உலகச் செய்திகள்

.

எகிப்திய விமானப் பணிப்பெண்களுக்கு புதிய சட்டம்

பொருளாதாரத் தடையினால் தினசரி 100மில்லியன் டொலர்களை இழக்கும் ஈரான்

திருநீறு அணிந்து சிவனை வணங்கிய கனேடிய பிரதமர்

இன்று (10/11/2012)  மலாலா தினம்!

எகிப்திய விமானப் பணிப்பெண்களுக்கு புதிய சட்டம்

 
விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைக்கும் விதத்தில், முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும் என எகிப்து அரசு, வலியுறுத்தியுள்ளது.

எகிப்து நாட்டில், ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அளவில் விதிக்கப்படவில்லை. மக்கள் புரட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக், ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றது.


இதனையடுத்து மொஹமட் முர்சி ஜனாதிபதியாகியுள்ளார்.

இந்த ஆட்சியில், பழமைவாத கொள்கைகள் அதிகம் பின்பற்றப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பர்தா அணிய வேண்டும் என, வற்புறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, விமானப் பணி பெண்களும், தலைமுடியை மறைக்கும் விதத்தில் முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்' என, வற்புறுத்தப்பட்டுள்ளது.

எகிப்து விமானத் துறையில், 900 பணி பெண்கள் உள்ளனர். இவர்கள், பணியில் இருக்கும் போது, முக்காடிட்டு கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி














பொருளாதாரத் தடையினால் தினசரி 100மில்லியன் டொலர்களை இழக்கும் ஈரான்
By General
2012-11-14
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால் அந்நாட்டுக்கு தினசரி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்படுவதாக சர்வதேச சக்தி முகவராண்மை தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஈரான் கடந்த வருடம் நாளொன்றுக்கு 2.3 மில்லியன் மசகு எண்ணெய் பெரல்களை ஏற்றுமதி செய்துள்ளது.

எனினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 1.3 மில்லியன் பெரல்களையே அதனால் ஏற்றுமதி செய்யமுடிந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொள்ளும் போது தற்போதைய எண்ணெய் விலையின் அடிப்படையில் தினசரி சுமார் 109 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை ஈரான் இழந்து வருகின்றது.

இதேவேளை இவ் வருவாய் இழப்பானது கணிப்பிடப்பட்டதினை விட அதிகம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மசகு எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கே அதனை ஈரான் வழங்குவதால் அந்நாட்டிற்கு அதிக நட்டமேற்படுவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.      
நன்றி வீரகேசரி






  திருநீறு அணிந்து சிவனை வணங்கிய கனேடிய பிரதமர்
By General
2012-11-10

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நேற்றுமுன்தினம் பெங்களுருக்குச் சென்று அங்குள்ள சோமேஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளதோடு அங்கு கனடாவுக்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார்.
இந்து சமய முறைப்படி பதணிகளைக் கழற்றிவிட்டு கோயில் பிரகாரத்துக்குள் சென்ற ஹார்ப்பருக்கு சோமேஸ்வர ஆலய பிரதம குருக்கள் சால்வை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வரவேற்றார். அதன் பின்னர் திருநீறு அணிந்து சிவனை வணங்கினார்.
அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூஜைகளிலும் அவர் கலந்துகொண்டார். கோயில் பிரகாரத்தை குருக்களுடன் இணைந்து சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் பெங்களுரில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறந்துவைத்தார்.       நன்றி வீரகேசரி






  இன்று மலாலா தினம்!
By General
2012-11-10


தன்னைப் போன்ற சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவை கௌரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் திகதியை (இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா.

பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய் (14). பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய இந்த சிறுமியை கடந்த மாதம் தலிபான் தீவிரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில், மலாலாவை கௌரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கோர்டன் பிரவுன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மலாலா குறித்து ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம். கல்வி ஒரு அடிப்படை உரிமை. மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க உலக முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 நன்றி வீரகேசரி





No comments: