நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை (கவிதை) வித்யாசாகர்!


.

வ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
வந்துவிழுந்தது அவரின் மரணம்..
மரணம்; பெரிய மரணம்
இல்லாதுப் போவது மரணமா?
பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
அவர்களென்ன பிணமா?
பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?
உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை
பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு
கணவன் போனதற்கு நிகராக
பூவும் பொட்டும் போகும் கணம்
இன்னொரு மரணமென்று எண்ணி
அவளுக்காக நானுமழுதேன்;
என் கண்ணீரும்
அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;
சுடட்டும் சுடட்டும்
சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்
அதன்பின் -
விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
பூவை அறுத்துக்கொள்வாள்..
உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,
அது; அவளது உரிமை!!

No comments: