சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படவிருந்த தமிழ் அகதி துணிகரமான போராட்டத்தின் பலனாக தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டார்.

.
நான்கு  பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளனை சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிமுதல் புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நோக்கம் வெற்றிபெறும்வரை அவரைத் தடுத்துவைத்திருந்த Maribyrnong தடுப்புமுகாமின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அவரை புதன்கிழமை சிறிலங்காவுக்கு நாடுகடத்தும் அறிவித்தலை அவுஸ்திரேலியக் குடிவரவு / குடியகல்வுத் திணைக்களம் கடந்த கிழமை அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்த இடைக்காலத் தடைமீதான வழக்கு செவ்வாயக்கிழமை மாலை 6.30 அளவில் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், நாடுகடத்தப்படுவது நூறுவீதம் உறுதியானது. வேறு தெரிவுகளற்ற நிலையில் இரவோடிரவாகக் கூடிய செயற்பாட்டாளர்கள் Refugee Action Collective என்ற குடையமைப்பின் ஒருங்கிணைப்புடன், ‘தமிழ் ஏதிலிகள் கழகத்தின்’ ஒழுங்கமைப்பில் இரவு 11.00 மணிவரை தடுப்புமுகாமின் வாசலில் நின்று போராட்டத்தை நடாத்தினர். பின்னர் தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முகாமின் வாசலில் காவலிருக்க ஏனையோர் கலைந்து சென்றனர்.
 புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் அனைத்துப் போராட்டச் செயற்பாட்டாளர்களும் முகாமில் குழுமத் தொடங்கினர். இதற்கிடையில் புதன்கிழமை அதிகாலை நாடு கடத்தலை எதிர்கொண்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காயங்களோடு காப்பாற்றப்பட்டிருந்தார். எனினும் அவரை நாடுகடத்தும் முயற்சியை அவுஸ்திரேலிய அரசு கைவிடாத நிலையில் முகாமின் முன் போராட்டம் வலுப்பெற்றது.
 மறியற் போராட்டத்தை முறியடிக்கவென ஏராளமான காவற்றுறையினர் குவிக்கப்பட்டனர். மாநிலக் காவற்றுறையும் மத்திய காவற்றுறையும் பெருமெடுப்பில் ஆயுதங்கள். வாகனங்கள் சகிதம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோரை முற்றுகையிட்டிருந்தனர். ஒரு போராட்டக் காரருக்கு மூன்று காவற்றுறையினர் என்ற விகிதத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் மிக உத்வேகமாக செயற்பாட்டாளர்கள் மறியற் போராட்டத்தை நடத்தினர். காவற்றுறையினரின் வாகனங்களுட்பட முகாமிலிருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் போராட்டம் நடத்தியோரால் சோதனை செய்யப்பட்டே வெளியேற அனுமதிக்கப்பட்டன.
 போராட்டம் நடத்தியோர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதாகவும் அது குற்றமெனவும் கலைந்துசெல்லாத பட்சத்தில் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் காவற்றுறை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டபோதும் விடாப்பிடியாக மனிதச்சங்கிலியாக மறியற் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றது. பல்வேறு வழிகளிலும் நாடுகடத்தப்பட இருந்தவரை வெளியேற்ற எடுக்கப்பட்ட காவற்றுறையின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்துக்கு புகலிடக் கோரிக்கையாளரைக் கொண்டு போகவேண்டிய நேரம் நெருங்கிவிட்ட நிலையில் மதியம் 1.00 மணியளவில் காவற்றுறையினர் படிப்படியாக முகாமை விட்டு வெளியேறத் தொடங்கினர். எனினும் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து புதன்கிழமை அவசரமாகச் செய்யப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் முடிவுகள் வெளிவராத நிலையிலும், நாடுகடத்தப்படும் ஆபத்து முற்றாக நீங்காத நிலையிலும் போராட்டத்தை நடத்தியோர் தொடர்ந்தும் தடுப்பு முகாமின் முன்னேயே காவலிருந்தனர்.
 இறுதியாக சட்டநடவடிக்கையின் துணையோடு நாடுகடத்தலுக்கு எதிரான இடைக்காலத் தடையை வாங்கி இந்தப் போராட்டம் வெற்றியோடு நிறைவுபெற்றது. மிகமிகக் குறுகியகால அழைப்போடு புதன்கிழமை அதிகாலை திரண்ட செயற்பாட்டாளர்களின் கடுமையான, உறுதியான உழைப்பே இவ்விடைக்காலத் தடையைப் பெறக் காரணமாய் அமைந்தது. விமானநிலையம் கொண்டு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதாலேயே சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 இன்னும் ஏராளமான தமிழ் அகதிகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படவென வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்நாடுகடத்தலைத் தற்காலிகமாகவாவது தடுத்து நிறுத்தியதானது மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
No comments: