நான்
இப்படி ஒருநாளும் அழுததில்லை.
அப்போ
நாட்டு நிலமையும் தாய் வீட்டையும் தம்பி காந்தனையும் நினைத்து சோகத்தோட கண் கலங்கினால்
ஆதவன் ஓடிவந்து முகத்துக்கு முனால் நின்று அதைப்பற்றிப் கேள்விக்கு மேலே கேள்வி கேட்டு என்னைக் குடைந்து
போடுவார். அதோட அவரும் அப்ஸற் ஆகி விடுவார்.
அவுஸ்ரேலியாவிற்கு
அவர் கப்பலில் தான் வந்தவர். அவருக்கு பாபு தான் கப்டன் “கூக்” அதால அவர் தான் வந்த கப்பலையும்
பாபுவையும் படமாக வரைந்து சிவரில் மாட்டி இருக்கிறார்.
நான்
அவரின் பொன்சரில் விமானத்தில் வந்தனான். வந்து ஆறு வருடம் குழந்தை இல்லை. அங்கு
நேசரி ரீச்சர் எண்டதால ஒரு வருடம் கோர்ஸ் செய்து போட்டு ஆண்டு இரண்டுப்
பிள்ளைகளுக்கு 5 வருடமாகப் படிப்பிக்கிறன். அதால எனக்கு ஒவ்வொரு வருடமும் ஒரே
வயதுப் பிள்ளைகள் என்ர வகுப்பில இருக்கிறதால எனக்கு பிள்ளை இல்லை என்ற குறை என்ர
மனதை வாட்டுறதில்லை.
கடந்த
3 மாதத்துக்கு முன் கப்பலில் வந்ததாக ஒரு
குடும்பம் எங்கிட கிராமத்துக்கு வந்து வாழ்கிறார்கள். கதிரவன் என்ற குழந்தையை என்ர
வகுப்பில கொண்டுவந்து சேர்த்தவர்கள். கதிரவன் வந்ததின் பின்னால் என்ர மனதில்
எனக்கும் இப்படி ஒரு பிள்ளை இல்லையே இவனைப் போல ஒரு பிள்ளை வேணும் என்று மனதில்
கணக்குப் போட ஆரம்பித்து விட்டதால என்னவோ அவன் மேலே எனக்கு ஏதும் கரிசனையோ
தெரியாது அவன் எதை செய்தாலும் மிகவும் அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
கதிரவன்
சரியான கெட்டிக்காரன் எதையும் சூக்குமமாக சொல்லி முடிப்பான். சாதுரியமாகவும்
சமாளிப்பான். ஆரம்பத்தில் அவனுக்கு ஆங்கிலம் வராது எதையாவது மற்றைய பிள்ளைகளின்
சாமான்களை எடுத்து போட்டு சாதுரியமாக சமாளித்து சொறி(sorry)சொல்வான்.
வெள்ளைக்
காரப் பிள்ளைகளும் அவனின் சமாளிப்பில் மயங்கி ஏற்றுக் கொள்வார்கள்.
கதிரவனுக்கு
ஓவியம் வரைவது கலர் தீட்டுவது என்றால் வடிவாகச் செய்வான்.
ஒருநாள்
இரண்டு படம் கீறினான். ஒரு படத்தில் ஒரு
வீடும் பெரிய மரமும் வீட்டுக்கு முன்னால் பிள்ளைகள் விளையாடுவதுபோலவும், மற்றைய படத்தில் வீடு
இடிந்து கிடக்கிறது. மரத்துக்குக் கீழே பிள்ளை விளையாடுவதுபோல். நான் இதைக் கவனிக்கவில்லை.
அதை வேண்டி அவனுடைய அலுமாரிப் பகுதியில் வைத்துவிட்டேன். மறுநாள் இடைவேளையின் போது
எதையோ எடுக்கப் போனனான். கதிரவன் வரைந்த படங்கள் கீழே விழுந்திருக்கப் பார்த்து,
எடுத்துவைக்க எத்தனித்தபோது கவனித்தேன்,
மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. கதிரவனைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டேன். அவன் தனது
குறும்புத் தனத்துடன் ஓடிக்கொண்டிருந்தான். பிடித்துக் கதிரையில் இருத்தி “இது
நீங்கள் தானே வரைந்தீர்கள் இதுக்கு என்ன விளக்கம்” என்று கேட்டேன்.
“எங்களுக்கு
அழகான வீடு இருந்தது. விமானம் குண்டு போட்டு வீடு உடைந்து போச்சு. மரத்துக்குக்
கீழே தான் நாங்க வாழ்ந்தனாங்கள்”
என்று
சொல்லிவிட்டு விளையாட ஓடினான் கதிரவன்.
கலங்கிய
கண்களோடு நிமிர்ந்தபோது பக்கத்து வகுப்பு ரீச்சர் அஞ்சலினா என்னைப் பார்த்தவள் கதிரவன் போகும் பாதையைத் திரும்பிப்
பார்த்தாள்.
அஞ்சலினா
என்ன நினைத்தாளோ don’t worry என்று என் முதுகில் தட்டினாள். அதுக்கு என்ன அர்த்தம் என்று
எனக்கு விளங்கவில்லை.
இப்போதெல்லாம்
கதிரவன் வகுப்பறைக்கு வரும் வரையும், அவனைக் காணும் வரையும் மனம் பதட்டமாக
இருக்கும். அவனை அவனது தாய் கொண்டுவந்து கொஞ்சி
அனுப்பும் போது என்னை நிமிர்ந்து பார்த்துக் கை அசைத்துவிட்டுப் போவாள்.
என்னுடைய
தாங்க முடியாத கவலைக்கும் வேதனைக்கும்
ஏதோவொரு மருந்தாக கதிரவன் இருந்தாலும், அவனுடைய சின்ன வயதில் இப்படி ஒரு வடு இந்த
பிஞ்சு இதையத்திலா என்று நம்புவதா நம்பாமல் இருப்பதா என்ற கேள்வி எளக்கூடிய சம்பவத்தை
அவனே மனம் திறந்து சொன்னபோது.
எப்பவும்
சின்ன சின்ன கவலைகளுக்கு அழுத நான் அன்று
தேம்பித் தேம்பி அழுதன்.
போன
கிழமை நான்காம் ஆண்டு மாணவர்கள் பக்கத்து
வகுப்பில் பேசிக் கொண்டிருந்தவர்கள். என்னைக் கண்டதும் என்னிடம் வந்து “ரீச்சர்
நாங்கள் வியட்நாம் நாட்டுக்குப் போகப் போகின்றோம். எங்கிட தாத்தா இரண்டாம் உலகப் போரில் எங்கிட
நாட்டுக்காகப் போரிட்டு வீரமரணம் எய்தினார் அவரின் சமாதி ”மாவீரர் கல்லறை” அங்கு இருக்கிறது.
“Anzac day” அன்று நாங்கள் அங்கு தான் நிற்போம்.எங்கிட கிறேற் கிறான்
தாத்தாவுக்கு நாங்கள் எல்லோரும் அஞ்சலி
செய்யப் போகின்றோம். அரசாங்கமே இந்த ஒழுங்கைச் செய்து தருகிறதாம். நாங்கள் அங்கு
போகின்றோம். மீண்டும் சந்திப்போம் ரீச்சர்” என்று சொல்லி விலகிப் போனதைப்
பார்த்துக் கொண்டிருந்த கதிரவன்
“ரீச்சர்
எங்கிட அப்பாவும் நாட்டுக்காகப் போராடிய போர் வீரர். அவரைப் புதைத்துப்
போட்டுத்தான் நாங்கள் வந்தநாங்கள். அவற்ர கல்லறை அங்கு இருக்குமா? நாங்கள் போய்ப்
பார்க்கலாமா எப்பாவது”?
விளையாட்டுத்தனமாக
விளையாடிக் கொண்டிருந்த கதிரவன் என்னிடம் இப்படிக் கேட்டுவிட்டு திரும்பவும்
விளையாடப் போய்விட்டான்.
என்
நினைவு தாய் நிலத்தின் பகுதிகளுக்கும் அதன் கொடுமைகளின் சுவடுகளுக்கும் ஒரு சுற்று
சுற்றி வந்தது. அன்று வெள்ளிக்கிழமை காலை கதிரவன் வரும் வழியைப் பார்க்கிறேன்.
அவன் வரவே இல்லை. திங்கள் கிழமையும் வரவேயில்லை. நிறையப் பேரிடமும் விசாரித்துப்
பார்த்தும் விட்டேன். பதில் தெரியவில்லை.
நான்
அழுவதைத் தவிர என்னால் எதையும் செய்ய முடியவில்லை.
கதிரவன்
வந்த இடம், எங்கு இருக்கிறான், என்பதை எல்லாம் அவனைக் கேட்க வேண்டும் என்று
இருந்தேன். ஆனால் காற்று மாதிரி வந்து கணப் பொழுதில் மறையும் நிழல் மாதிரிப் போய்
விட்டான்.
நான்
அழுது கொண்டிருக்கிறேன். ஆதவன் என் அருகில் வந்து என் தோழில் கையை வைத்து ஆதரவாக
நின்றார்.
நான்
அழுதுகொண்டே இருந்தேன். ஆதவன் தான் கொண்டு
வந்த ”Age news” பேப்பரை
என்னிடம். நீட்டுறார். கண்ணீர் வடிய வடிய வாசிக்கிறேன்.
ஐயோ
ஒரு இளம் தாயாலையும் சின்னப் பாலகர்களாலையும் இந்த நாட்டுக்கு ஆபத்தா?.....அந்த
செய்தியை வாசித்து முடிய என்ர அடி வயிறும் தொண்டையும் நோக வாய் திறந்து ஓவென்று
கத்திக் கொண்டு தரயில் விழுகிறன்.
சில மணித்தியாலத்தின் பின் கண்
திறந்த போது வைத்தியசாலை கட்டியில் படுத்திருக்கிறன் என் அருகில் பெண் டாக்டரும்
என் கணவர் ஆதவனும் நிற்கிறார்கள்.
வாழ்த்துக்கள் சுகந்தி நீங்க அம்மாவாகப்
போகிறீர்கள். இனிமேல் கவனமாக இருக்க வேணும்.
ஆவூரான்.
மெல்பேர்ண்.
1 comment:
இணைப்புக்கு நன்றிகள் ....பல போர்வீரர்களின் கல்லறைகள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன
Post a Comment