மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா -யமுனா ராஜேந்திரன்

த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்-மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா - GTNற்காக யமுனா ராஜேந்திரன்


05 ஜனவரி 2012 GTNற்காக யமுனா ராஜேந்திரன்
தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் தற்கொலை செய்து கொண்டு அல்லது கொல்லப்பட்டு மரணமுற்றார். இன்று நினைக்க என்றும் அது துக்க நாளாகவே இருக்கிறது.
மர்லின் மன்றோ உலகின் தேவதை என்றால் சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவின் தேவதை. குழந்தையின் பேதைமையும் இளம்பெண்ணின் வளர்பருவக் குறுகுறுப்பையும் கள்ளமின்மையையும் இவர்களது புன்னகையிலும் உடல்மொழியிலும் பார்க்க முடியும். இவர்களது மொழியும் கொஞ்சுமொழிதான். மர்லின் மன்றோ உலக சினிமாவிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் இலக்கியத்திலும் அமரத்துவம் பெறுவதற்குக் காரணமாக ஆர்தர் மில்லரும் பாப் பாடகி மடோன்னாவும் இருந்தார்கள். துரதிருஷடவசமாக சில்க் ஸ்மிதாவுக்கு காதலும் காமமும் குறித்த இயந்திரரீதியான தமிழ் பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரனும், பாலிவுட் இயக்குனர் மிலான் ருத்ரியாவும்தான் கிடைத்திருக்கிறார்கள்.சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடியொற்றிய த டர்ட்டி பிக்சர் எனும் இந்திப்படம் (The Dirty Picture : 2011) இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஆங்கிலத் துணைத் தலைப்புக்களோடு, சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான டிசம்பர் 2 ஆம் திகதி உலகெங்கிலும் வெளியானது.த டர்ட்டி பிக்சர் படம் குறித்துப் பேசுவதற்கு முன்னால் சில்க் ஸ்மிதாவின் வாழ்வு எந்த அளவு தமிழ் மொழியில் அல்லது இந்திய மொழிகளில் ஏதொன்றிலும் பதியப்பட்பட்டிருக்கிறது என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். சில்க் ஸ்மிதா 1960 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். சிறுமியாக இருக்கும்போதே அவரது தந்தையார் அவரது தாயைவிட்டுப் பிரிந்தார். அவருக்குத் துல்லியமாகத் தனது தாயையும் தெரியாது. அவருக்கு உடன் பிறந்தார் எவரும் இல்லை. தாய் என்று சொல்லப்பட்டவருடன் வளர்ந்த அவர் 16 வயதில் திருமணம் முடித்து வைக்கப்பட, கணவரின் சித்திரவதை தாளாது ஓரு நாள் நள்ளிரவில் ஆந்திராவை விட்டோடி சென்னை வந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். இது ஒரு கதை.சிலுக்கு ஸ்மிதா 8 வது வயதில் வறுமையினால் தான் படித்துக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பிலிருந்து வெளியேறினார். தாயும் தமையனும் உண்டு. தந்தை 6 வயதிலேயே குடும்பத்தை விட்டு ஓடிப்போனவர். அவருககுத் திருமணம் என்றெல்லாம் நடக்கவில்லை. தான் ஒரு குணச்சித்திர நடிகையாகவே ஆசைப்பட்டு, தனது வறுமையிலிருந்து வெளியேற விரும்பி 16 வயதில் சென்னை வந்தவர். இது பிறிதொரு கதை.முதல் வகையிலான வாழ்க்கைக் குறிப்பை தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் ராண்டார் கை பதிவு செய்கிறார். இரண்டாவது குறிப்பை எழுதியவர் எவர் என உறுதிப்படுத்திக் கொள்வது சாத்தியமேயில்லை.எலூருவிலிருந்து சென்னை வற்து சேரும் விஜயலட்சமி எனும் இயற்பெயர் கொண்ட சிலுக்கு ஸ்மிதா குறித்த இந்த இரு குறிப்புக்களிலும் ஒரு சில பொதுத்தன்மைகள் உண்டு. வறுமையான குடும்பத்தில் பிறந்த, தந்தையினால் புறக்கணிக்கப்பட்ட பால்யத்தைக் கொண்ட, பால்ய வயதில் பள்ளிக் கல்வியை இடைநிறுத்திய, தனது 16வது வயதில் சென்னை நோக்கி வந்த இளம்பெண் சில்க் ஸ்மிதா. சென்னை வந்து சேர்ந்த அவர் சென்னைத் தெருவோரம் தேநீர்க் கடை வைத்திருக்கிற ஒரு அன்பான மத்தியதரவயதுப் பெண்ணுடன் தங்கியபடி தமிழ் சினிமாவில் வாய்ப்புத் தேடுகிறார். ஆரம்பத்தில் எக்ஸ்ட்ரா நடிகைகளுக்கு மேக்அப் டச் பெண்ணாக அவருக்கு வேலை கிடைக்கிறது.இந்த அடிப்படையான தரவுகளுக்குப் பின்னால், சில்க் ஸ்மிதாவின் வாழ்வு குறித்து நமக்குக் கிடைக்கிற நம்பகரமான, எழுத்துபூர்வமான பதிப்பட்ட தரவுகள் இரண்டே இரண்டுதான்.ஓன்றினை வண்டிச் சக்கரம் படத்தில் விஜயலட்சமியைச் சிலுக்கு எனும் பாத்திரத்தில் அறிமுகப்படுத்திய அப்படத்தின் இயக்குனர் வினு சக்ரவரத்தியினுடையது. பிறிதொன்று தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒரு சில ஆண்டுகள் ஸ்மிதாவின் காதலராக இருந்த வேல பிரபாகரனுடையது (Silk Smitha and A Director seeking pardon for Love and Lust : Cinesouth : 23 January 2009). வினு சக்ரவர்த்தி விஜயலட்சமியைத் தான் 1979 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் நின்று கொணடிருந்தபோது, எதிர்ப்புறம் இருந்த ஒரு மாவரைக்கும் தொழிற்சாலையில் இருந்து அவர் வெளியே வந்தபோது பார்த்ததாகக் குறிப்பிடுகிறார்.அப்போது விஜயலட்சுமிக்கு 18 வயது. இந்தச் சம்பவத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே வண்டிச்சக்கரம் திரைக்கதையை எழுதி முடித்திருப்பதாகக் குறிப்பிடும் வினு சக்கரவர்த்தி, விஜயலட்சுமியைத் தான் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது மனைவியும் வங்கி ஊழியருமானவர் விஜயலட்சுமிக்கு நடிப்பும் ஆங்கிலமும் நடனமும் கற்றுக் கொடுத்தார் என எழுதுகிறார். விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவாகி நடித்த வண்டிச்சக்கரம் தமிழ்த் திரைப்படமும், இணை தேடி எனும் மலையாளத் திரைப்படமும் 1979 ஆம் ஆண்டு வெளியாகிறது.சில்க் ஸ்மிதா தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகில் பிரவேசித்த கதை இது.இதன்பிறகான பத்து ஆண்டுகளின் பின் 1989 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளரான வேலு பிரபாகரன் சத்யராஜ்-ராதா நடித்த பிக்பாக்கட் படிப்பிடிப்பு ஒளிப்பதிவின் போது சில்க் ஸ்மிதாவைச் சந்திக்கிறார். அவரைப் பொறுத்து காதல் என்பது காமம் அன்றி வேறில்லை. ஓரு சில வறட்டுத்தனமான பகுத்தறிவுவாதிகளும் நாத்திகர்களும் உலகம் என்பது பிழிந்து சுவைக்கவேண்டிய ஒரு கனி என்பதனை தமது வாழ்க்கைப் பார்வையாக முன்வைப்பார்கள். அவர்களுக்கு மானுடம் என்பதற்கு இதயம் அல்லது ஆன்மா என்பது இல்லை, இருப்பதெல்லாம் ஜடவயமான தசை மட்டும்தான். வேலு பிரபாகரனின் காதல் பற்றிய தத்துவத்தை எவரேனும் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் அவர் இயக்கி நடித்த காதல் அரங்கம் என இருந்து பின்னால் காதல் கதை எனப்பெயர் மாற்றப்பட்ட ஒரு காதல் ‘காவியத்தை’ கண்டு ரசிக்க வேண்டியிருக்கும். அதில் தனது சொந்த வாழ்வு குறித்த அனுபவங்களைப் பாவித்திருப்பதாகவும் சொல்கிறார்.1989 முதல் சில ஆண்டுகள் சில்க் ஸ்மிதவுடனான வேலு பிரபாகரனது உறவை அவர் விவரிக்கிறார்.படிப்பறவற்ற எளிய கிராமத்துப் பெண்ணான சிலக் ஸ்மிதாவிடம் மைக்கேல் ஆஞ்சலேவின் ஓவியம் தெரியுமா எனக் கேட்கிறார் பிரபாகரன். ஸ்மிதா தெரியாது என்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் உனக்கு உயிர் இருக்கிறது, ஓவியத்திற்கு உயிர் இல்லை என்கிறார். பிறகு ஸ்மிதாவை மயில் என்கிறார். மலர் என்கிறார். இதுவெல்லாம் பிரபாகரனின் சொந்த வார்த்தைகள். அவருடைய காதல் தத்துவப்படி ஒரு கிராமியப் பெண்ணாண ஸ்மிதா பிரபாகரனின் காமக் கிழத்தியாக ஆனது இப்படித்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல பெண்களுடன் உறவு கொண்டிருந்த அவர், அப்போதுதான் தான் மணந்துகொண்ட காதல் மனைவி குறித்தும் குறிப்பிடுகிறார். காதல் மனைவிக்கா அல்லது ஸ்மிதாவுக்கா தான் துரோகம் செய்கிறோம் என்பதனைத் தன்னால் நிச்சயப்ப்படுத்திக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் எழுதுகிறார்.அவரது ‘காதல் கதை’க்கு ஒரு உச்சகட்டக் காட்சி வேண்டும் அல்லவா? அதுவும் வருகிறது. சில்க் ஸ்மிதாவும் தானும் தங்கியிருக்கிற இடத்திற்கே அவரது காதல் மனைவி வருகிறார். தனக்குத் துரோகமிழைத்துவிட்டதாக அவர் கண்ணீர் விடுகிறார். ஸ்மிதா இதனை எதிர்பார்க்கவேயில்லை. பிரபாகரன் என்ன செய்கிறார்? அதுதான் கதையின் மிகப்பெரும் திருப்பம். கண்ணீர் மல்கும் தனது காதல் மனைவியைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவை விட்டு வெளியேறுகிறார் பிரபாகரன்.இதற்காக ஸ்மிதாவிடமிருந்தும் வாசிப்பவர்களிடம் தனது மன்னிப்பையும் யாசிக்கிறார் பிரபாகரன். அதுவும் எப்போது? ஸ்மிதா மரணமுற்று 13 ஆண்டுகளின் பின் இதனை அவர் கேட்கிறார். இதுவே சில்க் ஸ்மிதாவின் வாழ்வு பற்றி ‘வெளிப்படையாக’ நமக்கு எழுத்தில் கிடைக்கிற தரவுகள்.ஸ்மிதாவின் பிற்பட்ட வாழ்வில் அவர் இரண்டு திரைப்படங்களைத் தயாரித்து, அதனால் பொருளாதார நஷ்டத்துக்கு ஆளாகி, மூன்றாவது திரைப்படம் தயாரிக்க முனைந்த நிலையில், 2 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனச் சில தகவல்கள் சொல்கிறது. அவரது இறுதிக் காலத்தில் ஸ்மிதாவுடனனேயே அவரது வீட்டில் உறைந்த ஒரு தாடிக்கார டாக்டரும் அவரது மகனும் ஸ்மிதாவின் திரைப்பட வரவுசெலவுகளைக் கவனித்துக் கொண்டார்கள் எனவும், ஸ்மிதா தனக்கென வாங்கவிருந்த வீட்டைத் தமது பெயரில் பதிவு செய்ய அவர்கள் விரும்பினார்கள் எனவும், அது தொடர்பாக ஏற்பட்ட சண்டை நடந்து மூன்று நாட்களின் பின் தமது மகள் மரணமுற்றிருப்பதால் தமது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்மிதாவின் தாய் சொல்வதான பிறிதொரு தகவலும் இருக்கிறது.1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி அவருடைய சாலிக்கிராமம் வீட்டில் காற்றாடியில் தூக்கிட்டுத் தொங்கியபடி மரணமுற்றிருந்த சில்க் ஸ்மிதா தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு மரணக் குறிப்பையும் விட்டுச் சென்றிருந்தார்.வாழ்க்கையில் திரும்பத் திரும்பத் தோல்வியுற்றதால் விரக்தியுற்றுத் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த மரணக்குறிப்பு இருந்தது. அது தற்கொலையல்ல கொலை எனும் சந்தேகம் எழுப்பப்பட்டதால் அந்த நோக்கிலும் ஆய்வு செய்யப்பட்டது. அவரது மரண அறிக்கையில் அவரது வயிற்றில் அதிக அளவிலான வாழைப்பழமும் சாக்கெலெட்டுகளும் சாப்பிட்டதற்கான தடையங்கள் மட்டுமே காணப்பட்டது எனவும், அவர் விஷமிட்டுக் கொலை செய்யப்பட்;டதற்கான தடயங்கள் இல்லை எனவும் முடிவாகச் சொல்லப்பட்டது, என்றாலும் தூக்கில் தொங்கவிடப்படுவதற்கு முன்பாக அவர் கொல்லப்பட்டிருக்கலாமா எனும் கேள்வி, இன்றளவிலும் கேள்வியாகவே அலைந்து கொண்டிருக்கிறது.த டர்ட்டி பிக்சர் உச்சக் காட்சியையும் சில்க் ஸ்மிதாவின் வாழ்வினது அறியவரப்பட்ட தரவுகளையும் வைத்துப் பார்க்கிறபோது எம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும். ஸ்மிதா தனது சொந்த உறவுகளின் விரக்தியில் அல்லது பொருளாதார வீழச்சியில் மரணமுற்றிருக்க முடியும். டர்ட்டி பிக்சர் படத்தில் வருகிற மாதிரி அவரது இறுதிக் காலத்தில் அவர் நீலப்படத்தில் நடிக்க நேர்ந்த துயரத்தின் பின்தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் எனச் சொல்வது யதார்த்தத்துக்கு முற்றிலும் மாறானதாகவே இருக்க முடியும்.படம் பற்றி படக் குழவினர் பத்திரிக்கைகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட விதமும், படத்தின் திரைக் கதை அமைக்கப்பட்ட விதமும் சில்க் ஸ்மிதாவை இவர்கள் மறுபடி ஒரு முறை குரூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள் எனவே சொல்ல முடியும். ஸ்மிதாவின் வாழ்வுப் படம் இது என்றார்கள். வினு சக்கரவரத்தியும், ஸ்மிதாவின் சகோதரர் எனப்பட்டவரும் படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த பின், இது ஸ்மிதா பற்றிய படமல்ல, ஸ்மிதாவும் அவர் போன்றவர்களும் பற்றிய புனைவுப்படம் எனப் பின்னாளில் தமது ஸ்ருதியை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் திரைக்கதை பாலிவுட் கதை சொல்லிகளின் அத்தனைக் கள்ளத்தனங்களையும் கொண்டதாகத்தான் உருவாகி இருக்கிறது.திரைக்கதை இது : தனது வீட்டில் முரண்பட்டு, ஒரு நள்ளிரவில் வீட்டைவிட்டோடி சென்னைவரும் சிறுமி, பருவ வயதில் நுழைவதுடன் படம் துவங்குகிறது. கதாநாயகியின் பெயர் ரேஷ்மா. அவளுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் வைக்கும் பெயர் சில்க். சில்க்கிற்குப் போட்டியாகவரும் பிறிதொரு கவர்ச்சி நடிகையின் பெயர் ஷகீலா. ரேஷ்மா, சில்க், ஷகீலா எனும் இந்த மூன்று பெயர்களும் தென்னிந்திய தமிழ்சினிமா நடிகைகளின் நிஜப்பெயர்கள். சில்க், ஷகீலாவை அடுத்து தொண்ணூறுகளின் இறதியில் மலையாளத்தில் வெளியான மெலிதான நீலப்படவகை படங்களின் கதாநாயகியாகப் புகழ்பெற்ற நடிகை ரேஷ்மா. சில்க் ஸ்மிதா நடித்து 1989 ஆம் ஆண்டு வெளியான லயனம் எனும் மலையாளப்படம், 13 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது அப்படத்திற்கு ரேஷ்மா கி ஜவானி எனவே பெயரிடப்பட்டது.எந்த அதிகாரமுமற்ற, அடிநிலையிலுள்ள கவர்ச்சி நடிகைகள் என்று சொல்லப்பட்ட பெண்களின் வாழ்வைப் பரிவுடனும் துயருடனும் பார்ப்பதாக இந்த டர்ட்டி பிக்சர் கோரிக் கொள்கிறதோ, அதே அடிநிலை நடிகைகளின் சொந்தப் பெயர்களை வைத்து அவர்களை மீளவும் கேவலப்படுத்தும் காரியத்தையே இப்படமும் செய்திருக்கிறது.சில்க் ஸ்மிதாவின் வாழ்வை மறுபடி இந்தப்படம் அவமானப்படுத்தியிருக்கிறது.இந்த மூன்று நேரடியிலான நடிகைகளின் பெயர்கள் தவிர இந்தப் படத்தில் வரும் அத்தனை தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரதும் பெயர்கள் முற்றிலும் புனைப்பெயர்களாக வைக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் போல கதாநாயகன் நஸ்ருதீன் ஷா நடிக்கிறார் என வந்த ஒரு செய்திக்கு ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தார்கள். அவரை அவமானப்படுத்தும்படி, அவர் மாதிரி நடிக்க மாட்டேன் என நஸ்ருதின் ஷா அறிக்கை வெளியிட்டார். ரேஷ்மா, ஸ்மிதா, ஷகீலா போன்றோரிடம் தம்மை இம்மாதிரி நேரடியாகப் பெயர்சொல்லிச் சித்தரிக்க வேண்டாம் எனச் சொல்லும் வலிமையும் இல்லை. அவர்களுக்கென வழக்குத்தொடுக்கிற அதிகாரம் அவர்களுக்கும் இல்லை. அவர்களது சார்பாகவும் எவரும் இல்லை. இதுவே இந்திய தமிழ் சினிமா யதார்த்தம்.இந்தச் சினிமா உலகில்தான் ஷோபா, விஜயசிறி, படாபட் ஜெயலட்சமி போன்றோர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்திய சினிமாவின் அதிஅற்புதமான நடிகைகளில் ஒருவரான சாவித்திரி அதிகுடிபோதையில் மரணமுறுவதற்கு முன்னால், அவர் இறுதியாக நடித்ததாக ஒரு மலையாள நீலப்படவகை படமே இருந்தது. பாசமலர் சாவித்திரிக்கும் நீலப்படவகைப் படத்தில் நடித்து மரணமுற்ற சாவித்திரிக்கும் இடையில்தான் எண்பதுகளின் நடிகைகள் வாழ்வு திர்மானிக்கப்பட்டதாக இருந்தது.கவர்ச்சி நடிகைகள் எனும் ஒரு தனித்த இனம் எப்போது தோன்றுகிறது? வெளிப்படையாகப் பாலுணர்வைக் குறைந்தபட்சமும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு சமூகச் சூழலில், பெண் உடல் பண்ட உற்பத்தியாக நுகரப்பட முன்வைக்கப்படுவது இலாபம் தரும் தொழில் எனும் கருத்து முனைப்புப்பெற்ற காலத்தில், குடும்ப அமைப்பைத் தாங்கும் கதாநாயகியர் பதிவிரதைகளாகச் சித்திரிக்கப்பட, நவீன வாழ்வுக்குள் நுழையும் பெண்கள் பரத்தைகளாகக் கருதப்பட்ட ஒரு சமூகச் சூழலில்தான் கவரச்சி நடிகைகள் தோன்றுகிறார்கள்.ஆண்களின் உச்சபட்டப் பாவனைக்கு உள்ளாகும் பண்டம்போலத் தாம் திரையில் துதிக்கப்படுவதை அவர்கள் தமக்கு வாய்த்த அதிகாரமாகக் கருதிவிடுகிறார்கள். அது தற்காலிகம் என்பதனை அவர்கள் அறிவதில்லை. அது அறியவரும்போது அது அவர்களது அந்திநேரமாக ஆகிவிடுகிறது.1979 ஆம் ஆண்டு வண்டிச் சக்கரத்தில் அறிமுகமாகிற சில்க் ஸ்மிதாவை இன்று நினைவுகூர அவரது திரை வாழ்வில் மைல்கற்கள் எனச் சில படங்களை நாம் குறிப்பிட முடியும். 1981 ஆம் ஆண்டு அவர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லையில் நடிக்கிறார். 1982 ஆம் ஆண்டு ரஜினிகாந்துடன் மூன்றுமுகம் படத்தில் நடிக்கிறார். அதே 1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் கமல்ஹாஸனுடன் நடிக்கிறார். 1989 ஆம் ஆண்டு லயனம் எனும் நீலப்படவகை மலையாளப்படத்தில் நடிக்கிறார். அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த 1979-82 என நான்கு ஆண்டுகள் தவிர பிற்பாடாக அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவரை வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டுமெ சீரழிக்கிறது.1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி அவர் மரணமுறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அர்ஜூன் நடித்த அவரது இறுதிப்படமான சுபாஷ் வெளியாகிறது.எண்பதுகளின் மத்தியிலிருந்து பொருண்மையாக இரண்டு பெரும் மாறுதல்கள் இந்திய சினிமாவில் நடந்தேறுகிறது. அதுவரையிலும் இழுத்துப் போர்த்தி நடித்த, குறைந்தபட்சம் நடிப்புத்திறமை கொண்ட நடிகைகள் என்பதற்கு மாற்றாக, எந்தவிதான நடிப்பாற்றலும் அற்ற, அனைத்துவிதமான ஆடைக்குறைப்புக்கும் ஒப்புக்கொள்கிற கதாநாயக நடிகையரும் அதற்கேற்ற கதைகளும் திரைப்படத்தினுள் நுழைகின்றன. மழையில் நனைகிற கதாநாகியர் அதிகரிக்கிறார்கள். இப்போது கதாநாயகியே குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். சிறப்புக் குத்துப்பாட்டுக்கு ஆடவும் இன்னொரு கதாநாயகியே வருகிறார். தனித்த குத்துப்பாட்டு நடிகைரின் வீழ்ச்சி சில்க், டிஸ்கோ சாந்தி, அல்போன்ஸா என இப்போது நேர்கிறது. மலையாள மொழியில் இவர்களுக்கெனவே ஒரு சந்தை திறக்கிறது. அந்தச் சந்தை இந்தியா எங்கிலும் பரவுகிறது. இப்போது கவர்ச்சி நடிகைகள் முழுமையாக நீலப்படவகை நடிகைகளாக ஆகிறார்கள். சாவித்திரி போன்ற நடிகைகள் கூட இந்த அவலத்திற்குத் தப்பமுடியவில்லை. இந்த நிஜம், பெண்களைத் தொடர்ந்து இந்திய சினிமா கீழ்மைப்படுத்தி வந்த நிஜம் த டர்ட்டி பிக்சரில் இல்லை.கவர்ச்சி நடிகைகளுக்கு இடையிலான போட்டியில், தமது தனிப்பட்ட மமதையில்தான் சில்க் வீழ்ச்சியை எய்துவதாக த டர்ட்டி பிக்சர் சொல்கிறது.த டர்ட்டி பிக்சரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தனது பாலுறுவு அதிகாரத்தைக் காண்பித்து புகழின் உச்சியில் மேலே மேலே செல்லும் சில்க், அனைத்து ஆண்களையும் வெல்லும் சில்க், பிறிதொரு கவர்ச்சி நடிகையின் பிரவேசத்தினால் தனது வாய்ப்பை இழக்கிறார், தன்னை முன்னிறுத்தி சொந்தப்படம் எடுக்கிறார். கடன்படுகிறார். கடனுக்காக நீலப்படத்தில் நடிக்க வேண்டிய நிலைக்கு பலவந்தப்படுத்தப்படுகிறார். தன்னை முதலில் நிராகரிதத தன் சொந்தத் தாயும் சகோரதனும், தன்னை ஒருபோது நிராகரித்த தன் மீது இன்று காதலுற்றிருக்கும் இயக்குனரால் அழைத்து வரப்பட்டுக் காத்திருக்க, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை அருந்திவிட்டு, அடர்ந்த சிவப்புநிறத்தில் பட்டுப்படவையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டு, தனது இளமையையும் சோபையையும் இழந்த பெண்ணாக தற்கொலை செய்தபடி படுக்கையில் சாய்கிறாள் சில்க்.இந்தப் படத்தினை ஒரேயொரு வலிமையான காரணத்திற்காகத் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என நான் சொல்வேன். அது வித்யா பாலனின் அதியற்புதமான நடிப்பு.இந்திய சினிமா நடிகைகள் அடிக்கடி முன்வைக்கும் பதிவிரதை எனும் போலிப் பிம்பத்தை முற்றிலும் களைந்தெறிந்துவிட்டு, திரைவாழ்வையும் சொந்த வாழ்வையும் குழப்பிக் கொள்ளாத கலைமீதான தாகத்தினால், பெண்ணின் உடலை எந்த அளவிற்கு தடைகடந்து நகர்த்திச் செல்ல முடியுமோ அந்த எல்லைகளை எல்லாம் கடந்து சென்று பாத்திரமாக வாழந்திருக்கிறார் வித்யா பாலன். எம்முடைய பார்வையில், த டர்ட்டி பிக்சர் திரைப்பட ஆக்கதாரர்கள் கோரிக் கொள்கிற மாதிரி முழுமையடையாத திரைப்படம், சில்க் ஸ்மிதா குறித்த முழுமையடையாத பாத்திரத் சித்திரிப்பு கொண்ட படம் என்றாலும், வித்யா பாலன் எனும் பண்பட்ட நடிகைக்காக, அதுவும் இறுதிக் காட்சியில் தனது துக்கம் ஆழவோடிய கறுவளையும் விழுந்த கண்களில் மைதீட்டியபடி, தனது சோபையிழந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபடி அழகுபடுத்திக் கொளளும் அந்த ஒரேயொரு காட்சிக்காகவாவது நீங்கள் த டர்ட்டி பிக்சர் திரைப்படத்தைப் பாருங்கள்.இறுதிக் காட்சி நிஜத்தில் நம் நெஞ்சை அடைக்கவே செய்கிறது. அது சில்க் எனும் திசை தெரியாது தவித்த கள்ளமற்ற பறவைக்கான எமது துக்கம்

No comments: