அன்புடன் கெளதமி..! --தமிழ்மகன்


.


கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை மனம் திறக்கிறார் நடிகை கெளதமி.

"நம்மவர்' படத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் இருப்பது போலவும் அவருக்குக் கெளதமி துணையாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கும். அது அவர்களின் நிஜவாழ்க்கையின் ஒத்திகையாக அமைந்துபோனது காலத்தின் விளையாட்டு. நிஜத்தில் கெளதமிக்கு கேன்சர். கமல் உடனிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெளதமியைக் கமலின் அலுவலகத்தில் சந்தித்தோம். 

எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை? என்ற எளிமையான கேள்வியோடு (பதில் அத்தனை எளிமையானது அல்ல!) பேட்டியை ஆரம்பித்தோம். 

நல்லதாக நடந்தாலும் அவ்வளவு நல்லதாக நடக்கவில்லை என்றாலும் வாழ்க்கை இனிமையானது. அழகானது. அதை அப்படியே எதிர்கொள்வதில்தான் எல்லா ஆனந்தமும் ஒளிந்திருக்கிறது. தத்துவமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுவாக எந்தத் தத்துவத்தையும் படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்வது என்னை மேலும் குழப்பிவிடுகிறது. என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், அம்மா- அப்பாவின் அடுத்தடுத்த மரணம். 


கேன்சர்... எதுவும் நிரந்தரமல்ல என்ற பளீரென்ற நிதர்சனம் தந்த பாடம். என் குழந்தையைத் தாங்க வேண்டிய பொறுப்பு... சொல்லப் போனால் அது பொறுப்பு மட்டுமல்ல; அடுத்த தலைமுறையை வழிநடத்துகிற மிக அன்பான கடமை. எல்லாச் சோகமும் சோகமும் அல்ல, எல்லா மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அல்ல. இந்த எல்லா அனுபவங்களையும் என் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கற்றேன். 

இந்த மாற்றத்துக்கான விதை சிறுவயதிலேயே உங்களுக்கு இருந்ததாகச் சொல்ல முடியுமா? 


என் தந்தை சேஷகிரி ராவ் ஒரு மருத்துவர். ரேடியாலஜிஸ்ட். இந்திய ராணுவத்தில் போர்க்காலங்களில் பணியாற்றியவர். போரின் கோரத்தாண்டவம் அப்பாவுக்கு வாழ்க்கையின் கேள்விக்குப் பதில் தேட வைத்திருக்கிறது. ரமணருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தபோது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரில் அப்பாவும் ஒருவர். அப்பாவுக்கு ரமணர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஜெ. கிருஷ்ணமூர்த்தி, யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் அப்பாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆன்மீக ரீதியான தேடலுடனும் கடவுள் மறுப்பாளராகவும் அப்பா இருந்தார். இந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன். 

பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது... ஒருநாள் என்னுடைய ஆசிரியை "நீ கோவிலுக்குப் போவாயா, சர்ச்சுக்குப் போவாயா' என்று கேட்டார். எனக்கு நிஜமாகவே அதைப் பற்றித் தெரியவில்லை. நான் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அவருக்கு போன் செய்தேன். ""உன்னைத்தானே கேட்டார்கள். உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் சொல்லு'' என்று கூறிவிட்டார். 

நான் என் குழந்தையையும் அப்படித்தான் வளர்க்கிறேன்... (உதவியாளரை அழைத்து மூன்றாம் வகுப்பு படிக்கும் தம் மகள் சுபலஷ்மியை வரவழைக்கிறார். மகளிடம் where is God? என்கிறார். குழந்தை ஆள்காட்டி விரலால் நெற்றியைக் காட்டுகிறது. முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு, நம்மைப் பார்க்கிறார். தாம் சொன்னதை உறுதிபடுத்திய புன்னகை.) 

இந்த ஒற்றுமைதான் உங்களையும் கமலையும் இணைத்ததாகச் சொல்லலாமா? 

ஆமாம். அவரிடம் இதுபோல எந்த விஷயத்தையும் பேசலாம். மதம், சினிமா, பெண்கள், சமுதாயம், இலக்கியம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆரோக்கியமான விவாதங்கள் தினம் தொடரும். "அட நாம இப்படி யோசிக்கவில்லையே' என்ற ஆச்சர்யம் தினமும் கிடைக்கிறது. 

கேன்சர் விழிப்புணர்வு, ரத்ததான முகாம், பெண்கள் கருத்தரங்கு என்று அடிக்கடி பார்க்க முடிகிறது. இது சம்பந்தமான வேறு எதிர்காலத் திட்டங்கள்...? 

கமல் நற்பணி இயக்கத்தினர் இதோ இந்த மாதம் முழுக்கவே ரத்ததான முகாம் நடத்துகிறார்கள். பல இதய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியிருக்கிறார்கள். மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். நூலகம் கட்டித் தருகிறார்கள். அவர்கள் பலத்தோடு எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகப் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியவர்கள்... இந்த இரண்டு தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. பெண்களுக்கு கவுன்சிலிங் தர விருப்பம் இருக்கிறது. எங்கெல்லாம் ஆதரவு கேட்டு கைகள் நீளுகிறதோ, அத்தனையையும் கைதூக்கிவிட விருப்பம் இருக்கிறது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரியும். யாரையும் குற்றம் சாட்டாத, கருணையோடு அணுகுகிற பக்குவம் எனக்குப் பிடிபட்டிருக்கிறது. இதைச் சேவைக்கான முதல் கட்டமாக நினைக்கிறேன். 

மற்றபடி பொழுது எப்படிப் போகிறது..? 

இன்னும் இரண்டு மணிநேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிற மாதிரிதான் வேலைகள் இருக்கிறது. கமல் சார் அலுவலகத்தைப் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுக்க கவனிக்கிறேன். நற்பணி இயக்க பணிகளுக்கு நேரம் ஒதுக்குகிறேன். என் குழந்தையை நானேதான் பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறேன், கூட்டி வருகிறேன். தசாவதாரம் படத்தில் கமலுக்கான பத்துவகையான காஸ்ட்யூம் தயாரிக்கும் முக்கிய வேலையும் செய்கிறேன். நான் நடிக்க விரும்புகிறேனா என்பது பலருக்குத் தெரியாது. அந்தத் தயக்கத்தின் காரணமாகவும் என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். நல்ல கதையாக இருந்தால் நடிக்கவும் விருப்பமிருக்கிறது. என்னவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே வாழ்க்கையை அலங்கரிக்கத்தான். ஏனென்றால் வாழ்க்கை அழகானது.

Nantri:tamilmagan.in

No comments: