IC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் !! -எஸ்.எம்.எம்.பஷீர்

.

What Stephen Lawrence has taught us”
What are the trading standards here?
Why are we paying for a police force
That will not work for us?
The death of Stephen Lawrence
Has taught us
That we cannot let the illusion of freedom
Endow us with a false sense of security as we walk the streets,
The whole world can now watch
The academics and the super cops
Struggling to find the definition of institutionalised racism
As we continue to die in custody
As we continue emptying our pockets on the pavements,
And we continue to ask ourselves
Why is it so official
That black people are so often killed
Without killers?
Benjamin Zephaniah (What Stephen Lawrence has taught us)

“ ஸ்டீபன் லோரன்ஸ் எதனை எங்களுக்கு கற்பித்தான் ?”

“இங்கென்ன வர்த்தக நியமங்கள்

எங்களுக்கு பணிபுரியா காவல் படைக்கு

நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்

ஸ்டீபன் லோரன்ஸ்ஸின் மரணம்

நாங்கள் வீதிகளில் நடக்கும் வேளை;

எங்களுக்கும் பாதுகாப்பு உரித்தென்ற

பொய்யுணர்வுடனான சுதந்திர மாயை

எங்களை ஆட்படுத்த அனுமதிக்க முடியாது

என்ற பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது



கல்விமான்களும் , உயர் காவல் துறையினரும்

நிறுவனமான இனவாதத்தின் அர்த்தம் குறித்து அங்கலாய்ப்பதை

அகிலமே இப்போது பார்க்க முடிகிறது.

நாங்கள் சிறைக்காவலில் சாவது தொடர

தெருவோரங்களில் எங்கள் சட்டைப் பைகளைக் காலி செய்வது தொடர

எங்களை நாங்களே தொடர்ந்து கேட்போம்

கொலைகாரனில்லாமல்

கறுப்பர்கள் அடிக்கடி கொல்லப்படுவது

ஏன் அதிகம் உத்தியோகபூர்வமானதென்று ?”



பெஞ்சமின் சிபானியா ( பிரித்தானிய கறுப்பின கவிஞர்- மொழியாக்கம் எஸ்.எம்.எம்.பஷீர் )



இதுவொன்றும் விஞ்ஞானக் கட்டுரையல்ல ; என்பதும் ஒரு இராசாயன சூத்திரமுமல்ல . ஆனால் இக்கட்டுரைத் தலைப்பின் ஒரு பகுதியான நீரின் மூலக் கூறுகளைக் கூறும் சூத்திரம் என்பது பலருக்கும் பரிச்சயமான ஒரு சமாச்சாரம். அண்மையில் பிரித்தானியாவில் குற்றவியல் சட்டப்படி இனவாத நிந்தனை தொடர்பான குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குட்பட்டிருந்த போலீஸ் அதிகாரி அலக்ஸ் மக்பார்லேன் (படத்திலிருப்பவர்) அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.



நாகரிக உலகின் உச்சத்தில் இருப்பதாகவும் ஜனநாயக விழுமியங்களைப் பேண விரும்பும் நாடுகளுக்கு தாங்களே உதாரண புருசர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் , அவ்வாறே அவர்களின் நிதி தயவில் செயற்படும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் போற்றிப் புகழப்படும் பிரித்தானியாவில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலக்ஸ் மக்பார்லேன் நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி பல சமூகவியலாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை பொலிசாரின் கடந்தகால இனவாத துஷ்பிரயோகங்களைப் விசாரிக்கும் சுயாதீன போலீஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முடிவுகள் , பொலிசாருக்கெதிரான பல இனவாத முறைப்பாடுகள் , குறிப்பாக பிரபலமான ஸ்டீபான் லாரான்ஸ் கொலையில் சம்பந்தப் பட்ட வெள்ளை இன இளைஞர்களை காப்பாற்ற முனைந்த போலீசார் தொடர்பான விசாரணைகள், அவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற நீண்ட விசாரணைகள் வரை எதுவுமே நம்பிக்கை தருபனவாக இருக்கவில்லை.



அதனால்தான் ஸ்டீபான் லோரன்சின் கொலை குறித்து அறிக்கை சமர்ப்பித்த சேர் வில்லியம் மச்பார்சான் பிரித்தானிய காவல் துறையில் புரையோடிப்போயுள்ள நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவாதம் உண்டென்று அறிக்கையிட்டார். ஆனாலும் போலீசார் அந்த அடையாளப்படுத்தளிலிருந்து பெரிதும் மாறுபடவில்லை என்பதையே ஆசியர்கள் , கறுப்பர்கள் , அரபுக்களுக் கெதிரான பொலிசாரின் இனவாத துஸ் பிரயோகங்கள் , இனவாத நிந்தைகள் , பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற கோதாவில் தடுத்தல் மறித்தல் (Stop and Search) செய்யும் பொலிசாருக் கெதிரான இனவாத முறைப்பாடுகள் என போலீசாரை விசாரிக்கும் சுயாதீன போலீஸ் முறைப்பாட்டு விசாரணைக் குழுவின் (Independent Police Complaint Commission ) முடிவுகள் என பலவிதமான செயற்பாடுகளும் திருப்தியளிப்பனவாகவில்லை. எனது பொலிசாருக் கெதிரான குற்றச்சாட்டுகள் உட்பட பொலிசாரின் அத்துமீறல் மேலும் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றிய முடிவுகள் கூட பெரிது நம்பிக்கை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.



அந்த வகையில் பிரபல்யமான இந்த வழக்கின் முடிவொன்றும் ஆச்சரியமானதல்ல. இந்த வழக்கு மட்டுமல்ல இதற்கு முந்திய பொலிசாரின் இன ரீதியான அடாவடித்தனங்கள் அத்துமீறல்கள் குறித்து நீதிமன்ற கதவுகளை தட்டிய வழக்குகளின் முடிவுகள் பல சமூகவியலாலர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. அந்த வகையில் இந்த வழக்கு அண்மைக்கால வழக்கென்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. சென்ற கோடை கால இலண்டன் கலவரங்களின் போது அலெக்ஸ் மக்பார்லேன் ( Alex MacFarlane ) எனும் போலீஸ் உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்ட இருபத்தியொரு வயதுடைய கறுப்பின இளைஞனான மோரோ டிமிற்றியோ (Mauro Demetrio ) அலெக்ஸ் மக்பார்லேன் தன்னை இனரீதியில் முறையற்று நடத்தினார்; இனத் துஸ்பிரயோகம் செய்தார் என்று குற்றவியல் வழக்கொன்றினை அவர் மீது தொடுத்திருந்தார். அதற்கான வழக்கு ஆதாரமாக தனது கையடக்கத் தொலைபேசியில் அந்த போலீஸ் அதிகாரி தன்னுடன் செய்த சம்பாசனைகளை மோரோ டிமிற்றியோ பதிவு செய்திருந்தார் . அதனையே அவர் நீதிமன்றில் சான்றாக சமர்ப்பித்திருந்தார்.



அந்த பதிவுசெய்யப்பட்ட சம்பாசனையில் போலீஸ் அதிகாரி அலெக்ஸ் பார்லேன் “ உன்னிடமுள்ள பிரச்சினை என்னவென்றால் நீ எப்பொழுதும் “நிக்கர்” (கறுபபு இனத்தவர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் இழி சொல் ) ஆக இருப்பதுதான் .... நீ எப்பொழுதும் கறுப்புத் தோல் நிறமுடையவனாகவே இருப்பாய்... உனது நிறத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாதே ! “



வேறு எந்தவித ஆதாரமுமின்றி பதிவு செய்யப்பட்ட சம்பாசனைகளை கொண்ட கையடக்கத் தொலைபேசிப் பதிவுகள் போலீஸ் அதிகாரி அலெக்ஸ் மக்பார்லேனுக்கு எதிராக மறுக்க முடியாத முன்வைக்கப்படிருந்தது. இனவாதப் பொலிசாரின் இன நின்தைக்குகுற்பட்ட பலருக்கு இந்த வழக்கு வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி குற்றவாளியாகக் காணப்பட்டால் , அந்த செய்தி பல போலீசாரை எச்சரிக்கும் அபாய மணியாக ஒலித்திருக்கும் என்ற எதிபார்ப்பும் தொடரும் ஏமாற்றங்களின் சரடாக நீண்டு செல்கிறது.இப்போது போலீசார் மீண்டும் தமது இனவாத துஸ்பிரயோகங்களை தொடர கட்டியம் கூறியிருக்கிறது.



இவ்வாறுதான் 1991 ஆம் ஆண்டில் மல்கிட் சிங் நாட் என்ற சீக்கிய இனத்தவரைக் கைது செய்த போலிஸ்காரர் " நீ போய் உனக்கு தீ மூட்டிக்கொள் " என்று அவரை தற்கொலை செய்ய இனவாத குரோதத்துடன் கூறியவர் . ஆனாலும் அந்த கூற்றை மல்கிட் சிங் தனது கையடக்கத் தொலை பேசியில் பதிவு செய்திருந்தும்



மாக்பார்லேன் தான் டேமிற்றோவை “நிக்கர்” (Nigger ) என்று அழைத்ததற்கு காரணம் , தன்னைத் தானே “நிக்கர்” என்று முதலில் டிமிற்றியோ குறிப்பிட்டார் ( டிமிற்றியோ , தன்னை கைது செய்த பொழுது அந்த போலீஸ் அதிகாரியிடம் , அந்த கலவரத்தில் ஈடுபட்ட வெள்ளைக்கார கலவரக்காரர்களை கைது செய்யாமல் என்னை நிக்கர் என்பதற்காகவே கைது செய்கிறாயா ? என்று கேட்டிருந்தார் ). டிமிற்றியோ தனது மனதளவில் தாழ்வான சுய மதிப்பீட்டினைக் கொண்டிருக்கிறார் என்ற அபிப்பிராயம் எனக்கு ஏற்பட்டபடியினால்தான் , டிமிற்றியோ , தோல் நிறத்தை தனது பிரச்சினைகளுக்கு காரணமாகப் பார்ப்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் அப்படிக் குறிப்பிட்டேன் என்று மாக்பார்லேன் தனது தரப்பு நியாயமாகக் நீதி மன்றில் குறிப்பிட்டார்.! அதனை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது என்பது குறித்து கறுப்பின சமூகவியலார்கள் சட்டத்தரணிகள் தங்களின் எதிர்வினைக் கருத்தினை வெளியிட்டுள்ளார்கள்.



2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்னுமொரு சம்பவத்தில் குர்திஸ் இளைஞன் ஒருவனுக்கு “உனது அரபு முகத்தை அடித்து நொறுக்குவேன்” என்று இனக் குரோதத்துடன் எச்சரித்த போலீஸ்காரனின் அடாவடித்தனத்தை பதிவு செய்து நீதி மன்றில் வழங்கி தனக்கு நீதி மன்றில் நியாயம் கிடைக்கும் என்று நம்பியிருந்த அந்த இளைஞர் இறுதியில் ஏமாந்து போனார். நீதிமன்ற விசாரணைக்கு அந்த வழக்கு வரவேயில்லை , குர்திஷ் இளைஞனை , நீதிமன்றில் கூட அவனுக்கு எதிரான வழக்கு பத்திரங்களை அவனை தண்டனை பெறும் வகையில் செய்யப்போவதாக கூட சவால் விட்ட இன்வாதிப் போலீஸ் உத்தியோகத்தர் தற்காலிகமாக இடை நிறுத்தம் மட்டுமே செய்யப்பட்டார் , அவருக்கு எதிரான நடவடிக்கை எதுவும் பின்னர் எடுக்கப்படவில்லை . அதிகளவான விசாரணைகளின் முடிவுகள் முறைப்பாட்டுக்காரர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்து வருகிறது.



இனவாத பொலிசாரின் அட்டகாசங்களுக்கு அத்துமீறலகளுக்கு எதிராக செயற்படும் எமக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான சான்றுகள் நிராகரிக்கப்படுவதும் , நீதி மறுக்கப்படுவதும் ஏமாற்றமாகத்தான் உள்ளது. அண்மையில் ஒரு சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நேரடியாகவே பொலிசாரின் இனவாத நிந்தை , நடவடிக்கை தொடர்பில் எனது ஆதங்கத்தை -ஆத்திரத்தையும் -கொட்டித் தீர்க்க வேண்டி ஏற்பட்டது.



போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் மரணமான பலரின் சம்பவங்களில் 2003 ஆம் ஆண்டு மிக்கி என்பவர் பொலிசாரின் கட்டுப்படுத்தல் முறையாலே தடுப்புக் காவலில் இறந்து போனார் என்று மரண விசாரணைத் தீர்ப்பு அழுத்திக் கூறியபோதும் அதில் சம்பந்தப்பட்ட பொலிசாருக் கெதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.



நடைமுறையில் எத்தனையோ போலீஸ் இன துஸ்பிரயோக செயற்பாடுகள் நடைபெறினும் அவற்றினை நீதிமன்ற நியமங்களின் படி நிரூபிப்பது கடினம் என்பதால் பலருக்கு காவல் துறை இனவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை . ஆனால் ஆதாரம் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று நம்பும் பலருக்கும் இவ்வாறான ஆதாரமுள்ள வழக்குகளின் (விசாரணைகளின் ) முடிவுகள் சோர்வைத்தான் தருகின்றன. அந்த வகையில் குறிப்பாக கறுப்பின மக்களுக்காய் குரல் கொடுக்கும் பெஞ்சமின் சிபானியா கறுப்பின மக்கள் நியாயம் மறுக்கப்படுகிறார்கள் என்ற கருத்தினை ஆணித்தரமாக நிறுவுகிறார்.



பெஞ்சமின் சிபானியா



பிரித்தானிய மன்னராட்சிக் கெதிராக- அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என - குரல் கொடுத்தவரும், பிரித்தானிய மகாராணியினால் அவரின் கறுப்பின மக்களின் சமூக விழிப்புணர்வு சேவைக்காக வழங்கப்பட்ட ஒ பீ ஈ (O.B.E- Order of British Empire - பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒழுங்கு ) எனப்படும் பிரித்தானியாவின் அதி உயர் கவரவ பட்டத்தையும் நிராகரித்த வரும் , பிரித்தானிய பாடசாலைகளில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்களை கொடூரங்களை , அடாவடித்தனங்களை மறைத்து பிரித்தானியாவில் வரலாற்று பாடம் கற்பிக்கப் படுவதாகவும் அவற்றினை பகிஸ்கரிக்க வேண்டும் எனவும் சில வருடங்களுக்கு முன்னர் பகிரங்கமாக குரல் எழுப்பியவருமான சமூகப் புரட்சிக்காரரான பெஞ்சமின் சிபானியா 1993 ஆண்டில் தெற்கு இலண்டனில் பஸ் தரிப்பில் வெள்ளை இன இளைஞர்களால் இனக் குரோதத்தின் வெளிப்பாடாய் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன் ஸ்டீபன் லாறன்ஸ் பற்றி எழுதிய ஒரு நீண்ட கவிதையின் ஒரு பகுதியை இங்கு பதிவிலிட்டுள்ளேன். பொலிசாரின் சங்கேத பாசையில் (இனவாத மொழியில் ) “IC3 என்றால் கறுப்பர்கள் என்றும் “IC2” என்றால் ஆசியர்கள் என்றும் பொருள்படும் , அந்த வகையில் பொலிசாரின் (சூத்திரதாரிகளின் ) இனவாதத்திற கெதிரான செயற்பாடுகள் குறித்து முறைப்பாடுகள் மேற்கொண்ட பல ஆசியர்களினதும் , கறுப்பினத்தவர்களதும் முறைப்பாடுகள் வெறுமனே நீரில் எழுதிய எழுத்துபோலவே ஆயிற்று என்ற வகையில் மேற்படி சூத்திரம் (IC 2 + IC3 = H2O ) பொருத்தமானதே என்று நான் நினைக்கிறேன் !!.



பிறகுறிப்பு: பிரித்தானியாவில் போலீசார் தீயணைப்புப் படை போன்றோரின் ஊதியங்கள் மக்கள் தங்களின் வாழிடக் கவுன்சில்களுக்கு வழங்கும் வரிப்பனத்திலிருந்துதான் செலுத்தப்படுகிறது. அதனால்தான் எங்களுக்கு பணிபுரியாத காவல்துறைக்கு ஏன் நாங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கவிஞர் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெறும் பொலிசாரின் அடாவடித்தனங்களை எழுதுவதென்பது நெடிய கட்டுரைக்கு இட்டுச் செல்லும் என்பதால் இக்கட்டுரை ஒரு சில சம்பவங்களை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறது.





28/10/2012 (sbazeer@yahoo.co)

bazeerlanka.com

No comments: