிறது. ஓய்வூதியப் பலன்களையும் அளித்தாக வேண்டும். அரசு சிக்கன நடவடிக்கையில் இருக்கும் போது இது பெருஞ்செலவு. (ஏறத்தாழ இந்தியாவும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்) ஆகவே, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த அனுமதித்தார். வேலையில்லாத இளைஞர்கள் தாங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவதிப்பட வேண்டுமா என்று கொதித்தெழுந்தனர். இதற்கிடையில் கார்லா புரூணியைக் காதல் திருமணம் செய்து கொண்டதும் பிரெஞ்சு மக்களிடம் அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது, லிபியாவின் மறைந்த அதிபர் கடாபியிடம் 5 கோடி யூரோவை தேர்தல் செலவுக்காகப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் சேர்ந்து அவருக்கு எதிரான எதிர்ப்பு அலையை உருவாக்கியது. போதாக்குறைக்கு பல பிரச்சினைகளில் அவர் எடுத்த அமெரிக்க ஆதரவு நிலையும் மக்களை முகம் சுளிக்க வைத்தது.

இப்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹோலாண்ட் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும். ஐரோப்பா முழுவதும் அவரது நடவடிக்கையை ஆவலுடன் எதிர்நோக்குகிறது. ஹோலாண்ட் சொல்வதையெல்லாம் செய்ய முடியுமா என்பதும் அதனை பாராளுமன்றம்அனுமதிக்குமா என்பதும் சந்தேகம் தான். அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சோஷலிஸக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தால்தான், சொன்னதையெல்லாம் ஹோலாண்ட் செய்ய முடியும். இல்லையென்றால் பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் அவர் அறிவித்ததெல்லாம் வெறும் ÷த்தல் வாக்குறுதிகளாகவே இருந்துவிடும். சோஷலிஸக் கட்சியே அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, ஒரு மில்லியன் யூரோவுக்கு அதிகமாக சம்பாதிப்போருக்கு 75% வரி விதிக்கப்படும் என்கிற அவரது அறிவிப்பெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்கள். அத்தகைய நடவடிக்கையில் ஹோலாண்ட் இறங்கினால், அந்த அளவுக்குச் சம்பாதிப்போர் யாரும் பிரான்ஸில் வசிப்பதையோ, தொழில் நடத்துவதையோ தவிர்த்துவிடுவார்கள். பிறகு பிரான்ஸின் நிதி நிலைமை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

பிரான்ஸ், ஏற்கெனவே கடன் சுமையில் தத்தளிக்கிறது. மேலும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்கிற நிலைமை. பல மக்கள் நல சேவைகளை நிறுத்திவிட முடியாது. மானியங்களைத் தவிர்க்க முடியாது. 2012 ஆம் ஆண்டுக்கு மட்டுமே 180 பில்லியன் யூரோ கடன் வாங்கியாக வேண்டும். 2013 க்கு 200 பில்லியன் யூரோ கடன் வாங்கியாக வேண்டும். அரசு இயந்திரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தாலொழிய நிலைமையைச் சீர் செய்வது கடினம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"2017 பட்ஜெட்டில் கடன் வெறும் பூஜ்ஜியமாக இருக்கும்' என்று தேர்தல் வாக்குறுதியில் ஹோலாண்ட் சூளுரைத்தபோது, அது எப்படி சாத்தியம் என்று மக்களும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. கடினமான நடவடிக்கைகளை சார்கோஸி போல இவரும் மேற்கொண்டால் அவருக்கான நிலைமைதான் இவருக்கும் ஏற்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உலகளாவிய அளவில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை எந்த ஒரு தலைவனாலும் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நுகர்வுக் கலாசாரம் மக்களை மாற்றி இருக்கிறது. இந்த நிலையில் அரசியல்வாதிகள் ஒரு விடயத்தை நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளையும் மக்களை மயக்கும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பது, ஐந்து ஆண்டுகளில் எவ்வளவ கொள்ளை அடிக்க முடியுமோ அடித்துவிட்டு, பணபலத்தால் மீண்டும் பதவியைப் பிடிக்கப் பார்ப்பது, இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியினர் மீதான எதிர்ப்பலையில் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பதுதான் அது. ஹோலாண்டின் வெற்றி அவரது செல்வாக்கால், மக்களின் ஆதரவால் கிடைத்ததல்ல. சார்கோஸி என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஆத்திரம் கொண்ட மக்களின் வெறுப்பினால் கிடைத்த வெற்றி. அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தால் ஒருவேளை மக்கள் மீண்டும் சார்கோஸியைத் தேர்ந்தெடுக்கக் கூடும்."இன்றைய ஹீரோ, நாளைய ஜீரோ, இன்றைய ஜீரோ நாளைய ஹீரோ' என்பது தான் தேர்தல் இலக்கணம்' என்பதை பிரான்ஸும் இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
nantri thinakkural





ரஷ்ய விமானம் இந்தோனேஷிய மலைப் பகுதியில் விப‌த்து: 50 பேர் பலி?

கவின் / வீரகேசரி இணையம் 10/5/2012

ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய மலைப் பகுதியில் மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌ல் அ‌‌தி‌ல் பயணித்த 50 பே‌ரும் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன அஞ்சப்படுகின்றது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை நோக்கி நேற்று இவ்விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்தன.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாப் பகுதியில் உள்ள சலாக் மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேஷிய இராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.



விமானம் சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த வேளையில் அதனை 6000 அடி வரை கீழிறக்குவதற்கு விமானி அனுமதி கோரியுள்ளதாகவும் இதன் பின்னரே கட்டுப்பாட்டறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலைப்பகுதியில் ஏன் இத்தகைய அனுமதியை விமானி கோரினார் என்பதும், ஜகார்த்தாவிலுள்ள விமான நிலைய கோபுரம் இதற்கான அனுமதியை எவ்வாறு வழங்கியதெனவும் அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள், ரஷ்ய நாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுமே விமானத்தில் பயணம் செய்தனர்.

குறித்த விமானம் ரஷ்யாவின் சுக‌ோய் விமான நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

சுக‌ோய் விமான நிறுவனம் இதுவரை போர் விமானங்ளை மட்டு‌மே தயாரித்து வந்த நிலையில் தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments: