இலங்கைச் செய்திகள்

.
சீரற்ற காலநிலையால் 11 பேர் பலி: 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வடகிழக்கு தமிழ் அதிகாரிகளின் 'மௌனவிரதம்'

சந்தர்ப்பவாத அரசியலை மற்றொருமுறை தோலுரித்துக் காட்டிய குற்றப் பிரேரணை
எம்.எஸ்.எம்.ஐயூப்
நாடு(நட்டுக்)கழண்ட தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- 2
அருளம்பலம்.

சீரற்ற காலநிலையால் 23 பேர் பலி : 36 பேர் காயம்

செம்மணி, சூரியகந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தும் மாத்தளை எலும்புக்கூடுகள்

வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் அதிக சேதம்: பணிச்சங்கேனி பாலமும் சேதம் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு

யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது

14 வயது சிறுமி கர்ப்பம்: சந்தேகத்தில் 42 வயதுடைய நபர் கைது

 சிலாபத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வுசீரற்ற காலநிலையால் 11 பேர் பலி: 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 ஆயிரத்து 202 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 11 பேர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்தும் 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலையால் ஹம்பாந்தோட்டை மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1515 குடும்பங்களைச் சேர்ந்த 7933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மாத்தளை மாவட்டத்தில் 1528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி  

வடகிழக்கு தமிழ் அதிகாரிகளின் 'மௌனவிரதம்'
- பீமன்.
tamil-women-army -5தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் பெயருடன் ஆரம்பிக்கப்கப்பட்ட ஆயுதப்போராட்டம் அதே தமிழ் மக்களை வாட்டி வதைத்ததற்கு  ஆயுதங்களை தமது கைகளில் தூக்கியவர்களின் கட்டாக்காலித்தனாமான செயற்பாடுகள் மற்றும் அதனை தூண்டிய அரசியல்வாதிகளின் கபடத்தனமான போலிவேடங்கள்  எந்தளவுக்கு காரணகர்த்தாவாக இருந்ததோ அதே அளவுக்கு வடகிழக்கு பிரதேசங்களிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றுச்சென்ற தமிழ் அரச அதிகாரிகளினதும் பங்களிப்பும் இருந்திருக்கின்றது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்ட அதிகாரிகள் சுயநலப்பேய்களாக இருந்திருக்கின்றார்கள் இன்றும் இருக்கின்றார்கள். தமது கடமைகளை நிமிர்ந்து நின்று துணிச்சலுடனும் மக்கள் நலன்சார்ந்தும் செய்வதற்கு மாறாக அரசியல்வாதிகளிடமும் இயக்கங்களிடமும் தமது கடமையை கையளித்துவிட்டு இலங்கை அரசாங்கத்திடமிருந்து மாதமுடிவில் வரும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மனச்சாட்டியை அடகு வைத்துவிட்டு கடமைநேரங்களில் மாற்று வழிகளிலும் திரவியம் தேடும் செயல்களில் இறங்கியிருந்திருந்தார்கள், இருக்கின்றார்கள். இது வியாபாரமாக , வீட்டுத்தோட்டமாக, வெள்ளாண்மையாக பல்வேறு வழிகளில் இருந்திருக்கின்றது, நடைமுறையிலும் உள்ளது. 

இவர்களது இந்த பொறுப்புணர்சியற்ற போக்கும் மாற்றான் கைப்பிள்ளை சிந்தனையும் தமிழ் இயக்கங்கள் தாம் நினைத்த யாவற்றையும் நாடத்தி முடிக்க வழிவிட்டு கொடுத்ததுடன் அதற்கு தமிழ் ஊடக அடிவருடிகள் தம்மால் முடிந்த யாவற்றையும் செய்து கொடுத்திருக்கின்றார்கள், செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இதற்குள்தான் இன்று கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து தமக்கு ஒளிமயமான எதிர்காலமொன்றை தேடி சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்கள் விபச்சாரிகள் என்ற பட்டம் சூட்டப்பட்ட கதையும் அடங்குகின்றது. இப்பெண்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வாதாரமற்று தொழில்தேடி அலையும்போது ஏறெடுத்து பார்த்திராத தமிழ் அரசியல்வாதிகளும் , ஊடகங்களும் இணைந்து அவர்களை விபச்சாரத்தொழிலுக்காக சென்றிருக்கின்றார்கள் என்றபோது நிலைமைகளை நன்கு அறிந்திருந்த , அவற்றுக்கு தொழில்ரீதியாக தேவையான ஆவணங்களையும் சிபார்சுகளையும் வழங்கியிருந்த அதிகாரிகள் கண்மூடி குருடர்களாகவும், காதுகளை பொத்திக்கொண்டு செவிடர்களாகவும் இருக்கின்றார்கள்.

குறித்த பெண்களில் 15 பேர் தீவிர மன அழுத்தங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, எவ்வித கருணைகாருணியமும் அற்று தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவ்யுவதிகள் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதற்கு தேவையான மருந்துவகைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இல்லாத நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தாராம் என்று வேறு செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.

இச்செய்தியின் உண்மைத்தன்மைதனை அறிந்து கொள்வதற்காக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நுவன் வணிகசேகரவை கடந்த 14ம் திகதி தொடர்பு கொண்டேன். இராணுவத்தில் இணைந்து கொண்ட 15 யுவதிகள்  கிளிநொச்சி வைத்தியசாலையில் 10ம்  திகதி திங்கட்கிழமை அனுதிக்கப்பட்டதையும் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்டும் 13ம் திகதி வியாழக்கிழமை பயிற்சித்தளம் திரும்பியதையும் உறுதி செய்த அவரிடம் நோயின் தன்மை பற்றிக்கேட்டபோது அதற்கான பதிலினை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

நோயின் தன்மை பற்றி இராணுவப் பேச்சாளரிடம் கேட்கச் சென்று மூக்குடைபட்ட வேதனையுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அத்தியட்சகர் கார்த்திக் அவர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி குறித்த யுவதிகளின் நிலைமைகள் குறித்து வினவினேன்.

எங்களுக்கு தனிப்பட்ட நோயாளிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரம் கிடையாது எனவும் விபரங்களை பெறவேண்டுமாயின் சுகாதார அமைச்சின் செயலாளரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.

இது தனிப்பட்ட ஒரு நோயாளியின் விடயமல் அல்ல, இவ்விடயம் தொடர்பில் பல்வேறு வகையான ஊடகங்கள் பல்வேறு வகையான செய்திகளை வெளிக்கொண்டுவந்துள்ள நிலையில் நீங்கள் மௌனம் காப்பது அவ்வாறான செய்திகளுக்கு மறைமுகமாக உதவுதாக அமைகின்றது என தகவல் அறியும் உரிமையை சற்று அழுத்தியபோது, குறித்த யுவதிகளுக்கு சிகிச்சை அளித்த வைத்திய நிபுணரை தொடர்பு கொண்டால் அறிந்து கொள்ளலாம் எனக்கூறிய அவர் டாக்டர் சிவதாசஸ் ன் தொடர்பு இலக்கத்தை தந்து கழுவிய மீனில் நழுவிய மீனானார்.

 மனோவியல் நிபுணரான  டாக்டர் சிவதாஸ் அவர்கட்கு தொடர்பினை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்களின் எவ்வாறான நோய்க்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற தகவலை அறிய முற்பட்டபோது இங்கு குற்றஞ்சுமத்தப்படுகின்ற அனைத்து அதிகாரிகளிடத்துமிருந்து வேறுபட்டவராக காணப்பட்டார்.

நிலைமை தொடர்பில் முழுமையான விபரத்தினை தரமுடியும். ஆனால் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு பஸ்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன். பின்னணியில் சத்தமாக உள்ளது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையாயின் என்னால் கூறமுடியும் என்றதுடன்  தொடர்ந்து நிலைமைகளை விளக்கினார். அதன் இணைப்பு இங்கே உள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=V6jq25MtLHE

விடயங்கள் திரிபு படுத்தப்படுகின்றபோது நமிட்டு சிரிப்புடன் குளம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் அதிகாரிகள் மத்தியில் இவ்வாறனவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட தயங்கவில்லை.

குறித்த பெண்கள் எவ்விதமான பாலியில் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர் அப்பெண்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் எனத் தங்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்குங்கள் என வைத்தியரிடம் கேட்டதாகவும் கூறினார். மேலும் மேல் மனம் , ஆழ் மனம் என்கின்ற இரு மனங்களுக்குமிடையே ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாகவே இவர்கள் மன உளைச்சல் நோய்க்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்றார்.

அதாவது  இலங்கையிலே நிரந்தர வருமானமற்ற பெண்ணொருவருக்கு இன்று வாழ்கைத்துணை என்பது எட்டாக்கனியாகவே உள்ளதான நிலையில் தொழிலொன்றை தேடி அதனூடாக சிறந்த வாழ்கை, திருமண பந்தம் என்ற  எதிர்பார்ப்புக்களுடன் இராணுவத்தில் இணைந்த அவர்களை ஒரிரு மாத காலங்களுள் பாலியல் தொழிலாளிகள் என வர்ணித்ததன் ஊடாக அவர்களது வாழ்கை கேள்விக்குறியாகிவிட்டது என ஏற்பட்ட உள்மன முரண்பாடுகளினூடாகவே இந்த நோய் இவர்களை பாதித்திருக்கவேண்டும் என்ற நிலைக்கு வைத்தியரின் விளக்கத்தினூடாக வரமுடிகின்றது.

எனவே இவர்கள் இந்நோய்கு ஆளானமைக்கான முழுப்பொறுப்பையும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் இந்நோயினால் நிரந்தராமாக பாதிக்கப்படுவார்களாயின் அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான பராபரிப்பு செலவிலிருந்து உரிய நஷ்டஈட்டினையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறிதரன் செலுத்தவேண்டும்.

மேலும் சிறிதரன் போன்றோரது விஷமத்தனங்களை முறியடிப்பதற்கு கடந்தகால அதிகாரிகளைப் போல் அல்லாது துணிவுடன் செயற்பட்ட டாக்டர் சிவதாஸ் போன்று சகல அதிகாரிகளும் உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரும்போது, ஊடகங்களின் விஷமப்பிரச்சாரங்களும் முறியடிக்கப்படும்.

இதற்கு ஏதுவாக இலங்கை அரசும் உடனடி நடைமுறை ஒன்றை கொண்டுவரவேண்டும். அதாவது வடகிழக்கில் உள்ள சகல அரச நிறுவனங்களிலும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் ஊடக பேச்சாளர்களை நியமிக்கவேண்டும். அப்போது உத்தியோகபூர்வமான உண்மைச்  செய்திகள்  மக்களைச் சென்றடையும். அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினது பொய்பிரச்சாரங்கள் வெறுமனே காற்றில் பறக்கும்.

 நன்றி தேனீ 

 

 

 

சந்தர்ப்பவாத அரசியலை மற்றொருமுறை தோலுரித்துக் காட்டிய குற்றப் பிரேரணை
எம்.எஸ்.எம்.ஐயூப்
Shirani-Bandaranayakeபிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையானது முதலாவதாக எதிர்க்கட்சிக்கே தேவைப்பட்டது என்றும், அவர்களே இதனை ஆரம்பித்தார்கள் என்றும், இப்போது அவரை பாதுகாக்க முன்வந்து இருப்பதும் அந்த எதிர் கட்சிகளே என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். அதனை அடுத்து இப்போது அரச ஊடகங்களும் ஜனாதிபதி கூறியதை இடைவிடாது கூறிக் கொண்டு இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் தேசிய சேமிப்பு வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில முறைகேடுகள் தொடர்பாக அப்போது அவ்வங்கியின் தலைவராக இருந்த பிரதம நீதியரசரின் கணவர் பிரதீப் காரியவசமுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய எதிர்க்கட்சிகள், கணவர் அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருக்கும் நிலையில் பிரதம நீதியரசரும் தமது பதவியில் இருப்பது நாகரிகமல்ல என்று வாதிட்டனர். ஜனாதிபதி அதனை தான் இங்கு நினைவூட்டியிருக்கிறார்.

அன்று பிரதம நீதியரசருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று அவரை பாதுகாக்க முன்வந்துள்ளனர் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி இதனை கூறியிருந்தால் அது சரி தான். ஆனால், குற்றப் பிரேரணை மூலம் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அப்போதும் கூறவில்லை. பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் என்றே தாம் அப்போது கூறியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.

குற்றப் பிரேரணை மூலம் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதும் அவர் ராஜினாமா கெய்வதும் பாரிய வித்தியாசமுள்ள இரண்டு விடயங்களாகும். குறிப்பாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலம் விசாரணை நடத்தி, நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யும் இலங்கையிலுள்ள முறையும் அவர்கள் ராஜினாமாச் செய்வதும் எவ்வகையிலும் ஒன்றல்ல.

அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொள்கிறார்கள் என்று தான் ஜனாதிபதி கூற வருகிறார் என்றால் அது முற்றிலும் உண்மை மட்டுமல்ல, அது அவரது கட்சிக்கும் பொருத்தமான உண்மையாகும். பிரதம நீதியரசரின் விடயத்தை மீண்டும் எடுத்துக் கொண்டால், ஆறுமாதத்திற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் - கலாநிதி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்பதைப் போல் கருத்து வெளியிட, அவர் குற்றமற்றவர் என்பதைப் போல் அரசாங்கம் கருத்து வெளியிட்டது. இப்போது இருசாராரும் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்களுக்கு எதிரான குற்ற விசாரணை முறை தொடர்பிலும் இரண்டு கட்சிகளும் நேரத்திற்கு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அதனையும் அரசியல் கண் கொண்டே பார்க்கின்றனர். 1984ஆம் ஆண்டு அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குற்றப் பிரேரணையொன்று கொண்டு வந்தபோது தான் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலம் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறை முதன் முதலாக விவாதத்திற்கு வந்தது.

அப்போது ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அந்த விசாரணை முறையில் எவ்வித தவறும் இல்லை என்று மட்டுமல்ல அது தான் உலகிலேயே சிறந்த முறை என்பதைப்போல் கருத்து வெளியிட்டது. அது இயற்கை நியாயத்திற்கு முறணானது என்று அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்களும் கூறின. இப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கே குற்றப் பிரேரணை தேவைப்பட்டுள்ளது. எனவே அக் கட்சினர் அந்த விசாரணை முறை சட்டபூர்வமானது என்றும் அது சரியென்றும் கூறுகின்றனர். ஐ.தே.க. அது இயற்கை நியாயத்திற்கு முறணானது என்கிறது. இந்த விசாரணை முறை இயற்கை நியாயத்திற்கு முறணானது என்பதால் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுள்ளார். அது நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்பட முடியாதது என்றும் அது இலங்கையின் சட்டத்தில் இல்லாதது என்றும் ஐ.தே.குவிற்குத் தெரியும்.
shirani-10
நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வாசகமொன்றை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு நகல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது இதே ஐ.தே.க.வினர் அதன் பிரதிகளை நாடாளுமன்றத்திலேயே தீக்கிரையாக்கினர். அன்று அதனை ஆதரித்த சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட முடியாது என்கின்றனர்.

அன்று ஐ.தே.க. அந்த அரசியலமைப்பு நகலை நாடாளுமன்றத்திலேயே தீக்கிரையாக்கக் காரணம் நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வாசகம் அல்ல. அந்த அரசியலமைப்பு நகலில் இருந்த இனப் பிரச்சினைக்கான தீர்வே அதற்கு முக்கிய காரணமாகியது.

இனப் பிரச்சினைக்கான அந்த அரசியல் தீர்வு சமஸ்டி முறையிலானதாக அமைந்து இருந்தது. அதனாலேயே ஐ.தே.க. அதனை அன்று எதிர்த்தது. ஆனால் அதே ஐ.தே.க. அதற்கு ஒன்றரை வருடத்திற்கு பின்னர் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வைத்து இனப் பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வு காண்பதென புலிகள் அமைப்புடன் இணக்கத்திற்கு வந்தது.

அன்று குமாரதுங்கவோ அவரது கட்சியோ அந்தத் தீர்வை எதிர்க்கவில்லை. தாம் 2000ஆம் ஆண்டிலேயே சமஸ்டித் தீர்வை முன்வைத்ததாகவே குமாரதுங்க அப்போது கூறினார். ஆனால் அவரது கட்சி இன்று அந்தத் தீர்வு நாட்டைக் காட்டிக் கொடுத்த தீர்வு என கண்டிக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொள்கிறார்கள் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்று இனப் பிரச்சினை விடயத்திலென்றால் முற்றிலும் உண்மையாகும். பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது ஐ.தே.க.வினர் அதனை எதிர்த்தனர். 1966ஆம் ஆண்டு டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இடதுசாரிகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அதனை எதிர்த்தனர்.

1980ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முழு மனதோடில்லாவிட்டாலும் அதிகார பரவலாக்கல் முறையை ஏற்றபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அதனை எதிர்த்தனர். அதனடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் எதிர்த்தனர். ஜனாதிபதி ஆர்.பிரேமதாச - புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர்.

ஆனால், அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சில இடதுசாரி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்து புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். அப்போது ஐ.தே.கவினர் பேச்சுவார்த்ததைகளை எதிர்க்காவிட்டாலும் பேச்சுவார்த்தைகளுக்காக செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையையும் பேச்சுவார்த்தை நடத்தும் முறையையும் எதிர்த்தனர். பின்னர் ஜனாதிபதி குமாரதுங்க 1995ஆம் ஆண்டிலும் 1996ஆம் ஆண்டிலும் முன்வைத்த தீர்வுத் திட்டங்களையும் எதிர்த்தனர்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதி குமாரதுங்க புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் புலிகளுக்கு நாட்டில் ஒரு பகுதி தாரைவார்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. 2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்து அந்த போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றி தாமும் புலிகளுடன் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டது. அப்போது 1994ஆம் ஆண்டு புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இதோ ஐ.தே.க. நாட்டில் ஒரு பகுதியை புலிகளுக்கு தாரைவார்த்துவிட்டது என்று கூச்சலிட்டது.

இவ்வாறானதோர் வரலாறு தான் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. எனவே நேரத்திற்கு ஒரு கொள்கையை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு கட்சிக்கு மட்டும் எதிரானதாக கருத முடியாது.

அதேவேளை இந்த வாதத்தின் மூலம் தற்போதைய குற்றப் பிரேரணையின் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறை நியாயமானது என்றோ, எதிர்க் கட்சியின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இந்தக் குற்றப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது என்றோ கூற முடியாது.
நன்றி: தமிழ்மிரர்
நன்றி தேனீ

 

 

நாடு(நட்டுக்)கழண்ட தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- 2
NTTE-2அருளம்பலம்.
30ம் திகதி அதிகாலை அனைத்து நா.க.த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று புதிய இடத்தில் அமர்வு நடைபெற உள்ளது. உங்கள் பல வர்ண உடுப்புகளை அணியாது அதை ஒரு பையில் போட்டு சாதாரண உடுப்புகளுடன்  தயாரா இருங்கள் ஆனால் எங்கு சந்திப்பது என்று விரைவில் அறியத் தருகிறோம்” என்ற கட்டளையுடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படட்டது. எங்கு? எப்போ? என்ற கேள்வியை தமக்குள் கேட்டபடி தயாரான நா.க.தவினருக்கு அடுத்து ஒரு கைத்தொலைபேசி குறுஞ்செய்தி வந்தது. நீங்கள் எத்தனை மணிக்கு எங்கு சந்திப்பது என்ற விபரம் அடுத்த குறுஞ்செய்தியல் தரப்படும் என சுருக்கமாக இருந்தது. இந்த சமயத்தில் கடந்த கட்டுரையில் வந்த சில தகவல்களில் உள்ள புலனாய்வை குறைபாடுகளை இங்கு நான் தெளிவு படுத்துகிறேன்.
நா.க.தவினரை நெடியவன் குழு நேரடியாக உள்வாங்கவில்லை. அனால் மறைமுகமாக நா.க.தவலில் நெடியவனுக்கு சார்பான வல்வெட்டித்துறை குழு மூலமாகவே நெடியவன் குழு நா.க.தவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். என்ன ஒரு குழுவுக்குள் ஒரு குழுவா?  என்று நீங்கள் அங்கலாய்க்கலாம். புலிகள் இயக்கம் 2009இல் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அதில் நெடியவன் - உருத்திரகுமார் - கே.பி -  விநாயகம் - அப்துல்லா – அன்னமக்கா - சொர்ணமக்கா  குழு என பல குழுக்கள் தினம் உதயமாகியபடி உள்ளது. இந்த குழுக்களுக்குள்ளும் பல உள் குழுக்கள் உருவாகி வருகின்றது.  இந்த உருத்திரகுமார் குழுவிலும் நெடியவன் சார்பு குழு ஒன்று உள்ளது. அந்த நெடியவன் சார்பு குழுவுக்குள் தான் இந்த வல்வெட்டித்துறை குழுவும் உள்ளது. இந்த குழுதான் கொமாண்டோ பாணியில் 2ம் நாள் பாராளுமன்ற அமர்வை நடாத்த பெறுப்பெடுத்தனர்.
இந்த குழுக்கள் தமக்குள் அடி பட்டதில் நா.க.த பற்றிய பல நகைப்புக்கிடமான தகவல்கள் வெளியாகியுள்ளது. நா.க.தவின் லண்டன் குழு ஆரம்பம் முதலே பல உட் குழுக்களின் அடிபாடு களம் கண்டது. அனால் அண்மையில் ஒரு விசித்திரமான ஒரு  முரண்பாட்டால் அதில் இன்னுமொரு பிரிவும் உருவாகியுள்ளது. அதன் இந்த பிளவிற்குமான முக்கிய காரணம் கறவைமாடு கேற்(ஊழல்)! உங்களில் பலருககு் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி நிக்சனின் சரிவிற்கு காரணமாக இருந்த வோட்டர் கேற் ஞாபகம் இருக்கலாம்! அனால் நா.க.தவின் இந்த  கறவைமாடு ஊழல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி நிக்சனின் வோட்டர் கேட்டையே ஓரங்கட்டி விட்டது.
 நா.க.தவினர் வெறும் பேச்சு வீரர்கள் இதுவரை  முன்னாள் போராளிகள் குடும்பத்திற்கோ அல்லது மாவீரர் குடும்பங்களுக்கோ குறைந்த பட்சம் ஒரு தும்புத்தடி கூட வாங்கி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வந்தது. தாங்கள் ஏதாவது செய்து அந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நா.க.தவின் உள்ள லண்டன் குழுவுக்குள் உள்ள ஒரு குழு முடிவு செய்தது. மிக நீண்ட  ஸ்கைப் தொலைபேசி கருத்தரங்குகள் மற்றும் நா.க.த மந்திரிமார்களின் பல்வேறுபட்ட மந்திராலோசனையின் பின் வன்னியில் உதவி தேவைப்படும் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு தலா ஒரு கறவை மாடு வாங்கி கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. நா.க.த பிரதமர் திரு உருத்திரகுமாரன் இதை மிக அவதானமாக பரிசீலித்து விட்டு கறவை மாட்டு திட்டத்திற்கு பச்சைக் கொடியும் காட்டினார். நா.க.த அரசும் உடன் இதற்கு பத்தாயிரம் பவுண் காசை ஒதுக்கினர். பெண்கள் சம்பந்தமான பெணமணி அமைச்சருக்கு கறவை மாடு திட்ட பணி ஒதுக்கப்பட்டது. இந்த அமைச்சரின் கணவர் ஏற்கனவே பிரபலமானவர். லண்டன் வடக்கு பகுதியல் முக்கியமாக ஹரோ பகுதியில் புலிகளுக்கு நிதி திரட்டியவர். இறுதி யுத்தத்தில் வணங்கா மண்ணிற்கும் பணம் சேர்த்தவர். இவர் கறவை மாடு என்றால் மட்டும் சும்மா விடுவாரா தானும் அதிலை கொஞ்சம் கறப்பம் என்று களத்தில் இறங்கி கறவை மாட்டு திட்டத்திற்கு நிதி சேகரிக்க ஆரம்பித்தார்.
சில மாதங்களின் பின் நிதியமைச்சர் பத்தாயிரம் பவுண்களை பெண்கள் அமைச்சருக்கு கொடுத்து கறவை மாடு வங்க சொல்லியதாகவும் அதனை அடுத்து அம்மணியும் கறவை மாடுகள் வாங்கி கொடுத்து விட்டதாகவும் ஸ்கைப்பில் நடைபெற்ற கறவை மாட்டு திட்ட அமூலாக்க நிகழ்வில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. இது போராளி குடும்பத்திற்கு பண வருவாய் கொடுப்பதுடன் வன்னி மக்களின் பால் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று “பவர் பொயின்ற் பிறசன்றேசனும்” வீடியோ படமும் ஸ்கைப் ஊடாக காட்டப்பட்டது. பிரதமர் உருத்திராவும் இதை வெகுவாக பாராட்டியதுடன் தமிழீழம் கிடைத்ததும் பாலுக்கு குறையிருக்காது பால் ஏற்றுமதியால் தமிழீழம் தன்னிறைவு பெற்று விடும் என அனைவரையும் பாராட்டி ஒரு ஸ்கைப் அறிக்கையை விட்டார். இது நடந்து சில நாட்களின்  பின் கணக்கு வழக்கு அதாவது நா.க.தவின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த கறவை மாடு பற்றிய வரவு செலவு கணக்கை  காணவில்ல. இது சம்பந்தமாக சில உறுப்பினர்கள் கேள்வி கேட்க அது இயக்க ரகசியம். பொட்டம்மான் வந்து கேட்டால் ஒளிய யாருக்கும் கணக்கு தர முடியாது என நிதியமைச்சரும் பெண்கள் அமைச்சரும் அடித்து கூறிவிட்டார்கள். வாங்கிக் கொடுத்தது கறவை மாடா அல்லது நலமடித்த நாம்பன் மாடா என்ற தகவல் கூட தெரியவில்லை.  பாதுகாப்பு காரணங்களுக்காக கணக்கு பதியவில்லை என்றும்  இலங்கை புலனாய்வு துறை கறவை மாடுகளை மணந்து பிடித்து வெள்ளை வானில் கடத்தி விடுவார்கள்  அதனால் பயனாளிகளுக்கு மட்டுமல்ல தாம் வாங்கி கொடுத்த கறவை மாடுகளுக்கும்  உயிர் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக இரு அமைச்சர்களும் வாதாடியுள்ளனர். நீங்கள் என்ன கறவை மாடு வாங்கி கொடுத்தீர்களா அல்லது கண்ணிவெடி மாடு வாங்கி கொடுத்தீர்களா என ஆத்திரத்தில் சில உறுப்பினர்களால் கேட்க இயக்க ரகசியம் சொல்ல முடியாது என சிம்பிளாக தட்டிக்கழிக்கப்பட்டது. வாங்கி கொடுத்தது கறவை மாடு தானே இதனால் இலங்கை பாதுகாப்புக்கு என்ன பிரச்சனை வந்துவிடும்? என்ற கேள்விக்கு அமைச்சர்கள் அது மிகத்துல்லியமான நா.க.த அரசின் கறவை மாட்டு பாதுகாப்பு தகவல் அதை நாம் இங்கு கூற முடியாது என மறுத்து விட்டனர்.
கேள்வி கேட்டவர்கள் நா.க.தவின் செயலாளரிடம்  நிதி அமைச்சர் வங்கி கணக்கில் இருந்து என்ன பெயரில் கறவை மாட்டு பாத்தாயிரம் பவுண்கள் பதியப்பட்டுள்ளது என வினவிய போது. அப்படி ஒரு பரிமாற்றமே வங்கி கணக்கில் இருந்து நடைபெறவில்லை என பதில் கூறப்பட்டது.  சரி கறவை மாடுகள் ஆகாயத்தில் இருந்து வந்ததாகவே இருக்கட்டம் கறவை மாடுகள் எவ்வளவு பால் கறக்கிறது என்று அறிய என்று கறவை மாடு பயனாளிகளிடம்  விசாரித்த போது அவர்கள் ஆச்சரியத்துடன் கறவை மாடுகளா? எங்களுக்கு  கட்டாக்காலி மாடுகளை அல்லவா கொண்டு வந்து தந்தார்கள் என்று புலம்பியுள்ளனர். அதிலும் ஒரு குடும்பத்திற்கு கொடுத்த மாட்டின் முன்கால்கள் சவண்டு நிற்க பின்னங்கால் இரண்டும் மட்டுமே வலுவானதாம். அத்துடன் அந்த மாட்டுக்கு மடியில் 3 முலைக்காம்புகள் மட்டுமே உள்ளதாம். பால் கறக்க மடியிலை கைவைத்தால் குங்பூ ஸ்ரைலிலை அது பின்னங் காலாலை அடிக்குதாம். தங்கடை குடும்பத்தையே பார்க்க கஸ்டமான நிலையில் ஒரு பிரியோசனமும் இல்லாத கட்டாக்காலி மாட்டை பாக்கிற செலவு வேறு என்று ஆத்திரத்தில் அவர்கள் ஒப்பாரி வைத்துள்ளனர்.  இதான் நா.க.தவின் கறவைமாடு கேற் விவகாரம். இந்த “கறவை மாடு கேற்” பற்றி கேள்வி கேட்ட ஒரு பகுதியினர் தற்போது  நா.க.தவில் இருந்து லேட்டஸ்ற்றாக ஓரம் கட்டப்பட்டார்கள். இந்த ஓரங்கட்டப்பட்ட குழுவும் லண்டன் பாராளுமன்ற  அமர்வு நடைபெறுவதை தடுக்க தம்மால் ஆன பல பங்களிப்பை செய்தார்கள்.
நா.க.த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஏன் உதவி பிரதமர்கள் எல்லாரும் 30ம் திகதி காலை 5 மணிக்கே ரெடி. யாவரும் உடுத்து படுத்தி கார்களில் ஏறி இருந்து புதிய இடம் பற்றிய கட்டளைக்கு காத்திருந்தனர். சில மணி நேரத்தின் பின் எதிர்பாரத்த கைத்தொலைபேசி குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்த அனைவருக்கும் பெரிய ஆச்சரியம்.  எல்லோரையும் வெம்பிலிக்கு அருகாமையில் உள்ள ஹங்கர் லேனில் உள்ள ஜீ.ரீ.வி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வரச்சொல்லியிருந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி. என்ன எமது அடுத்த 2ம் நாள் அமர்வு தொலைக்காட்சி ஸ்ரூடியோவிலா என்று தமக்குள் குழுக்கள் குழுக்களாக கைத்தொலைபேசியில் விவாதத்தை ஆரம்பித்தனர். தொலைபேசியில் கதைத்த படியே அனைவரும் ஹங்கர் லேன் நோக்கிய தமது முன்நகர்வை மேற்கொண்டனர்.
ஹங்கர்லேனிற்கு அனைவரும் வந்து சேர்நததும் காரில் வந்தவர்களின் கார்களை ஒரு இடத்தில் தரித்து வைத்து விட்டு அங்கு தரித்து நின்ற ஒரு கோச்சில் ஏறுமாறு பணிக்கப்பட்டார்கள். நெடியவன் சார்பான வல்வெட்டித்துறை குழுவைச் சேர்ந்த நா.க.த உறுப்பினர்களை தவிர அனைவரும் விழிகள் பிதுங்க கோச்சில் ஏறினார்கள். கோச் புறப்பட்டு கிழக்கு நோக்கியா அல்லது வடக்கு நோக்கியா போகிறது என்பதை அனுமானிக்க முடியாதவாறு சுற்று பாதைகள் ஊடாக பயணித்துக்கொண்டிருந்தது. ஒரு வயது போன அமைச்சர் “தம்பி நாங்கள் இப்ப எங்கை போறம்” என்ற கேள்விக்கு அமர்வின் இரண்டாம் நாள் இடத்துக்கு தான் என்று ஒரு முழியல் பார்வையுடன் பதில் வந்தது. அவரும் விடாமல் “ஓ அது தெரியும் அனால் அது எந்த இடம்” என கேட்க “ போன பிறகு தெரியும் தானே” என்ற ஒரு நக்கல் கலந்த பதில் தான் வந்தது. நெடியவன் அதரவு வல்வெட்டித்துறை குழு வெற்றிகரமாக தாம் ஒழுங்கு செய்த  இடத்துக்கு சுத்தி சுத்தி அனைவரையும் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு உதவி பிரதமர் “இப்படித்தான் எங்கடை பெடியள் அனுராதபுரம் அடிக்க போனாங்கள் நாங்களும் இண்டைக்கு அதே போல போராட போற மாதிரி இருக்கு” என்று கூற அனைவரும் தங்கள் புல்லரித்த மேனியை சொறிந்த படி அமர்வு மண்டபம் நோக்கி நடந்தார்கள்.  மண்டபத்தை அடைந்ததும் யாரும் அமர்வு முடியும் வரை மண்டபத்தை விட்டு வெளியில் போக கூடாது என்ற ஒரு மறைமுக மிரட்டலுடன் அன்றைய அமர்வுகள் ஆரம்பமாயின.
 மாலை அமர்வுகள் முடிந்ததும் மீண்டும் அதே பாணியில் அனைவரும் ஹங்கர் லேனிலேயே மீள கொண்டு வந்து விடப்பட்டார்கள். நா.க.தவின் இந்த ஹங்கர்லேனிலிரந்து - அமர்வு மண்டப தவளைப்ப்பாயச்சல் கொமாண்டே பாணியிலேயே மறுநாள் நடைபெற்ற விருந்துபசாரத்திற்கான பயணமும் அமைந்தது. ஆனால் இந்த கொரில்லா பாணி தவளைப்ப்பாய்ச்சல் மூலம் அமர்வுகள் விருந்துபசாரங்கள் நடந்து முடிந்த போதும் அனைவருக்கும் முடிவில் எழுந்த மில்லியன் டொலர் கேள்வி நாடு கடந்த அரசின் பிரதம் திரு உருத்திரகுமாரன் எங்கே என்பதே!
என்ன தலைவர் போல உருத்திராவும் பங்கருக்குள் பதுங்கி விட்டாரா என பலரும் விவாதித்தனர். ஆனால் அங்கு கசிந்த  புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் உருத்திரா அமெரிக்காவை விட்டு இப்போதைக்கு அசைவது இல்லை என்று முடிவெடுத்துள்ளாராம். எரிக் சொல்ஹைமை பொய்யன் என்று உருத்திரா முத்திரை குத்தியதை அடுத்து தன்னை விமான நிலையத்தில் வைத்து யாராவது மடக்கி விடலாம் என்ற பயம் காரணமாக தான் அவர் வெளிநாடுகள் பேவதில்லை என்றும் நா.க.தவினர் கதையளந்தனர். பிரதமரின் பாதுகாப்பே இன்று அவசியம். அமெரிக்க, ஐரேப்பிய, ரஸ்ய, இந்திய, சீனா, இஸ்ரவேல் புலனாய்வு படைகள் உருத்திராவை குறிவைத்துள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காவே உருத்திரா அமர்வுகளுக்கு வரவில்லை எனவும் அமர்வில் அவிக்கப்பட்டதாம். ஆனால்; உண்மை அதுவல்ல என நா.க.த உருத்திரா எதிர் குழுவினர் உண்மையை போட்டுடைத்தனர்.!  உண்மையில் நா.க.த அரசின் பிரதமர் நாற்காலியை தனது இல்லத்தில் தான் உருத்திரகுமார் வைத்திருக்கிறாராம். காலைக் கடனில் இருந்து இரவு படுக்கைக்கு போவது கூட அந்த நாற்காலியல் தானாம்.  மலசலம் கழிக்க வசதியாக கூட அந்த கதிரையில் ஒரு ஓட்டையையும் வெட்டி வைத்துள்ளாராம். தான் உயிருடன் உள்ள வரை பிரதமர் நாற்காலி மற்றவர்களுக்கு போக கூடாது என்ற பிடிவாதம்> பயம்> அங்கலாய்ப்பு> அவதி  தான் உருத்திராவை இப்ப மிக மோசமாக பாதித்துள்ளதாம். . அதற்காக தனது பிரதமர் கதிரைக்கு ஓட்டை மட்டுமல்ல சுப்பர் பிசின் போட்டு தன் பின்புறத்தில் அந்த கதிரயைை ஆச்சாக ஒட்டி வைத்திருக்கிறாரம். அதனால் தான் அவர் வீட்டை விட்டே வெளியல் போவது கூட இல்லையாம். பிரதமருக்க மட்டுமல்லாது நாடுகடந்த அரசின் அனைவருக்கும் தற்போது நட்டுக் கழண்டு ஒரு நட்டுக் கழண்ட அரசாகவே மாறிவிட்டது 
நன்றி தேனீ

 சீரற்ற காலநிலையால் 23 பேர் பலி : 36 பேர் காயம்

 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.    
நன்றி வீரகேசரி 

 

 

 செம்மணி, சூரியகந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தும் மாத்தளை எலும்புக்கூடுகள்

 

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை இலங்கையரால் குறிப்பாக தமிழர்களால் அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. ஆம் இலங்கை வரலாற்றில் கறுப்புப்ள்ளியை ஏற்படுத்திய ஒரு விடயமாக இது அமைந்தது.

முழு உலகையே இலங்கையை கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளிய விடயங்களில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம்.

இதேபோல் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு விவகாரமாக சூரியகந்த மனித புதைகுழியைக் குறிப்பிடலாம்.

இதிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டதுடன் உலக அரங்கில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதேபோன்று மிருசுவில் மனித புதைகுழி விவகாரம், துரையப்பா மைதான புதைகுழி விவகாரம் ஆகியனவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

அவ்வகையில் தற்போது மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தளை எலும்புக்கூடுகள்

மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தினுள் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதற்தடவையாக மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

வைத்தியசாலை வளாகத்தில் உயிரியல் வாயுப் பிரிவொன்றை நிர்மாணிக்கும் முகமாக அத்திபாரக் கிடங்கு தோண்டும் நடவடிக்கையின் போதே இவை முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் 6 எலும்புக் கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடல்களை அடுத்து மொத்தமாக இதுவரை 67 ( இக் கட்டுரை எழுதப்படும் வரை) எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் தொடர்ச்சியாக தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இச் சம்பவமானது இலங்கையில் சற்று பரப்பை ஏற்படுத்தியது. இவை யாருடைய எலும்புக்கூடுகள்? எக்காரணத்திற்காக இங்கு புதைக்கப்பட்டன? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமிருந்தன.

வைத்தியசாலை வளாகத்தினுள் புதைக்கப்பட்டுள்ள போதிலும் இவை தொடர்பான எவ்விதமான உத்தியோகபூர்வ பதிவுகளும் காணப்படவில்லை. இது தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லாததையடுத்து வதந்திகளும் ஏராளமாகப் பரவத்தொடங்கின.

இதுமட்டுமன்றி பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையாக இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலை வளாகத்தினுள் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 40 வருடங்கள் பழைமையானதென உடனே செய்திகள் வெளியாகின.

இதேபோன்று எலும்புக்கூடுகள் 1971 அல்லது 1988-1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களுடையது என ஒரு சாரார் கருத்து வெளியிட ஆரம்பித்தனர்.

அக்காலப்பகுதியில் மாத்தளையின் பல பகுதிகளில் இராணுவ முகாம்களும், சித்திரவதை கூடங்களும் அமைக்கப்பட்டிருந்ததாகவும் எனவே நிச்சயமாக இவை ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவையே எனக்கூறி அவர்கள் தங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கின்றனர்.ஒரு சாராரோ இவை ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களினுடையது அல்லவென தெரிவிக்கின்றனர்.

மாறாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியம்மை நோய் பரவியதாகவும் எனவே இது அந்நோயின் தாக்கத்துக்குள்ளாகி கொல்லப்பட்டவர்களினுடையது எனவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அக்காலப்பகுதியில் நோய்த்தொற்றுக்குள்ளாகியோர் அவர்களது வீடுகளுக்கு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லையெனவும் அவர்களே அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோல் பெரியம்மை நோயானது உலகிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் அதுவொரு தொற்று நோய் என்பதால் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளினால் அவை மீண்டும் பரவும் அபாயம் நிலவுவதாகவும் வதந்திகளையும் கிளப்பியுள்ளனர்.

ஒரு சாரார் இவை 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகளே எனக் கூறி வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரால் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதில் எதை நம்புவது? என பொதுமக்களுக்கு குழப்பமாக உள்ளது.

எனினும் தொடர்ச்சியாக வெளியாகிவரும் தகவல்களை மாத்தளை மாவட்ட சட்ட வைத்திய ஆலோசகர் அஜித் ஜயசேன முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை முடிவடையும் முன்னர் எதனையும் உறுதியாகக் கூற முடியாதென அவர் கூறுகின்றார். தொடர்ச்சியாக வெளியாகிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியுள்ள அவர் ஊடகங்களும் உடனே எவ்விதமான முடிவுகளுக்கும் வரக்கூடாதென தெரிவித்துள்ளார்.

இதே வைத்தியசாலை வளாகம் 20110 ஆம் ஆண்டும் உயிரியல் வாயுப் பிரிவுகள் இரண்டை நிர்மாணிப்பதற்கென தோண்டப்பட்டதாகவும் அஜித் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது பல ஆதாரங்கள் அழிந்து போயிருக்கலாம் எனவும், அதன்போது மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஜித் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெளியாகும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அனைத்தும் குறித்த விசாரணையை திசை திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் இக்கொலைகள் 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியுடன் தொடர்புபட்டதல்லவெனவும் அக்காலப்பகுதியில் பெரியளவிலான படுகொலைகள் இடம்பெறவில்லையெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை 1988- 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர். அக் காலப்பகுதியில் இக்கொலைகள் இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் இவ்விடயம் தொடர்பில் தற்போது மும்முரமாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் சுமார் 67 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதுமட்டுமன்றி தேடல் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் மேலும் பல எலும்புக்கூடுகள் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறு நிலவுவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

பொலிஸ் இரகசியப் பிரிவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தொல்பொருளியல் ஆய்வாளர்களும் எலும்புக்கூடுகளை ஆராயும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடயமானது மக்களிடையே ஒருவித அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனித உடல்கள் எவ்வித மரியாதையுமன்றி, யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயமாகும்.

நாகரிக வளர்ச்சியடைந்த சமூகமொன்று இறந்த உடலொன்றை மரியாதைகள் எதுவும் வழங்காமல் அடக்கம் செய்யுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

அவ்வாறு செய்யப்படுமானால் அது எத்தகைய சமூகமொன்றின் நடவடிக்கையாக இருக்குமென்பதும் ஆராயப்படவேண்டியுள்ளது.

அதேபோல் இவ்விவகாரத்தை மனித சமுதாயத்திற்கெதிரானவொரு பாரிய குற்றமாக கருதவேண்டியுள்ளதுடன் அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களும் இது தொடர்பில் வெளியாகும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்கவேண்டியது அவசியமாகின்றது.

அரசியல் கட்சிகள் பலவும் இது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

அதேபோல் அதிகாரிகளும் சுயாதீனமான, எவ்வித தலையீடுகளும் அற்ற நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

அரசும் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி உண்மை நிலையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதும், விசாரணை முடிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான நியாத்தை வழங்கும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Shanmugarajah Kavinthan
 நன்றி வீரகேசரி  

வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் அதிக சேதம்: பணிச்சங்கேனி பாலமும் சேதம் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
flood-srilankaநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. காலநிலை சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் மாவட்ட அடிப்படையில் பின்வருமாறு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 34,753 குடும்பங்களைச் சேர்ந்த 1,35,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் காணாமற்போயுள்ளார். சுழல் காற்று காரணமாக 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய 8 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 13 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். 32 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 82 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,583 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் இதுவரை 101 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மரணித்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் 3 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 138 குடும்பங்களைச் சேர்ந்த 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 3 தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 30 வீடுகள் முழுமையாகவும் 147 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 2,135 குடும்பங்களைச் சேர்ந்த 5,582 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டம்:- 706 குடும்பங்களைச் சேர்ந்த 3,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பணிச்சங்கேனி பாலமும் சேதம் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
 மட்டக்களப்பிலிருந்து போக்குவரத்தை மேற்கொள்வதற்காக  ஒரேயொரு பாதையில் இருந்த  பணிச்சங்கேனி பாலம் இன்று சேதமடைந்துள்ளதால் மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான போக்குவரத்தும் அவ்வீதியினுடனான போக்குவரத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பணிச்சங்ககேனி பாலம் உடைந்துள்ளதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுகின்றனர். இந்த பாலத்தின் ஊடாக எந்தவொரு வாகனமும் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனால் கொழும்புக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக என வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் மட்டக்களப்பு-பொலனறுவை பிரதான வீதியினுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மக்கள் பணிச்சங்கேனி பாலத்தினூடாக வாகரை சென்று அங்கிருந்து திருகோணமலை, ஹபரணை ஊடாக கொழும்புக்கு தங்களுடைய பயணத்தை மேற்கொண்டனர்.

பணிச்சங்கேனியில் புதிய பாலத்திற்கான நிர்மாண வேலைகள் நடைபெற்றவரும் நிலையில்  இந்த பழைய பாலத்தினையை மக்கள் திருகோணமலைக்கு செல்வதற்கு; பயன் படுத்தி வந்தனர்.

அந்த பாலமும் சேதமடைந்தமையினால் மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக  துண்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று புதன்கிழமை வருகை தந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இந்த பாலம் சேதமடைந்திருந்தமையில் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்ததாகவும்; இராணுவத்தினரின் உதவியுடனேயே இவர் இந்த பாலத்தை கடந்தததாகவும் தெரியவருகின்றது.
நன்றி தேனீ  யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது


பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றுவரை யாழ். மாவட்டத்திலிருந்து 39 பேரும் கிளிநொச்சியிலிருந்து 4 பேருமாக மொத்தம் 43 பேர் கடந்த சில வாரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு நபரும் கடந்த 17 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.   
நன்றி வீரகேசரி


14 வயது சிறுமி கர்ப்பம்: சந்தேகத்தில் 42 வயதுடைய நபர் கைது

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.
எனினும் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட பெற்றோர் பருத்திதுறை வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொண்ட வைத்திய பரிசோதனைகளையடுத்து சிறுமி கர்ப்பமடைந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோர் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.     நன்றி வீரகேசரி


 சிலாபத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு


நன்றி வீரகேசரி  


Pics by:Jayasanka fernando
தற்போது பெய்துவரும் கடும் மழையினையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம், ஆராச்சிக்கட்டு பிரதேசங்கள் உட்பட பல்வேறு பிரதேசங்களிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் ரத்னவீர தெரிவித்தார்.

கடந்த 3 தினங்களாக புத்தளம் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட நீரின் அதிகரிப்பால் பங்கதெனிய, ஆராச்சிக்கட்டுவ,மாதம்மை, மஹாவௌ உள்ளிட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும்,பாதிப்புக்குள்ளான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கென 35 தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே வேளை சிலாபம் பிரதான பேரூந்து தரிப்பிடம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேஸ்வரம் பிரதேசத்தின் சுமார் 75 வீடுகள் வரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வீடுகளில் இருந்த மக்கள் பௌத்த விகாரை மற்றும் தனியார் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச கிராம அதிகாரி தெரிவித்தார்.
No comments: