உலகச் செய்திகள்

 

* இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்

* தைவானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது

* மியன்மார் அரசியல் சீர்திருத்தங்களின் எல்லைகளைப் பரிசோதிக்கும் சூகி

* வைரவிழா கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில்      பொதுநலவாயத்தின் அடுத்த இலக்கு என்ன?  

* சிரியாவில் தொடரும் அசாத் ஆதரவுப் படையின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 78 பேர் பலி

* அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா - சீனா கூட்டாக போர் பயிற்சி


 

இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. தலைநகர் ஜகார்த்தாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நன்றி தினக்குரல்
 
தைவானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது

Wednesday, 06 June 2012

தைவான் தலைநகர் தைபையிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தென்கிழக்கு தைவானில் மிதமான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.


5.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 52 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கடற்கரை நகரான தைதுங் வரை உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்கள் கட்டிடங்கள் குலுங்கியது. இருப்பினும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என தைவான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நன்றி தினக்குரல்

 மியன்மார் அரசியல் சீர்திருத்தங்களின் எல்லைகளைப் பரிசோதிக்கும் சூகி

Monday, 04 June 2012

தாய்லாந்திற்கு ஆறு விஜயத்தை மேற்கொண்டுவிட்ட மியன்மாரின் ஜனநாயகத் தலைவி நேற்றைய தினம் நாடு திரும்பிய செயல் தனது நாட்டின் அரசியல் சீர்திருத்தங்களின் எல்லைகளை பரிசோதித்துப் பார்க்கும் ஒன்றாக அமைந்திருந்தது. மீண்டும் அவர் இம்மாத நடுப்பகுதியில் ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். 21 வருடங்களுக்கு முன்னர் தனக்குக் கிடைத்த நோபல் சமாதானப் பரிசை முறைப்படி ஏற்றுக்கொள்வதற்காக சூகி  நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிற்கு செல்லவிருக்கிறார். லண்டனில்  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உரையாற்றும் கௌரவ வாய்ப்பும் அவருக்கு கிட்டவிருக்கிறது. ஒரு குடும்பத் தலைவியாக இருந்து அரசியல் கைதியாக மாறி இன்று மியன்மாரின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவியாக வந்திருக்கும் சூகியின் அரசியல் வாழ்வில் இந்தச் சுற்றுலாக்கள் புதியதொரு திசை மார்க்கத்தைக் குறித்து நிற்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பெர்லின் சுவர் வீழ்ச்சியடைவதற்கு ஒருவருடம் முன்னதாகத்தான் சூகி இறுதியாக மியன்மாரை விட்டு வெளியே பயணம் செய்திருந்தார். நோயுற்று மரணப் படுக்கையில் இருந்த தனது தாயாரைப் பராமரிப்பதற்காக மியன்மாரில் இருந்து 1988 ஏப்ரலில் அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். அவரது இளமைக்காலம் கூடுதலாக இந்தியாவிலேயே கழிந்தது. இந்தியாவுக்கான மியன்மாரின் தூதுவராக சூகியின் தாயார் பதவி வகித்தார். பின்னர் சூகி ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றதுடன் நியூயோர்க்கிலும் பூட்டானிலும் ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றினார். இறுதியில் பிரிட்டிஷ் கல்விமானான மைக்கல் அரிஸை இங்கிலாந்தில் திருமணம் செய்து இரு மகன்களுக்குத் தாயானார். அவர் ஒரு சர்வதேச வாழ்க்கைப் பாணிக்கு பழக்கப்பட்டவராக இருந்த போதிலும் தனது நாட்டில்  ஜனநாயகத்தை மீள்விற்பதற்கு தன்னை அர்ப்பணிப்பதற்கு தயாராகவே என்றும் இருந்தார். இராணுவ ஆட்சிக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மூண்டவேளையிலேயே 1988 இல் அவர் மியன்மாருக்குத் திரும்பினார். அடுத்த வருடம் அவரை இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்தார்கள். அதற்குப் பிறகு சூகி உலகின் மிகவும் பிரபல்யம்வாய்ந்த அரசியல் கைதியாக இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலம் விளங்கினார்.
தனது இலட்சியத்தின் மீது அவருக்கு இருந்த பற்று தனிப்பட்ட முறையில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கணவர் அரிஸ் இங்கிலாந்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த போது கூட சூகியினால் அவரைப் பார்க்கச் செல்ல முடியவில்லை. தான் மியன்மாரை விட்டுச் சென்றால் மீண்டும் திரும்பி வருவதற்கு இராணுவ ஆட்சியாளர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று நம்பிய சூகி கணவரின் மரணப்படுக்கையால் ஏற்பட்ட மனவேதனையைக் கூட சகித்துக் கொள்ளவேண்டியதாயிற்று. இறுதியாக கணவரை சூகி 1995 ஆம் ஆண்டுதான் சந்தித்தார். அதற்குப் பிறகு அரிஸுக்கு இராணுவ ஆட்சியாளர்கள் மியன்மார் வருவதற்கு விசா வழங்க மறுத்துவிட்டனர். 2010 நவம்பரில் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு தனது இளைய மகன் கிம் அரிஸுடன் இணையக் கூடியதாக இருந்தது. ஒரு தசாப்தகால பிரிவுக்குப் பிறகு மகன் மியன்மார் வருவதற்கு இராணுவ ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.இங்கிலாந்தில் மீண்டும் தனது பிள்ளைகளுடன் இணையவிருக்கும் சூகி 69 ஆவது பிறந்த தினத்தை ஜூன் 10 ஆம் திகதி கொண்டாடவிருக்கிறார்.
தாய்லாந்திற்கான அவரது விஜயம் ஏற்கெனவே அவர் திட்டமிட்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாவின் ஓர் அங்கமாக இருக்கவில்லை. ஆனால், கடந்த வாரம் பாங்கொக்கில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்த அவர் அங்கு சென்று கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றியிருக்கிறார். “மியன்மார் அரசியல் சீர்திருத்தங்களில் பற்றுறுதி கொண்டிருக்கிறது. சுபீட்சமும் அமைதியும் சமாதானமும் கொண்ட உலகின் பங்காளிகளாக மாறுவதற்கு மியன்மார் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்’ என்று அந்த மகாநாட்டில் உரையாற்றுகையில் சூகி பிரகடனஞ்செய்தார். மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவியின் உரையாகவன்றி மியன்மாரின் குரலாகவே உலகப் பொருளாதார மாநாட்டின் பிரதிநிதிகள் அவரது உரையை செவிமடுத்தனர். அவருக்கு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைப்பது இது முதல் தடவையல்ல. வீட்டுக் காவலில் இருந்த பொழுது அவர் உலகின் மிகவும் பிரபல்யம் வாய்ந்த அரசியல் கைதியாக விளங்கிய வேளையில் கிடைத்த அங்கீகாரமே அவரின் வாழ்வின் உச்சமாக இருந்திருக்க முடியும். ஆனால், மியன்மாரின் புதிய ஜனாதிபதி காண்பிக்கும் நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு பயனுறுதியுடைய பிரதிபலிப்புகளை வெளிக்காட்டுவதன் மூலமாக மியன்மாரின் மாற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய பணியை சூகி செய்துகொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மியன்மாரின் அரசியல் சீர்திருத்தங்களை மேலும் உத்வேகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி தினக்குரல்

வைரவிழா கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் பொதுநலவாயத்தின் அடுத்த இலக்கு என்ன?  

Thursday, 07 June 2012 


“நவீன உலகுக்கு ஏற்புடையதாக மறுசீரமைப்பை உறுதிப்படுத்துவதே தற்போதைய தேவைப்பாடு
இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தொடக்கம் கொடிகளுடன் படகு சவாரிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகாராணி எலிசபெத்தின் வைர விழாக் கொண்டாட்டங்களை பொதுநலவாயம் கண்டுகழித்திருக்கிறது. அதேவேளை, பொதுநலவாயத் தலைவர்கள் மகாராணியுடன் இன்று விசேட(புதன்கிழமை) மதிய போசன விருந்தில் பங்கேற்றிருந்தனர். மிகவும் கோலாகலமான முறையில் வார இறுதியில் இந்நிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன. ஆனால், நவீன இராஜதந்திர உலகிற்கு பொதுநலவாயமானது எவ்விதம் பெறுமானத்தை சேர்த்துக்கொள்கிறது. என்பது தொடர்பான சிறியளவிலான பேச்சும் காணப்படுகிறது.
வைரவிழா கொண்டாட்டங்களில் பொதுநலவாயத்திற்கு பங்களிப்பை வழங்குவதற்குரிய பாத்தியதை உள்ளது. 43 நாடுகளின் சுதந்திரத்தை மகாராணி பார்த்திருக்கின்றார். இவை பொதுநலவாய அமைப்பில் இணைந்துள்ளன. இவற்றில் பல நாடுகள் குடியரசுகளாக உருவாகியுள்ளன. இந்நாடுகள் யாவற்றையும் இந்த சங்கத்தில் சமனான, சுதந்திரமான அரசுகளாக மகாராணி மேம்படுத்தியுள்ளார். ஆனால், ஜனநாயகம் அபிவிருத்தி, மனித உரிமைகள் போன்ற பகிர்ந்துகொள்ளப்படும் பெறுமானங்களை மேம்படுத்தும் தனித்துவமான சர்வதேச ரீதியான பரீட்சார்த்தமாக பொதுநலவாயம் இருக்கின்றது என்று நம்பும் எமக்கு இந்த கொண்டாட்டங்கள் கசப்புடன் கூடிய இனிப்பாகக் காணப்படுகின்றன. பொதுநலவாய நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டிய தருணம் ஏற்பட்டிருக்கின்றது என்ற சிந்தனை உறுதியானதாக அதிகரித்திருப்பதாகத் தென்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் கடைசியாக பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாடு இடம்பெற்றது. இந்த உச்சிமாநாடு அக்டோபரில் இடம்பெற்றது. இம் மாநாட்டின் போது  மாண்புமிக்க  உறுப்பினர்கள் குழுவானது பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. பொதுநலவாயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பரிந்துரைகளே அவையாகும். அவற்றில் பல முக்கியமான மறுசீரமைப்பு யோசனைகளும் அடங்கியுள்ளன. பொதுநலவாய அமைப்பில் ஜனநாயகம் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான ஆணையாளரை நியமித்தல் சட்ட ஆட்சி, மனித உரிமைகள் போன்ற விவகாரங்களை அந்த ஆணையாளர் கையாளும் விதத்தில் அதிகாரங்களை வழங்குதல்   போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகளினால் இப்போதும் ஆராயப்படும் சாசனத்திலுள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட பெறுமானங்களுக்கு வலுவூட்டுவதற்கான முயற்சியாக இந்த யோசனைகள் அமைந்திருந்தன. ஆனால், சர்வதேச ரீதியாக தற்போதிருந்து வரும் உறுதிப்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயம் செல்லும் சாத்தியம் காணப்படவில்லை.
தென்னாபிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொதுநலவாயம் உறுதியான வெற்றியைப் பெற்றிருந்தது. அத்துடன், நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவதிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வெற்றிகண்டிருந்தது. ஆனால் இன்று மிகவும் நெருக்கடியான விவகாரங்கள் சிலவற்றைக் கையாள்வதில் இந்த அமைப்பு அதிகளவுக்கு ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லையென்று தென்படுகிறது. இந்த விடயங்கள் பொதுநலவாயத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருப்பது அவசியமானதாகும். உதாரணமாக தனது உறுப்பு நாடுகளில் தன்னினச் சேர்க்கையை குற்றமாக்குவதை முடிவுக்குக் கொணடுவரும் நடவடிக்கைகளில் செயற்பாட்டுத் திறனுடன் ஈடுபட்டிருக்க முடியும். அல்லது ஆயுத விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்களிப்பை வழங்கியிருக்க முடியும்.
இன்றைய மதிய போசன நிகழ்வில் பங்கேற்கும் தலைவர்கள் சகல முக்கியமான விவகாரங்கள் குறித்தும் ஆராய்வதற்கு தேவையில்லையென்று கருதக்கூடும். அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்தும் இலங்கையின் ஜனாதிபதியுடன் மகாராணியார் மதிய போசன விருந்துபசாரத்தில் இணைந்துகொள்ளவிருக்கிறார். ஆனால், மனித உரிமை மீறல் விவகாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு காணும் வரை பொதுநலவாய உச்சிமாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லையென கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் கூறியிருந்தார்.  பொதுநலவாயத்தின் தடையைத் தனது நாடு உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவில்லையென்று ராஜபக்ஷ நியாயமான முறையில் கோரும் நிலை உள்ளது. உறுப்பு நாடுகள் பலவற்றின் ஆதரவை அவர் கொண்டிருக்கிறார். ஹார்பரின் கவலைகளை பல உறுப்பு நாடுகள் பகிர்ந்துகொண்டுள்ளன. அத்துடன் பொதுநலவாயத்திலுள்ள சகல அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஹார்பரின் கவலைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. ஆனால், இலங்கையில் நல்லிணக்கம் அல்லது அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு பொதுநலவாய நிறுவனங்கள் உதவ முடியாமல் இருப்பதாகத் தென்படுவதே இங்குள்ள பிரச்சினையாகும்.  இலங்கையின் அதன் ஆதரவாளர்களும் பொதுநலவாயத்தை மற்றொரு ஐ.நா. பாணியிலான மன்றமாகவே பார்ப்பார்கள். தண்டிக்கும் தீர்மானங்களுக்கான அமைப்பாகவே அவர்கள் இதனை நோக்குவார்கள். இந்நிலையில் அடுத்த பொதுநலவாய உச்சிமாநாடனது பாரிய தவறுகளுடனும் மேலும் ஐயப்பாடுகளுடனுமே இடம்பெறுவதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட பெறுமானங்களை பொதுநலவாயம் பேணிப் பற்றிப்பிடித்திருக்கின்றதா என்ற சந்தேகமும் நீடித்திருக்கும் நிலைமையே காணப்படுகிறது.
பொதுநலவாயத்தின் வேற்றுமையில் ஒற்றுமை பற்றி திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வைரவிழா நிகழ்வின் போது வேல்ஸ் இளவரசர் (சாள்ஸ்) குறிப்பிட்டிருந்தார். இதனை பொதுநலவாயத்தின் அரசியல் தலைவர்கள் வெற்றுப் பேச்சிலும் பார்க்க மேலான விடயமென இப்போது வெளிப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறு த கார்டியன் பத்திரிகை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. இப்பத்திரிகையில் தனஞ்சேயன் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி தினக்குரல்

சிரியாவில் தொடரும் அசாத் ஆதரவுப் படையின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 78 பேர் பலி 
7/6/2012  


  சிரியாவின் மத்திய மாகாணமான ஹமாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 78 பேர் அரச ஆதரவுப் படைகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்களில் சிலர் அங்குள்ள மஸ்ராட் அல்-குபாயிரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகள், பெண்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் கத்தியால் குத்திக்கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், சிலரின் உடல்கள் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குபாயி ஒரு விவசாயக் கிராமம் எனவும் 150 க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட அக்கிராமம் ஹமாவிலிருந்து 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

குறித்த படுகொலைகள் தொடர்பான தகவலை சமூக ஆர்வலர்கள் சிலரே வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹொவுலா பகுதியில் சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 108 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா - சீனா கூட்டாக போர் பயிற்சி 
7/ 6/2012 


  வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் பெய்ஜிங் சென்றுள்ளார்.

அப்போது அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா-சீனா கூட்டாக இராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

அதுதொடர்பாக ஜனாதிபதி புட்டின் சீன தலைவர்களுடன் விவாதித்தார். நேற்று அவர் சீன துணை ஜனாதிபதி ஜிங்பிங்குடன் பேச்சு நடத்தினார். அப்போது சீனா-ரஷ்யா கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்வது பற்றி முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின்போது சீன அதிபர் ஹீஜின் டாவ்வுடன் பேச்சு நடத்தவும் புட்டின் திட்டமிட்டுள்ளார்.

புட்டின் கூறுகையில், ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக இராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே சோதனை முறையில் மஞ்சள் கடல் பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டு இராணுவ பயிற்சி நீடிக்கும் என்றார்.

ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும். சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மஞ்சள் கடல் அமைந்துள்ளது. இங்கு 6 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் நீர் மூழ்கி கப்பல் மூலம் நடைபெறும் தாக்குதலை எதிர்கொள்வது, கடத்தப்பட்ட கப்பல்களை மீட்பது பற்றியும் பயிற்சி நடந்தது.

இந்தப் போர் பயிற்சியில் சீனா சார்பில் 16 பேர் கப்பல்கள், 2 நீர் மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. ரஷ்யா 4 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்தது. அடுத்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா-ரஷ்யா கூட்டு இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

No comments: