கனடாவை அடைவதற்காக ஒவ்வொருவரும் ரூபா 5 லட்சம்

.
கனடாவை அடைவதற்காக ஒவ்வொருவரும் ரூபா 5 லட்சம் செலுத்திய 250 ஸ்ரீலங்காவாசிகள் டோகோ நாட்டில் ஆதரவின்றி தவிக்க விடப்பட்டனர்

- தேவா ஆதிரனின் மேலதிக தகவல்களுடன் லீயோன் பிரென்ஜர்மேற்கு ஆபிரிக்க நகரமாகிய டோகோவில் ஒரு தடுப்புக்காவல் மையத்துள் அடைக்கப்பட்ட ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சோகம் இது, கனடியப் பயணத்துக்காக வழக்கமான பொய் வாக்குறுதிகளை நம்பி புறப்பட்டு பின்னர் ஏமாற்றித் தள்ளிவிடப்பட்ட பின்னர் கையில் பணமின்றி போவதற்கு போக்கிடமுமின்றி தவிப்பவர்களின் கதை இது.

கடந்த ஒரு மாதகாலமாக பிரதானமாக ஸ்ரீலங்காவின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்து ஒரு தொகுதி ஸ்ரீலங்காவாசிகளின் துயரமான நிலை இதுதான். மற்றும் அவர்களில் சிலர் அந்த நாடு மற்றும் அந்தப் பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு உள்ளார்கள்.இந்த மனிதக் கடத்தல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 250 பேர்கள் வரையான ஸ்ரீலங்காவாசிகள், வௌ;வேறு குழுக்களாக கொழும்பிலிருந்து விமான மார்க்கமாக அனுப்பப்பட்டு டோகோவில் ஒரே குழுவாக ஒன்று சேர்க்கப்பட்டு, கனடாவை அடைவதற்காக அத்திலாந்து சமுத்திரத்தைக் கடந்து வெகு விரைவிலேயே அழைத்துச் செல்லப்படும் என்று வாக்குறுதிகளை வழங்கி முகவர்கள் அவர்களை ஐந்து வீடுகளில் மறைவாக தங்க வைத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு அதிகப்படியான தொகைப் பணத்தை அவர்களின் முகவரிடம் வழங்கியிருந்தார்கள்.(வீட்டுக்குத் திரும்புகிறார்கள்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் சிலர் )

ஆனால் அப்படி நடக்கவில்லை, ஏனெனில் ஒருநாள் அதிகாலை தாங்கள் அந்நாட்டு காவல் துறையினராலும் குடிவரவு அதிகாரிகளினாலும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை அந்த ஸ்ரீலங்காவாசிகள் காணநேர்ந்தது, அதன் பின்னர் அவர்கள் யாவரும் தடுப்புக்காவல் மையங்களை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார்கள், அங்கு அவர்கள் இப்போது விசா முடிவடைந்த பின்னரும் அந்த நாட்டில் தங்கியிருந்ததுக்கான தண்டப் பணத்தை செலுத்த வேண்டிய நிலையிலுள்ளார்கள்.

டோகோவுக்கு வரும் வருகையாளர்களுக்கு டோகோவில் வந்திறங்கியதிலிருந்து ஒரு வாரகாலத்துக்கான விசா வழங்கப்படுவது வழக்கம். மனிதக் கடத்தல்காரர்கள் ஸ்ரீலங்காவாசிகளுக்கு அவர்கள் கப்பல்வழியாக கனடாவுக்கு அனுப்பப் படுவார்கள் என உத்தரவாதம் வழங்கி அவர்களை இங்கு அழைத்து வருவதற்கு இந்த வசதியைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. அவர்களின் நிலை மோசமடைந்தததைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமானக் குழுக்கள் இதில் தலையிட முன்வந்தன.(தவிக்கவிடப்பட்டவர்கள் : டோகோ முகாமில் உள்ள ஸ்ரீலங்காவாசிகளில் சிலர்)

சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுவினர் (ஐசிஆர்சி) கனடிய அதிகாரிகளின் உதவியுடன் இந்த ஸ்ரீலங்காவாசிகளுக்கு உதவி செய்வதற்கு முன்வந்தன. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாமலிருப்பதால் இந்த ஸ்ரீலங்காவாசிகள் ஸ்ரீலங்காவுக்கே திரும்பிச் செல்லும்படி கேட்கப்பட்டுள்ளார்கள் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் “சண்டே ரைம்சு” க்குத் தெரிவித்தார்.

அதன்படி அவர்களில் 37 பேர்கள் வௌ;வேறு குழுக்களாக ஸ்ரீலங்கா திரும்பி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளார்கள், ஆனால் அவர்களில் அநேகர் தங்களிடம் பணமும் கூட இல்லாதபடியால் திரும்பிச்செல்ல மறுத்து நீதி கோருகிறார்கள்.

ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியிருப்பது, அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பிரயாணத்துக்காக சுமார் 500,000 ரூபா வரை முகவர்களிடம் வழங்கியுள்ளார்கள் என்றும், மற்றும் அந்தக் குழுவிலிருந்த சிறுவர்களாகிய சுமார் 10 பேர்களிடமும் அதேயளவு தொகை பணம்தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் அந்தக் குழுவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தது டோகோவில் தங்கியிருந்தால் பின்னர் அங்குள்ள உள்நாட்டு அதிகாரிகளுக்கு அவர்களை நாடுகடத்துவதைத் தவிர வேறு தெரிவு இல்லை என்று தெரிவித்தார்.

“ அவர்களில் பலர் தங்கள் பிரயாணப்பத்திரங்களை அழித்துவிட்டனர். ஆனால் அவர்களின் திரும்ப வரும் பயணத்துக்கான மாற்று ஆவணங்களை வழங்குவதற்று இன்னமும் இடமுண்டு” என்று அந்த அதிகாரி கூறினார்.

சமீபத்தில் அங்கிருந்து திரும்பி வந்தவர்களில் ஒருவரான மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயது நல்லதம்பி விமல்ராஜ் சண்டே ரைம்ஸிடம் தாங்கள் கொழும்பை விட்டு செப்ரம்பர் 28ல் விமானம் மூலம் சென்றதாகச் சொன்னார்.

“அந்தக் குழுவில் ஐந்து பேர்கள் இருந்தார்கள். எங்களைக் கையாண்டவர் எங்களது கடவுச் சீட்டுகள், பிரயாணச் சீட்டுகள் மற்றும் இதர ஆவணங்களை நாங்கள் விமான நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்னர் எங்களிடம் தந்தார். நாங்கள் டோகோவில் ஒரு சுற்றுலா விசாவுடன் இறங்குவதாகவும் மற்றும் அங்கிருந்து கனடாவுக்கு பறப்பதாகவும் எங்களிடம் சொல்லப்பட்டது”.

நாங்கள் டோகோ விமான நிலையத்தில் வந்திறங்கியதும், ஒரு டோகோ இனத்தவரும் மற்றும் ஒரு ஸ்ரீலங்காவாசியும் அங்கு எங்களை வரவேற்றதுடன் எங்கள் கடவுச்சீட்டுகளையும் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர் .பின்னர் அந்த ஸ்ரீலங்கா மனிதர் எங்கள் விடயங்கள் யாவற்றையும் மற்றவர் (டோகோ இனத்தவர்) பார்த்துக் கொள்வார் கவலைப்படும்படி ஒன்றுமில்லை என்று எங்களுக்கு உறுதியளித்துவிட்டு சென்றுவிட்டார்”.“எனினும் அடுத்து வந்த நாட்களில் கவலைப் படுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன, மற்றும் விரைவிலேயே நாங்கள் மட்டும் அங்கு தனியாக இல்லை கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட குழு அங்குள்ளது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அவர்களில் பலர் கனடா போவதற்காக மாதக்கணக்கில் அங்கு காத்திருப்பவர்கள்”.

“நாங்கள் தங்கியிருந்த வீட்டில் சுகாதார வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தன, மற்றும் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது. அநேகமானவர்கள் மலேரியாவால் பாதிக்கப்படவும் நேர்ந்தது .இப்போது எங்கள் கனடா பயணம் கப்பல் மூலமாக என்று எங்களிடம் சொல்லப்பட்டாலும், பிரயாணத்தக்கான எதுவித அறிகுறியும் தென்படவில்லை”.

“ கப்பலை தனியாக வாடகைக்கு அமர்த்த வேண்டி இருப்பதால் ஒரு மதிப்பீட்டின்படி அதில் சுமார் 1,000 பேர் வரை செல்லவேண்டியிருக்கும், ஏனவே அந்த இலக்கை எட்டும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும் என்று எங்களைக் கவனித்துக் கொண்டவர் எங்களிடம் தெரிவித்தார்”. காலநிலையும் பனிக்கட்டி குளிர்மையிலிருந்து வியர்த்துக் கொட்டும் சூடான வெப்பநிலைக்கு மாற்றம் பெற்றாலும் அதற்கேற்ப அனுசரிக்க வேண்டிய வசதிகள் வழங்கப்படவில்லை, ஆதலினால் அவை யாவற்றையும் நாங்கள் மௌனமாக அனுசரித்து கஷ்டப்பட வேண்டியிருந்தது.

“அதனால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டவர்கள், வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட பத்துமாத பச்சிளம் குழந்தை உட்பட அங்கிருந்த சிறுவர்கள்தான். அதற்குப் பின் விரைவிலேயே நாங்கள் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு, கைவிடப்பட்ட ஒரு இராணுவ முகாமுக்கு கூட்டிச் செல்லப்பட்டோம், அதன்பின் ஸ்ரீலங்கா திரும்பிச் செல்வதற்கான எங்கள் பிரயாண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை நாங்கள் அங்குதான் தங்கியிருந்தோம்” என்று திரு. நல்லதம்பி தெரிவித்தார்.

நன்றி: சண்டே ரைம்ஸ்

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments: