மறுபடியும் பிறந்தெம்மை இரட்சிக்க மாட்டீரோ?

.


"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"

பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்

கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே

உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?



சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க

பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச

தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக

இல்லாது போனதேன் உன்கருணை என் தேவா?




ஆண்டவனே நீயுறையும் ஆலயத்தை அழிக்கிறார்கள்

மாண்டவரின் தூபியையும் மண்ணோடு புதைக்கிறார்கள்

நானென்ற ஆணவத்தால் நல்லவற்றை மிதிக்கிறார்கள்

நல்லதோர் வாழ்வில்லை தவிக்கிறோம் வந்துபாரும்



ஊரெங்கும் கோயிலுண்டு துதிப்பதற்கு கைகளுண்டு

உண்மையின்று தூங்குவதேன் உலகமின்று வாடுவதேன்

பாரினிலே போரதனால் பலியுண்டோர் பலறின்று!

பிதாமைந்தா மீண்டுமெம்மை இரட்சிக்கப் பிறக்காயோ?



பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச

இல்லாத அரக்ககுணம் இன்றெங்கும் மேலோங்க

சொல்லில் அடங்காத கொடுமைகளும் தலைதூக்க

பல்லைக் கடித்தபடி நாம் வாழணுமா பிதாமைந்தா?



அறைந்தார்கள் சிலுவையில் அப்போதும் அழவில்லை

சிதைத்தார்கள் சிறுவர்களை சிறுதேனும் சினக்கவில்லை                                                                                                                                                               &nbsp ;                          

எழுந்தீரே மறுபடியும் முழு உலகம் வியப்பதற்கு

துதிக்கின்றோம் தொழுகின்றோம் தேவனே நீ வாராயோ!



சுனாமியது வந்து அன்று சுருட்டியது பல உயிரை

சமயமென்று கூறி கொலைசெய்தார் பலபேரை

சாதி என்று பேசி சாய்த்து விட்டார் நீதிவேரை

பாதியாக அழிந்துபோறோம் கர்த்தரே காத்தருளும்.



பசியின் கொடுமையை தீர்ப்பதற்கு யாருமில்லை

நோயின் வேதனையை நீக்குதற்கும் எவருமில்லை

விதியின் பயனென்று சொல்வதெல்லாம் வேதமில்லை

பாவம் தீர்ப்பவரே பாரிதனைக் காக்காயோ!



பாலைவனப் போரில் பலியானோர் பலரங்கு

ஈழத்திலும் தர்மமது தலைகுனிந்து நிற்குதங்கு

பாவங்களைத் தீர்க்க பாலகனாய் பிறந்தவரே

மறுபடியும் பிறந்தெம்மை இரட்சிக்க மாட்டீரா?



மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவரே மேரிமைந்தா

காட்டு மரத்தடியில் வாழ்கின்றோம் பலரின்றே

கண்திறந்து பாருமையா கண்ணீரின் வலிதெரியும்

உண்மைதனைப் பார்ப்பதற்கு ஒருதடவை பிறந்து வாரும்!

 Nantri: Chicago Bhaskaran

No comments: