"இனி அவன்.". இலங்கை தமிழ் சினிமா





விரைவில் திரையிடப்படவுள்ள " இனி அவன்.." நம்நாட்டுத் திரைப்படம்



இலங்கை தமிழ் சினிமாவில் 29 ஆவது திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'இனி அவன்'. இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த திரைப்படமாக நடுவர் குழாமால் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கான்ஸ் -2012 திரைப்பட விழா மற்றும் ரொரண்டோ திரைப்பட விழா -2012 உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இனி அவன் திரைப்படம் திரையிடப்பட்டு சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

முன்னாள் போராளி ஒருவர் சமூகத்துடன் இணையும் கதைக்கருவை மையமாக வைத்து உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் இலங்கை முழுவதும் சிங்கள உபதலைப்புக்களோடு 25 இற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

இந்தத்திரைப்படத்தில் தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், கிங் ரட்ணம், மல்கம் மசாடோ, பெர்மினஸ், மகேஸ்வரி ரட்ணம் உட்பட நம்நாட்டுக் கலைஞர்கள் பலர் நடித்திருக்கின்றனர். மேலும், ஒளிப்பதிவு - சண்ண தேசபிரிய, இசை - கபில பூகல ஆராச்சி, ஆகியோர்களோடு உதவி இயக்குனர்களாக வதீஸ் வருணன் மற்றும் திருஞானம் தர்மலிங்கம் ஆகியோர் பணிபுரிந்திருக்கின்றனர்.

இயக்குனர் ஹந்தகம இதற்கு முன்னரும் "இவ்வழியால் வாருங்கள்" மற்றும் "கிழக்கு கரையின் அழைப்பு" என்ன இரு தொலைக்காட்சி நாடகங்களை தமிழில்; 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








நன்றி வீரகேசரி 

No comments: