சமரசங்களுக்குட்படாத சுதந்திர மனிதன் ஏ.ஜே. கனகரட்னா சில நினைவுகள் - முருகபூபதி

.
 இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தியை எனக்கும் மல்லிகை ஜீவாவுக்கும் முதலில் சொன்னவர் ஏ.ஜே. கனகரட்னா. யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியையும் காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் அக்காலத்தில் பிரசித்திபெற்ற மூத்திர ஒழுங்கையினுள் மல்லிகை அலுவலகம் அமைந்திருந்தது.
(தற்போது இந்த ஒழுங்கையினுள்தான் தினக்குரல் பத்திரிகையின் யாழ். அலுவலகம் அமைந்துள்ளது)
 1983 வன்செயல் கலவரம் என்னையும் குடும்பத்தினரையும் தற்காலிகமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரவைத்திருந்தது. வன்செயலைத்தூண்டிவிட்ட அன்றைய ஜே.ஆரின் ஆட்சியாளர்கள் அந்தப்பழியை மக்கள் விடுதலை முன்னணி உட்பட இடதுசாரி இயக்கங்களின் மீதும் சுமத்திவிட்டு தார்மீகம் பேசிய காலம். பலர் தலைமறைவாகவேண்டியிருந்தது. நான் குடும்பத்தினரின் நிர்ப்பந்தங்களினால் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அரியாலையில் சிறிதுகாலம் தங்கியிருந்தேன்.
a.j.kanagaratna. 10

இக்காலப்பகுதியில் அடிக்கடி யாழ்நகருக்குவந்து மல்லிகை அலுவலகத்தில் ஜீவாவுடனும் அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரன் அண்ணருடனும் உரையாடிக்கொண்டிருப்பேன். சிலசமயங்களில் மல்லிகையில் எழுத்துப்பிழை திருத்துவேன். அப்படி ஒருநாள் திருத்திக்கொண்டிருந்தபோது ஏ.ஜே. அங்கு வந்தார்.
 அவர் ‘தாகசாந்தி’ செய்திருந்தார். அவர் தனது தாகம் தணிக்காமல் இருந்ததில்லை.
 “ பூபதி என்ன செய்கிறீர்?”
“ மல்லிகை Proof திருத்துகிறேன்.”
“ அட… அதுக்குத்தானப்பா இங்கே ஒரு Associate Editor இருக்கிறாரே… ஜீவா உமக்கும் உந்த வேலையை தந்தாரா?”
“ யார் அந்த Associate Editor ?” – நான் புருவம் உயர்த்திக்கேட்கிறேன்.”
“ அங்கே பாரும் வெற்றிலை குதப்பிக்கொண்டு உள்ளே ஒருத்தர் அச்சுக்கோக்கிறார்.”
ஏ.ஜே. அவ்வாறு சுட்டியது எங்கள் சந்திரசேகரன் அண்ணரைத்தான்.
 இப்படி வேடிக்கையாகப்பேசும் இயல்புள்ள ஏ.ஜே. மற்றுமொருநாள் அந்த ஒழுங்கையூடாக ஆடி ஆடி வந்து பதைபதைக்கச்சொன்ன தகவல் “ இந்திரா காந்தியை சுட்டுப்போட்டான்கள்.”
 1984 நவம்பரில் மீண்டும் நீர்கொழும்புக்குச்செல்ல தீர்மானித்துவிட்டு ஜீவாவுக்கு பயணம் சொல்ல ஒரு  முற்பகல்பொழுது வந்திருந்தேன். வரும்போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் அன்றைய ஈழநாடு இதழையும் வாங்கிவந்திருந்தேன். ஆனால் அதில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி இல்லை. ஆனால் மதியம் வானொலியில் செய்தி கேட்டுவிட்டு ஏ.ஜே. அதனைச்சொல்வதற்கு பதட்டத்துடன் ஓடிவந்தார்.
 1983 கலவரத்திற்குப்பின்னர் தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய ஒருவராகத்திகழ்ந்த இந்திராகாந்தியின் திடீர் மறைவு ஏ.ஜே.யையும் கலவரப்படுத்தியிருக்கலாம்.
 இலங்கை ஊடகங்களில் குறிப்பிட்ட செய்தி வெளியாவதிலிருந்த தாமதங்களினால் ஏ.ஜே. கொதிப்புடன் இருந்தார். அச்சமயம் அவர் உதிர்த்த வார்த்தைகளை நாகரீகம் கருதி இங்கு பதிவுசெய்யவில்லை. அவர் தாகசாந்தி செய்தால் உதிரும் வார்த்தைகள் சிலவற்றை பதிவுசெய்யமுடியாதுதான்.
 என்னை மட்டுமல்ல இன்னும்பலரையும் படைப்பாளிகளையும் பேராசிரியர்களையும் மிகவும் கவர்ந்த ஒரு மனிதர் ஏ.ஜே. மல்லிகை ஜீவாவின் இனிய நண்பராக வாழ்ந்துகொண்டே ஜீவாவை கண்டபடி பேசுவார். அவ்வளவுக்கு உரிமை எடுத்துக்கொண்டவர்.
 நீர்கொழும்பில் 1973 ஆம் ஆண்டு மல்லிகை ஒன்பதாவது ஆண்டுமலர் அறிமுகவிழாவை ஒழுங்கு செய்துவிட்டு ஜீவாவை அழைத்திருந்தேன். தன்னுடன் ஏ.ஜே.யும் வருவதாக எனக்கு அஞ்சலட்டை அனுப்பியிருந்தார். எனக்கு அதுவரையில் ஏ.ஜே.யைத்தெரியாது. ஆனால் அவரது எழுத்துக்களை மல்லிகையில் படித்திருக்கின்றேன்.
 மல்லிகை வெளியீட்டில் ஜீவாவுக்கு துணை ஆசிரியர்களாக தெணியானும் ஏ.ஜே.யும் சம்பளம் வாங்காமல் வேலை செய்கிறார்கள் என்ற தகவல் எனக்கு எட்டியிருந்தது. ஏ.ஜே.யும் வருகிறார் என்பதை அறிந்து அழைப்பிதழில் அவரது பெயரையும் பதிவுசெய்திருந்தேன். இப்பொழுதும் அந்த அழைப்பிதழ் என்வசம் அவுஸ்திரேலியாவில் இருக்கிறது.
 30-08-1973 ஆம் திகதி நீர்கொழும்பு பௌத்த மந்தீர மண்டபத்தில் நடந்த குறிப்பிட்ட இலக்கியக்கூட்டத்திற்கு பூரணி ஆசிரியர் என்.கே. மகாலிங்கமும் வந்திருந்தார்.
 மண்டப வாசலில் ஜீவாவையும் மகாலிங்கத்தையும் வரவேற்கும்போது எனக்கு ஏ.ஜே.யை ஜீவா அறிமுகப்படுத்தினார். அவரிடம் அழைப்பிதழை நீட்டினேன்.
 தனது பெயரும் பேசுபவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைப்பார்த்த ஏ.ஜே.யின் அழகிய சிவந்த முகம் மேலும் சிவந்தது.
 “ ஐஸே… நான் கூட்டங்களில் பேச மாட்டன். ஜீவா உமக்குச்சொல்ல இல்லையா?”- என்றார்.
 “ மன்னிக்கவும். எனக்குத்தெரியாது.” நான் நெளிந்தேன்.
 “ இப்பத்தானே இந்த இலக்கிய உலகத்திற்கு வந்திருக்கிறீர்… இன்னும் இன்னும் தெரிந்துகொள்வீர்.” எனச்சொல்லிவாறு எனது தோளில் கைபோட்டார்.
 ஆம் அவர் சொன்னது போன்று மேலும் மேலும் தெரிந்துகொண்டேன். 1975 இல் யாழ்ப்பாணத்தில் எனது சுமையின் பங்காளிகள் நூல் அறிமுகக்கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். மல்லிகை எனக்கு வழங்கிய குறிப்பிடத்தகுந்த நண்பர்கள் வட்டத்தில் இணைந்தவர்தான் ஏ.ஜே.
 வாழ்நாள்பூராவும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஒரு சுதந்திர மனிதன். சுமரசங்களுக்குட்படாமல் துணிச்சலுடன் பேசுபவர். எழுதுபவர்.
 1975 டிசம்பர் மாதம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் சுமையின் பங்காளிகள் அறிமுகக்கூட்டத்திற்கு செல்வதற்காக மல்லிகை அலுவலக வாசலில் நிற்கிறேன். எனக்கு வீரசிங்கம் மண்டபத்திற்கு செல்ல பாதை தெரியாது. ஜீவாவும் என்னை அழைத்துச்செல்ல தயாராக நின்றார். அந்த ஒழுங்கையில் ஏ.ஜே. வேகமாக வருகிறார். ஜீவாவிடம் ஒரு சிறிய காகிதக்கற்றையை கொடுத்துவிட்டு வந்தவேகத்தில் திரும்புகிறார்.
“ கூட்டத்துக்கு வர இல்லையே…?” ஜீவா உரத்துக்குரல் கொடுக்கிறார்.
“ நீங்கள் போங்கோ… நான் அங்கே வருவேன்.”
 அவர் வந்தவேகத்தில் திரும்பி எங்கே அவசரமாகச்செல்கிறார் என்பது ஜீவாவுக்குத்தெரியும்.
ஏ.ஜே. தந்த அந்த காகிதக்கற்றையை பிரித்து வாசலில் நின்றே ஜீவா படிக்கிறார். பின்னர் அதனை தமது பொக்கட்டுக்குள் திணித்துக்கொண்டு “ சரி வாரும் போவோம்.” எனச்சொல்லியவாறு தமது சைக்கிளை எடுக்கிறார். இருவரும் நடந்தே மண்டபத்திற்குச்செல்கின்றோம்.
மழை தூரத்தொடங்குகிறது. வேகமாக நடந்து மண்டபத்தின் வாசலை அடைகிறோம். எமக்கெல்லாம் முன்பே அங்கு சென்று வாசலில் நின்று வரவேற்கிறார் ஏ.ஜே.
“ மழையைக்கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்… இனி உம்மட காட்டில நல்ல மழைதான் பெய்யும்.” என்று அன்றே வாழ்த்தியவர்தான் ஏ.ஜே.
 அக்கூட்டத்தில் ஜீவா பேசும்போது ஏ.ஜே. மல்லிகை 1976 ஜனவரி இதழுக்காக எழுதியிருந்த அன்றையதினம் மாலையில் அவர்வசம் ஏ.ஜே. திணித்துவிட்டுச்சென்ற குறிப்புகளை பூடகமாக உணர்த்தினார்.
 அந்தக்குறிப்பு, பட்டதாரிகளும் மீனவர்களும் என்ற தலைப்பில் மல்லிகை ஜனவரி இதழில் வெளியானது.
 அக்காலப்பகுதியில் நான்கு இளம் தலைமுறைப்படைப்பாளிகளின் கதைத்தொகுப்புகள் வெளியாகியிருந்தன.
சாந்தன் ( ஒரே ஒரு ஊரிலே)
நெல்லை. க.பேரன் ( ஒரு பட்டதாரி நெசவுக்குப்போகிறாள்)
அ.யேசுராசா ( தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்)
முருகபூபதி ( சுமையின் பங்காளிகள்)
 இந்த நான்கு நூல்களையும் பற்றிய குறிப்புகளையே ஏ.ஜே. எழுதியிருந்தார். அக்குறிப்புகளையும் வெகு சுவாரஸ்யமாகவே இப்படி ஆரம்பிக்கின்றார்.
   காய்கறிச் சந்தையில் மட்டுமல்ல, புத்தகச்சந்தையிலும் விலைவாசிகள் வானை நோக்கி ஏறிக்கொண்டிருக்கின்றன.  அண்மையில் வெளிவந்த இச்சிறுகதைத்தொகுதிகள் ஒவ்வொன்றும் 100 பக்கங்களுக்குக் குறைவாகவிருந்தபோதிலும் விலைகளோ ரூபா 3 க்கு மேலே போய்விட்டன. பணவீக்கமும் உற்பத்திச்செலவு அதிகரிப்பும் ஏற்பட்டிருக்கும் இன்றைய பொருளாதார நிலையில், இவ்வாசிரியர்களை இதற்காகக் குறை சொல்வதற்கில்லை. 
 இன்றைய கணினி யுகத்தில் விரைவில் வெளியாகும் எம்மவர்களின் நவீனவடிவமைப்பு படைப்பு நூல்களின் விலைகளுடன் அன்றைய காலகட்டத்தில் வெளியான எம்மவரின் வெள்ளீய அச்சுக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகி வெளிவந்த நூல்களின் விலைகளை ஒப்பிட்டுப்பாருங்கள். தற்போது ஐந்து ரூபாவுக்கு ஒரு தேநீரும் குடிக்க முடியாது. ஒரு இதழும் வாங்க முடியாது.
  ஏ.ஜே.யுடன் எனக்கிருந்த உறவுதொடர்பாக ஏற்கனவே 2001 இல் நான் எழுதியிருந்த ‘மல்லிகை ஜீவா நினைவுகள்’ நூலில் சுமார் நான்கு பக்கங்களில் விரிவாகப்பதிவு செய்துள்ளேன். வாசகர்கள் அதனைப்படித்தால் ஏ.ஜே. பற்றிய பல சுவாரஸ்யங்களை மேலும் தெரிந்துகொள்ளலாம்.
 இன்றைய கணினி யுகத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடிகள் பற்றி நான் சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. ஆயுதங்களை தம்வைசம் வைத்திருக்கும் தைரியத்தில் ஊடகவியலாளர்களின் உயிர்களை குடித்தவர்கள் அரசியலிலும் இருந்தார்கள் இயக்கங்களிலும் இருந்தார்கள்.
 செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசம் எங்களுடையது.
 பல ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் பிரபல ஆங்கில செய்தி இதழை வெளியிடும் செல்வாக்கு மிக்க பத்திரிகை நிறுவனத்தில் ஏ.ஜே. பணியாற்றினார். அச்சமயம் ஏழைகளினதும் நடுத்தரவர்க்கத்தினரதும் பிள்ளைகளின் நலன் கருதி அக்காலப்பகுதி கல்வி அமைச்சர் புதியதொரு கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனைப்பொறுக்கமுடியாத குறிப்பிட்ட ஏகபோக முதலாளி வர்க்க ஏட்டின் இயக்குநர் ஒருவர் தமக்கு கீழே பணிபுரியும் ஏ.ஜே.யிடம், அந்த கல்வித்திட்டத்திற்கு எதிராக எழுதுமாறு கட்டளையிட்டார். வழக்கமாக என்ன நடந்திருக்கும். சம்பளத்திற்கு வேலை செய்யும் பத்திரிகை துணை ஆசிரியர் முதலாளியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மனச்சாட்சிக்கு விரோதமாகவே எழுத நேர்ந்திருக்கும்.
 ஆனால், ஏ.ஜே. என்ன செய்தார் பாருங்கள்.
அந்த செல்வாக்கு மிக்க செல்வந்தரான அந்த இயக்குநரின் முன்னாலேயே ஒரு சிறு காகிதத்தில் தமது பதவி விலகல் கடிதத்தை எழுதிக்கொடுத்துவிட்டு விருட்டென எழுந்து வந்துவிட்டார்.
 அவர்தான் ஏ.ஜே. அதுதான் ஏ.ஜே.யின் தனித்துவம்.
1975 ஆம் ஆண்டளவில் அவருக்கு கொழும்பில் ஒரு உத்தியோகத்திற்காக நேர்முகப்பரீட்சை நடந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலேறி வந்துவிட்டார். நேர்முகப்பரீட்சைக்கும் சென்றார். ஏற்கனவே குறிப்பிட்ட உத்தியோகத்திற்கான விண்ணப்பத்தை தபாலில் அனுப்பியபோது தனது சுயவிபரக்குறிப்புகளில் தான் எழுதியிருந்த  ;மத்து’ என்ற நூல்பற்றியும் பதிவுசெய்திருக்கிறார். (இந்த நூலுக்கு சாகித்திய விருது கிடைத்தது)
 நேர்முகப்பரீட்சை நடத்திய பெரியவர்கள் அந்த நூலை படித்ததில்லை. எனினும் குறிப்பிட்ட மத்து நூலை பார்க்க விரும்பி, “ மத்து என்று ஒரு நூல் எழுதியிருக்கிறீர்கள். அதனை எமக்கு காண்பிக்கவும்” என்றார்கள்.
 இப்படியும் ஒரு கேள்வி கேட்பார்கள் என்று ஏ.ஜே. க்குத் தெரியாது. அவரும் அதனைக்கொண்டு வரவில்லை.
 “ நான் அதனை எடுத்துவரவில்லை” என்கிறார் ஏ.ஜே.
“ எதற்கும் உமது பேக்கில் பாரும். சிலவேளை கொண்டுவந்திருப்பீர்.” என்று ஒரு தமிழ் பெரியவர் சொல்கிறார்.
ஏ.ஜே.க்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது.
“ எடுத்துவரவில்லை என்று சொல்றன். என்ன…எனது  மத்தை புடுங்கியா தரச்சொல்லுரீர்” – என்று கேட்டுவிடுகிறார்.
 ஏ.ஜே. க்கு குறிப்பிட்ட அந்த உத்தியோகம் கிடைத்திருக்கும் என்று நம்பமுடியுமா?
 அந்த நேர்முகத்தேர்வு நடந்தன்று மாலை கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மல்லிகை ஆண்டுமலர் அறிமுகக்;கூட்டத்திற்கு வந்திருந்த ஏ.ஜே. என்னிடம் இந்த சுவாரஸ்யத்தை சிரிக்காமல் சொன்னார்.
“ என்ன ஐசே… மத்து புத்தகம் எடுத்துவரவில்லை என்று எத்தனை தடவை சொல்றது.” எனச்செல்லிவிட்டு வலது கையை கீழேவிட்டு “ புடுங்கியா கொடுப்பது” எனச்செல்லிவிட்டு வந்துவிட்டன்.” என்றார்.
“ வேலைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”- எனக்கேட்டேன். இவ்வாறு நான் கேட்டபொழுது எதிர்பாராதவிதமாக,  அன்று காலை நடந்த நேர்முகத்தேர்வில் மத்து பற்றி கேட்ட குறிப்பிட்ட தமிழ்ப்பெரியவரும் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்தினுள் பிரவேசித்தார்.
உடனே ஏ.ஜே. அவர் வந்த திசையை காட்டி “ அந்தாபாரும்…. அந்த ஆள்தான். இங்கேயும் என்ற மத்தை கேட்க வந்திட்டுது” என்றார். வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. ஏ.ஜே.யை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வாய்விட்டுச்சிரித்து, சிரிப்பு அடங்கியதும் மீண்டும் அவருடன் மண்டபத்திற்குள் வந்தேன்.
“ பூபதி இந்த மத்து கதையை நீர் மறக்கமாட்டீர்” என்ற ஏ.ஜே.யை மறக்கத்தான் முடியுமா?
 நான் அவுஸ்திரேலியா வந்தகாலகட்டத்தில் (1987) யாழ்ப்பாணத்தில் (Saturday Review) சட்டர்டே ரிவியூ  இதழில் காமினி நவரட்ணா மற்றும் கவிஞர் சேரன் ஆகியோருடன் அவர் அங்கு பணியிலிருந்தது தெரியும். கணினி வசதி இல்லாத அக்காலப்பகுதியில் சேரனுக்கு எழுதும் கடிதங்களில் ஏ.ஜே. பற்றியும் தவறாமல் கேட்டுவைப்பேன்.
 1987 நடுப்பகுதியில் சேரனிடமிருந்து எனக்குக்கிடைத்த கடிதம் ஒன்றில், குறிப்பிட்ட ஆங்கில இதழ் அச்சாகிய பணிமனையும் குண்டுவீச்சுக்கு இலக்காகியபோது ஏ.ஜே.யும் சேரனும் மற்றும் சிலரும் மயிரிழையில் உயிர்தப்பிய தகவல் இருந்தது.
 1990 தமிழகம் சென்றவேளையில் அங்கு நான் சந்தித்த இளம்பிறை ரஹ்மானிடம் இந்தத்தகவலை பரிமாறியபோது , “ஏ.ஜே.யை என்னிடம் அனுப்பிவைக்க ஏற்பாடுசெய்யுங்கள். அவரை இங்கு நாம் நன்கு பார்த்துக்கொள்வோம்.” எனக்கேட்டுக்கொண்டார். இதுவிடயமாக என்னுடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் வலியுறுத்தினேன்.
 இலங்கை திரும்பிய ஜீவாவும் இந்தத்தகவலை ஏ.ஜே.க்கு சொல்லியிருக்கக்கூடும்.
 ஆனால் இந்த நைஷ்டிக பிரம்மச்சாரி (பெண் சகவாசமே அற்ற துறவி) தனது தாயகத்தை விட்டு என்றைக்கும்  அகலாமல் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச்சென்றவிடத்தில் அங்கு மறைந்தார்.
 ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் தீவிர இலக்கிய வாசகர், விமர்சகர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர் ஏ.ஜே. கனகரட்னா.
                             -



No comments: