தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை.. வித்யாசாகர்-

.


நான் அன்றும் இறந்திருக்கவேண்டும்
இருப்பதைத் தொலைத்த அந்த வலி
அத்தனை கனமானது;
விமானமேறி நாடுகடந்து
நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு
வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும்
அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய
ஓட்டமும் தவிப்பும்
எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும்
வானம் கிழிவதைப் போல அன்று
அறுபட்ட மனதில்
அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை
காதாழம் சிதைக்கும் மேளசப்தத்தை நிறுத்திக் கொண்டு
அவளை உயிரோடு தேடும் அழையை
என்னால் அடக்கவே இயலவில்லை
அவளின் மூடிக் கிடக்கும் கண்கள் திறந்து
ஒரேயொரு முறை எனைப் பார்க்காதா எனக் கெஞ்சிய
தருணம்  வாழ்வின் அகோர முகத்தைக் கொண்டது
கண்ணடைத்து வாய்கோணி ஐயோவென்று
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுத அழையில்
நான் குடித்துவளர்ந்தப் பாலின் வாசம்கருகி எனை உயிரோடு கொன்றது



தொடக் கூசும் கைகளில் உயிர்தடவி
அவள் பாதம் தொட்ட இடத்தில்
என் காலத்தைப் போட்டுடைக்க உயிரற்றுப் போனாளேயவள்
மெய்யுதிர்த்து விரல்கட்டவிழ
உயிர்மம் வெடித்து விலகும் உயிரின்
அறுபடும் நிலையை
அவள் இறந்தாளென்று கேட்டதுமே உணர்ந்தேன்
ஊரழ வீடழ நானுமழ
எல்லோரும் கதறுமந்த காற்றின் கீறலுறும் இடைவெளிக்குள்
அவள்புகுந்து
மீண்டும் உடம்பாய் எழுவாளென
அவளை  எரிக்கும்வரை நினைத்திருந்தேன்
அம்மா  என்று அழைக்கயிருந்த வாயில்
அம்மாவெனக் கதறியத் தருணம்
எனைக் கொன்று கொன்றுப் போட்டது
சோரூட்டிய நினைவையும் தாலாட்டிய உணர்வையும்
நேற்று எதிரே நின்று சிரித்த அந்த முகத்தையும்
ஒருநாளில் அவளுடம்போடு எப்படி எரித்துவிட ?
பேசப் பேசக் கேட்டதும்
கேட்க கேட்கப் பேசியதும் நினைக்க நினைக்க உள்ளே
உயிரெல்லாம் அணைகிறதே (?)
அவளின்றி இல்லை அவளின்றி இல்லை
என்று வாழ்ந்த இந்தப் பிறப்பை
இன்னும் யார்யார் மரணத்திற்குப் பின்னும் வைத்திருக்கவோ ?
வாழ்வது கொஞ்சம் சாவது அதிகமெனும் பயம்
உயிர்விளக்குகள் அணையும்
ஒவ்வொரு
வீட்டின் இருண்ட தருணத்திலும் வருகிறது
பின் மறைகிறது
இதோ இன்று மீண்டும் நாங்கள் இருண்டுப் போயிருக்கிறோம்
அவளில்லை,
‘இருக்கிறாள் என்று கண்மூடிக் கொண்டும்
இல்லையென்று கதறிக் கொண்டும்
அடங்கிய மேளசப்தத்தின் மிரட்சியிலிருந்து
மீளாமல் நீள்கிறது எங்கள் வாழ்க்கை; அம்மாயின்றி!!

வித்யாசாகர்

No comments: