தமிழ் சினிமா


தடையற தாக்க

செல்வா என்ற கதாபாத்திரத்தில் வரும் அருண் விஜய் தனது பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கால்டாக்சி ஓட்டும் அருண் விஜய், பிரியாவாக வரும் மம்தா மோகன்தாஸை காதலித்துக் கொண்டிருக்கிறார்.

வாங்கிய கடனை அடைக்கவில்லை என்பதற்காக அவரது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போகிறார்.
அது மோதலாக உருவெடுக்க, பொலிஸின் ஆதரவுடன் ரவுடியிசம் செய்யும் மகா என்னும் அந்த கும்பலின் தலைவன் கொல்லப்படுகிறான்.

அந்த கொலைப்பழி அருண் மீது விழுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக மகாவின் கும்பல் அருண் விஜயை துரத்துகிறது. இந்த கும்பலிடமிருந்து அருண் தப்பித்தாரா இல்லையா, காதலியை கை பிடித்தாரா? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் மகிழ் திருமேனி.

110 இடங்களில் கத்தரி போட வேண்டும், இல்லையெனில் 'ஏ' சர்டிபிகேட்தான் தரமுடியும் என்று சென்சார் போர்டு சொல்ல, எனக்கு 'ஏ' சர்டிபிகேட்தான் வேண்டும் என்று டைரக்டர் இப்படத்திற்கு வாங்கியது சரியாகத்தான் இருக்கிறது.

படம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அருண் விஜய் இப்படத்தில் அழகாய் இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். சண்டை காட்சிகளில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். மம்தாவுடன் காதல் செய்யும் காட்சிகளில் நன்றாக ஒன்றியிருக்கிறார்.

மம்தா மோகன்தாஸ் அழகாய் வருகிறார். அருணைக் காதலிக்கிறார். வெட்கப்படவும் செய்கிறார். இவரது காதல் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளுமை.

படத்தில் வில்லன்களாய் வலம் வரும் மகா, குமார் ஆகியோரின் கொடூரமான குணங்கள், அடக்குமுறைகள், குரூரங்கள் அனைத்தும் அந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன. இவர்களது வில்லத்தனமான நடிப்பு நம்மை சில இடங்களில் உறைய வைக்கிறது.

இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே. எஸ். தமனின் இசையில் குத்தாட்டப் பாடலான 'பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான்..' கலகலக்கிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் மிரட்டியிருக்கிறார்.

மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. பிரவீன் - ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திரில்லர் கதைக்கேற்ற வேகத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான ரவுடியிசக் கதைதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை பரபரவென நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

காமெடிக்கென்று யாரையும் தேடாமல் கதைக்குள்ளேயே இயல்பான நகைச்சுவை காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

அந்த ஊரில் ஒரு பொலிஸ் கூட நல்லவராக இருக்க மாட்டாரா? எல்லோரும் வில்லனுக்கு அடியாட்களா? என ஒரு சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி.

நடிகர்: அருண் விஜய்.
நடிகை: மம்தா மோகன்தாஸ்.
இயக்குனர்: மகிழ் திருமேனி.
இசை: தமன்.
ஒளிப்பதிவு: சுகுமார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை

உடுமலைப்பேட்டையில் உள்ளது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அந்த ஊரில் இருப்பவர்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு படிக்க சென்றிருக்கும் பஞ்சாலை முதலாளியின் மகனான ராஜிவ் கிருஷ்ணா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போகும் பஞ்சாலை முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையின் ஆசைப்படி அமெரிக்காவிலிருந்து பஞ்சாலையை நிர்வகிக்க வருகிறார் ராஜிவ் கிருஷ்ணா. இப்படி சாதி பிடிப்பு அதிகம் உள்ள அந்த ஊரில் கதாநாயகன் கதிரும், கதாநாயகியான பூங்கோதையும் பஞ்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பூங்கோதையின் அக்கா சாதி விட்டு சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு கதாநாயகனும் அவனது நண்பர்களும் உதவியாய் இருக்கிறார்கள். இதனால் பூங்கோதையின் வெறுப்பிற்கு ஆளாகும் நாயகன், அவரது அக்கா சந்தோஷமாக இருப்பதை எடுத்துச் சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் கதாநாயகியின் அம்மாவான ரேணுகாவோ தனது மூத்த மகள் செய்ததை ஏற்க மறுக்கிறார். பின்னாளில் ரேணுகாவை சமாதானப்படுத்தும் பூங்கோதை கர்ப்பமாக இருக்கும் தனது அக்காவையும் அவரது கணவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
சந்தோஷமாய் சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் பூங்கோதையின் அக்கா செத்துக் கிடக்கிறார். அவரது கணவரோ தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனிடையே பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முதல் வருடம் வந்த லாபத்தில் 40 சதவீதம் போனஸ் தரும் ராஜிவ் கிருஷ்ணா, நடப்பாண்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 40 சதவீதம் போனஸ் தரமுடியாது என்கிறார். இதனால் போராட்டத்தில் குதிக்கும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
பஞ்சாலை சூப்பர்வைசராக வரும் சாக்லேட் சண்முகம் பூங்கோதையை ஒருதலையாய் காதலிக்கிறார். இவரது காதலை பூங்கோதை ஏற்க மறுக்க, விஷம் குடித்து விடுகிறார் சண்முகம். இதனால் கொந்தளிக்கும் சண்முகத்தின் தாய், ரேணுகாவின் குடும்பத்தையே அசிங்க அசிங்கமாய் ரோட்டில் வைத்து திட்டி விடுகிறார்.
இதனால் அவமானத்திற்குள்ளாகும் ரேணுகா தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாக்கப்பட்ட பூங்கோதை நாயகனிடம் வருகிறார். உடுமலையிலிருந்து இருவரும் சென்னை வருகிறார்கள்.
அங்கு அவர்கள் நிலை என்ன ஆனது? மூடப்பட்ட பஞ்சாலை என்ன ஆனது? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.
கதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹேமச்சந்திரனின் நடிப்பு மிகவும் நேர்த்தி. பூங்கோதையாக நடித்துள்ள நந்தனாவின் நடிப்பு கச்சிதமாய் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறது. அழகாய் இருப்பது மட்டுமின்றி அழகாய் நடித்தும் இருக்கிறார்.
சாதி பிடிப்பில் உறுதியாக இருக்கும் அம்மாவாக வரும் ரேணுகா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சாக்லேட் சண்முகமாக வரும் சண்முக ராஜாவின் நடிப்பு அற்புதம். கேண்டீன் மாஸ்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், கதிரின் நண்பன் கிட்டுவாக வரும் அஜயன் பாலா, டிப்டாப் பழனிசாமியாக வரும் பாலாசிங் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
வைரமுத்து, தாமரை ஆகியோர்களின் வரிகளில் பாடல்கள் அத்தனையும் இதம். அதிலும் உன் கண்கள் கண்ணாடி பாடல் கண்களுக்கும், செவிகளுக்கும் இதம்.
என்.ஆர். ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்க பலம். சுரேஷ் பார்கவ் மற்றும் அதிசயராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது. 'சாதி விட்டு சாதி கல்யாணம் பண்றவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஊர் சென்னை மட்டுமே' என்று நச் வசனத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.
பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்வியலையும், உடுமலை வட்டாரப் பகுதிகளில் முன்பு இருந்த சாதிப் பிடிப்பை அழகாய் பதிவு செய்திருக்கிறார் தனபால் பத்மநாபன்.
கதாநாயகி அக்காவின் சாவிற்கு யார் காரணம் என்பதை கிளைமாக்சில் சொல்லாமல் விட்டது குறை என்றே சொல்லவேண்டும்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை - ரசிகர்களை கவரும் ஆலை
நடிகர்: ஹேமச்சந்திரன், சண்முக ராஜா, தென்னவன், ராஜுவ் கிருஷ்ணா, அஜயன் பாலா, எம்.எஸ். பாஸ்கர், பாலாசிங்.
நடிகை: நந்தனா, ரேனுகா.
இயக்குனர்: தனபால் பத்பநாபன்.
இசை: என்.ஆர். ரகுநந்தன்.
ஒளிப்பதிவு: சுரேஷ் பார்கவ், அதிசயராஜ்.

நன்றி விடுப்பு


ஹொலிவூட் படத்தை இயக்கி நாயனகாகவும் நடிக்கிறேன் கமல் அறிவிப்பு Tuesday, 12 June 2012  


kamal_hassan_3சென்னை: ஹொலிவூட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல் ஹாசன் சிங்கப்பூரில் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விழா நடைபெற்றது. (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள “விஸ்வரூபம்’ படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில சண்டைக் காட்சிகளும் திரையிடப்பட்டன.
இதே விழாவில் லோர்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்துகொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர்.
விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது;
எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்குது. இந்தப் படம் மூலம் ஹொலிவூட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன்.
இவர் ஹொலிவூட்டில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். “மேட்ரிக்ஸ்’ லோர்ட் ஆப் தி ரிங், “கிரேட் கேட்ஸ்பி’ ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும் அவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவரிடம் நான் 9 கதைகளைச் சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும் எனவே இந்தக் கதையை ஹொலிவூட்டில் தயாரிக்க விரும்புவதாக பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹொலிவூட் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்ளலாமா? என்று தயங்கினேன.“ ஆனால், அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் படத்தை நான் இயக்கி நடிக்க சம்மதித்துள்ளேன்.
விஸ்வரூபத்தை இயக்கிய உங்களுக்கு ஆங்கிலப் படம் இயக்குவது பெரிய விடயமல்ல என்று அவர் ஊக்கமளித்தார்.
இதுதவிர என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸுடனும் இணைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹொலிவூட்டுக்கு வர÷ வண்டும் என்றும் தொடர்ந்து ஆங்கிலப் படங்களில் நடித்து இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நன்றி தினக்குரல்

No comments: