இலங்கைச் செய்திகள்

.
 வடமராட்சியில் முன்னாள் பெண் போராளி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை

வடக்கில் என்றுமில்லாத அளவுக்கு குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது பிரதிப் பொலிஸ் மா அதிபர்



சம்பந்தன் கையில் சிங்கக் கொடி

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மனப்பூர்வமாக விரும்பினால் தமிழகத் தலைவர்கள் செய்யவேண்டியது

சொந்த வீடு திரும்புவது என்ற அகதிகளின் கனவு பகற்கனவாகிறது

வடக்கில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

யாழ் அரச அதிபர் உடனடி இடமாற்றம்

வெசாக் கூட்டை மாடு மோதியதற்காக தமிழ் இளைஞனை சுட்ட இராணுவம்
படையினரால் முன்னாள் புலிகளின் புகைப்படம் எடுத்து விபரங்கள் திரட்டல்

வடமராட்சியில் முன்னாள் பெண் போராளி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை



jaffna_fire_வடமராட்சி பொலிகண்டி, பாலாவிப் பகுதியில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான முன்னாள் பெண் போராளி ஒருவர் வெள்ளிக்கிழமை தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளவராவார். புலிகளின் மூத்த பெண் போராளியாக இருந்த இவர் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்குள்ளாகி இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டு வரை புலிகள் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17 இன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந் நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியிலுள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். வெள்ளிக்கிழமை வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீமூட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விடயமறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

nantri thinakkural

வடக்கில் என்றுமில்லாத அளவுக்கு குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது பிரதிப் பொலிஸ் மா அதிபர்


Crime-Pictureவடக்கில் என்றுமில்லாதளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ள வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இடம்பெறும் கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்களெனவும் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

வட மாகாணத்தினைப் பொறுத்தவரை என்றுமே இல்லாத அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றுள் பாலியல் வன்புணர்வு தொடர்பான குற்றங்கள் மிக மோசமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அதிலும் அதிகமாக சிறுவர்களே பாதிப்புகளை எதிர் நோக்குகின்றார்கள்.

இவ்வாறான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அண்மையில் வவுனியாவில், 60 வயது முதியவர் ஒருவர் சிறுமி ஒருவரை பணத்தைக் காட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் நிலையில் எமது சமூகம் இருக்கின்றது. இது மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக வட மாகாணத்தின் பல பாகங்களிலும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையும் பாவனையும் அதிகரித்துள்ளது. எனினும் இவை ஓரளவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் 15 க்கும் அதிகமான போதைப் பொருள் விற்பனை முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று நடைபெறுகின்ற குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டமையே. இதனாலேயே இதுவரை காலமும் சட்டம் ஒழுங்கைக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தாமல் அதிகமானவர்கள் எச்சரிக்கப்பட்டு வந்தனர். இனிவரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இது மட்டுமல்லாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொலை கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு கொள்வது மிகுந்த சவாலாகவே உள்ளது.

குறிப்பாக கடந்த காலத்தில் அதிகமான ஆயுதக் குழுக்கள் இங்கு செயற்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் இருந்து அதிகமானவர்கள் தப்பிச் சென்றும்முள்ளனர். எனவே ஆயுதங்களை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதனைக் கண்டறிவதென்பது கடுமையாகவே உள்ளது.

இருப்பினும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளனர். அடுத்த ஓரிரு வாரங்களிற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

சம்பந்தன் கையில் சிங்கக் கொடி

Saturday, 05 May 2012

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து யாழ்நகரில் நடத்திய மே தினப் பேரணியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்த செயல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டார் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு விலை போய்விட்டார் என்றும் கூட சில தமிழ் அரசியல் அணிகளினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறியீடாய் அமைந்த விவகாரங்களையும் எளிதிலே மக்களை உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய விடயங்களையும் அவற்றின் தகுதிக்கப்பால் மிகைப்படுத்தி ஊதிப் பெருப்பித்து வந்திருக்கின்ற ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கிறது என்பதற்கு இந்த "சம்பந்தன் கையில் சிங்கக் கொடி' விவகாரம் மிகவும் பிந்திய உதாரணமாகும்.


இலங்கையின் தேசியக் கொடியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்துவத்திற்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பது அந்தக் கொடி வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டாகும். ஆனால், அந்த கொடியிலுள்ள குறைபாடுகளின் நுட்பநுணுக்கங்களைப் பற்றிக் கவலைப்படக்கூடியளவுக்கு இன்று தமிழ் மக்கள் இல்லை. அவர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறைகளில் இருக்கக்கூடிய தவறுகளினால் துவண்டுபோனவர்களாக மிகவும் இடரார்ந்த நிலையில் இருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து முறையான பாடங்களைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கேற்ற முறையில் தொலைநோக்குடனும் இராஜதந்திர விவேகத்துடனும் கூடிய அரசியல் அணுகுமுறைகளை வகுக்கக்கூடிய தலைமைத்துவமொன்றிற்காக தமிழ் மக்கள் இன்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஏக்கம் அதுவாக இருக்கும் போது குறுகிய பகட்டு ஆரவாரத் தேசியவாத உணர்ச்சிக் கோஷங்களையே மீண்டும் கிளறுவதற்கு சில அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற பிரயத்தனங்களை செய்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்நகரில் மே தினப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி பேசப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்தே தென்னிலங்கையிலிருந்தும் வடக்கு , கிழக்கில் சில தமிழ்த் தரப்புகளிடமிருந்தும் ஆட்சேபக் குரல்கள் கிளம்பத் தொடங்கின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்து வருகின்ற தமிழ் அரசியல் அணிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ்த் தேசியவாதத்தை சிங்களப் பேரினவாதத்திற்குள் கரைத்துவிடுகின்ற கைங்கரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். தென்னிலங்கையில் அரசாங்கத் தரப்பினர் நாட்டில் ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டு வருவதற்கான சர்வதேச சதி முயற்சியொன்றின் அங்கமாகவே ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கில் மே தினப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகவும் சகல விதமான சதி முயற்சிகளையும் முறியடிக்க நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் அணிதிரள வேண்டுமென்றும் கூறினார்கள். அதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட கால ஆட்சியில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையெல்லாம் நினைவுபடுத்திய அமைச்சர்கள் யாழ். பொதுநூலகத்தை தீயிட்டுக் கொளுத்திய ஐ.தே.க.வினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எந்த முகத்துடன் தமிழ் மக்கள் முன்னிலையில் கைகோர்த்து நின்று மே தினத்தைக் கொண்டாடப்போகின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள். பொதுவில் யாழ்நகர் மே தினப் பேரணி ஒரு தேச விரோத செயற்பாடு என்பதே அரசாங்கத்தரப்பினரால் சிங்கள மக்களுக்கு கூற முயற்சிக்கப்பட்ட செய்தியாகும்.

தங்களுக்குக் கொடுமைகள் இழைத்தவர்கள் யார் யார் என்பதைப் பற்றியெல்லாம் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். இன்றைய அமைச்சர்கள் கூறித்தான் அவற்றை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை. அது வேறு விடயம். ஆனால், அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் காரணமாகவும் தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் சகலருமே பொதுவில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களைக் கொடுப்பதற்கு ஜனநாயக ரீதியான வெகுஜன இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் வெகுவாக உணரப்படுகிறது. இதற்கு எதிரணிக் கட்சிகள் மத்தியில் குறைந்தபட்சமேனும் பொதுவேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் ஒன்றுபட்ட அரசியல் செயற்பாடுகள் தேவை. அத்தைகய சூழ்நிலை தோன்றாதிருப்பதை உறுதிசெய்வதற்காக அரசாங்கம் சகலவிதமான தந்திரோபாயங்களையும் கையாண்டு வருகிறது.

சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்புடைமை தொடர்பில் கிளப்புகின்ற சர்ச்சைகளை இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் எதிரான சதி முயற்சியென்றும் எதிரணிக் கட்சிகள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளை அந்தச் சதிமுயற்சிக்கு உதவும் தேசத்துரோகச் செயல்கள் என்றும் கூறுவதன் மூலமாக அரசாங்கம் சிங்கள மக்களை அவர்கள் எதிர்நோக்குகின்ற உண்மையான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான போக்கைத் தொடர அனுமதிக்காத வகையிலான அரசியற் செயற்பாடுகளையே இன்று எதிரணிக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

அதேவேளை, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற நியாயபூர்வமான யோசனைகளையும் கோரிக்கைகளையும் பிரிவினைவாதத்தை மீண்டும் தூண்டும் நோக்குடனானவையென்று கூறிக்கொண்டு அரசாங்கத் தலைவர்கள் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதான அரசியல் அணியாக இன்று விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு நோக்கி பயனுறுதியுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று அரசாங்கத்தை சர்வதேச சமூகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால், அதை அலட்சியம் செய்யும் அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சதி முயற்சிகள் பற்றியே பேசிக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் வெறித்தனமான தேசப்பற்று உணர்வை அதாவது, ஏனைய சமூகங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அபிலாசையையும் மதிக்காத கடும்போக்கு தேசியவாத உணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய, நிலைபேறானதாக அமையக்கூடிய நியாய பூர்வமான அரசியல் தீர்வைக்காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் திரும்பத் திரும்ப அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் அந்த ஒத்துழைப்பைப் பெறுவதில் அக்கறைகாட்டாத அரசாங்கம் சம்பந்தன் போன்ற தலைவர்களை தேசவிரோத செயல்களுக்கு துணைபோகின்றவர்களாகவும் சர்வதேச சதிமுயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்பவர்களாகவும் சிங்கள மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. இத்தகைய படுமோசமான அரசியல் சூழ்நிலையின் பின்புலத்தில் நோக்குகையில் சம்பந்தன் யாழ்நகர் மே தினத்தில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திய செயலை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் பற்றி சிங்கள மக்களுக்கு செய்யப்படுகின்ற நச்சுத்தனமான பிரசாரங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய தருணப் பொருத்தமான ஒரு அரசியல் விவேகத்தின் வெளிப்பாடு என்று ஏன் கருதக்கூடாது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு தலைவர் சம்பந்தனின் செயலுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிவித்து தன்னைத்தானே வேண்டாத ஒரு பொருந்தாத் தன்மைக்குள் தள்ளிய விசித்திரத்தையும் காண்கின்றோம்.
nantri thinakkural

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மனப்பூர்வமாக விரும்பினால் தமிழகத் தலைவர்கள் செய்யவேண்டியது

Tuesday, 08 May 2012
 கேணல் ஆர். ஹரிகரன்


இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதில் தமிழகத் தலைவர்கள் மனப்பூர்வமான விருப்பத்தை கொண்டிருப்பதால் அவர்கள் இலங்கையின் அரசியல் அரங்கில் இடம்பெற்றுள்ள மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்து விளங்கிக்கொண்டு அதற்கு ஏற்புடைய தாக தமது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தெற்காசியா தொடர்பான இராணுவ, புலனாய்வு விவகார நிபுணரான கேணல் ஆர்.ஹரிகரன், இல்லாவிடின் யதார்த்தத்திலிருந்தும் அவர்கள் தங்களைத் தாமே தூரவிலக்கி கொண்டவர்களாகி விடுவார்களென்றும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழ் ஈழ விவகாரத்திற்கு உசுப்பேற்றுதல் என்ற தலைப்பில் கேணல் ஹரிகரனின் கருத்தை தெற்காசிய ஆய்வுக் குழுமம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கையில் இந்த வருடம் இடம்பெற்ற மே தின வைபவங்கள் அசாதாரணமான காட்சியொன்றைக் காண்பித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுபவருமான இரா.சம்பந்தன் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் தோளோடு தோளாக நின்று யாழ்ப்பாணத்தில் இலங்கைக் கொடியை அசைத்துக்காட்டியுள்ளார்.

இந்த செயற்பாட்டை சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தன் செய்திருந்தால் அதற்கான விலையை அவர் செலுத்தியிருக்கக்கூடும். சம்பந்தனின் செயற்பாடானது ஐ.தே.க.வுடன் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான தமிழ்க் கூட்டமைப்பின் அடையாள நகர்வாகக் காணப்படுகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சமமான பங்களிப்பை தக்கவைப்பதற்கான தமது நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக தமிழ்க் கூட்டமைப்பின் இந்த நகர்வு காணப்படுகிறது. சம்பந்தன் ஐ.தே.க.வுடன் ஐக்கியத்தை வெளிப்படுத்தியிருப்பதானது கலந்துரையாடல்கள் சிலவற்றை மேற்கொண்ட பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானமாகக் காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு விருப்பங்கொண்ட இருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றம் மாவை சேனாதிராஜா ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இராப் போஷன விருந்தில் கலந்தகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது கூட்டு மே தினத்தை தீர்க்கமான வெற்றியென தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் வர்ணித்திருந்ததாக லக்பிம நியூஸ் செய்திச் சேவை மேற்கோள் காட்டியிருந்தது. தெற்கிலுள்ள மக்களுடன் நாங்கள் கரங்கோர்க்கக்கூடியதாக இருந்தது. வெற்றிகரமான முறையில் வடக்கில் மே தினத்தை நடத்தியுள்ளோம். வடக்கிலுள்ள மக்களும் தென்பகுதி மக்களும் எதிர்காலத்தில் கரங்கோர்த்து செல்லக் கூடிய நிலைமை இருக்கின்றது என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த விடயமானது நாட்டின் ஏனைய பகுதிக்கு வழங்கப்பட்ட வலுவான செய்தியாகக் காணப்படுகிறது. அத்துடன், உலகிற்கு வழங்கிய கனதியான செய்தியாகவும் இது உள்ளது என்று சுமந்திரன் கூறியுள்ளார். இதனை தமிழ் நாட்டின் தலைவர்கள் கேட்கின்றார்களா?

இதேவேளை குருநகரில் இடம்பெற்ற மே தின பேரணியானது ஐ.தே.க. மற்றும் கூட்டமைப்புடன் இணைந்து இடம்பெற்றதற்காக அந்த எம்.பி. நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கும் வெளியுலகத்திற்கும் வெளிப்படுத்துவதற்கு இந்தப் பேரணி உதவியதென அவர் கூறியுள்ளார். பல்வேறு விடயங்கள் எமது மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போதாமல் உள்ளது. இங்கு பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உள்ளனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெறவில்லை. மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் வடக்கில் நிலைவரம் மேம்பட வேண்டும். ஆனால், இதுவரை தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்வதற்கான தமது நடவடிக்கையை அரசாங்கம் முடக்கி வைத்துக்கொண்டிருக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவது தொடர்பாக உருக்கும் விடயத்தை மேலெழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தனின் மே தின அரசியல் முதல் வெளிவந்திருக்கிறது. கருணாநிதியின் பிந்திய அரசியல் சுலோகமாக தமிழ் ஈழம் காணப்படுகிறது. இலங்கையிலுள்ள தமது அரசியல் சகாக்களில் இருந்தும் தமிழக அரசியல் தலைவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அகற்றப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதாக சம்பந்தனின் மே தின விவகாரம் காணப்படுகிறது. இலங்கையின் கள நிலை யதார்த்தத்தை விளங்கிக் கொள்வதில் இலங்கையிலுள்ள தலைவர்களிலிருந்தும் எவ்வளவு தொலை தூரத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காண்பிப்பதாகவும் இது காணப்படுகிறது. கலைஞர் சுதந்திரமான தமிழ் ஈழ கோரிக்கைக்கு ஆதரவான திட்டத்தை தூசி தட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். 1983 இல் இருந்து தி.மு.க.விலுள்ள யாவரும் இந்த திட்டத்தை ஆதரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஈழத்தை உருவாக்க இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசிக்குமானால் மாநிலத்தைக் காங்கிரஸை ஆட்சி செய்யுமெனவும் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்ளாது என்று 1983 இல் மெரினா கடற்கரையில் தான் தெரிவித்திருந்ததையும் கருணாநிதி நினைவுகூர்ந்திருந்தார். ஆனால், முப்பது வருடங்களாக சுதந்திர தமிழ் ஈழத்திற்காக தி.மு.க.வும் அவரும் என்ன செய்திருந்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதற்கு அவர் மறந்துவிட்டார். நான்கு தடவைகள் தமிழகத்தின் முதலமைச்சராக அவர் இருந்துள்ளார். (19691971, 19711976, 19962011,20062011)

தெற்கு சூடான் பொஸ்னியா, மொண்டி நீக்ரோ, கிழக்குத் தீமோர் போன்றவற்றின் அடிப்படையில் தமிழ் ஈழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அத்துடன் சமாதானமான ஜனநாயக வழிமுறை மூலம் சுதந்திர தமிழ் ஈழத்தைக் காண்பதற்கு தான் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். 30 வருடங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பின்னர் நடைமுறைச் சாத்தியமற்ற இந்த பரிந்துரையானது அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றது என்பதை அவர் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமானதாகும். தி.மு.க. தலைவர் தமிழ் ஈழம் பற்றி கதைப்பதற்கான தகைமை குறித்து தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஈழ மற்றும புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் கருத்து ஆச்சரியமான விடயமல்ல. சுதந்திர தமிழ் ஈழம் தொடர்பான அறிக்கையை கருணாநிதி விடுத்திருப்பதற்கான தேவையானது அரசியல் ரீதியான சதியெனக் கூறப்படுகிறது. இரு முனைகளில் அவர் அரசியல் மோதலை முன்னெடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. தனது இரு மகன்மார் மத்தியில் தலைமைத்துவம் தொடர்பான உள்மட்ட மோதல்கள் ஒருபுறம் அதிகரித்துள்ளன. அத்துடன், ஆட்சியதிகாரம் அவரின் அரசியல் எதிரியான ஜெயலலிதா வசம் சென்றிருக்கும் நிலையில் கட்சியைத் தக்க வைத்திருப்பதற்கான போராட்டத்தில் அவர் ஈடுபட வேண்டியுள்ளது. இதையே கருணாநிதியின் தமிழ் ஈழ அறிக்கைகளுக்குக் காரணமெனக் கருதப்படுகிறது. இல்லாவிடில் 30 வருடங்களுக்குப் பின்னர் காலந்தாழ்த்தி ஈழத்திற்கான அழைப்பை அவர் ஏன் விடுக்கின்றார் என்பது புரிந்துகொள்வதற்கு கடினமான விடயமாகும்.

2009 இல் இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்தத்தை இந்தியா நிறுத்த வேண்டுமென ஜெயலலிதா விரும்பியிருந்தார். அதுமாத்திரமன்றி தமிழர்கள் தமிழ் ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவவேண்டுமெனவும் அவர் கோரியிருந்தார். "நான் கூறுவதை செவிமடுக்கும் அரசாங்கம் மத்தியில் இருக்குமானால் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கான நடவடிக்கையை நான் எடுத்திருப்பதுடன் தனியான தமிழ் ஈழம் உருவாகுவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பேன்' என்று பொதுக் கூட்டமொன்றில் ஜெயலலிதா கூறியிருந்தார். அதன் பின்னர் இலங்கைக்கு தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்திருந்தார். குறிப்பாக ஐ.நா.வில் இலங்கைக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு புதுடில்லியை ஜெயலலிதா வலியுறுத்தி வந்துள்ளார். எவ்வாறாயினும் ஜெயலலிதாவின் குருவும் அ.தி.மு.க.வின் ஸ்தாபகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் விடுதலைப் புலிகளின் போசகராக இருந்தார் என்பது நினைவில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். ஆனால், இலங்கை விவகாரத்தை அவர் தனது கையில் எடுத்த போது இந்தியாவின் தலையீட்டிற்கு அவர் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார். 1987 இல் ராஜீவ் ஜெயவர்தனா உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் அவர் இந்தியத் தலையீட்டிற்கு பூரணமான ஆதரவை வெளிப்படுத்தி வந்திருந்தார். அதன் பின்னர் அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தோல்விகண்டுவிட்டது. புலிகளின் சகோதர யுத்தத்தில் வசீகரமும் ஆற்றலும் மிக்க இலங்கைத் தமிழத் தலைவர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். மீதமாக இருந்த சில தலைவர்களினால் ஒரே குரலில் வெளிப்படுத்த முடியாத தன்மை காணப்பட்டது. நிகழ்ச்சி நிரலையோ அல்லது தமது அரசியல் பலத்தையோ ஒரே குரலில் வெளிப்படுத்த முடியாத நிலைமை அத்தலைவர்களுக்கு ஏற்பட்டது.

தமிழர்களின் குடிப்பரம்பல் மற்றும் இலங்கைக்குள்ளேயும் வெளியேயும் கடந்த மூன்று தசாப்தங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இந்நிலையில் அத்தகைய ஐக்கியம் எதிர்பார்க்க முடியாததொன்றாகும். ஆனால், யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னரும் சமாதானத்தின் அனுகூலங்களை முழுமையாக அனுபவிக்கவில்லையென்பதே யதார்த்தமாகும். இப்போதும் அவர்கள் புனர்வாழ்வு மீள்கட்டுமானம் தொடர்பான துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். சுதந்திர தமிழ் ஈழமானது அவர்களின் மனதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அவர்களின் உடனடி தேவையாக இருப்பது கௌரவமான இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாக திரும்ப வேண்டிய நிலைமையாகும்.

சுதந்திர தமிழ் ஈழ எண்ணப்பாடானது இலங்கைத் தமிழர்களின் மனங்களில் கிடப்பில் போடப்பட்ட விடயமாகத் தென்படுகிறது. இதனை இலங்கைக்கு சென்றிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான ரங்கராஜன் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் ஈழ சிந்தனைக்கு தமிழ்த் தலைவரோ அல்லது கட்சியோ ஆதரவை வெளிப்படுத்தியிருக்கவில்லையெனவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அவர்கள் அங்கமாகியிருப்பதை விரும்புவதாகவும் கூறியிருந்தார். எவ்வாறாயினும் தமிழகத் தலைவர்கள் குறிப்பாக திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் ரீதியில் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பயன்படுத்துவதாகத் தென்படுகிறது. 1983 நிலைவரத்திற்கு பின்னர் தமிழ் ஈழத்தை உருவாக்குவது தொடர்பான விடயத்தில் செலுத்தப்பட்ட சிந்தனைகளில் அவர்கள் கவனத்தை செலுத்தியுள்ளதாகத் தென்படுகிறது. தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு வலுவூட்டுவதற்கான நிவாரணியானது இலங்கைத் தமிழர்களுக்கும் சிறப்பானதென அவர்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. க்மிழகத் தலைவர்களிடமிருந்து வெளிப்படுத்தப்படும் கருத்துகள் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அதிகளவு மரியாதை செலுத்தப்படும் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அவை நிராகரிக்கப்பட்ட தன்மையைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. ஏனெனில் தமக்கும் பொருத்தமான விடயத்தை இழந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழகத் தலைவர்களிடமிருந்து வெளிப்படுத்தப்படும் விடயங்கள் இலங்கைத் தமிழர்களால் கணக்கெடுக்கப்படாத தன்மையைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன.

தமிழ் ஈழம் தொடர்பாக தமிழ் நாட்டிலிருந்து வெளிப்படுத்தப்படும் அரசியல் கருத்துகள் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த சமூகத்தினர் மத்தியில் தமது செல்வாக்கை மீளப்பெற்றுக்கொள்வதற்கு உதவுவதாக மட்டுமே அமையும். அத்துடன், இலங்கை அரசியலில் ஆளுங் கூட்டணியும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சிகளும் தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தும் கருத்துகளை திறைமையான முறையில் பயன்படுத்துவதற்கும் இது உதவுவதாக அமையும். இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு இவை நியாயபூர்வமான உந்து சக்தியாக விளங்கும்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள அரசியல் தன்மையையும் மாற்றங்களையும் தமிழகத் தலைவர்கள் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்கு அவர்கள் மனப்பூர்வமான விருப்பத்தைக் கொண்டிருந்தால் இலங்கையின் தற்போதைய மாற்றங்களுக்கு அமைவாக பொருத்தமான தந்திரோபாயங்களை அவர்கள் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களால் இதனைச் செய்வதற்கு முடியாவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு துரிதமான புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கு உதவுவதற்காக இந்திய மக்களின் நல்லெண்ணத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளுடன் தமிழகத் தலைவர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் யதார்த்தத்திலிருந்தும் அவர்கள் தம்மை வெகுதூரத்திற்க விலக்கி வைத்தவர்களாக இருப்பார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.
nantri thinakkural

சொந்த வீடு திரும்புவது என்ற அகதிகளின் கனவு பகற்கனவாகிறது

Tuesday, 08 May 2012
அமந்த பெரேரா

கிருஷ்ணவேணி நக்கீரன் கடந்த இரண்டு தசாப்தங்களில் இரண்டு தடவைகள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்று இரு தடவைகள் சொந்த இடத்திற்கு திரும்பினார். இலங்கையின் வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாவை சேர்ந்த 36 வயது நிரம்பிய நான்கு பிள்ளைகளின் தாயாரான கிருஷ்ணவேணி முதன்முதலாக 1990 ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியாக இருந்த போது சிவில் யுத்தத்திற்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இலங்கை திரும்புவது பாதுகாப்பாக இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்ட கிருஷ்ணவேணி குடும்பம் மீண்டும் 1998 ஆம் ஆண்டில் இந்தியா திரும்ப வேண்டி நிலைக்கு ஆளானது. அரசாங்கப் படைகள் 2009 ஆம் ஆண்டில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்ததை அடுத்து 2010 ஆம் ஆண்டில் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பினர். யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் பல வருடங்களை இந்தியாவில் கழித்துவிட்டு நாடு திரும்பும் கிருஷ்ணவேணி போன்ற அகதிளுக்கு சொந்த மண்ணில் பேரவலங்களே காத்திருந்தன. வாழ்க்கை பெரும் போராட்டமாகவே அமைந்துள்ளது என்று இந்தியாவில் தாங்கள் செய்தது போன்று இரண்டு மடங்கு இங்கு வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று கிருஷ்ணவேணி ஐ.பி.எஸ்.ஸிற்கு தெரிவித்தார்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் இவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை தமிழினத்தை சேர்ந்தவர்கள். அயல்நாடான இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்களின் படி 1,00,000 இற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 68,000 பேர் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இந்த அகதிகளில் சிலர் இலங்கை திரும்ப ஆரம்பித்தனர். கடந்த வருடம் 1,700 இற்கும் அதிகமான அகதிகள் இலங்கை திரும்ப அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் உதவியுள்ளது.

இந்த வருடம் அகதிகள் நாடு திரும்புவதில் சுமார் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் வெளியிட்ட பிந்திய புள்ளி விபரங்களின் படி 2012 ஆம் ஆண்டின் முதல் நாலாண்டில் 408 பேர் இலங்கை திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 597 பேர் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை தடைப்பட்டுள்ளமையே இந்த அகதிகள் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்குக் காரணம் என்று இலங்கையிலுள்ள அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறைந்த பிரயாணக் கட்டணமும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை அகதிகள் அதிகளவில் கொண்டுவர இக்கப்பல் சேவையில் வசதிகள் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நாடு திரும்புவோருக்கும் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளுக்கும் உதவிவரும் மனித உரிமை காப்பகங்கள் கருத்துத் தெரிவிக்கையில் சொந்த நாட்டில் அகதிகள் முகங்கொடுக்கும் கஷ்டங்களே அவர்கள் திரும்ப தயங்குவதற்கு காரணம் என்று தெரிவிக்கின்றன.

வன்னிக்கு திரும்புவோரைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்து உண்மையானதே. ஏனெனில் இலங்கையின் வட பகுதியில் பெரும் பகுதி நிலம் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கிறது. அவர்கள் நாட்டில் இல்லாத போது இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. எனவே அவர்கள் புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும் இலங்கையிலும் அகதிகளுக்கு உதவிவரும் ஈழ அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் இலங்கை கிளைத் தலைவி சின்னத்தம்பி சூரியகுமாரி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

எதையும் ஆரம்பத்திலிருந்தே செய்ய வேண்டிய நிலைமை அகதிகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையாகும். உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பும் போது அவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள் இருப்பது போல இந்தியாவிலிருந்து திரும்புவோருக்கு உதவ விசேட திட்டம் எதுவும் இல்லை.

இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இவர்கள் தாம் ஒரு அந்நிய இடத்திற்கு திரும்புவது போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். விசேடமாக இங்கு ஏற்கெனவே நெருங்கிய உறவினர்கள் இல்லாதவர்களுக்கு இத்தகைய உணர்வு ஏற்படுகிறது என்று சூரியகுமாரி கூறுகிறார்.

நாடு திரும்பும் அகதிகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் சொந்த இடங்களில் யுத்தத்தின் போது இழந்த அடையாள அட்டைகள், காணி உறுதிகள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் போன்ற உரிய ஆவணங்கள் இல்லாததால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைப் பிரதிநிதி மைக்கேல் சுவாக் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இந்த ஆவணங்கள் இல்லாதிருப்பது உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

தரப்படுத்தப்பட்ட ஒரு மீள்ஒருங்கிணைப்பு பணத்தை பெற்றுக்கொள்ளும் அகதிகள் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய ஏனைய பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்.

சேதமடைந்த தங்கள் வீடுகளில் திருத்த வேலை செய்வதற்கு அல்லது புனரமைப்பதற்கு நாடு திரும்பும் அகதிகளுக்கு உதவி தேவைப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய சவால் வாழ்வதற்குரிய இடமாக வீடொன்றை தேடிக் கொள்வதாகும் என்றும் சுவாக் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அழிந்துபோன சுமார் ஒரு இலட்சம் வீடுகளுக்கு பதிலாக 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16,000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன என்று கடைசியாக வெளியிடப்பட்ட ஐக்கியநாடுகள் ஸ்தாபன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புனர்நிர்மாணம் செய்வதாக அல்லது திருத்த வேலைகள் செய்வதாக 35,000 வீடுகளுக்கு மட்டுமே உறுதியளிக்கப்பட்டன என்றும் இந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வடபகுதியில் 40,000 வீடுகளை கட்டிக் கொடுக்க ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாலும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களாலும் வன்னிடுஞூ பிரதேசத்தில் பாரதூரமான காணிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிய காணிச் சொந்தக்காரர்கள் பலர் தங்கள் காணிகளுக்கு உரிமை கோர முடியாத நிலையில் உள்ளனர் என்று பெண்களுக்கும் அபிவிருத்திக்குமான யாழ்ப்பாண நிலையத்தின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் ஐ.பி.எஸ்.ஸிற்கு தெரிவித்தார்.

தனிப்பட்டவர்களாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் குடும்பங்களாக வரிசையாக திரும்பி வருவதால் வீட்டுப் பிரச்சினையும் காணிப் பிரச்சினையும் உக்கிரமடைந்துள்ளன என்று சூரியகுமாரி தெரிவித்தார்.

1980 களில் 5 பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற ஒரு பெண் தற்போது ஐந்து முழுக் குடும்பங்களுடன் நாடு திரும்பியுள்ளார் என்று அவர் தெரிவித்தார். பிள்ளைகள் ஐந்து பேருமே தற்போது திருமணம் செய்து தனித்தனி குடும்பங்களாக திரும்பி வந்து முன்னர் அவர்களுக்கு இருந்த ஒரு சிறு காணித் துண்டில் வசித்து வருகிறார்கள்.

நாடு திரும்பிய கிருஷ்ணவேணி போன்றவர்களின் காணிகளில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த குடும்பங்கள் பல தசாப்தங்களாக தற்காலிக குடிசைகளை கட்டிக்கொண்டு வாழ்ந்து வருவதால் நக்கீரன் போன்றவர்கள் செய்வதறியாது அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எங்களுக்கு இப்பொழுது காணி எதுவும் இல்லை நாங்கள் எங்கள் சொந்தக் காணிகளிலேயே மற்றவர்களுடன் வாழ்வதற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று நக்கீரன் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்குள் வரிசையாக பிரவேசித்துள்ள 4 இலட்சத்து 34 ஆயிரத்து 559 உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் அகதிகள் மத்தியிலும் வேலையில்லாப் பிரச்சினையும் உக்கிரமடைந்துள்ளது.

சொந்த இடங்களுக்கு திரும்பும் அகதிகளில் அநேகமானோர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் தலா 200 டொலரை பயன்படுத்தி தங்கள் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாடு திரும்பியவர்களும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்கள் மனதை திருப்திப்படுத்திக் கொண்டு வாழ முயலுகிறார்கள். இது அவர்களுக்கு வாய்ப்பையும் நம்பிக்கையையும் கொடுக்கும் பூமியாகவும் என்பதால் அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளார்கள் என்று சூரிய குமாரி தெரிவித்தார்.

ஐ.பி.எஸ்.






வடக்கில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

Thursday, 10 May 2012

 "என் பிள்ளாய்! பேராசை, பொறாமையினால் அவர்கள் மிகவும் கொடூரர்களாக இருக்கின்றனர். அவர்களின் வார்த்தைகள் இரத்த வெறிகொண்ட ஒளித்து வைத்திருக்கும் கூரான கத்திகளைப் போன்று உள்ளன. அச்சுறுத்தும் அவர்களின் மனங்கள் மத்தியில் நீ சென்று நிமிர்ந்து நில். சுட்டெரிக்கும் பகல் பொழுது தணிந்து அந்தி வேளையில் தோன்றும் அமைதியைப் போன்று சாந்தமான உனது பார்வையை அவர்கள் மீது பாயவிடு. என் குழந்தாய்! அவர்கள் உனது வதனத்தை பார்க்கவிடு. சகல விடயங்களினதும் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

இவை உலகப் புகழ்பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் "தேவதைக் குழந்தை' கவிதையில் உள்ள சில வரிகள். கவியரசரின் 150 ஆவது ஜயந்தி ஆண்டாக இந்த வருடத்தை உலகம் நினைவு கூர்ந்து வருகிறது. இலங்கையிலும் இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. பிள்ளைச் செல்வங்களின் பெறுமானம் தொடர்பாக நோபல் பரிசை வென்றெடுத்த அந்த மகாபுருஷர் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார் என்பதற்கு அவரின் படைப்புகளில் ஒன்றாக இந்த "தேவதைக் குழந்தையின் சில வரிகளே போதும். ஆனால், பிள்ளைகளின் "பெறுமானம்' தொடர்பாக இலங்கையில் குறிப்பாக வட மாகாணத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வமான புள்ளி விபரங்கள் பேரதிர்ச்சியையும் கவலையையும் விசனத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளன.

கீழைத்தேச பண்பாடு, கலாசாரத்தில் தொன்மை வாய்ந்த சமூகமான தமிழ் மக்களை பெரும் பான்மையாகக் கொண்ட வட பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் வகை தொகையின்றி அதிகரித்துவருவதை வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2011 இல் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்திலேயே அதிகளவு சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. யாழ்.மாவட்டம் இதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வவுனியா மாவட்டத்தில் 201 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. குடாநாட்டில் சிறுவர்கள் மீதான 66 பாலியல் சம்பவங்களும் 12 உடல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு உளரீதியான துஷ்பிரயோக சம்பவமும் 5 தற்கொலை முயற்சிகள், 16 உதாசீனம் செய்யப்பட்ட சம்பவங்கள், 25 சட்டத்திற்கு முரணான சம்பவங்கள், 13 தனித்துவிடப்பட்ட சம்பவங்கள், 1 சிறுவர் விற்பனை, 2 கடத்தல், 14 இளம் வயது திருமணங்கள், உட்பட 155 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. துஷ்பிரயோக சம்பவங்களில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகியவை மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடத்தில் இருக்கின்றன.

அத்துடன் வடக்கில் பெற்றோரை இழந்த 2097 சிறாரும் பெற்றோரில் ஒருவரை இழந்த 10,404 சிறுவர்களும் உள்ளனர் என அறிக்கை கூறுகிறது. ஆனால், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட, பலியான அங்கவீரரான சிறார்கள் பற்றிய புள்ளி விபரங்கள் இன்னமும் உத்தியோக பூர்வமாக இது வரை வெளியிடப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தில் கைச்சாத்திடப்பட்ட நாடான இலங்கையின் ஒரு பகுதியில் பெரும் எண்ணிக்கையில் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து செல்வதற்குக் காரணம் என்ன? அதுவும் யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் முடிவடையும் நிலையில் சிறாரின் உரிமைகளை பாதுகாக்க உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே இங்கு வெளிப்படையான விடயமாகும்.

18 வயதுக்குக் குறைவானவர்களை "பிள்ளைகளாகக்' கருதப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், தவறாக நடத்தப்படுதல், புறக்கணித்தல், வர்த்தக நடவடிக்கைகளுக்கான பயன்படுத்துதல் என்பன சட்டவிரோதமான நடவடிக்கைகள் என்பது ஐ.நா.வின் சிறுவர் சாசனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் அரச இயந்திரம் செவ்வனே செயற்படவில்லை என்பதையே இவை காண்பிக்கின்றன. அத்துடன் வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் பலவும் சிறுவர் தொடர்பாக இடம்பெறுவதை ஊடகங்களில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை, தார்மிக பண்புகள் இல்லாதொழிந்து போய்விட்டமை, கலாசார பண்பாட்டு விழுமியங்களின் பெறுமானத்தை சிறிதேனும் கவனத்தில் கொள்ளாத போக்கு அதிகரித்து வருகின்றமையும் அதற்கு இடமளிப்பதுமே இவற்றுக்கான அடிப்படைக் காரணமாகக் காணப்படுகின்றது. இந்த கொடூரம் தொடர இனிமேலும் இடமளிக்கக்கூடாது. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புகளின் தீவிரமான செயற்பாடே அவசியமாகத் தேவைப்படுவதுடன் அரசாங்கமும் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

nantri thinakkural


யாழ் அரச அதிபர் உடனடி இடமாற்றம்

Thursday, 10 May 2012

imelda_sukumar_யாழ் அரச அதிபர் திருமதி இமெல்மடா சுகுமார், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான இந்த இடமாற்ற உத்தரவை பொது நிர்வாக அமைச்சு புதன்கிழமை பக்ஸ் மூலம் அறிவித்திருந்தது.


இவருக்கு பதிலாக யாழ் மாவட்ட அரச அதிபராக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

nantri thinakkural


வெசாக் கூட்டை மாடு மோதியதற்காக தமிழ் இளைஞனை சுட்ட இராணுவம்


10/5/2012

இராணுவத்தினர் அமைத்த வெசாக் வெளிச்சக் கூடுகளை மாடுகள் மோதி விட்;டன என்பதற்காக முல்லைத்தீவில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இதுதான் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலட்சணமாவென ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய விஜித ஹேரத் மேலும் கூறியதாவது:

இங்கு பேசிய ரஜீவ விஜேசிங்க எம்.பி. இராணுவத்தினர் எந்தத் தவறுகளும் குற்றங்களும் செய்வதில்லையெனக் கூறினார். இராணுவ வெற்றியை வைத்துக் கொண்டு இராணுவம் செய்த செய்யும் தவறுகளை மூடி மறைக்க முற்படக் கூடாது. இராணுவம் செய்யும் தவறுகளைக் கண்டித்து நடவடிக்கையெடுக்க அரசு முன்வர வேண்டும்.

முல்லைத்தீவில் உள்ள குமாரசுவாமி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மாடுகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வெளிச்சக் கூடுகளைத் தட்டிவிட்டன என்பதற்காக அந்த இளைஞர் இராணுவத்தினரால் சுடப்பட்டுள்ளார். சூட்டுக் காயத்துடன் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய அவர் வைத்தியசாலையில் கூட இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

அவ்விடத்திற்கு அம்பியூலன்ஸ் வர நீண்ட நேரம் ஆகியுள்ளது. அதன் பின்னர் ஹெலிகொப்டரில் அவ்விளைஞர் அநுராதபுரத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் வெளியே தெரிவிக்கக் கூடாதென இராணுவத்தினரால் அந்த இளைஞரின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளனர். ஒரு தமிழ் இளைஞனின் உயிர் ஒரு வெசாக்கூட்டின் பெறுமதிக்கு நிகரானதா? இது தான் அரசு தமிழருக்குக் காட்டும் நல்லிணக்கமா?
nantri virakesari


படையினரால் முன்னாள் புலிகளின் புகைப்படம் எடுத்து விபரங்கள் திரட்டல்

10/5/2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை படையினர் திரட்டி வருவதுடன் அவர்களை புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகரை, கதிரவெளி படை முகாமில் இருந்து படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்கு செல்லும் படையினர் அவர்களின் விபரங்கள் மற்றும் குடும்ப விபரங்கள், இயக்கத்தில் இருந்த காலப் பகுதி என்பனவற்றை பதிவு செய்து செல்வதாக தெரிவித்தனர்.

அத்துடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் புகைப்படமும் பிடித்துச் செல்வதாகவும் இதனால் அவர்கள் அச்ச நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இது தொடர்பில் படை உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வு பெறாத உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அறியவே இத்தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியோர் தொடர்பில் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அத்துடன், குற்றச் செயல்கள் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கிலும், இதுவரையில் புனர்வாழ்வு பெறாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்படாதோர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக படை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
nantri virakesari





























No comments: