இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம் - காண பிரபா


ஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க, மூன்று தசாப்தங்களாக வீரியம் கொண்டிருந்த போர்ச்சூழலில் எத்தனையோ பல எழுத்தாளர்களின் அச்சு வாகனமேறிய நூல்களின் எஞ்சிய பிரதிகள் கூட, தாம் சந்தித்த இடப்பெயர்வுகளின் போது தொலைந்தும், அழிந்தும் போயின. அச்சுக்கு வராத பல பிரதிகளின் எழுத்து வடிவங்களுக்கும் இந்த நிலை என்பதைச் சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாளரோடு பேசும் போது அவர் தம் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். இந்த நிலையில் ஏற்கனவே தம்மிடம் இருந்த நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் வாசகர்கள் பலர், உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகளின் போதும் பாதுகாத்து வைத்திருந்த நிலையும் இருந்திக்கின்றது.கடந்த ஆண்டுகளாக நான் தாயகம் போகும் போது, அங்குள்ள புத்தகசாலைகளை மேயும் போது, நம்மவர் உள்நாட்டில் வெளியிட்ட புத்தகங்களில் அண்மைய வெளியீடுகள் நீங்கலாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட நூல்களின் பிரதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. வெளிநாட்டின் புலப்பெயர்வுச் சூழலில் இருந்து வெளியிட்ட நூல்களைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் தேடவேண்டும். தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கும் எழுத்தாளனின் நூலைத் தேடி இறக்குமதியாக்கி வெளியிடும் இலங்கையின் முன்னணிப் புத்தகசாலைகள் அதே முனைப்பை ஒரு ஈழத்து எழுத்தாளன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ வெளியிடும் நூலுக்குக் கொடுக்க வருவதில்லை என்பது கவலைக்குரிய விஷயம் கூட. அதற்கான காரணிகளில் ஒன்றாக, மாறிவரும் இலங்கை வாசகனுடைய வாசிப்பு என்ற சால்ஜாப்பை என்னால் ஏற்க முடியாது. 

இந்த நிலையில், இலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம்http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர். இன்றைய காலகட்டத்தில் ஆர்வலர் பட்டாளம் ஒன்றைத் திரட்டி, ஈழத்திலும் ஈழத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் இருக்கும் அன்பர்களோடு சேர்ந்து இந்த நூலத்த்திட்டத்துக்காகச் செய்து வரும் இந்தப் பணி முழுமையான இலாப நோக்கற்றது. தம் சொந்தப் பணத்திலும், அன்பர்கள் கொடுக்கும் நன்கொடைகளின் மூலமாகவும் இந்த நூலகத் திட்டத்துக்கான பெரும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்கள். இதன் விளைவு இன்று பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து நிற்கின்றது இந்த நூலகத் திட்டம்.

அவுஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் விக்டோரியா, மற்றும் நியூ சவுத்வேல்ஸ் ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களிலே, பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுக்க வகை செய்திருக்கின்றது இந்த நாட்டு அரசு.இந்தப் புகுமுக வகுப்புக்கான தமிழ்ப்பாட நெறியில் முக்கியமான ஒரு பிரிவு ஆய்வுப்பணி. அதாவது ஏதாவது ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அது குறித்த தேடல்களையும், முடிவுகளையும் செய்யவேண்டிய தேவை மாணவனுக்கு இருக்கிறது. 
இந்தப் புகுமுக வகுப்புக்கான பயிற்சிப்பட்டறைகளுக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் என் அனுபவத்தின் படி,இந்த ஆய்வில் பெரும்பாலும் ஈழத்து வாழ்வியல், இலக்கியம் என்பதையே முக்கியமான கருவாகக் கொண்டு மாணவர்கள் தம்மைத் தயார்படுத்துகின்றனர். இங்குள்ள தமிழ் அறிவகம் என்ற நூலகம் தன் எல்லை வரை இங்குள்ள மாணவனுக்கான உதவியைக் கொடுத்தாலும், பரந்துபட்ட ஆய்வைச் செய்யும் ஒரு மாணவனுக்குத் தேடல் என்று வரும் போது இயல்பாக வரும் சவால், நூல்களை எப்படிப் பெறுவது. இந்த நிலையில் நூலகத்திட்டத்தின் அடுத்த கட்ட இலக்கு வந்து நிற்கின்றது. அதாவது நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களைத் தவிர்த்து இந்த நூலகத்திட்டத்தின் வழியாகப் பயன்பெறப்போகும் தமிழ் மாணவர் சமுதாயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

நூலகத் திட்டத்தினை நெறிப்படுத்துபவர்களில் ஒருவர் நண்பர் கோபி அவர்களை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்த நூலகத் திட்டத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது, இதன் முக்கிய நோக்கம், பணிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்து விரிவானதொரு பேட்டியை வழங்கியிருந்தார் கோபி. பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து இன்னும் பல்லாயிரம் ஆவணங்களைத் திரட்டவேண்டிய தேவையோடு பயணிக்கும் இந்த நூலகத் திட்டத்தின் சவாலாக இருப்பது நிதி ஆதாரம். ஒரு நூலை இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் சேமிக்க இலங்கை ரூபா 500 வரை தேவையாக இருக்கின்றது. எனவே இந்தப் பணியில் நம் எல்லோரும் இணைந்து கரங்கொடுப்பதோடு, எம்மிடம் இருக்கும் அரிய பல ஈழத்து நூல்களைக் கொடுத்து அவற்றை இங்கே சேமிப்பதன் மூலம் நம் எதிர்காலச் சந்ததிக்கும் காலாகாலமாகப் பயனுறும் என்பதில் ஐயமில்லை.

ஈழத்து நூலகத் திட்டம் குறித்து கோபி வழங்கிய நேர்காணலைக் கேட்க

http://www.radio.kanapraba.com/interview/Noolaham.mp3

No comments: