22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏

.

(சந்திப்பு: முஹம்மட் பிறவ்ஸ்)
    * கொழும்பில் மறைக்கப்பட்ட வடபுல முஸ்லிம் அகதிகள்
    * 5 வருடங்களாக வாக்குரிமை பறிக்கப்பட் ஒரு சமூகம்
    * நேரசூசிப்படி ஆண்களும் பெண்களும் குளிக்கும் வினோத நடைமுறை
    * 8 கழிப்பறைகளுடன் வாழ்கின்ற 90 குடும்பங்கள்
jaffna muslim_002மனிதனின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகப்போகும் நாட்டினுடைய தலைநகரத்தில் இருப்பதும் ஒரு ஆச்சரியமான செய்திதான். இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பிறப்பிடம் எது? இவர்களுக்கு வீடுகள் உண்டா இல்லையா என்று இன்றுவரை பதியப்படவில்லை.

இவ்வாறான மக்கள் வசிக்கும் "முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.
யார் இவர்கள்?
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.அகதிமுகாமின் உருவாக்கம்
1990 ஒக்டோபர் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளினால் உடுத்த உடைகளுடன் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் ஒரு  பகுதியினர் மட்டக்குளி, காக்கை தீவிலுள்ள ஓரிடத்தில் அவர்களை தற்காலிகமாக தங்கினர்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேராவின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.

காக்கைதீவு கடற்கரையின் அருகிலுள்ள மேற்படி அகதிமுகாம் ஒரு சதுப்புநில பிரதேசமாகும். மக்கள் குடியேறுவதற்கு முன்னர் இங்கு பாம்புகளும், மனித எலும்புக் கூடுகளுமே நிறைந்த பற்றைக்காடகவே காணப்பட்டது. இது பாடசாலை ஒன்றைக் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமாகும்.

ஆரம்பத்தில் ஓலையினால் குடிசைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பலகையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருசில குடும்பங்கள் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து அதையே கற்களினால் கட்டத் தொடங்கியுள்ளனர்.
குடியிருப்பு
வடக்கில் யுத்தம் முடியும்வரை இந்த அகதிமுகாமில் இருக்குமாறு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேரா கூறியுள்ளார். ஆனால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இம்மக்களின் அவலம் தொடர் கதையாகவே உள்ளது. இந்த அகதிமுகாமில் முன்னர் 200 குடும்பங்கள் வாழந்தனர். அவர்களில் அரைவாசிப்பேர் வேறிடங்களுச் சென்றுள்ளனர். தற்போது 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.

இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, தங்களது தலைவிதியை நொந்துகொண்டு மிகவும் கஷ்டமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சிறிய குடிசைக்குள் சுருண்டு கொண்டு உறங்குகின்றார்கள்.

மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், நிரம்பி வழிகின்ற மலசலகூடம், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் என மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் என தனியாக தூங்குவதற்கான இடவசதிகள் கூட இல்லை. பெண் பிள்ளைகளுக்கு மறைவான அறைகள் கூட இங்கில்லை.

இடப்பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு குடிசைகளும் மிகவும் நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் விறகுக் கட்டைகள் போல் அடுக்காகத் தூங்குகின்றனர். சிறுவர்கள் படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ இடங்களில்லை.
நிவாரண உதவிகள்
நான் சென்றபோது கூட, நிவாரணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறார்களோ என்று ஒருசில குடியிருப்பாளர்கள் நினைத்துக்கொண்டனர். ஆரம்பகாலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.

பின்னர் பல அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு உலருணவு, அத்தியவசியப் பொருட்கள் போன்ற பல நிவாரணங்களை வழங்கி வந்துள்ளது. முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் ஆரம்பகாலங்களில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை மக்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்கப்படாமல், பலரின் வீடுகளுக்குச் சென்றபின், அதில் ஒரு சிறுபகுதியே தங்களுக்கு கிடைத்ததாக மக்கள் எம்மிடம் விமர்சனங்களைத் தெரிவித்தார்கள்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உலருணவுப் பொருட்கள் (றேசன்) 4 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.
சுகாதாரம்
jaffna muslim_007குடிசைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதினால் சுகாதாரம் மிக மோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் மக்கள் அருவறுப்பான சூழலிலேயே வாழ்கின்றனர். மழை வெள்ளத்தில் மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. அந்தச் சாக்கடைக்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு, அதே கழிப்பறைகளையே பயன்படுத்தவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

90 குடும்பங்களுக்கு 8 கழிவறைகள் மாத்திரமே உள்ளன. இதில் ஆண்களுக்கு நான்கும், பெண்களுக்கு நான்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 குடும்பங்களும் 8 கழிவறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானதொரு விடமயாகும். அவசரத்துக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கும் வரிசையில் நிற்கவேண்டும்.

கழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. பெண்கள் குளிக்கும்போது கூட பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லை. இதனால் நிம்மதியாக குளிக்க முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் 4 கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமானது. தங்களது இயற்கைத் தேவைகளுக்காக நேரத்திற்கு செல்லமுடியாது. இரவில் பெண்பிள்ளைகள் (தனியாக) கழிவறைக்குச் செல்லமுடியாது. ஆண் பிள்ளைகளின்  நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணமாகும்.

இங்கு குளிப்பதற்கு ஒரேயொரு இடம் மாத்திரமே உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் நேரசூசியின் பிரகாரமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி தொடக்கம் 11 மணிவரை ஆண்களும், 11 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு முறைமாறி குளிக்க முடியாது.
கல்வியறிவு
கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். சாதாரணமாக 40%க்கும் குறைவான கல்வியறிவே இங்கு காணப்படுகின்றது. ஏதாவதொரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட, அதற்கு அங்கு ஓரளவு படித்த ஒருவரை நாடிச்செல்லும் நிலமையே காணப்படுகின்றது. அதற்கென குறித்ததொரு தொகைப் பணத்தையும் அவர்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில்தான் அங்குள்ளவர்களின் கல்வியறிவு காணப்படுகின்றது.

jaffna muslim_005ஆண் பிள்ளைகளாயின் 1416 வயதுகளில் படிப்பை இடைநிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வருமான ஈட்டும் வேலைகளைச் செய்கின்றார்கள். பெண்பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதினால் அவர்களால் அந்தளவுக்குகூட படிக்க முடிவதில்லை.

பிள்ளைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதோ, சிரத்தை எடுத்துக்கொள்வதோ இல்லையென்று சொல்லாம். தங்களைப் போல் பிள்ளைகளும் கஷ்டப்படாது, படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதில்லை. தங்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு வழியில் நாலு பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.

இங்குள்ள பிள்ளைகள் ராஸிக் பரீட் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத்துடனான தொடர்புகள் கிடைப்பதில்லை. ஏனைய மாணவர்களுடன் பழக விடுவதில்லை. பாடசாலையில் கூட இவர்கள் "கேம் பிள்ளைகள்' என வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தவறுகள் செய்தால் அதை "கேம் பிள்ளைகள்' என்று சொல்லப்படுகின்ற இவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.

இங்குள்ளவர்களில் 10 பேர் கூட சாதாரணதரம் வரை படித்ததில்லை. 4 மௌலவிகள் இங்கிருந்து வெளியாகி இருக்கிறார்கள். பெண்ணொருவர் வர்த்தகத்துறையில் பட்டம்பெற்று வேறிடத்துக்குச் சென்றுள்ளார். இவர்கள் இங்கிருந்துதான் படித்துச் சென்றார்கள் என்பதை அடையாளப்படுத்த விரும்புவதில்லை.
ஜீவனோபாயம்
இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். பேக் தைத்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல், ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர்.

ஓரிரு பெண்கள் மாத்திரமே வெளியில் சென்று வேலைசெய்கின்றனர். "அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லான வேலை?' என்ற போடுபோக்கான நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது.
வாக்குரிமை
இங்குள்ள மக்களுக்கு வடக்கில் வாக்குரிமைகள் இருந்தன. அவையனைத்தும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு 5 வருடங்களாக கொழும்பிலோ அல்லது குடாநாட்டிலோ வாக்குரிமை பதியப்படவில்லை. இதற்கு இலங்கை தேர்தல் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது?

அகதிமுகாமில் பிறந்தவர்களுக்கு வாக்குரிமைகள் இருக்கும் பட்சத்தில், அகதி நாமம் குத்தப்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர்களை ஒரு இலங்கைப் பிரஜையாக அரசாங்கம்கூட மதிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.

தவறு இவர்கள் பக்கமும் இருக்கிறது. நிவாரணம், வீடு மட்டும் தந்தால் போதும் என்கின்ற இவர்களின் மனப்பாங்கினாலும், போதியளவிலான கல்வியறிவு இல்லாமையினாலும் வாக்குரிமையின் மதிப்பு இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.
கொழும்பில் வாக்குரிமைக்காக பதிவு செய்யச் சென்றால், யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்றால் இங்கு இருந்தால் வாக்குரிமை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடைசியில் எங்குமே வாக்குரிமை இல்லை.
பள்ளிவாசல்jaffna muslim_010
இம்மக்கள் தங்களுக்கென ஒரு தனியான ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்துள்ளார்கள். மஸ்ஜித்துன்நூர் எனும் இப்பள்ளிவாசலில் சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஷாவும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இம்மக்களை வழிநடாத்தி வருகின்றனர்.

ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளும் தனிப்பட்ட முறையில் கிடைத்தன. எல்லா மக்களும் இப்பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகின்றார்களா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்.
கலாசாரம்
வீடுகள் நெருக்கமாக இருப்பதினாலும், கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதினாலும், பாதுகாப்பான கழிவறைகளோ, குளியலறைகளோ இல்லாமையினால் சமுதாய சீரழிவுகள் மலிந்து காணப்படுவதாக பலர் முறையிட்டனர்.
அங்கிருந்து வெளியான மௌலவிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகள்கூட அங்கு சென்று கலாசாரத்தைப் போதிக்க தவறிவிட்டது.

சிறுவயதிலேயே ஆண்கள் தொழிலுக்குச் சென்று சம்பாதிப்பதினால் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டார்கள். போதைவஸ்து பாவனைகூட இங்கு சாதாரணதொரு விடயமாக இருந்ததை என்னால்  அவதானிக்கமுடிந்தது.
பெண்களின் உரிமை
பெண் பிள்ளைகள் வெளியில் சென்று படித்தாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அச்சமூகத்திலிருந்து அவர்கள் வேறுகோணத்தில் திரிவுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். பொதுவான கூட்டங்களுக்கு கூட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை.

பெண்களுக்குரிய எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் செல்வதுமில்லை. அவர்களின் உலகம் அந்த அகதிமுகாமுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அதற்குள்ளேயே பல இடங்களைத் தெரியாத பெண் பிள்ளைகளும் அங்கு வாழ்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.

பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்ற காலகட்டத்தில் இப்படியொரு பெண் அடிமைத்தனம் இருப்பதை அங்குள்ள ஆண்வர்க்கம் உணர மறுக்கின்றது.
அரசியல் பின்னணி
ஆரம்ப காலங்களில் இம்மக்களின் நிவாரணங்கள் மூலம் சுயலாபம் தேடிய அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு அகதிமுகாமை அடக்கியாள முயற்சித்ததன் விளைவாக அங்குள்ள மக்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டு அவர்கள் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இவர்களை கண்டுகொள்வதில்லை என பலர் நொந்துகொண்டனர். அவரவர்கள் தங்களது பிரதேசங்களை மட்டுமே பார்ப்பதாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்ப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மக்களுக்கு ஓரளவு உதவிகளைச் செய்துள்ளார். அமைச்சர் றிஸாத் பதியுதீன் மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காலஞ்சென்ற தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் ஒருதடவை அங்கு விஜயம் செய்துள்ளார்.

இவர்களுக்கு சரியானதொரு முடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வராதிருப்பது வெட்கக்கேடானது. தலைநகரில் இப்படியொரு சமூகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், சொகுசு மாளிகைகளில் ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்.
jaffna muslim_004மக்களின் எதிர்பார்ப்பு
இங்குள்ள மக்கள் 22 வருடங்களாக கொழும்பு நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். இவர்களது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் இங்கேயே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் குடாநாட்டு அகதிமுகாம்களுக்கு செல்லத் தயாரில்லை என்பதே இவர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது.

தற்போதுள்ள (புதிய) அகதிகளுக்கே உரிய முறைப்படி மீள்குடியேற்றம் நடந்து முடிந்த பாடில்லை. இதற்குள் எங்கே எங்களைக் கவனிக்கப் போகிறார்கள் எனக் கேட்கின்றனர்.

இம்மக்களின் வாழ்க்கை கொழும்புடன் ஒன்றிணைந்துவிட்டதால், தற்போதுள்ள இடத்திலோ அல்லது கொழும்பில் வேறிடங்களிலோ நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.

பொருளாதார உதவிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இச்சமூகத்தை கல்வி அறிவுள்ள நல்லதொரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை சமூகப் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.
யார் பொறுப்பு?
அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து அழகுபார்க்கின்ற, முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லித் திரிகின்ற நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொஞ்சம் கண்திறந்து இம்மக்களின் அவலங்களைப் பார்க்கவேண்டும். இதற்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

இது அரசியல்வாதிகளின் பொறுப்புத்தான் என்றுவிட்டு, சமூக நிறுவனங்கள் ஓய்ந்துவிடக் கூடாது. நிவாரணம் மட்டும் கொடுப்பதுடன் மட்டுமல்ல சேவை. இவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வரவேண்டும்.
அறிக்கைளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் ஜம்இய்யத்துல் உலமா சபையும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். சேகரிக்கப்படுகின்ற ஸகாத் நிதியத்தில் குறிப்பிட்டதொரு பணத்தை சேர்த்திருந்தால் கூட, இதுவரை 22 வருடங்களுக்குள் எத்தனை பேருக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது முஸ்லிம்கள் கூட பராமுகமாகவே இருக்கின்றனர். அங்கு மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தால் போதாது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தின் கஷ்டங்களையும் உணரவேண்டும். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் பங்கெடுக்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து 10 பேர் சேர்ந்து ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தால், அது இம்மக்களுடைய மட்டுமல்ல, முஸ்லிம் உம்மாவின் கண்ணீரையே துடைத்தற்கு ஈடாகும். ஆகக்குறைந்தது இம்மக்களுக்கு விரைவில் விடியல் கிட்டுவதற்காக பிரார்த்தனையாவது செய்வோம்.
மக்கள் கருத்து:
* மிஸ்ரிபா-47, தலைமன்னார்
எங்களுக்கு நிரந்தரம் என்று எதுவுமே சொல்ல முடியாது. இருக்கும் வரைக்கும் இங்கேயே இருப்போம். கடைசி வரைக்கம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். எல்லாத்தையும் அல்லாஹ் பார்த்துக்குவான்.
* முஹம்மட் சயீப்-45, யாழ்ப்பாணம்
5 வருடங்களாக எங்களுக்கு வாக்குரிமை பதியப்படவில்லை. இந்த முகாமில் இருப்பவர்கள் இந்த நாட்டுக்குரியவர்களா, இல்ல வெளிநாட்டுக்குரியவர்களா என்று தேர்தல் திணைக்களம் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், எங்களை எந்ததெந்த நாடு என்று பார்த்து அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
* கமால்தீன் இனூன்-50, யாழ்ப்பாணம்
ஆரம்பகாலத்தில் இம்முகாமைப் பொறுப்பேற்ற அரசியல்வாதிகள் எங்களை அடக்கி கைதிகளாக நடாத்தப் பார்த்தனர். வாசலில் காவலாளிகளை நிறுத்திவிட்டு அவர்களிடம் அனுமதிச் சீட்டுகளை பெற்ற பின்னர்தான் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தனர். நிவாரணங்களை தங்களது வீடுகளில் வைத்துவிட்டு, அதில் ஒரு சிறுபகுதியையே எங்களுக்கு வழங்கிவந்தார்கள்.
* சுமையா-21, யாழ்ப்பாணம்
சில பெண் பிள்ளைகள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார்கள், "எனக்கு அந்த வக்கும், பாத்வுமும் மட்டும்தான் தெரியும். வேற ஒண்டுமே தெரியாது' என்று. அவர்களுக்கு குளிக்கின்ற இடத்தை தவிர வேறெதுவும் தெரியாது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதே இல்லை. அதை இங்குள்ளவர்கள் விரும்புவதும் இல்லை.

(நன்றி: நவமணி

No comments: