மெல்பேர்னில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் வழங்கிய வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை - 2012

.

கலாநிதி.கௌசல்யா அன்ரனிப்பிள்ளை.


மெல்பேர்னில் உள்ள விற்றில்சீ பிரதேச சபையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட விற்றில்சீ தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடாத்திய வருடாந்த இரவு ஒன்று கூடல் நிகழ்வே வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை - 2012. மெல்பேர்னில் உள்ள nபுரும்பாலான தமிழ் மக்களால் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவும் 6மணியிலுருந்து இரவு 8மணிவரை விரும்பிக் கேட்க்கப்பட்டு வரும் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை, விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளைக் கடந்து தடைகள் எதுவுமின்றி வீடுகள் தோறும் ஒலித்துக் கொண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது.






வண்ணத் தமிழ் மாலை - 2012 நிகழ்வானது கடந்த 04.11.2012 ஞாயிற்றுக் கிழமை, மெல்பேர்னில் Epping Memorial  மண்டபத்தில் மாலை நிகழ்ச்சியாக பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத்தான் நிகழ்வுகள் என்றாலும் மாலை 5.30 மணயிலிருந்தே தமிழ் மக்கள் மண்டபத்தினுள் தடையின்றி பிரவேசித்துக் கொண்டிருந்தமை விழா ஒருங்கமைப்பாளர்களில், மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை எடுத்துக் காட்டியது. அவர்களின் அந்த நம்பிக்கை வீண்போகாமல் வண்ணத்தமிழ் மாலை 2012 நிகழ்வும் மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நேரத்திற்கே ஆரம்பிக்கப்பட்டது.



மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பாரதியாரின் தமிழ் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. அப்பாடலை மெல்போர்னில் பிரபல சங்கீத ஆசிரியை இசைக்கலைமணி, சங்கீத கலா வித்தகர் ஸ்ரீமதி.ரமா சிவராஜாவின் கவின் கலை இசைக் கல்லூரியின் மாணவிகள் செல்வி.அம்சவி.கோபாலசிங்கம், செல்வி.சாம்பிகா ஈஸ்வரநாதன், செல்வி.கேசினி அருள்நாவலன் ஆகியோர் இசைத்திருந்தனர். இதற்கு வாசவன் பஞ்சாட்சரம், அக்ஷன் வாசவன் பக்கவாத்திய வழங்கியிருந்தனர். பாடலைக் கேட்கும் போது காதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது.




விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் உபதலைவரும், வானமுதத்தின் அறிவிப்பாளர்களில் ஒருவருமான திரு.நவரத்தினம் அல்லமதேவன் அவர்கள் வந்திருந்த மக்களை வரவேற்று தனது வரவேற்புரையை வழங்கினார். விழா வெற்றிகரமாக அமைய மூலகாரணமாக இருந்த சங்கத்தின் தலைவர்.திரு.வில்லியம் இராஜேந்திரம் அவர்கள் தனது தலைமையுரையில் சங்கத்தின் நிகழ்கால மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.


விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் அழைப்பையேற்று சமூகமளித்த Victoria, Millpark  பாராளுமன்ற உறுப்பினர் Ms.Lily D'Ambrosio, Whittlesea Council,  Councillors ல் ஒருவரான Mr.Sam Alessi, Plenty Valley  FM நிறுவன சங்கத்தின் செயலாளர் Mr.Neil Roberts,  விக்டோரியா ஈழத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு.பா.சிவதாஸ், வானிசை வானொலியின் அறிவிப்பாளரும், தயாரிப்பாளருமான திரு.குமார் சின்னத்துரை ஆகியோர் வருகை தந்திருந்தமை பெருமைக்கும,; மகிழ்வுக்கும் உரிய நிகழ்வாகும்.



வருடாவருடம் வானமுதம் நேயர்களிடம் நிதி சேகரித்து Plenty Valley  நிறுவனத்தாருக்கு வழங்கப்படும் நிதி 1000 வெள்ளிகளுக்குரிய காசோலை அன்றைய தினம்  Mr.Neil Roberts  அவர்களிடம் வழங்கப்பட்டது. Ms.Lily D'Ambrosio, Mr.Sam Alessi, Mr.Neil Roberts ஆகியோர் தங்களது சிறப்புரைகளில் சங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருப்பதாகவும், தங்களால் ஆன உதவிகளைச் செய்யக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.




வானமுதத்தின் அறிவிப்பாளரும், நடன ஆசிரியையுமான ஸ்ரீமதி.நிருத்தசொரூபி தர்மகுலெந்திரன் அவர்களின் இந்தியன் நிருத்தா பைன் ஆர்ட்ஸ் நடனப்பள்ளியின் மாணவிகள் செல்வி.அன்றியா சஹானி கனிசியஸ், செல்வி.தர்ஸிகா ஸ்ரீகமலநாதன் ஆகியோர் வழங்கிய நடனமும் மிகவும் சிறப்பாகவிருந்தது. நிகழ்ச்சி ஒருங்கைமைப்பாளாகளில் ஒருவரான திரு.எட்வேட் அருள்நேசதாசனின் நெறியாள்கையில் தயாரித்து வழங்கப்பட்ட ஆடலுடன் சேர்ந்த பொப்பிசைப்பாடல்கள், நகைச்சுவை கலந்த விடுகதை விளக்கங்களும் சபையோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. வழமைபோல் நகைச்சுவை நடிகர் சபார் நானா அவர்களின் பேச்சு நடை மக்களால் விரும்பி ரசிக்கப்பட்டது.


முக்கியமாக இந்த நிகழ்வுக்கு இசையை வழங்கிய செல்வன்.கீர்த்திகன் சீவராஜா, செல்வன்.கிருஷிகன் சீவராஜா ஆகியோர் வயதில் சிறுவர்கள் என்றாலும், இசைத்திறமையில் வளர்ந்தவர்களாகவே இருந்ததைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ~~நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் "  ..... என்ற பாடல் அந்தக்காலத்தில் மட்டுமல்ல இந்தக்காலத்திலும் மக்களால் விரும்பிக் கேட்க்கப்படும் கம்பீரமான பாடலை இந்தச் சிறுவர்கள் M.G.R
  ப் போல் வேடமளித்து, அவரைப் போலவே நடித்துக், கணீரென்ற குரலில் பாடியமை பலராலும் பல மாதங்கள் மறக்கமுடியாது என்றே கூறவேண்டும்.



சிறிய பாலகர்கள் இப்படித் திறமையாக நடிக்க முடிந்தமை சபையோரை ஆச்சரியப்பட வைத்ததுடன், அவர்களை நெறிப்படுத்தியவர்களின் திறமையையும் எண்ணி வியக்கவைத்தது.


கண்ணுக்கும், காதுக்கும் மட்டுமல்லாது வண்ணத் தமிழ் மாலை மக்களின் நாவிற்கும் விருந்தளித்து மகிழ்வூட்டியது. சிற்றுண்டியுடன் மட்டுமன்றி சுடச்சுட சுவையான அப்பங்கள், பாலப்பம், முட்டையப்பம், வெள்ளையப்பம் என்று மக்களை சுவைத்து, ரசித்து உண்பதுடன் பாடலகளையும் ரசித்து, நகைச்சுவை விடுகதைகளையும் கேட்டு சிந்தித்துச் சிரிக்க வைத்ததுடன் வீடு திரும்ப மனமின்றி இறுதிவரை இருக்கையிலேயே இருத்தி வைத்திருந்தமை விழா அமைப்பாளர்களை ஆச்சரியத்திலும், சங்கடத்திலும் ஆழ்த்தியிருக்கும் என்பது உண்மை. மறுநாள் வேலை நாள் காரணமாகவே மக்கள் மனமின்றி வீடுதிரும்பினர் என்றே கூறவேண்டம்.


விற்றில்சீ பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போவதனால் இப்படியான உள்ளுர் ஒன்று கூடல்கள் இப்பிரதேச மக்களுக்குத் தேவையென்பதை இன்றைய நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டி நிற்கின்றது. இதற்காக இந்தப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களில் ஒரு பிரஜை என்ற முறையில் இச்சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.


1 comment:

Anonymous said...

Thank you for publishing this article. It is great to see that such a tamil publication to promote the Tamil news.