மெல்பேர்ணில் கோலகலமாக நடந்தேறிய ஆன்மீக நூல் வெளியீட்டு விழா

.
மெல்பேரிணில் கடந்த மார்ச் மாதம் 24.03.12 சனிக்கிழமையன்று திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் "ஆன்மீகப் பயணத்தின் நினைவுப் பகிர்வு" என்ற அழகிய நூல் வெளியீட்டு விழா Bundoora Norang Avenue Community Hallல் மண்டபம் நிறைந்த படைப்பாளிகள், கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள், நலன் விரும்பிகள் மத்தியில் இனிதே நடந்தேறியது.


இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள் மங்கள நாதஸ்வர இசையுடனும், மங்கள விளக்கேற்றுதலுடனும் கோலாகலமாக ஆரம்பமாகியது. தவில், நாதஸ்வர வித்துவான்கள் மேடையில் வாசிக்கும் போது ஈழத்தில் இருப்பது போன்ற ஒரு நினைவு வந்தது. போரில் தன்னுயிர்களை ஈர்த்த வீரர்கள், பொதுமக்கள், இயற்கை அனர்த்தங்களில் மரணித்த அனைத்து மக்களின் ஆத்மசாந்தி வேண்டி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இசை வணக்கம் பாடல்களை புகழ் பூத்த சங்கீத இசை ஆசிரியை திருமதி. ரமா சிவராஜாவின் மாணவிகள் சர்மிதா செல்வராஜா, சருணிதா செல்வராஜா, சபிதா இராஜேஸ்வரன் இசைத்தனர். அதற்கு ஆதவன் நரேந்திரன் மிருதங்கம் வாசிக்க, சிவலோஜினி சிவராமன் வயலின் இசை வழங்கினார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு குட்டி சபாஷ். நூலாசிரியரின் மகள் திருமதி. ரஞ்சி விட்டில் குறிப்புரை வழங்கி, பாடலையும் பாடியிருந்தார்.


நூல் வெளியீட்டு அரங்கம் பாடும்மீன், செந்தமிழ்ச் செல்வர். சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் ஆரம்பமாகியது. வழக்கமான தமிழ் அரங்கம் திரு.சிவசம்பு ஆசிரியர், திருமதி. சாந்தினி புவனேந்திரராசா, திரு. நிர்மலன் சிவா, திருமதி. சாந்தா ஜெயராஜ் ஆகியோர் இந்த நூலில் இருந்த பல விடயங்களை அலசி, ஆராய்ந்து மிகவும் நன்றாக விமர்சித்திருந்தனர்.

நிகழ்வுக்கு சமூகமளிக்க முடியாதிருந்த திரு. ஜெயராஜ சர்மாவின் வாழ்த்துரைகளை செல்வி. ரேணுகா துரைசிங்கம் வாசித்திருந்தார். விழா நாயகி திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் அவர்களை விழாத் தலைவர் சு. ஸ்ரீகந்தராசா பொன்னாடை போர்த்தி கௌரவித்ததின் பின்னர் நூலினை வெளியிட்டு வைக்க அதன் பிரதிகளை நூலாசிரியரிடமிருந்து திருமதி. கனகமணி அம்பலவாணர், திரு. செல்வராஜா, திரு. கிருஸ்ணமூர்தி, திரு. நவரட்ணம் மாஸரர், திரு. சண்முகம் சந்திரன், திருமதி. அருண் விஜயராணி, திரு. அருளேஸ்வரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நூலாசிரியரின் புத்திரன் திரு. பவானந்தன் பாலசுப்பிரமணியம் அவர்கள் அழகிய வாழ்த்துக் கவிதையினை பாசத்துடன் வாசித்திருந்தார். திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் அவர்களின் பேரப்பிள்ளை செல்வி. சிவதர்சினி கணேஷன் தனது குறிப்புரையை ஆங்கிலத்தில் வழங்கினார்.


நூலாசிரியர் திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது ஏற்புihயில் தலைவர் சு.ஸ்ரீகந்தராசாவின் தலைமையுரை, நூலினை விமர்சனம் செய்த விமர்சகர்களுடைய விமர்சன்ங்களை ஏற்றுக் கொண்டதோடு, தன்னை ஊக்குவித்த, உறுதுணையாயிருந்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார். மெல்பேர்ண் தமிழர் மூத்த பிரஜைகள் சங்க அங்கத்தவர்கள் தமது சக அங்கத்தவரான நூலாசிரியரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்தனர்.

இசை வணக்கம் வழங்கி மாணவர், மாணவிகளுக்கு பரிசுக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. மெல்பேர்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழுக்கும், கலைக்கும் தன்னிகரற்ற சேவைகளைச் செய்து வரும் கலைமாமணி திருமதி. ரமா சிவராஜா அவர்களையும், ஈழத்தில் வாழும் எமது தாயக உறவு;களுக்காக தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை அர்ப்பணித்து அன்றும், இன்றும், என்றும் ஈடு, இணையற்ற அளப்பரிய சேவை செய்து வரும் திருவாளர் டொமினிக் சந்தியாபிள்ளை அவர்களையும் பலத்த கரகோசத்தின் மத்தியில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை மன மகிழ்வினைத் தந்தது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சேகரிக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும், அடிப்படை வாழ்வாதாரங்கள் இன்றி வாழும் எமது தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பணிகளுக்கு வழங்கப்பட்டது. நூலாசிரியர் திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் திருக்கைலாசப் பயணத்தின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டது. தாயக உறவுகளின் வாழ்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படமான "தீராநதி " என்ற திரைப்படத்தை வானொலி அறிவிப்பாளரும், நகைச்சுவை நாடக நடிகரும், மேடை நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு. எட்வேட் அருள்நேசதாசன் அவர்கள் வெளியிட்டு வைத்து, அதன் சில காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.

நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் நிறைவாக நூலாசிரியரின் மருமகள் திருமதி. கல்பனா பாலேஷ்வரன் அவர்கள் நன்றியறிதலை அனைவருக்கும் கூறினார். அனைவருக்கும் ஆரம்பத்தில் சிற்றுண்டிகள் வழங்கி, தொடர்ந்து இரவுணவுகள் தேநீர், குளிர்பானங்கள் பரிமாறப்பட்டது.

மனிதனுடைய வாழ்க்கையில் ஆன்மீகத்தின் முக்கியம் பற்றியும், எப்படி எம்மை வழிநடத்துகின்றது என்றும் அறியக் கூடியதாக இருந்தது. பயணங்களும் தெய்வீகத் தேடலும் தொடர்கிறது என்ற வசனத்துடன் நூல் முடிவுற்றது. ஆமாம் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைப் பயணத்தில் பல தேடல்களுடன் வாழ்கின்றான். அந்தத் தேடல்களின் பயணப் பாதைகளையும், அனுபவங்களையும் அவரவர்கள் பதிவு செய்வதின் பலனையும் அறியக் கூடியதாகவிருந்கது.  "ஆன்மீகப் பயணத்தின் நினைவுப் பகிர்வு" நூல் வெளியீட்டு விழா நிகழ்வினை தொகுத்து வழங்க எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை நான் பெருமையாக நினைக்கின்றேன்.

நவரத்தினம் அல்லமதேவன்
மெல்பேர்ண்.

1 comment:

Aum Muruga Society said...

How can we get a copy of this book?