நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு - இனிய தமிழ் மாலை - 2012


                                                                                        
படப்பிடிப்பு  சோதி

தொகுப்பு: தி. திருநந்தகுமார்
ஜேம்ஸ் ரூஸ் பாடசாலை சிட்னி தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பாடசாலை. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அப்பாடசாலை நோக்கி நம்மவர்கள் பெருமளவில் சென்றமைக்குக் காரணம் வேறொன்று. முதல் நாளில் இருந்தே மண்டபம் பரபரப்பாக இருந்தது. உபயம்: ஈஸ்வூட் தமிழ்க் கல்வி நிலையம்.  முதல் நாள் மாலையே மேடை அலங்காரம், ஒத்திகை என அமர்க்களப்பட்டது மண்டபம். அதற்கிடையில் பாலர் மலர் தமிழ்ப் பாடசாலை நண்பர்கள் மண்டபம் முழுதும் கதிரைகளை இல்லை இருக்கைகளை நிரப்பிவிட்டனர். விழா அன்று மாலை மண்டப வாயிலில் சிறிய, எளிமையான ஆனால் அழகான கோலமும் நிறைகுடமும் வந்தோருக்குக் வரவேற்புக்கூறியது.
பிற்பகல் நான்கு பதினைந்திற்கே சிறுவர்களும் பெரியோர்களுமாக வரத்தொடங்கிவிட்டனர். என்ன காரணம் என்று சொல்லவில்லையா? ஆமாம். நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு நாடாத்திய இனிய தமிழ் மாலை தான் அன்று. சில வருடங்களாக பரீட்சைகள், செயலமர்வுகள், பாடநூல் வினியோகம் என மட்டுமே செயற்பட்ட பாடசாலைகள் கூட்டமைப்பு இவ்வருடம் எல்லாப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து இனிய தமிழ் மாலை என்ற பெயரில் நடத்திய கலைவிழா தமிழ்ப் பாடசாலை சமூகத்திற்கே ஒரு உற்சாக பானம் என்றால் அது மிகையல்ல. 


தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2011 இன் பரிசளிப்பு விழா நடைபெற்றபோது, அங்கு சந்தித்துக்கொண்ட தமிழ் பாடசாலைகளின் நிர்வாகிகள் சிலர் கூட்டமைப்பிற்கு ஒரு புதிய நிர்வாகக் குழுவை தெரிவு செய்யவேண்டியதன் அவசியத்தை விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பல சுற்றுகள் சிறியதும் பெரியதுமான மின்னஞ்சல் ஆலோசனைகளுக்குப் பின் ஆறு பாடசாலைகளும் தமது பிரதிநிதிகளை ஆண்டுக் கூட்டதிற்கு அனுப்பிவைத்தனர்.  அங்கு பிரதிநிதிகள் ஒன்று கூடி புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவுசெய்தனர். இது நடந்தது 2011 நவம்பரில்.
திரு. ஜெ.கதிர்காமநாதன் தலைமையில் இயங்கத் தொடங்கிய கூட்டமைப்பின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது எல்லாப் பாடசாலைகளையும் உள்ளடக்கி ஒரு கலைவிழாவை நடத்துவது.  இந்த ஆண்டின் முற்பகுதியில் கலைவிழாவை நடாத்தும் பொறுப்பு உபதலைவர் திரு க. சிவசுப்பிரமணியதிடம் கொடுக்கப்பட்டது. அவர் தலைமையிலான கலைவிழாக்குழு இனிய தமிழ் மாலையை சிறப்பாக ஏற்பாடு செய்தது. ஐந்து மணிக்கு விழா ஆரம்பமாக இருந்தது. எனினும் பிரதம விருந்தினர் வருகை மற்றும் ஒலி அமைப்பு காரணமாக பதினைந்து நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது. அப்போது மண்டபம் பெரும்பாலும் நிறைந்துவிட்டிருந்தது. ஆறு தமிழ்ப் பாடசாலைகளின் தலைவர்களும் வரிசையாக கலாசார உடையில் நின்று மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.
பாலர் மலர் தமிழ்ப் பாடசாலைகள் சார்பில் மூன்று பாடசாலைகள் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தன. ஏனைய பாடசாலைகள் தலா ஒரு நிகழ்ச்சி வீதம் வழங்கின.
இன்னொரு சுவாரசியமான விடயம் மூன்று பாடசாலைகள் இராமாயணக் காப்பியத்திலிருந்து காட்சிகளை அன்றைய விழாவில் மேடையேற்றியமை. ஓபன் தமிழ் ஆலய மாணவர்கள் வில்லுப்பாட்டில் இராமாயணத்தை இசைக்க, பாலர் மலர் செவன்கில்ஸ் மாணவர்கள் இராம கதையை நடித்திருந்தனர். ஈஸ்வூட் மாணவர்கள் இராமாயண நாடகத்தை மேடையேற்றிய விதம் புதுமையாக இருந்தது. ஒவ்வொரு காட்சி மாறும்போதும் மேடையில் நடிகர்கள் உள்நுழைந்ததும் வெளியேறியதும் அழகாக இருந்தது. பாலர் மலர் சிறுவர்களின் காவடியாட்டத்துடன் கூடிய வரவேற்பு நடனம், எல்லா மாணவர்களும் பங்குபெற்ற தமிழ் இனிச் சாகாது என்ற மவுண்ட் றூயிட் பாடசாலையின் நாடகம், நேரம் கடந்த போதும் உற்சாகமாக ஹோம்புஸ் மற்றும் வென்ற்வேத்வில் உயர்வகுப்பு மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் என எல்லாமே சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.

கூட்டமைப்பின் தலைவர் திரு கதிர்காமநாதன் அவர்களின் சுருக்கமான தலைமையுரையில் விழாவின் தேவை, ஏற்பாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாகத் தொட்டுக்காட்டினார்.
அத்துடன் வானொலி மாமா மகேசன் அவர்களின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடும் விழாவின் ஒர் அங்கமாக இடம்பெற்றது.  செளந்தரி கணேசன், திரு குலம் சண்முகம் ஆகியோரின் உரைகளுடன் இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் வானொலி மாமா அவர்களின் மூன்று பாடல்களுக்கு மவுண்ட் றூயிட், ஹோம்புஸ் மற்றும் ஓபன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் ஆடியும் பாடியும் சபையோரை மகிழ்வித்தனர். தவிர்க்கமுடியாத காரணங்களினால் நேரடியாக விழாவுக்கு வரமுடியாத போதும் வானொலி மாமா மகேசன் அவர்கள் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் ஆற்றிய தொண்டிற்கு பதிலாக எதுவும் ஈடாகாது என்ற போதும், அன்று மாணவர்களின் மேடை நிகழ்வுகள் வானொலி மாமாவை பேருவகைப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. மகேசன் ஐயாவின் பேரன் அரன் கேதீசன் அவர்கள் வானொலி மாமாவின் நன்றியுரையை வாசித்தார்.


இவ்விழாவின் சிறப்பு எல்லாப் பாடசாலைகளும் தமது நிகழ்ச்சிகளை தனிக்கவனம் எடுத்து தயாரித்து மேடையேற்றியமையே என்பது விழா நடைபெற்றபோது தெரிந்தது. வண்ணமயமான கோல உடைகளுடன் மாணவர்களின் வாயிலிருந்து பிறந்த செல்லத் தமிழ் வெல்லத் தமிழாக இனித்தது.


இனிய தமிழ்மாலையில் சுவாரசியங்களுக்குக் குறையிருக்கவில்லை. அன்று தமிழ்நாட்டிலிருந்து சிட்னிக்கு வருகை தந்திருந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் இனிய தமிழ் மாலைக்கு வந்திருந்து நிகழ்ச்சிகளை பார்த்து இரசித்ததோடு அங்கு உரையாற்றி எல்லோரையும் மகிழ்வித்தார். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் அம்பி என அழைக்கப்படும் தமிழ் மணி இ. அம்பிகைபாகர் அவர்களுக்கு சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன் வானொலி மாமா மகேசன் அவர்களின் பாடல் ஒன்றை விதந்துரைத்து அதனை தமிழ் நாட்டின் மேடைகள் தோறும் பேசுவேன் என பெருமையோடு குறிப்பிட்டார். ஓடிடும் தமிழா! நில் நீ எனும் தன் பாடலின் சில அடிகளைக் குறிப்பிட்டுச் சுருக்கமாகப் பேசிய கவிஞர் அம்பி அவர்கள் ’பாடிடும் தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே’ என கூறி முடித்தபோது உருக்கமாக இருந்தது. தனது தள்ளாத வயதிலும் ஆறு மணியிலிருந்து நிகழ்ச்சிகள் முடிவடைந்த பதினொரு மணிவரை மண்டபத்தில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை இரசித்தார்.


நி.ச.வே மாநிலத் தமிழ்ப் பாடசாலைகளில் இருபது, பதினைந்து மற்றும் பத்து வருடங்கள் தொடர்ச்சியாகச் சேவைபுரிந்த தமிழ் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டமை விழாவின் பெருமைக்கு மெருகூட்டிய இன்னொரு அம்சமாகும். ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலையிலிருந்து ஐந்து ஆசிரியர்களும், வென்வேர்த்வில் பாடசாலையிலிருந்து ஒருவரும் இருபதுவருடங்களுக்கு மேல் சேவையாற்றியமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.  அதே போல் ஹோம்புஸ்ஸிலிருந்து ஏழு ஆசிரியர்களும், வென்வேர்த்வில்லிலிருந்து மூன்று ஆசிரியர்களும், பாலர்மலர் பள்ளிகளில் இருந்து இருவரும் பதினைந்து வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகச் சேவையாற்றியமைக்கு கௌரவம் பெற்றனர். மேலும் பத்து வருடங்களுக்கு மேல் ஆசிரியப் பணி புரிந்தமைக்காக ஹோம்புஸ், வென்வேர்த்வில், ஈஸ்ட்வூட், ஓபன் மற்றும் பாலர்மலர் பாடசாலைகளில் இருந்து பதினைந்து ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். கௌரவிப்பின் முத்தாய்ப்பாக அமைந்தது ஓபன், வென்வேர்த்வில் மற்றும் ஹோம்புஸ் பாடசாலைகளில் தமிழ் கற்பிக்கும் இளம் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை எனக் கூறலாம். மொத்தம் உள்ள 15 ஆசிரியர்களில் இருவரைத் தவிர ஏனையோர் இங்குள்ள பாடசாலைகளில் தமிழ் கற்பித்து பின் தமிழ் ஆசிரியர்களாக விளங்குவது பெருமைக்குரிய விடயமே. இது ஐரோப்பிய தமிழ் பாடசாலைகளில் உள்ள நிலையை ஒத்ததாகும். மேலும் இளம் ஆசியர்களான செல்வன் தணிகைவாசன் மற்றும் செல்வி டினோசியா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியமை விழாவுக்குச் சிறப்புச் செய்தது.


நிகழ்ச்சிகளின் இடையே சிறப்பு விருந்தினர்களின் உற்சாகமூட்டும் சிறப்புரைகள் இடம்பெற்றன. நி.சவே மாநில அரசின் அமைச்சர் கௌரவ விக்டர் டொமினெல்லோ சார்ப்பில் விழாவில் கலந்துகொண்ட ஸ்ராத்பீல்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் கசுசெல்லி விழாவின் பெரும்பகுதியும் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டதோடு கலகலப்பாகப் பேசி சபையோரைப் பரவசப்படுத்தினார். ஆசிரியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.  பரமட்டா தொகுதியின் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி ஓவன்ஸ், நி.ச.வே கல்வித்திணைக்களத்தில் பாடவிதானம்,  கற்கைகள் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் இயக்குனர் (Director of Curriculum Learning and Development) திரு ராஜு வாரணாசி ஆகியோரும் சிறப்புரையாற்றியதோடு ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கினர். சிட்னி பல்கலைக்கழகத்தின் கல்விப் பீட இணைப்பேராசிரியர் கென் குறுக்‌ஷாங் அவர்கள் தனதுரையில் இரண்டு மொழிபேசும் வாய்ப்புள்ள மாணவர்கள் பெற்ற நன்மைகள் தொடர்பான ஆய்வை தொட்டுக்காட்டியதோடு சமூக மொழிப்பாடசாலைகளில் தமிழ்ப் பாடசாலைச் செயற்பாடுகளின்  உயர்ந்த தரம் பற்றியும், பாடவிதானம், ஆசிரிய பயிற்சிகள் மற்றும் பாடநூல்கள் தொடர்பான தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தனித்தனியாக அறிவுரையும் பாராட்டுகளும் வழங்கி உரையை நிறைவுசெய்தார். நி.ச.வே. சமூகமொழிப் பாடசாலைகளின் கூட்டமைப்புத் தலைவரின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி அலுவலர் அலெக்ஸ். டீபிரின்சியோ அவர்களும் சிறப்புரையாற்றினர்.இவ்விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் திரு பாலா பாலேந்திரா மற்றும் திருமதி பாலேந்திரா, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் அடங்குவர். திரு திருமதி பாலேந்திரா, சிட்னியில் இயங்கும் தமிழ்க் கல்வி நிலையங்களை ஆரம்பித்த நால்வரில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலாநிதி வேந்தனார் இளங்கோ ஞாபகார்த்த தமிழ்ப் புலமைப் பரீட்சையில் சிறப்புச்சித்தி பெற்ற உயர்வகுப்பு மாணவர்களுக்குப் திரு பாலேந்திரா அவர்கள் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார். நியூசவுத்வேல்ஸ் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் கலாநிதி நடராஜா கௌரிபாலன் மற்றும் செயலர் ஸ்கந்தகுமார் ஆகியோரும் மாணவருக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.


தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கூட்டமைப்பின் நலன்விரும்பிகள் என பத்து டொலர் நுழைவுச்சீட்டுடன் மண்டபம் முழுவதும் நிறைந்திருந்த சபையோரை விழாக் குழுவினர் எதிர்பார்க்கவில்லைப் போலும். உணவுப்பொருள் எல்லாம் விற்றுத்தீர்ந்துவிட்ட போதிலும் உணவகத்தை நிர்வகித்த வென்வேர்த்வில் பாடசாலைத் தொண்டர்கள் விரைவு உணவகத்திலிருந்து சுடச்சுட பிற்சா தருவித்து சபையோரின் தேவையைப் பூர்த்திசெய்தனர்.விழாவில் கிடைத்த இன்னொரு சுடச்சுட அம்சம் விழா மலர். ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் சார்பில் கலாநிதி அனுசியா கண்ணனின் உழைப்பில் உருவான இனிய தமிழ் மாலை விழாமலர் பிரமுகர்கள் வருகைதந்த பின்னர் வினியோகிக்கப்பட்டது. தமிழ்க் கல்விச் சமூகம் பெரிதும் பேணிக்காக்கவேண்டிய அரிய பொக்கிசம் இது எனலாம்.
விழா முடிந்து மண்டபத்தை நிர்வாகிகளும் பாலர் மலர் தொண்டர்களும் துப்பரவு செய்து முடிக்கும்போது நடுநிசியைத் தாண்டியிருந்தது. இம்முறை விழா பதினொரு மணியைத் தாண்டிச் சென்றமைக்குரிய காரணிகளை சற்று ஆராய்ந்து அடுத்த முறை அவற்றைத் செம்மைப்படுத்தலாம். எனினும் எல்லா நிகழ்ச்சிகளும் பெரிதும் இரசிக்கும்படியாக இருந்தன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.  அதுமட்டுமன்றி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டமைப்பின் நாடகப் போட்டிகளுக்குப் பின் எல்லாத் தமிழ்ப் பாடசாலைகளும் இணைந்து நடாத்திய முதல் விழா இது என்பதில் பாடசாலை நிர்வாகிகளும் பெற்றோர்களும் பெருமைப்படலாம். 

சிட்னியில் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பு தனித்துவம் மிக்கதொரு அமைப்பாக விளங்குவதற்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு கலங்கரை விளக்காகத் திகழ்வதற்கும் இவ்வருட இனிய தமிழ் மாலை கால்கோள் இட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
நி.ச.வே தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பிற்கும் தமிழ் மாணவர்களுக்கும் பாராட்டுகள். இனிய தமிழ் மாலை தொடர்பாகவோ அல்லது தமிழ்க் கல்வி தொடர்பாகவோ வாசகர்கள் தங்கள் கருத்துகளை தயக்கமின்றி வெளிப்படுத்தலாம்.  கூட்டமைப்பின் மின்னஞ்சல் முகவரி: nswfts@gmail.com


No comments: