இனிய தமிழ்மாலை 2012 என்பார்வையில் -மேளின் ஜேசுரட்னம்

.


மண்டபத்திற்குள் நுழையும் போதே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வர, மேள, தாள இசை மனதிற்கு இதமாக இருந்தது. மண்டபம் பெற்றோர்களாலும், தமிழ்ப் பாடசாலை மாணவர்களாலும், பார்வையாளர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சிகள் பிற்பகல் 5.15 மணியளவில் ஆரம்பமாகின. இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர்களான தினேஷாவும், தணிகைராஜனும் வரவேற்புரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றினார்கள். அதைத் தொடர்ந்து மங்கள விளக்கை, Nளுறு தமிழ்ப் பாடசாலைக் கூட்டமைப்பின் தலைவர் கதிர்காமநாதன் ஜெகநாதனும், தமிழ்ப் பாடசாலைகளின் நிர்வாகத் தலைவர்களும் ஏற்றி வைத்தார்கள். பின் தமிழ் மொழி வாழ்த்தும், அவுஸ்திரேலிய தேசிய கீதமும் மாணவர்களால் பாடப்பட்டதைக் தொடர்ந்து, தமிழுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த, அனைத்து உறவுகளுக்காக ஒரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.


பின் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியன. முதலாவதாக வரவேற்பு நடனம் குவக்கேர்ஸ் கில் பாலர் மலர் பாடசாலை மாணவர்களால் வழங்கப்பட்டது. வேலன் பாட்டு இசைத்தட்டில் ஒலிக்க, அதற்கு நாலு சிறுவர்கள் காவடி ஆடினார்கள். மேடை நடுவில் முருகன் வேலுடனும், மயிலுடனும் நிற்க  இரு சிறுமிகள் அவனுக்கு துதிசெய்வதாக அந்நடனம் அமைந்திருந்தது. இரண்டாவதாக இராமாயணக் கதை வில்லுப்பாட்டாக ஓபன் தமிழ் ஆலய மாணவர்களால் அழகாகப் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து மவுண்ட் றூயிட் தமிழ் பாடசாலை மாணவர்களால் ~~தமிழ் இனி சாகாது|| என்ற நாடகம் நடித்துக்காட்டப்பட்டது. தமிழை வளர்த்த திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் போன்ற பெரியார்கள், தாய் நாட்டைவிட்டுப் புறப்பட்ட தமிழர்களிடையே தமிழ் எப்படி இருக்கிறது என நேரில் பார்க்க விரும்புவது போல் அந்நாடகம் அமைந்திருந்தது. இரு நடனங்களையும் உள்ளடக்கி, முழு பாடசாலை மாணவர்களையும் இந்நாடகத்திற்குள் உள்வாங்கியிருந்தது சிறப்பாக இருந்தது.


 அடுத்து செவன் கில்ஸ், பாலர் மலர் பாடசாலை மாணவர்களின் இராமயண நாடகமும், கோல்ஸ்வேதி பாலர் மலர் பாடசாலை மாணவர்களால் மதுரைப் பாட்டிற்கு குத்துப் பாட்டு நடனமும் அரங்கேறின. இதைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு இராமயண நாடகம் ~~ தம்பியுடையோன் படைக்கு அஞ்சான்|| என்ற தலைப்பில் ஈஸ்வூட் தமிழ் பாடசாலை மாணவர்களால் நடித்துக்காட்டப்பட்டது. இந்நாடகத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவெனில், பழையதை வைத்துக் கொண்டு பகையை வளர்க்கமாட்டோம், அன்பால் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பலம் அடைவோம் என்று அவர்கள் கூறிய அறிவுரை தற்காலத்திற்கு மிகப் பொருத்தமாயிருந்தது. இதனையடுத்து தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் தலைவரின் உரை இடம்பெற்றது. அதன்பின் வானொலி மாமா நா. மகேசனின் சிறுவர் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டை, சௌந்தரி கணேசனும், குலசிங்கமும் முன்னுரைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.  இந்த இறுவட்டிலுள்ள ~~வந்தது வந்தது வசந்தம்|| என்ற பாடலுக்கு மவுண்ட் றூயிட் பாடசாலை மாணவர்கள் ஆடிய நடனமும்;, ~~தம்பி எங்கே போகிறாய்|| என்ற பாடலுக்கு ஓபன் பாடசாலை மாணவர்கள் அளித்த அபிநய நடனமும், ~~மரமே, மரமே, மாமரமே|| என்ற பாடலுக்கு ஹோம்புஷ் மாணவர்கள் ஆடிய நடனமும், பின் அந்த பாடலைத் தாமே பாடிக்காட்டியதும்  இந்த வெளியீட்டிற்கு மேலும் மெருகூட்டின. இதன்பின் தமிழ்ப் பாடசாலைகளில் நீண்ட நாட்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களைக் கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்குமுன், சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பரமற்றா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யூலியா ஓவன் தனது உரையில், இங்கு புலம்பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையிலேயே, பல தமிழ்ப் பாடசாலைகளை ஸ்தாபித்து, எமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றை வளர்க்க உதவிய தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார்.ஆசிரியர்கள் கௌரவிப்பைத் தொடர்ந்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, கலைவிழாவிற்கு சமூகம் அளித்திருந்த முனைவர் சிலம்பொலிச் செல்லப்பனின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில், ஆசிரியர்கள் மாணவர்களின் இளவயதிலேயே அவர்கள் மனதில் நல்ல செய்திகளை விதைத்து, தன்னம்பிக்கையை ஊட்டவேண்டுமெனவும், ஒரு பூ மாலையில் பலவிதமான பூக்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தம் இயல்புகளிலிருந்து மாறாமல் இருப்பது போலவே, நாமும் மற்றைய கலாசாரங்களுடன் கலந்திருந்தாலும், எமது பண்பாடு, கலாசாரத்தை இழக்காமல் இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அடுத்ததாக சிலம்பொலிச் செல்லப்பன்,  கலைவிழாவின் பிரதம விருந்தினர் அம்பி மாஸ்ரருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தபின், அம்பி மாஸ்ரரின் சிறிய உரை இடம்பெற்றது. தனது உடல் இயலாமையின் மத்தியிலும் பேசிய அவர், வீட்டில் தமிழைப் பேசுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

கலைவிழாவில் கவனிக்கப்படவேண்டியவை

1. திரையை அடிக்கடி மூடித்திறத்தல்.
2. ஒலிவாங்கிகளின் தரம்,
3. இரண்டு நிகழ்ச்சிக்களுக்கிடையே நீண்ட இடைவெளி,
4. நிகழ்ச்சி நடைபெறாத சமயம், மேடைக்குள்ளிருந்து கதைப்பவர்கள், வெளியே கேட்காமல் கதைத்தல்,
5. நேரமுகாமைத்துவம், சில நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் எடுத்தன,
6. ஒரே கருத்தில், தலைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் மேடையேற்றலைத் தவிர்த்தல். 3 இராமாயண நாடகங்கள் அன்று இடம்பெற்றன.

1 comment:

Unknown said...

Dear Editor, This review was prepared by Wentworthwille Tamil Study teacher, Merlin Jesuretnam. I just forwarded it to Tamil Murasu. If possible, please chnge the name accordingly. Thanks. - Sritharan