இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டி

இலங்கையை வீழ்த்தி முதல்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி
By M.D.Lucias
2012-10-07
இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அது மாத்திரம் இன்றி, இருபதுக்கு20 போட்டி
வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை இலங்கையை வெற்றி கொண்டதே இல்லை. இலங்கை அணியுடன் மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மேற்கிந்திய அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்திருந்தது. ஆனால் அந்த வரலாற்றை மேற்கிந்திய அணியினர் இன்று மாற்றியமைத்து விட்டனர்.
12 அணிகள் பங்கேற்ற இந்த உலக கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுடனும், மற்றுமொரு முன்னாள் சம்பியன் பாகிஸ்தான் அரையிறுதியுடனும் வெளியேற்றப்பட்டன. இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


இந்த நிலையில் புதிய உலக சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை- மேற்கிந்திய அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் இதுவரை இருபதுக்கு20 உலக கிண்ணத்தை வென்றதில்லை என்பதால், முதல் முறையாக மகுடம் சூடும் ஆர்வத்தில் இரு அணிகளும் களமிறங்கின.
உள்ளூர் சூழல், இரசிகர்களின் ஆரவாரத்துடன் இலங்கை அணியும் கிண்ணத்தை கைப்பற்றி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுப்போம் என்ற உத்வேகத்துடன் மேற்கிந்திய அணியினரும் களம்கண்டனர்.


இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இப்போட்டியில் மேற்கிந்திய அணியில் எவ்வித மாற்றமும் இருக்க வில்லை. இதேநேரத்தில் இலங்கை அணியில் ரங்கன ஹேரத்திற்கு பதிலாக அக்கில் தனஞ்ஜெய களம் இறக்கப்பட்டார்.
அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கெயிலுடன் ஆரம்ப வீரராக களமிறங்கிய சார்ல்ஸ், மெத்தியூஸ் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் குலசேகரவிடம் பிடிகொடுத்து எவ்வித ஓட்டங்களை பெறாது அரங்கு திரும்பினார்.
இதனையடுத்து சேம்வேல்ஸ் கெயிலுடன் கைகோர்த்தார். குலசேகரவினார் வீசப்பட்ட இரண்டாவது ஓவரில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. தொடர்ந்து மெத்தியூஸ் வீசிய மூன்றாவது
ஓவரிலும் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. எனினும் 3ஆவது ஓவர்கள் முடிந்தும் கெயில் எவ்வித ஓட்டங்களையும் பெற்றிருக்க வில்லை.

இதேவேளை இலங்கை அணியினரின் பந்து வீச்சு ஓங்கியிருந்தது. போட்டியின் முன்னர் பல சவால்களை விடுத்திருந்த கெயில் கடந்த போட்டிகளில் போன்று இந்த போட்டியிலும் மிரட்டுவரா என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதற்கு பதில் கிடைத்தது.

அதாவது இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு கெயில் மிரண்டு 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். அஜந்த மெண்டிஸ் வீசிய 5.5 பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் பெட்டிங் பவர்பிளே முடிவடைய மேற்கிந்திய அணியினரால் இரு விக்கெட்டுகளை இழந்து 14 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
தொடர்ந்து சேம்வேல்ஸ் மற்றும் டிவேயின் பிராவோ ஆகியோர் இணைந்து அணியியை சரிவிலிருந்து மீட்டனர்.

ஒருபுறம் சேம்வேல்ஸ் சிக்சர் மழைகளை பொழிய மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
எனினும் அஜந்த மெண்டிஸ் வீசிய 15.2, 3 பந்துகளில் பொலார்ட், ரசல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து டெரன் சமி 26, சேம்வேல்ஸ் 78 வலுச் சேர்க்க மேற்கிந்திய அணி 20 ஓவர்களில் 137 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணியின் பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிற்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணியில் ஆரம்பத்தை பெற்று கொடுக்க ஜயவர்தனவுடன் களம்கண்ட டில்சான் முதல் ஓவரிலேயே எவ்வித
ஓட்டங்களும் பெறாது அதிர்ச்சியளித்தார்.

பின்னர் ஜயவர்தனவும் சங்கக்காரவும் பொறுமையாக ஆடியபோதும் சஙகக்கார 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க களத்தில் இருந்த
ஜயவர்தனவும் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அரங்கமே அமைதியாக காணப்பட்டது. ஜீவன் மெண்டிஸ் 3, பெரேரா 3, திரிமனே 4 என ஏமாற்றமளித்தனர்.

இதன்பின்னர் குலசேகர களமிறங்கி ராம்போல் வீசிய 16 ஓவரில் 21 ஓட்டங்களை விளாசினார். இதனால் அமைதியாக இருந்த அரங்கமே ஆனந்தத்தில் பொங்கியது.
எனினும் இந்த ஆனந்தம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. 16.3 ஆவது பந்தில் குலசேகர 26 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்து வந்த மாலிங்க 5, மெண்டிஸ் 1 என ஏமாற்றமளிக்க இலங்கை அணி தோல்வியை தழுவியது.
மேற்கிந்திய அணியின் பந்து வீச்சில் சுனில் நரேயன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2007 மற்றும் 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலகக் கிண்ணம், 2009ஆம் ஆண்டு இருதுக்கு20 உலக கிண்ண ஆகியவற்றில் இறுதிவரை வந்து தோல்வியை தழுவிய இலங்கை அணி, இந்த முறை சொந்த மண்ணிலும் இறுதிவரை வந்து தோல்வியையே தழுவுவோம் என்பதை நிரூபித்துள்ளது.நன்றி வீரகேசரி


No comments: