காலமும் கணங்களும்: முருகபூபதி


.
‘தங்கத்தாத்தா’வும் ஓவியர் தாத்தாவும்

ஓவியக்கலைஞர் கே.ரி. செல்லத்துரை நினைவுகள்


 ‘தங்கத்தாத்தா’ என அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப்புலவரைப்பற்றி அறிந்திருக்கிறோம். அவரை சிறுவயதில் பாலபோதினி பாடப்புத்தகத்திலும் பார்த்திருக்கிறோம்.
 குறிப்பிட்ட படத்தை தமது புகைப்படக்கருவியினால் எடுத்து இன்றளவும் நாம் தெரிந்துகொள்ள வகைசெய்த கலைஞர் ஓவியர் கே.ரி. செல்லத்துரை ஐயாவைப்பற்றி நம்மில் எத்தனைபேர் அறிந்துவைத்திருக்கிறோம்.
 அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் சட்டத்தரணி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை எழுத்தாளர் அருண். விஜயராணி ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்த காலப்பகுதியில்தான் செல்லத்துரை ஐயாவும் அறிமுகமானார். இவர் அவர்களின் தந்தையார். 1915 ஆம் ஆண்டில் உரும்பராயில் பிறந்தவர் சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டினார்.
 ஓவிய ஆர்வம் தொடர்பாக அவருடன் உரையாடியபோது, “ சின்ன வயதில் எல்லோருமே ஓவியர்கள்தான்” என்றார்.
 “எப்படி?”






“ கையில் பென்ஸில் கிடைத்தால் எதில் வேண்டுமானாலும் கிறுக்கும் குழந்தைகளைப்பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் குழந்தைகள் சுவரில் எழுதி பெற்றோரிடம் ஏச்சும் பேச்சும் சில சமயங்களில் அடியும் வாங்கியிருப்பார்கள். அவ்வாறு எழுதும் குழந்தைகளிடமிருந்து பென்ஸிலையோ பேனையையோ பறித்தெடுக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அபூர்வமாக சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு வெள்ளைக்காகிதங்களும் கலர் பென்ஸில்களும் வாங்கிக்கொடுத்து அவர்களின் பால்ய கால ஆர்வத்தை வளர்ப்பார்கள். அவ்வாறு என்னை நானே வளர்த்துக்கொண்டேன்” என்றார்.
மெல்பனுக்கு அவர் வந்தபின்னர் அவரது பிள்ளைகளின் வீடுகளில் அவரது ஓவியங்களை காண முடிந்தது. அவரது ஓவியம் குறித்த பிரக்ஞையினால் அவர் என்னை பெரிதும் கவர்ந்தார். அவரிடமிருந்து பல தகவல்களைப்பெற்றுக்கொண்டேன்.
 1946 இல் அகில இந்திய ரீதியில் நடைபெற்ற புடவை டிசைன் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு சுமார் ஐந்தாயிரத்து எழுநூறு டிசைன்கள் வந்திருக்கின்றன. பின்னர் முதல் கட்டத்தேர்வுக்குரியதாக இரண்டாயிரத்து ஐநூறு டிசைன்கள் தெரிவாகியிருக்கின்றன.
 1947 இல் லண்டனில் விக்ரோரியா அல்பர்ட் மியூசியத்தில் இடம்பெற்ற ஓவியக்கண்காட்சியில், இந்தியப்பிரிவிலும் அவரது ஓவியங்கள் வைக்கப்பட்டன.


 ஓவியர் ஐயா இந்தப்போட்டிக்கு நான்கு டிசைன்களை அனுப்பியிருக்கிறார். அவற்றுள் மூன்றுக்கு பரிசில்கள் பெற்றுள்ளார். 1956 இல் கொழும்பு கலாபவனத்தில் நடந்த ஓவியக்கண்காட்சியிலும் அவருடைய ஓவியத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 1954 இல் இலங்கை சிறுகைத்தொழில் திணைக்களத்தில் பணியாற்றத்தொடங்கினார். அவரது ஓவிய ஆற்றலை தெரிந்துகொண்ட அப்போதைய அரசு, மகாதேசாதிபதியின் வாசஸ்தலத்தின் அலங்காரத்திரைகளுக்கான டிசைன்களை வரைவதற்கு அழைத்தது.
 உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவி ஏற்கமுன்னர், குறிப்பிட்ட பதவியேற்பு விழாவில் உள்ளுர் கைத்தறி சேலையை அணிவதற்கு விரும்பியிருக்கிறார்.  அதற்கான டிசைனை வரைந்தவரும் ஓவியர் செல்லத்துரை ஐயாதான். இலங்கையிலிருந்து முதலில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். தாயக நினைவுகளோடு வாழும் எந்தவொரு படைப்பாளியும் கலைஞரும் தாயகத்தின் ஆத்மாவை தமது படைப்புகளில் சித்திரிக்கத்தவற மாட்டார். செல்லத்துரை ஐயாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கிச்செல்லும் எந்தவொரு வாகனமும் தரித்துச்செல்லும் இடம் முறிகண்டி. அங்குள்ள குடிசைக்கோயிலையும் ஓவியமாக வரைந்துள்ளார். 1992 இல் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் நடத்திய முத்தமிழ் விழா ஓவியக்கண்காட்சியில் குறிப்பிட்ட முறிகண்டி குடிசைக்கோயில் ஓவியமும் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது முத்தமிழ் விழா அதுவாகும். வடமாகாண ஆத்மாவை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.



 ஓவியக்கலையில் மாத்திரமன்றி மேடை அரங்க நிர்மாணம் ஒளிப்படக்கலை ஆகியனவற்றிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர். இலங்கையிலும் இங்கிலாந்திலும் மெல்பனிலும் சில அரங்கேற்றங்களுக்கு மேடை அரங்குகளை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். அத்துடன் மெல்பனில் எனது நண்பர்கள் சிலர் மேடையேற்றிய கலையும்கண்ணீரும், பண்டார வன்னியன் ஆகிய வரலாற்று நாடகங்களுக்கும் அரங்கங்களை நிர்மாணித்துள்ளார். அவுஸ்திரேலியா அகதிகள் கழகம் சர்வதேச ரீதியாக அகதிகள் வாரத்தை முன்னிட்டு நடத்திய ஓவியப்போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியுள்ளார்.
 இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து நிர்க்கதியாகும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்காக மெல்பனிலிருக்கும் சில நண்பர்களுடன் இணைந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நான் தொடங்கியபோது அதன் டுநவவநச ர்நயன இற்கு இலச்சினை தேவைப்பட்டது. ஐயாவை அணுகினேன். எமது நோக்கத்தை கேட்டறிந்தபின்னர் இரண்டு நாட்கள் கழிந்து வருமாறு சொன்னார். அவர் சொன்னவாறு சென்றேன். கங்காரு தனது கரத்தில் ஒரு புத்தகத்தை ஏந்திக்கொண்டு நிற்பது போன்றதொரு அர்த்தமும் அழகும் பொருந்திய இலச்சினையை அவர் வரைந்து வைத்திருந்தார். அதனையே இற்றை வரையில் நாம் எமது பிரசுரங்களுக்கு பயன்படுத்துகின்றோம்.
தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவரை நேரில் சந்தித்த ஓவியர் ஐயா, அவரை தனது கெமராவினால் படமெடுத்து தினகரன் பத்திரிகைக்குக்கொடுத்துள்ளார். அந்தப்படமே பின்னாளில் பாலபோதினி உட்பட பல தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றது. தினகரனில் அப்பொழுது ஆசிரியாராக இருந்தவர் நாதன் என்பவர். ஓரு பிரசித்தி பெற்ற படத்தை பத்திரிகைக்கு ஒரு கலைஞர் பிரசுரத்திற்கு வழங்கினால் அந்தப்படத்தை எடுத்தவரின் பெயர்விபரமும் பத்திரிகையில் பதிவாகவேண்டும் என்பது பத்திரிகைதர்மம். ஆனால் தினகரன் ஆசிரியர் நாதன் ஓவியர் ஐயாவின் பெயர்பதியப்பட்ட அந்த கறுப்பு வெள்ளை ஒளிப்படத்தை பிரசுரிக்கும்போது சாமர்த்தியமாக ஐயாவின் பெயரை நீக்கி இருட்டடிப்புச்செய்துவிட்டார்.
தினகரனில் நாதனுக்குப்பின்னர் ஆசிரியர் பதவிக்கு வந்த கைலாசபதியின் காலத்தை இன்றைக்கும் தினகரனின் பொற்காலம் என்றுதான் சொல்கிறார்கள்.
அப்படியாயின் நாதனின் காலத்தை நாம் ‘இருட்டடிப்புக்காலம்’ எனக்கொள்ளலாம். நாதன் பின்னாளில் குணசேனா நிறுவனம் வெளியிட்ட தந்தி என்ற ஐந்துசதப்பத்திரிகையில் பணியாற்றி எவராலும் பொருட்படுத்தமுடியாத மனிதராகவே மறைந்தார்.
எவரையும் பொதுவாழ்வில் இருட்டடிப்புச்செய்ய கங்கணம்கட்டிச்செயற்படுபவர்களை காலமே இருட்டடிப்புச்செய்துவிடும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சொல்ல விரும்புகின்றேன்.
மெல்பனில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் நினைவரங்கில் எனது நூல்கள் வெளியிடப்பட்டபோது, சுந்தாவின் குரலை ஒலிபரப்பினேன். கொழும்பில் நடந்த மீனாட்சி கல்யாணம்  என்ற நாட்டிய நாடகம் மேடையேறியபோது சுந்தா தனது மதுரக்குரலினால் அந்த நிகழ்வை சித்திரித்திருக்கிறார். குறிப்பிட்ட குரலையே அன்று நூல் வெளியீட்டின்போது ஒலிபரப்பினோம்.
அதனை சபையில் கேட்டுக்கொண்டிருந்த திருமதி பாலம்லக்ஷ்மணன் அவர்களும் திருமதி அருண். விஜயராணியும் எனக்கு ஒரு புதிய தகவலைத்தந்தனர்.
குறிப்பிட்ட அரங்கேற்றத்தின் ஒலிசித்திரத்தை எழுதியவர் பாலம் லக்ஷ்மணன். அரங்கங்களை அழகாக வடிவமைத்தவர் ஓவியர் ஐயா செல்லத்துரை.
யாழ்ப்பாணம் கொழும்புத்துரை யோகர் சுவாமிகளிடத்தில் மிகுந்து பற்றுக்கொண்டிருந்த ஐயா சுவாமிகளின் உருவத்தையும் தனது தூரிகையால் வரைந்திருக்கிறார். அவருக்கிருந்த மனக்குறை பற்றியும் இங்கு பதிவுசெய்யவேண்டும்.
 படைப்பிலக்கியம், இசை, நடனம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் முதலான கலைத்துறைகளிலும் வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி முதலான ஊடகத்துறைகளிலும் தீவிர கவனம் செலுத்தும் எம்மவர்கள் ‘ஓவியம்’ மீது குறைந்த பட்ச ரசனையைக்கூட வளர்த்துக்கொள்ளவில்லை என்ற நியாயமான கோபம் அவருக்கிருந்தது.  புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசைக்கும் நடனத்துக்கும் மொழிக்கும் பள்ளிகள் இருப்பதுபோன்று ஓவியக்கலையை வளர்க்க தமிழ் சமூகம் தவறிவிட்டது என்ற மனக்குறையுடனேயே அவர் 1998 இல் மறைந்தார்.
 ஒருவரின் சிறப்பியல்புகள் அவர் வாழும் காலத்தில் கொண்டாடப்படவேண்டியது. துர்ப்பாக்கியவசமாக சிறப்பான மனிதர்களின் மறைவுக்குப்பின்னர் பேசப்படும் புகழாரங்கள் எம்மை நாம் தேற்றிக்கொள்ளத்தான் உதவும் என்பதனால் பலரை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடி அவர்களையும் மகிழ்வித்து என்னையும் திருப்திப்படுத்தியிருக்கின்றேன். அந்தவகையில் 1997 இல் எனது இலக்கிய பிரவேச வெள்ளிவிழா காலத்தை எனது நூல் வெளியீடாக மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல் நால்வரை பாராட்டி கௌரவித்தேன். அவர்களில் ஒருவர் செல்லத்துரை ஐயா, குறிப்பிட்ட நிகழ்வு மெல்பன்லு று ஊ யு மண்டபத்தில் 15-11-1997 ஆம் திகதி நடந்தது. அதற்கான அழைப்பிதழ்களை அச்சிட்டு அனுப்பிக்கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான சுகவீனம் வந்தது. அவரது குடும்பத்தினர், “ ஐயா நிகழ்ச்சிக்கு வருவது நிச்சயமில்லை” என்று கவலை தெரிவித்தார்கள். அதாவது விழா நடைபெறும் வரையில் அவர் தாக்குப்பிடித்திருப்பாரா என்ற ஏக்கத்தை தொலைபேசி ஊடாக என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
 நானும் கவலையுடன் ஐயாவை பார்க்க ஓடினேன்.
 அவர் கட்டிலில் படுத்திருந்தவாறு அருளிய வாசகங்களை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. அந்த வாசகங்களை எனது எழுத்துக்களில் நேர்காணல்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்துள்ளேன்.
 அவர் சொன்ன வாசகங்கள் இதோ:-
 “ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் யாவும் தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமானது. அதனை நீ வளர்த்துக்கொள். உனக்கு எல்லாப்பலமும் பலனும் சித்திக்கும்.”
 “நிகழ்ச்சியை திட்டமிட்டவாறு நடத்து. நான் வருவேன்.”
சொன்னபடி வந்தார். தனது ஏற்புரையின்போது கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார்.
அந்த பாராட்டு நிகழ்வு மெல்பனில் முன்மாதிரியாக அமைந்தது. அதன்பின்பு பலருக்கு பொது நிகழ்வுகளில் பொன்னாடைகளும் பூமாலைகளும்  நெருக்கமாயின.
 அன்றைய நிகழ்வுக்கு நண்பர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா தலைமை தாங்கி ஓவியர் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தினார்.
 17-04-1998 இல் அதாவது குறிப்பிட்ட பாராட்டு நிகழ்வு நடந்து சுமார் ஆறுமாதங்களின் பின்னர் ஐயா மறைந்தார். அவரது பூதவுடல் இறுதிச்சடங்குகளுக்கு தயாரானபோது என்னை அழைத்தார்கள். பாராட்டு விழாவில் அவருக்குப்போர்த்திய அந்த பொன்னாடையை என்னிடம் தந்து அவரது உடலுக்கு போர்த்திவிடும்படி சொன்னார்கள்.
 பனித்த கண்களுடன் கனத்த இதயத்துடன் அந்தக்கடமையைச்செய்தேன். அந்தப்பொன்னாடையும் அவருடன் அக்னியில் சங்கமமாகி பிடி சாம்பராகியது.
 2003 இல் மெல்பனில் நடந்த மூன்றாவது எழுத்தாளர்விழாவில் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் பதிவான எனது ‘எம்மவர்’ நூலை ஓவியர் ஐயாவுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.
 2004 இல் கன்பராவில் நாம் நடத்திய நான்காவது எழுத்தாளர் விழாவில் ஓவியர் செல்லத்துரை ஐயாவின் நினைவாக அவரது குடும்பத்தினரின் ஆதரவு அனுசரணையுடன் இளம்தலைமுறையினர் மத்தியில் ஓவியப்போட்டி நடத்தி பரிசில்கள் வழங்கினோம்.
பிற்குறிப்பு:- இந்தப்பதிவுக்குத்தேவைப்பட்ட ஓவியர் ஐயாவின் ஒளிப்படத்தையும் ஓவியங்களையும் எனக்குத் தந்து உதவியவர் ஓவியரின் பேரன் திரு.அமிர்தன் அரசரட்ணம்.
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒளிப்படத்தை தந்துதவியவர் புலவரின் பேரன் டொக்டர் இளமுருகனார் பாரதி. இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
                               --0--





No comments: