தமிழ் சினிமா

தாண்டவம் 

பார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம்.
சாலையோரம் நின்றிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார்.
காரில் இருந்து இறங்கி சென்ற விக்ரம் ஒருவரை கொலை செய்து விட்டு மாயமாகிறார். இந்த கொலையை லண்டன் பொலிஸ் அதிகாரியான நாசர் விசாரணை செய்கிறார்.
முதலில் அங்கு நின்றிருந்த காரை வைத்து சந்தானத்தை பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில் இவர் அப்பாவி என்பதை உணர்ந்து நாசர் விட்டுவிடுகிறார்.
லண்டன் அழகியாக தெரிவாகும் எமி ஜாக்சன் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு தனியார் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக போலியாக சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு முதியோர் இல்லத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது விக்ரமை சந்திக்கிறார் எமி.
இந்த சந்திப்பினால் விக்ரம் மீது அனுதாபம் ஏற்படுகிறது. அது காதலாக மாறுகிறது. இதனால் விக்ரமை பின் தொடர ஆரம்பிக்கிறார் எமி ஜாக்சன்.
இதற்கிடையே மீண்டும் அடுத்தடுத்து இரண்டு கொலைகளை செய்கிறார் விக்ரம். இதில் ஒரு கொலைக்கு மீண்டும் சந்தானம் காரிலேயே செல்கிறார்.
விக்ரமை இறக்கி விட்டுவிட்டு காரிலேயே காத்திருக்கும் சந்தானத்தை பொலிசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்துக் செல்கிறார்கள். விசாரணையில் சந்தானம் பேப்பரில் வந்த விக்ரம் புகைப்படத்தை காண்பித்து, இவன்தான் காரில் வந்தான் என பொலிசாரிடம் தெரிவிக்கிறார்.
ஒரு கட்டத்தில் எமி ஜாக்சனுக்கும் விக்ரம்தான் கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. பொலிஸ் விக்ரமை துரத்துகிறது. ஆனால் லட்சுமி ராய் பொலிசாரிடம் இருந்து விக்ரமை தப்பிக்க வைக்கிறார்.
விக்ரமை பொலிசில் பிடித்துக்கொடுக்க முயற்சிக்கும் எமி ஜாக்சன் மற்றும் சந்தானத்திடம் விக்ரமின் பிளாஷ் பேக்கை சொல்கிறார் லட்சுமி ராய்.
இந்திய அரசின் உளவுப்பிரிவில் விக்ரம் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
விக்ரமுக்கு ஒரு கூரியர் வருகிறது. அது அவருடைய திருமண அழைப்பிதழ். ஊருக்குச் செல்லும் இவர் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்.
அங்கு திருமண பெண்ணான அனுஷ்காவை கண்டதும் மனம்மாறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடித்து வருவதற்குள் இந்தியாவில் ஒரு மோசமான வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உளவுத்துறைக்கு தெரிய வருகிறது. இந்த வழக்கை ஜெகபதி பாபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தேச விரோத செயலுக்கு உடந்தையாகிறார்.
தன்னுடைய அலுவலகத்தில் இதற்கு யாரோ உடந்தையாக இருப்பதை அறிந்த விக்ரம், அமைச்சரிடம் பேசி இந்த வழக்கை தன் வசம் எடுத்துக் கொள்கிறார்.
இதற்காக லண்டன் செல்லும் விக்ரம், அங்கு தீவிரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். அப்பொழுது இதற்கு காரணமான சதிகார கும்பலை பார்த்து விடுகிறார்.
இதற்கு உடந்தையாக இருப்பது ஜெகபதி பாபு என்பதையும் தெரிந்து கொள்கிறார். உடனே ஜெகபதி பாபுவை சரணடைய சொல்கிறார் விக்ரம்.
ஆனால் ஜெகபதி பாபு, உன் மனைவி உன்னைப் பார்க்க நாளை காலை லண்டனில் உள்ள பாலம் அருகே வருவார் என்று சொல்லி போனை துண்டித்து விடுகிறார்.
மறுநாள் விக்ரம் அனுஷ்கா இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது பாம் வெடித்து அனுஷ்கா இறந்து விடுகிறார், விக்ரமுக்கு கண் போய் விடுகிறது.
இத்தனைக்கும் காரணமான ஜெகதிபாபுவை பழி தீர்த்தாரா? தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? எமி, விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது? என்பதே மீதி கதை.
விக்ரம் காசி படத்தையடுத்து பார்வையற்றவராக நடித்த இரண்டாவது படம். காசியில் கிராமத்து வேடத்தில் நடித்தார்.
இதில் ஹை-டெக் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் இளமைத் துள்ளலோடு வந்து துள்ளாமல் நடித்திருக்கிறார்.
அனுஷ்கா வரும் காட்சிகள் அனைத்தும் அருமை. விக்ரம்- அனுஷ்கா இருவரும் சந்திக்கும் காட்சிகளும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலை சொல்ல முயற்சிக்கும் காட்சிகள் அழகு.
சந்தானம் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பூட்டுவதாக உள்ளது. பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர் ஐ-பேடு பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை அழகாக காண்பித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். லண்டனை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.
இயக்குனர் விஜய், தாண்டவத்தை எதிர்பார்த்த அளவுக்கு தராதது விக்ரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
நடிகர்: விக்ரம், நாசர், சந்தானம், ஜகபதி பாபு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
நடிகை: அனுஷ்கா, எமி ஜாக்சன், லட்சுமி ராய், சரண்யா.
இயக்குனர்: விஜய்.
இசை: ஜி.வி. பிரகாஷ்.
ஒளிப்பதிவு: நிரவ் ஷா.

நன்றி விடுப்பு

No comments: