ஹெலன்ஸ்பேர்க் சிறீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் விசேட குடமுழுக்கு விழா!

நிருதி வலம்புரி விநாயகப் பெருமான் முன்னிலையில்  அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் 9 தொகை அடியார்களுக்கு ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கும் திருக் குடமுழுக்கு விழா!

மேலே குறிப்பிட்ட திருவுருவச் சிலைகளுக்குத் திருக் குடமுழுக்கு விழா திருவருள் அருளால் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கோலாகலமா நடைபெற்றது. 24ஆம் திகதி  இந்தச் திருவுருவச் சிலைகளுக்கு காலை 8மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சியில் இந்துக்கள் பலர் பங்கேற்றி வழிபாடு செய்தார்கள். பத்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப காணிக்கை செலுத்தி வரிசையாக எண்ணெய் சாற்றியவண்ணம் காணப்பட்டார்கள் பத்தரிற் சிலர் திருமுறை ஓதியபடி காணப்பட்டனர். சனிக்கிழமை 24ஆம் திகதி மாலை சிவத்திரு நிர்மலேசுவரக் குருக்களுடன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவத்திரு சிவசண்முகக் குருக்கள் இணைந்து மறுநாட் கும்பாவிடேகத்திற்குத் தேவையான   கிரிகைகளை ஆரம்பித்து வைத்தார்கள்.


ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில்  வலம்புரி விநாயகருக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் 9 தொகை அடியார்களுக்கும் அபிடேகம் நடைபெற்றது. மங்கள நாதஸ்வர இசையைத் திரு சத்தியமூர்த்தி அவர்களும் தவிலை திரு வைத்தீஸ்வரன் அவர்களும் வழங்கியவண்ணம் இருந்தார்கள். இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறைங அடியார்களால் ஓதப்பட்டது. அலங்காரஞ்செய்யப்பட்ட நால்வரும்  தெய்வயானை வள்ளி சமேதராய் சுப்பிரமணிய சுவாமியும் உள்வீதி வலம்வந்த காட்சி அற்புதமாக இருந்தது.
வலம்புரி விநாயகருக்கும் மற்றும் நாயன்மார்களுக்கும் திரைமறைவில் திருவலங்காரம் நடைபெறும்பொழுது திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள் பத்தியோடு சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்கும் அடியேன்….. என்று ஆரம்பிக்கும் திருத்தொண்டர் தொகையைப் மனதை ஈர்க்கும் வகையில் பாடியமை குறிப்பிடத்தக்கது.
அலங்காரம் நிறைவுபெற்றதும் திருக்கதவம் திறக்கும்வண்ணம் திருநாவுக்கரசநாயனார் அருளிய “பண்ணின் நேர்மொழி……” என்ற பதிகத்தை திரு சத்தியமூர்த்தி அவர்கள் பத்தியுடன் இசைத்தமை எல்லோரையும் பரவசப்படுத்தியது. 
அப்பொழுது  திரை நீக்கம் செய்யப்பட்டு வலம்புரி விநாயகர் மற்றும் நாயன்மார்களுக்குப்    பூசை செய்யப்பட்டுத் கருப்பூர தீபாராதனை நிறைவேற்றப்பட்டது. திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள் நாயன்மார்கள் பற்றிய சிற்றுரை ஒன்றை நிகழ்த்தி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார். சிறீ வெங்கடேஸ்வரா கோயில் நிர்வாக சபையும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் நிதி சேகரிக்கும் குழுவும் இணைந்து  
ஆங்கிலத்தில் எழுதப்படடு பதிப்பிக்கப்பட்ட  “தென் இந்தியாவின் சைவ நாயன்மார்கள்” (“Saiva Saints of South India”) என்ற நூலைச் சிவத்திரு சிவசண்முகக் குருக்கள் அவர்கள் வெளியிட்டுவைத்தார். இதனைத்
தொடர்ந்து நாயன்மார்கனின் உபயகாரர்களுக்குக் காளாஞ்சி வழங்கப்பட்டது. அவர்களை இவ்வாண்டு ஆலய நிருவாக சபைத் தலைவர் டாக்டர் பாஸ்கா அவர்கள் கௌரவித்தார். இதைத் தொடர்ந்து மகேசுவர பூசை விமரிசையாக நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் 9 தொகை அடியார்களுக்குத் திருவுருவச் சிலைகளை அமைத்து முறைப்படி திருக் குடமுழுக்கு விழா நடைபெற்றமை ஒரு சரித்திரம் படைக்கும் நிகழ்வு என்றால் மிகையாகாது.

சில விளக்கங்கள் -- சிவபெருமான் தம்மை மெய்யன்புடன் வழிபடும் மெய்யன்பர்களுக்குத் திருவருள் பாலிக்கும் பொருட்டுப் பல்வேறு அருள் வடிவங்களை எடுத்தருள்வர். விநாயகப் பெருமான் தம்மை வழிபடும் மெய்யடியார்கள் பொருட்டுப் பல அருட் கோலங்களைக் கொண்டருளினார். சிவபெருமான் எடுத்தருளிய அருள்வடிவங்களுள்ளே சைவசமயிகளால் முதலாக வைத்துப் போற்றப்படும் வடிவம் விநாயக வடிவமேயாகும். சைவசமயிகள் எத்தொழிலைச் செய்யத் தொடங்கும்பொழுதும் விநாயகக் கடவுளையே முதலில்  வழிபட்டுத் தொடங்குகிறார்கள். விநாயகக் கடவுளை வழிபட்டுத் தொடங்கும் எக்கருமமும் இடையூறு தீர்ந்து இனிது முடியும் என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. இந்த நம்பிக்கையைச் சைவர்கள் தொன்றுதொட்டுப் பின்பற்றிவருவது கண்கூடு.
    வக்கிரதுண்ட விநாயகர். 
    சிந்தாமணி விநாயகர்.
    கசானன விநாயகர்.
    விக்கின விநாயகர்.
    மயூரரேச விநாயகர்.
    பாலசந்திர விநாயகர்.
    தூமகேது விநாயகர்.
    கணேச விநாயகர்.
    கணபதி விநாயகர்.
    மகோற்கட விநாயகர்.
    உருண்டி விநாயகர்.
    வல்லபை விநாயகர்
    வல்லாள விநாயகர்.
    வீரகத்தி விநாயகர்
    வலம்புரி விநாயகர் ஆகியவை விநாயகப்பெருமானின் அருட் கோலங்களாகும்.
விநாயகப் கடவுள் ஒரு கொம்பும். இரு செவியும். மூன்று கண்களும். கங்கையையும் பால சந்திரனையுந் தாங்கிய சிவந்த சடையும். யானை முகமும். ஐந்து கரங்களும் பேழை வயிறும். இரண்டு திருவடிகளும் உடையவராகச் சிந்திக்கப்படுவர். அவருடைய ஐந்து திருக்கரங்களுள் ஒன்றிலே பாசமும் ஓன்றிலே கொமபும் ஒன்றிலே மோதகமும் பொருந்தியிருக்கும். ஒன்று துதிக்கையாக இருக்கும்.
    யானைமுகம் ஓங்கார மந்திரப் பொருளாயுள்ளவர் என்பதையும்.
    செஞ்சடை எல்லா ஞானப் பொருளாயுமுள்ளவர் என்பதையும்.
    கங்கையை அணிந்தமை “நான்” “எனது” என்னும் செருக்கறுத்து உயிர்களைத் தாங்குபவர் என்பதையும்.
    திங்களை அணிந்தமை தம்மை அடைந்தவர்களை அல்லற் புணரியினின்றும் தூக்கி ஆட்கொண்டு அவரைப் பிறரெலாம் வணங்குமாறு உயர்த்தி வைப்பவர் என்பதையும்.
    கொம்பு மல வலியைக் கெடுக்கும் அருளாற்றல் உடையவர்  என்பதையும்.
    பாசம் எங்குஞ் செறிவுடையவராயிருந்து இருவினை இன்ப துன்பங்களைச் சேர்த்தவைத்துப் பருவகாலத்தில் ஊட்டுவிப்பவர்  என்பதையும்.
    அங்குசம் இருண்மலத்தின் எண்ணிறந்த சக்திகளை அடக்கிக் காப்பவர் என்பதையும்.
    மோதகம் உயிர்களுக்கு மலப் புணர்ப்பால் வரும் முனைப்பாகிய பசு போதத்தைக் கவளமாக ஏந்தி உண்டு அவைகளுக்குப் பேரருள் செய்பவர் என்பதையும்.
    பேழை வயிறு சொல்லும் பொருளும் ஆகிய இருவகை உலகமும் மூவகை மாயையினின்றும் தோன்றி ஒடுங்கச்செய்யும் முழுமுதல்வர்  என்பதையும்.
    துதிக்கை விந்துநாத வடிவினர் என்பதையும்.
    திருவடிகள் பொய்யறிவை நீக்கி மெய்யறிவைக் கொடுப்பவர் என்பதையும் உணர்த்துவனவாம். 
சிவபெருமானுக்கு உமாதேவியார் திருவருட்சத்தியாக இருத்தல்
போல விநாயகக் கடவுளுக்கும் சித்தி புத்தி வல்லபை என்னும் மூவரும் திருவருட் சத்திகளாவர். விநாயகப் பெருமானிடத்து நீங்காது விளங்குகின்ற திருவருளே இங்ஙனம் மூவகைப் பெயர்பெற்றது. இம்மூன்று சத்திகளும்  தொழில் வடிவங்களாய்  விநாயகப் பெருமானுடன் இரண்டறக் கோவைபட்டுக் கலந்துநின்று உயிர்களுக்கு அருள்புரிந்து வருவன. அவ்வருள் வடிவங்களை வழிபடுதலும் சிவபெருமானை வழிபடுதலும் ஒன்றேயாகும் என்பது மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியரின் முடிபு.
மறைந்திருந்த திருமுறைகளை  நம்பிஆண்டார் நம்பி அவர்களுக்குத் திருவருளால் உணர்த்தியது விநாயகப் பெருமான் என்பதற்குப் பொருத்தமாக சத்தி மிக்க வலம்புரி விநாயகர் முன்னிலையில் நாயன்மார்களின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டமை விசேடமாகக் கருதப்படுகிறது.
திருக் குடமுழுக்கின் பாவனை –
இறைவனுக்குத் திருமுழுக்காட்டுதல் இப்பெருமான் உயிர்களைப் பீடித்திருக்கும் மலங்களைச் சுத்திசெய்யும் பாவனையாம். இறைவனுக்கு எண்ணெய் பால் தயிர் நெய் இளநீர் தேன் முதலிய பொருள்களால் திருமுழுக்காட்டுவது இவ்வுலகில் இம்மையில் புகழையும் உடல் நலத்தையும் தருவதுடன் மறுமையில் பல புண்ணியப் பலன்களையும் தரும் என்று சைவாகமங்கள் சொல்கின்றன.

பல வழிகளினாலும் சைவ சமய வளர்ச்சிக்கு மாபெருந் தொண்டாற்றியும் தூய்மையான மனித வாழ்க்கைக்கும் ஆன்மீக ஈடேற்றத்திற்கும் வழி சமைத்ததோடு அருள்கமழும் மதுரத் தேனாமிர்தமாய திருமுறைகளையும் எமக்குத் தந்தருளிய நாயன்மார்களை நினைவு கூர்ந்து அன்னாருக்குத் திருவுருவச் சிலைகளை அமைத்து வணங்கிவர எண்ணி ஒற்றுமையாகத் தெய்வ சிந்தனையுடன் திருவருள் முன்னிற்கச் செவ்வனே செயலாற்றிய கோயில் நிர்வாக சபையினரை வாழ்த்துவோமாக!.

                   

                  ( பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.)      


No comments: