நள்ளிரவு காற்று... விஷ்ணுபுரம் சரவணன்


.

தமிழில் குழந்தைகள் இலக்கியம் _ சில பகிர்வுகள்..


1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல்
கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது
படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில்
பாட்டி சொன்ன கதைகளே"

***

இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும்
குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய
எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு
அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள்
பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி
திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன்,
தெய்வசிகாமணி, பூவண்ணன் என நீளும் பட்டியலில் யூமா வாசுகி, கம்பீரன்,
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கீரனூர் ஜாஹிர் ராஜா ஆகிய அண்மைகால படைப்பாளும தங்களின் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். ரஷ்ய நாட்டு நூல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு மலிவு விலையில் வழங்கப்பத்தையும், அதன் மீதான ஈர்ப்பு
இன்றும் இருப்பதாக முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சொல்லிவருவதை கவனத்தில்
கொள்ளும்போது குழந்தைகள் இலக்கியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

இந்த‌ இட‌த்தில் ஒன்றை ச‌ரியாக‌ இன‌ம் பிரித்துக்கொள்ளுத‌ல் அவ‌சிய‌ம். குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌ம் என்ப‌து குழ‌ந்தைக‌ளை ப‌ற்றி எழுதுவ‌து மட்டும் அல்ல‌. குழ‌ந்தைக‌ளுக்காக‌ எழுதுவதையே குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌மாகக் க‌ருத‌ வேண்டும். மேற்சொன்ன‌ ப‌ட்டிய‌லில் இர‌ண்டு பிரிவின‌ரும் அட‌ங்குவ‌ர்.

முத‌லில் குழ‌ந்தைக‌ளுக்கு ஏன் இல‌க்கிய‌ம் வேண்டும் என்ப‌திலிருந்து துவ‌ங்குவோம். குழ‌ந்தைக‌ள் ஓர் எழுத‌ப்ப‌டாத‌ வெள்ளைத்தாளைப்போல‌ இருக்கின்ற‌ன‌ர். இவ்வுலக‌ விஷ‌ய‌ங்க‌ளை தெரிந்துகொள்ளும் ஆவ‌ல் மேலிட‌ காத்திருக்கின்ற‌ன‌ர். எல்லாவ‌ற்றையும் க‌ற்றுக்கொள்ள‌ த‌யாராயிருக்கின்ற‌ன‌ர்.ஒரே சிக்க‌ல் என்ன‌வென்றால் அவ‌ர்களுக்கு அவ‌ர்க‌ள் புரிந்துகொள்ளும் மொழிந‌டையில், வ‌டிவ‌த்தில் அவ‌ர்க‌ள் விரும்பும் அல்ல‌து க‌ற்றுக்கொள்ள‌ ஆசைப்ப‌டுகிற‌ விஷ‌ய‌ங்க‌ள் இருப்ப‌தில்லை. இந்த‌ இட‌த்தில்தான் இல‌க்கிய‌ம் அந்த‌
வேலையை செய்ய‌வேண்டிய‌து க‌ட‌மையாகிற‌து. முத‌லில் குழ‌ந்தைக‌ள் மிர‌ண்டுவிடாது செய்தியை அவ‌ர்க‌ளுக்குள் இற‌க்க‌வேண்டிய‌து குழ‌ந்தைக‌ள் இல‌க்கிய‌த்தின் முதன்மை நோக்க‌மாயிருக்க‌வேண்டும்.

உதாரண‌மாக‌ " ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தானாம்: அவனோட‌ ம‌னைவிதான் அந்த‌
நாட்டுக்கு ராணியாம் அவ‌ர்க‌ளுக்கு ம‌க‌ன் ஒருத்தன் அவ‌ன்தான் இள‌வ‌ர‌ச‌ன். ம‌க‌ள் ஒருத்தி இருந்தால் அவ‌ள்தான் இள‌வ‌ர‌சி. அந்த‌ நாட்டுமேல‌ வேற‌ ராஜா ப‌டையெடுத்து வ‌ந்த‌ப்ப‌ ம‌ந்திரி கிட்ட‌ ஆலோச‌னை கேட்டு ப‌டைகளைத் த‌யார் செய்து போரிட்டு வென்றாராம். ........


இப்ப‌டி ஒரு க‌தை போகுது என்று வைத்துக்கொள்வோம். இத‌ன் வ‌ழியே ஒரு நாடு ன்ப‌தையும் அதை ஆள்ப‌‌வ‌னுக்கு ப்பெய‌ர் ராஜா என்றும் , ராணி, இள‌வ‌ர‌ச‌ன்,
இள‌வ‌ர‌சி, ம‌ந்திரி இவ‌ர்க‌ள் யார் இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ வேலை எனபதையும் கதையை
மீறி அவர்களுக்குள் செலுத்திவிடுகிறோம். இதை விடுத்து ராஜா,ராணி, மந்திரி,
இளவரசன், இளவரசி என்பதை தனித்த‌னியே வ‌ரைப‌ட‌ம் போட்டு குழ‌ந்தைக‌ளுக்குச்
சொல்லிக்கொண்டிருந்தால் ஓடியே போய்விடுவார்கள்.

இப்படியான கருத்துக்களை உள்ளிற‌க்க வேண்டும் என்பதை மட்டும்தானா குழந்தைகள்
இலக்கியம் செய்யவேண்டும் என்பதாகக் கருதவேண்டியதில்லை. முதலில் குழந்தைகள்
குதூகலத்தோடு கொண்டாட ஒன்று வேண்டும். அவை வெறும் குதூகலத்தோடு தன் பணியை
நிறைத்துவிடாமல் அவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கவேண்டிய அடிப்படை தேவையும் அந்த ஒன்றிக்கு இருக்கவேண்டும். அந்த உள்ளார்ந்த ஆரோக்கியத்தை
எடுத்துச்செல்வதற்கு இலக்கியமே சரியான வடிவமாகும். ஏனெனில் அந்த இலக்கியத்தைப்
பரவலாக்கும் வேலையைச் செய்யும் ஊடகங்களுக்கு வேண்டுமானால் வணிக நோக்கம்
இருக்கலாமே தவிர அப்படைப்பாளிக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.


கதைகளின் மூலமும் பாடல்களின் வழியாகவும் குழந்தைகளைச் சென்றடையும் செய்திகளின்
ஆயுள், அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் தொடரும் என்று சொன்னாலும் கூட
தவறில்லை. அதனால் குழந்தைமை மனத்தில் சகமனிதர் மீதான அன்பையும் அக்கறை
கொள்ளவேண்டிய தேவையையும் அவர்கள் இனிப்பைச் சாப்பிடும் சுவையாய் பகிரவேண்டிய
கட்டாயம் குழந்தைகள் இலக்கியத்திற்கு இருக்கிறது.

கதைகள் கேட்பதன் மூலம் அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் கற்பனைத்திறன் அவர்களுக்கு
புதிதாக ஒன்றைப் படைக்கும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அந்தப் புதிது என்பது
மற்றொரு கதையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பல அறிவியலாளரின்
கண்டுபிடிப்புகளுக்கான ஊற்றாக பால்ய வயது மந்திரக் கதைகள் இருந்திருப்ப‌தாகக்
கூறுகின்றனர்.

சரி. சரி. குழந்தைகளின் மன‌வளர்ச்சியின் தேவையை இப்படி பிணக்கூறாய்வைப் போலச்
செய்வது சரியா என சிலருக்கு தோன்றக்கூடும். அவர்களின் கருதுதலும்
தவறில்லைதான். பின்னணி காரணம் ஏதுமற்று குழந்தைகளின் கொண்டாடத்தை மட்டுமே
கவனத்தில் பின்விளைவாகக் கொண்டு எழுதப்படுவதையும் வரவேற்கவும்
வளர்த்தெடுக்கவும் வேண்டும் . ஏனெனில் இதை அதிகம் கவனத்தில் கொள்ளாததாலேயே
அந்த இடத்தை காட்சி ஊடகம் பின்விளைவுடன் கூடிய படங்களால் குழந்தைகளை
ஆக்கிரமித்துகொள்கிறது. காட்சி ஊடகத்தை கையாளுவோருக்கு என்று பெரிதாகப்
பொறுப்புணர்ச்சி இருப்பதாகக் கருதுவதற்கில்லை..[மிக அரிதான விதிவிலக்குகள்
தவிர] அவர்கள் குழந்தைகளின் ரசிக்கும் விதத்தைத் தங்களுக்கேற்றார் போல
மாற்றியமைக்கின்றனர். குறிப்பாக இந்திய நாட்டிற்கு, தமிழகத்திற்கு என இருக்கும்
நிலவியல் சார்ந்த எந்த புரிதலுமற்று மேலைநாட்டு சித்திரப்படங்களை [கார்ட்டூன்]
மொழிமாற்றம் செய்து கொடுக்கின்றனர். வெப்ப நாட்டில் வாழும் நம் குழந்தைகள்
பனிக்கரடியின் வாழ்முறைமை குறித்த கார்ட்டூன் படங்களைத்தான்
பார்க்கநேரிடுகிறது. அப்படங்களில் காட்டப்படும் வீடுகள், வீதிகள், மனிதர்களின்
உடைகள், உணவுகள் பார்க்கும் நம் குழந்தைகளுக்கு அந்நியமானதாகவே இருக்கிறது.
இந்த அந்நியப்படுத்தல் என்பது காட்சிப்படம் என்பதை ஒரு மாயைக்குள் நிறுத்தும்
மறைமுக திட்டமாகிவிடுகிறது. படம் வேறு நம் வாழ்தல் வேறு என்பதாகக் குழந்தைகள்
புரிந்துகொள்வதன் மூலம் வாழப்போகும் வாழ்க்கைக்கு அந்த படத்திலிருந்து
கற்றுக்கொள்ள அல்லது பத்திரப்படுத்திக்கொள்ள ஏதுமில்லை என்பதாக
விளங்கிக்கொள்கிறார்கள். இந்த‌ அன்னியப்படுதல் என்பது ரசனை சார்ந்த ஒன்றை
மட்டும் மாற்றியமைத்துவிடுவதில்லை. மனித உறவுகள் மீதும் அது
பரிசோதித்துப்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாகவே இப்போது பதின்பருவத்தினரிடையே
மிகுந்துவரும் வன்மம் கப்பிய மனநிலையையும் அந்த மனநிலையில் வெளிப்பாடாக
செய்யப்படும் குற்றங்களும் தொடர்கின்றன. அதற்கு சாட்சியாக சமீப வருடங்களில்
செய்திதாள்களில் வெளியிடப்படும் குற்றவாளிகளின் படங்கள் பெரும்பான்மை,
பதின்பருவ வயதினருடையதாக‌ இருப்பதைக் காணநேரிடுகிறது.

குழந்தைகளின் மனஇயல்பையும், சகமனிதரின் வலியை தனதாகக் கருதும் அன்பையும், சக
உயிர்களின் வலியையும் அவர்களுக்கு உணர்த்துவது குழந்தைகள் இலக்கியமே.
அதனால்தான் குழந்தைகளுக்கான கதைகளில் பறவைகள், மிருகங்கள், ஏன் மலைகள் , ஆறுகள்
பேசுவைக்கப்ப‌டுகின்றன. அந்த வகை உருவாக்கங்கள் கொண்டாடத்தையும் , சூழலியல்
அறிவையும் ஒருசேர திகட்டுதலின்றி அளிக்கின்றன.

எப்போதும் போல இன்றைய குழந்தைகளுக்கான படைப்புகள் மந்தகதியில் சுற்றியலைவதை
எல்லோருமே ஒத்துக்கொள்வார்கள். ஒத்துக்கொள்வதோடில்லாமல் அதில் முழு
ஈடுபாட்டுடன் இயங்குவதும் இயங்குபவர்களுக்கான வெளியை விரிவடையச்செய்வதும்
அவசரத்தேவை என்பதை தனித்துச் சொல்லவேண்டியதில்லை. குழந்தைகளுக்கான படைப்புகளைவெளியிட இதழ்களும் பதிப்பகங்களும் முன்வரவேண்டும். இன்னும்
வெளிப்படையாகச்சொல்லபோனால் குழந்தைகளிடம் இலக்கியத்தைக் கொண்டுச்சேர்த்தல்
ஊர்கூடி இழுக்கவேண்டிய தேர் ஆளுக்கொரு கை பிடிப்போம் வாருங்கள்.


நன்றி :vishnupuramsaravanan.blogspot

No comments: