பதவியை ராஜிநாமா செய்தார் ஜெர்மனி அதிபர்



பெர்லின், பிப்.17: ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப் (52) தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
christian-wulffதனக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சூழலில், பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார் உல்ஃப். தலைநகர் பெர்லினில் உள்ள பெல்லிவியு மாளிகைக்கு மனைவி பெட்டினாவுடன் வந்த அதிபர், ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்தது:
""ஏகோபித்த மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே ஜெர்மனியின் அதிபர் பதவிக்கு இப்போது தேவைப்படுகிறார். அத்தகைய தலைவருக்கு வழிவிடும் வகையில் எனது பதவியை இன்று ராஜிநாமா செய்கிறேன். நான் தவறுகள் செய்துள்ளேன். ஆனால் நான் எப்போதுமே நேர்மையானவன்'' என்றார்.
அதிபரின் ராஜிநாமா பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அடியாக அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. அதிபரின் ராஜிநாமா குறித்து கருத்து தெரிவித்த மெர்கெல், ""அதிபரின் ராஜிநாமாவை மரியாதையுடனும், அதேசமயத்தில் வருத்தத்துடனும்'' ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு ஜெர்மனி அதிபராகப் பதவியேற்ற உல்ஃப், ஜெர்மன் அதிபர்களிலேயே மிக இளம் வயதில் (51 வயதில்) அதிபராகப் பதவியேற்றவராவார். கடின முயற்சிக்குப் பின்னரே தனது "கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியின்' சார்பில் உல்ஃபை அதிபராக்கினார் ஏஞ்சலா மெர்கெல்.


பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் ஆதரவாளரான அவரின் பதவி விலகல், மெர்க்கெல்லுக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்டியன் உல்ப், 2003 முதல் 2010 வரை, ஜெர்மனியின் லோயர் சாக்சனி என்ற மாகாணத்தின் முதல்வராக இருந்த போது, தனியார் நிதி நிறுவனம் ஒன்றிடம் இருந்து, ஐந்து லட்சம் யூரோ பணத்தை, 4 சதவீத வட்டிக்குப் பெற்றார். இது, தேசிய வங்கிகளில் அளிக்கப்படும் கடனுக்கான வட்டியை விட ஒரு சதவீதம் குறைவு. 2013க்குள் கடனை அடைத்து விடுவதாக, அவர் ஒப்பந்தமும் செய்திருந்தார்.
கடன் பணம் மூலம் அவரும், அவரது மனைவியும், ஒரு வீட்டை விலைக்கு வாங்கினர். இதுகுறித்து, அப்போதே சர்ச்சை எழுந்தது. லோயர் சாக்சனி மாகாண சட்டசபை உறுப்பினர்கள், தனியார் நிதி நிறுவனத்திற்கும், உல்ப்புக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய போது, அதை உல்ப் மறுத்தார். இந்நிலையில், இதுகுறித்து, ஜெர்மனி பத்திரிகை ஒன்று உல்ப்பின் கடன் விவகாரம் குறித்து செய்தி வெளியிட முயன்றபோது, அதை வெளியிட வேண்டாம் என, உல்ப் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
இதையடுத்து, அவர் விரைவில் தனது சொத்து, கடன் விவரங்களை வெளியிடுவதாக வாக்களித்தார். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. இடையில், இந்தக் கடனை, தேசிய வங்கிக்கு மாற்றிய அவர், 2010ல் கடனை அடைத்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் உல்ப் மீதான குற்றச்சாட்டில் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், அவர் மீதான சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெறும்படி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம், ஜெர்மனி பார்லிமென்டிடம் நேற்று கோரிக்கை விடுத்தது. இதனால், உல்ப் நேற்று, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளதால், குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக அதிபரை விசாரிக்கத் தடையாக உள்ள சட்ட நடைமுறைகளை நீக்கும்படி, மக்கள் பிரதிநிதிகளின் அவையான பண்டிஸ்டாக்-ஐ அரசு வழக்குரைஞர் அலுவலகம் கோரியது.
குற்றச்சாட்டுகளில் பூர்வாங்க முகாந்திரம் இருப்பதாக அரசு வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து, அதிபரின் ராஜிநாமாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
தேர்தல் பிரசாரத்துக்காக தொழிலதிபர்களிடம் நிதியுதவி பெற்றது, தொழிலதிபர்களின் செலவில் விடுமுறையைக் கழித்தது, திரைப்பட இயக்குநர் ஒருவரின் நிறுவனம் வாங்கிய கடனுக்கு அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் உல்ஃபின் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஏற்கக்கூடிய நபரை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில் மெர்கெல் ஈடுபட்டுள்ளார். அதுவரை, "கிறிஸ்டியன் சோஷியல் யூனியன்' என்ற கட்சியைச் சேர்ந்த ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர் தாற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பதவியிலிருக்கும்போதே குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் அதிபர் உல்ஃப்தான்.

No comments: