போதிதர்மர் வரலாறு...

.
இன்று வலையுலகில் அதிகம் பேர் கூகுளில் தேடும் பெயர் போதி தர்மர் ஆகத்தான் இருக்கும் நானும் அவரின் வரலாற்றை அறியும் நோக்கில் போதிதர்மரைப் பற்றி தேடும் போது பிரபஞ்சக்குடில் என்னும் பதிவில் இவரைப்பற்றியான பல அற்புத தகவல்கள் இருந்தது.

அனைவரும் அறிவதற்காகவே இப்பதிவு.

இப்பதிவை எழுதிய பிரபஞ்சக்குயில் என்னும் பெயரில் பதிவெழுதும் நண்பருக்கு மிக்க நன்றி....

7am-arivu-suryaபோதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.

போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.


போதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்!) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!

இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மாbodhidharma சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி!

புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும். உதாரணமாக, இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் ஒரு நபிமொழியைப் பாருங்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, அத்தியாயம் 3 – கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)

புத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார்.

அரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.

தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.

ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும்! சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தைக் கூறும் நபிமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது: “செயல்கள் அனைத்தும் உள்நோக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப் பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)

போதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டியbodhidharma2 இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா? ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம்! நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்!

மேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea). நான் ஒரு தேநீர்ப் பைத்தியம். பழச் சுவை கொண்ட தேநீர், பூக்களின் மணம் கொண்ட தேநீர், பெர்கமாண்ட் என்னும் சிட்ரஸ் பழம் போட்ட ‘ஏர்ல் க்ரே’ தேநீர், இஞ்சி-புதினா-எலுமிச்சை போட்ட பச்சைத் தேநீர், கெமோமைல் போட்ட பச்சைத் தேநீர் என்று விதவிதமான தேநீர் வாங்கி வைத்து அவ்வப்போது பருகுவேன். அவற்றில் மிகவும் விரும்பிப் பருகுவது க்ரீன் டீதான். என் பிள்ளைகளும் அதற்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். (வெண் தேநீர் தேச்செடியின் பூக்களில் இருந்து எடுக்கப்படுவது. அதைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை.)

சரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

போதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)

இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர்வழியாக நமக்குத் தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது. சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!

Surya7aamArivu-1போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.

போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

போதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):

’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’
பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’
’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’
’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’
’ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்’
’மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ’

நன்றி: பிரபஞ்சக்குடில் (தேனீ)


No comments: