சொல்லமறந்த கதைகள் - 19 கண்டம்


.

முருகபூபதி – அவுஸ்திரேலியா



“ நீந்தத்தெரியுமா?”
சுஜாதாவின் சிறுகதையொன்று இந்தக்கேள்வியுடன் ஆரம்பித்து, இந்தக்கேள்வியுடனேயே முடிவடையும். பல வருடங்களுக்கு முன்னர் படித்தது.
ஒரு காதலனும் காதலியும் இறப்பதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் “ நீந்தத்தெரியுமா?”
இருவருக்கும் தெரியாது. அதனால் நீரில் மூழ்கி இறந்துவிடுவார்கள். சுஜாதா கதையை இப்படி முடிப்பார்.
இறுதியாக அவர்கள் பேசிய வார்த்தைகள் “ நீந்தத்தெரியுமா?”
என்னிடம் இதே கேள்வியைக்கேட்டால், பதில் “தெரியாது”
இத்தனைக்கும் இந்துசமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நீர்கொழும்பில் கடற்கரையோரமாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்திருக்கின்றேன். கரையில் நின்று கால் நனைத்ததோடு சரி.
 இந்து சமுத்திரம் எங்கள் நீர்கொழும்பூரின் மேற்குப்பிரதேசத்தை தழுவிக்கொண்டு ஓயாமல் இரைந்துகொண்டிருக்கிறது. வீட்டின் முற்றத்திலிருந்து பார்க்கும் தூரத்தில் கடல். அலைகள் கரையில் மோதிப்பூக்கும் வெண்ணுறை தினம் தினம் கண்கொள்ளாக்காட்சிதான்.
 கடலில் கால்கள் நனைக்க, மணலில் குடுகுடுவென ஓடி வளைகளுக்குள் மறையும் சிறு நண்டுகளை எட்டிப்பிடிக்க, கரையில் ஒதுங்கி மணலில் பரவிக்கிடக்கும சிப்பிகளையும் சோகிகளையும் அள்ளி அள்ளிப் பொறுக்கி காற்சட்டை பைகளுக்குள் திணித்துக்கொள்ள, மணல்வீடுகட்டி அதன் உச்சியிலே பூவரசம்பூவைக்குத்தி அழகு பார்க்க, மணல் தரையில் இரண்டு கை விரல்களின் நகங்களுக்குள் மண் புகுந்தாலும் கவலைப்படாமல் தோண்டித்தோண்டி குழி வெட்டி கால்களை புதைத்து பரவசமடைய... அந்தக்கடற்கரைதான் எங்கள் சொர்க்கபுரி.





அக்காவும் அவள் சிநேகிதிகளும் கயிறடித்து விளையாடும்போது, செக்கச்சிவப்பாக நெருப்புக்கோளம் போன்று சூரியன் அந்தக்கடலில் மெல்ல மெல்ல மூழ்கி முற்றாக மறைந்துவிடும். அந்த அற்புதக்காட்சியை தரிசிக்கும் இளம்பருவ சந்தோஷங்களுக்காக தினமும் மாலையில் அந்தக்கடற்கரைதான் எங்களுக்கு விளையாட்டுத்திடல்.
 இருட்டுப்படுமுன்னர் வீடு திரும்பிவிடவேண்டும்.
 இல்லையேல் தாத்தாவோ பாட்டியோ அம்மாவோ பூவரசம் தடியுடன் அங்கே பிரசன்னமாகிவிடுவார்கள். இதுவிடயத்தில் அப்பா அந்தப்பக்கம் வரமாட்டார் என்பது எங்களின் அற்ப சந்தோஷம். அவர் வியாபாரத்துக்காக வெளியூர் போய்விடுவார். இரவில் என்ன படிக்கிறோம் பாடசாலையில் தரப்படும் வீட்டு வேலைகளை செய்தோமா? இல்லையா? போன்ற கேள்விகளையே கேட்காமல் வியாபாரம் முடிந்து திரும்பி வரும் நாட்களில் ஏதும் தின் பண்டங்களுடன் வந்து அவர் குதூகலப்படுத்தும் வேளைகளுக்காக ஏங்கிக்காத்திருக்கும் நாட்கள் அவை.
 எங்கள் அயல்வீடுகளில் வசிக்கும் தாஸன், அவன் தம்பி மஞ்சோ அவர்களின் அக்கா மேரிலின் சந்திவீட்டு நிஹால், அவன் தம்பி காமினி, கடற்கரையோரத்தில் வசிக்கும் ராஜூ அவன் அக்கா, தங்கைமார் இப்படி எல்லோரும் சேர்ந்துகொள்ளும் அந்த மாலைப்பொழுதுகள் உற்சாகமானவை.
 நான் கடற்கரையிலிருந்து சிப்பியும் சோகியும் மாத்திரம் பொறுக்கி வந்தால் பிரச்சினையில்லை. அந்த மீனவச்சிறுவர்களிடமிருந்து தூஷண வார்த்தைகளையும் சிலவேளை பொறுக்கி வந்து அக்காவுடன் சண்டை பிடிக்கும்போது என்னையும் அறியாமல் உதிர்க்கும்போதுதான் விவகாரமாகிவிடும்.
 மறுநாள் பாட்டியும் கூடவே வந்து எனக்கு தூஷணம் சொல்லிதந்த சிறுவர்களை பிடித்து திட்டிவிட்டுப்போனால், பிறகு சில நாட்களுக்கு அவர்கள் தங்கள் விளையாட்டுகளிலிருந்து என்னை ஒதுக்கி தனிமைப்படுத்திவிடுவார்கள். அந்த வேளைகள் சோகமாகிவிடும். எனது தம்பிக்கு அப்போது நான்கு வயது. அவனும் விளையாட வந்துவிடுவான். நண்பர்கள் என்னை ஓதுக்கும் நாட்களில் தம்பிதான் எனக்குத்துணை.
 அவனது கால்களைப்புதைப்பதற்கு குழிதோண்டுவேன். அவனுக்கு அதில் அலாதி ஆனந்தம். அவனும் தனது பிஞ்சுவிரல்களினால் தோண்டுவான். சிலவேளைகளில் குழியில் தண்ணீர் சுரக்கும். தண்ணீர் சுரப்பைக்கண்டதும் கைதட்டி சிரிப்பான். அவனது கால்களை அதனுள் புதைத்து மூடியதும் இடுப்பை வளைத்து நெளித்து பலமாக சிரிப்பான்.
 அருகே கயிறடித்து விளையாடிக்கொண்டிருக்கும் அக்காவும் அவனது சிரிப்பொலிகேட்டு வந்து தானும் ஒரு குழிதோண்டுவாள். உடனே நான் தோண்டிய குழியிலிருந்து எழுந்து அக்கா தோண்டிய குழிக்குள் கால்களை புதைப்பான் தம்பி. தடுத்தால் என் தலையில் மண்ணை அள்ளி தூவுவான்.
 தினமும் அவனால் எனக்கு மண் குளிப்பு. வீட்டுக்கு வந்தால் அம்மாவிடம் ஏச்சுத்தான். அந்திசாய தலைக்கு தண்ணீர் ஊற்றினால் தலைமுடி உலராமல் தடிமன், காய்ச்சல் வந்துவிடும் என்றுதான் அம்மாவுக்கு கவலை. அந்தக்கவலையுடன்தான் தலையிலே கிணற்று நீரை அள்ளி அள்ளி ஊற்றி குளிப்பாட்டுவார்கள். ஆனால் அதனால் என்றைக்குமே எனக்கு காய்ச்சல் தடிமன் வந்ததில்லை.
 ஆனால் ஒரு நாள் காய்ச்சல் வந்தது.
அது, தம்பி என் தலையில் கடல் மண் அள்ளித்தூவி,; கிணற்றில் குளித்ததனால் வந்த காய்ச்சல் அல்ல.
 அன்றும் எனது நண்பர்கள் என்னை ஒதுக்கிவைத்துவிட்டு விளையாடினார்கள். அவர்கள் எனக்குச் சொல்லித்தந்த தூஷண வார்த்தைகளினாலேயே அவர்களை திட்டிவிட்டு கடலில் கால் நனைத்தும் தரையில் ஓடி வளையில் நுழையும் சிறு நண்டுகளைப் பிடித்தும் விளையாடினேன்.
 தம்பி தனக்கு குழிதோண்டித்தருமாறு அழுதான். அவனுக்காக ஒரு குழி தோண்டிக்கொடுத்து அவனது கால்களை புதைக்கச்செய்துவிட்டு மணல் படிந்த கைகளை  கழுவுவதற்காக கடலின் கரையில் நின்று அலைகளில் காலும் கையும் நனைக்கிறேன்.
 எனக்குப்பின்னால் சற்றுத்தள்ளி தம்பி கால் புதைந்த தரையில் அமர்ந்திருந்தான். அவனுக்குச்சற்றுத்தள்ளி அக்கா தனது சினேகிதிகளுடன் கயிறடித்துக்கொண்டிருக்கிறாள்.
அப்பால் சில மீனவர்கள் தமது தெப்பங்களிலிருந்து (தோணி) வலைபொத்திக்கொண்டிருக்கிறார்கள். ( வலைபொத்தல்- வலையிலிருக்கும் அறுந்த பகுதிகளை தைத்தல்)
 நான் கால்களை நனைத்தவாறு அடிவானத்தில் சூரியன் மறையும் காட்சியை ரசித்துக்கொண்டு நிற்கிறேன்.
 பின்னால் மணலுக்குள் கால்களை புதைத்திருந்த தம்பி என்ன நினைத்தானோ அவனும் கால் நனைக்க வந்துவிட்டான். வந்தவன் என்னையும் கடந்து ஓரடி முன்னால் போனான். நான் அவனை எட்டிப்பிடிக்கமுன்னர் ஒரு பெரிய அலைவந்து அவனை இழுத்தது. பாய்ந்து பிடித்தேன். என்னையும் சேர்த்து அலை இழுத்தது.
 எனது காற்சட்டை அவிழ்ந்தது. அதனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அவனது வலதுகையை பிடித்தவாறு உரத்துக் கத்தினேன். எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ… அவனை தூக்கிக்கொண்டு கத்தினேன். தண்ணீர் என்னை இழுக்கிறது. வாய்க்குள் தண்ணீர். துப்பமுடியாமல் விழுங்கினேன். எனக்கு நீச்சல் தெரியாது, தினம்தினம் ரசித்த கடல்மாதா எம்மிருவரையும் விழுங்கப்போகிறாளா?
 எந்த மீனுக்கு இரையாகப்போகிறோம்?
 பாட்டி இரவில் சொல்லிதரும் கதைகளில் வரும் கடல்தாண்டி இருக்கும் குகையில் வாழும் தேவதையிடம் செல்லப்போகிறோமா? தம்பி திமிறிக்கொண்டு கத்துகிறான். அவனை இறுகப்பிடித்துக்கொள்கின்றேன். பலம்கொண்ட மட்டும் உரத்துக் கத்துகிறேன்.
  எனது அபயக்குரல் கேட்டதும் தெப்பங்களிலிருந்த மீனவர்கள் பாய்ந்தோடி வந்து கடலில் குதித்து என்னையும் தம்பியையும் காப்பாற்றினார்கள்.
கயிறடித்துக்கொண்டிருந்த அக்காவும் அவள் சிநேகிதிகளும் ஓடி வந்தார்கள்.
 அக்கா கோபத்தில் எனக்கு அடித்தாள்.
 “ எனக்கேன் அடிக்கிற… அவன் தம்பிதான் கடலுக்குள் ஓடினான்.”
 “ உன்னை பார்த்துக்கொள்ளச்சொல்லிட்டுத்தானே போனேன்.”
 “ அவன் இப்படி குழியை விட்டு வருவான் எண்டு எனக்குத் தெரியாது.”
 “ வீட்டுக்கு வா… அம்மாட்ட சொல்லுறன்.”
 “ நீ… என்னத்தைச்சொல்ல… நான்தான் அவனை காப்பாத்தினன். உனக்குத்தான் அம்மா ஏசுவாங்க…”
 அக்கா தனது சட்டையால் தம்பியை துடைத்தாள். இறுதியில் அங்கே இப்படி ஒரு விபத்து நடந்ததையே வீட்டில் சொல்வதில்லை என்ற உடன்பாட்டுக்கு வந்தோம். அக்கா எனது தலையையும் துடைத்துவிட்டாள். வயிறு என்னவோ செய்தது. வயிற்றில் உப்புத்தண்ணீர்.
 வீடு திரும்பினோம். வீட்டு வாசலுக்கு வந்ததுமே கடற்கரையில் நடந்ததை தம்பி மழலை குரலில் கக்கிவிட்டான். மீண்டும் எனக்குத்தான் பூவரசம் தடி அடி. அம்மா இருவரையும் கிணற்றடியில் குளிப்பாட்டினார்.
 கடல்தண்ணீர் வயிற்றிலிருக்கும் இரகசியத்தை மாத்திரம் நான் சொல்லவில்லை.
 இரவு உறக்கத்தில்  கடலும் அலையும் தம்பியை காப்பாற்றிய காட்சிகளுமே கனவில் வந்து தொல்லைப்படுத்தின. வாய் பிதற்றினேன். பாட்டி எழுந்துவந்து தொட்டுப்பார்த்தா.    “பபா ( அம்மாவின் செல்லப்பெயர்) இவனுக்கு மேல் கொதிக்குது” – பாட்டி நெற்றியில் திருநீறு பூசி தேவாரம் படிக்கத்தொடங்கினா.
 “ பாட்டி.... நல்லா கடல் தண்ணியை குடிச்சிட்டேன். என்னவோ செய்யிது... அம்மாட்ட சொல்லவேண்டாம்...” என்று மெதுவாக பாட்டியின் காதுக்குள் சொல்கிறேன்.
 “ முருகா…முருகா…” - பாட்டி என்னை தூக்கி எடுத்து வெளியே முற்றத்துக்கு கொண்டுபோய் வயிற்றை மெதுவாக அழுத்தினா.
 “ பெய்யடா….பெய்…” சிறுநீர் கழித்தேன்.
“ நாளைக்கு டொக்டரிடம் கொண்டுபோய் வஸ்தி பண்ணவேண்டும்.” என்றா பாட்டி.
“ அது என்ன வஸ்தி?”
“ பின்னால மலத்துவாரத்துக்குள்ளால் சவற்காரத்தண்ணியோட டியூப் செலுத்தி வயித்துக்குள்ள இருக்கிற கடல் தண்ணியை வெளிய எடுக்கிறதுதான்”
 இதைக்கேட்டதும் எனக்கு காய்ச்சல் மேலும் கூடியது.
மறுநாள் பாட்டியே டொக்டரிடம் அழைத்துச்சென்று சிகிச்சைக்குட்படுத்தி என்னை குணப்படுத்தினா.
 அந்தச்சம்பவத்துக்குப்பிறகு நான் பல நாட்கள் கடற்கரைப்பக்கமே போகவில்லை.
கடலில் நீந்திப்பழகவேண்டும் என்ற ஆசையும் நிராசையாகிவிட்டது.
 “ உனக்கு கடலில் கண்டம் இருந்திருக்கு. கடவுள் புண்ணியம் தப்பியிருக்கிற. இனி கடற்கரைக்குப்போனாலும் கால் நனைக்க போய்விடாதே.” என்று அம்மா புத்திமதி சொன்னார்கள்.
“ கண்டமா? அப்படியென்றால்... என்ன?” என்று  கேட்டேன்.
 “ உயிராபத்து.... சாத்திரியாரிடம் போய் உனது சாதகக்குறிப்பு காண்பித்து கேட்டேன். அவர்தான் சொன்னார்” என்று சொன்ன அம்மா, 2004 இறுதியில் வந்த சுனாமி கடற்கோளுக்கு முன்பே ஒரு வருடத்திற்கு முன்னர் மறைந்துவிட்டார்கள். அந்தச்சாத்திரியாருக்கு அம்மா எத்தனை ரூபா கொடுத்தார்கள் என்ற தகவல் எனக்குத்தெரியாது.
 சுனாமி வந்த காலத்தில் அம்மா இருந்திருந்தால், “கடற்கோளில் ஜலசமாதியடைந்த இலட்சக்கணக்கானோருக்கும் கடலில் கண்டம் இருந்ததா? அவர்களுக்கும் சாதகக்குறிப்பு இருந்திருக்குமா?” என்று சிலவேளை கேட்டிருப்பேன்.
 அந்தக் ’கண்டம்’  கடந்து சில மாதங்களில் தாத்தா இறந்தார். அவரது அஸ்தி கரைக்கும்போதுதான் கடலில் கால் நனைத்தேன். அதன் பிறகு சில வருடங்களில் பாட்டி மறைந்தார். அவர்களின் அஸ்தி கரைக்க கடலில் இறங்கினேன்.
 1983 இல் இனவாத வன்செயலில் மலையகப்பகுதிகளில் தனது வியாபார நண்பர்கள் சிலரை பறிகொடுத்த  அப்பா, அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து மறைந்தார். அவரது அஸ்தியுடன் கடலில் நனைந்தேன்.
 அம்மா மறைந்தபோது அந்தப்பாக்கியம் இல்லாமல் அவுஸ்திரேலியாவில் அழுதுபுலம்பினேன்.
 இப்பொழுது கடல் சூழ்ந்த ஒரு கண்டத்துக்குள் நீந்தவே தெரியாமல் பலவருடங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
 எனது பிள்ளைகள் இங்கு பாடசாலை ஊடாக நீச்சல் கற்றுக்கொண்டார்கள். எனது மகன் தனது தொழில் நிமித்தம் நீச்சலில் விசேட பயிற்சிகளும் பெற்றுவிட்டான். மனைவிக்கும் நீந்தத்தெரியுமாம். நான் பார்த்ததில்லை. நாளை ஒரு நாள் எனது பேத்தியும் நீந்துவாள். கடல் மாந்தர் பற்றி பல கதைகள் எழுதியிருக்கும் எனக்குத்தான்  நீந்தத்தெரியாது.
 இலங்கை, இந்தியா இந்துசமுத்திரம், அவுஸ்திரேலியா பசுபிக் சமுத்திரம், பிலிப்பைன்ஸ் கடல், கியூபா கரிபியன் கடல் முதலானவற்றில் கரையில் நின்று குளித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இளம்வயது கண்டம்தான் நினைவுக்கு வந்தது.
 
                           --0--





No comments: